Top bar Ad

30/9/18

பாம்பாட்டி சித்தர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சட்டை முனியின்‌ போதனை
  4. பாம்பாட்டியார் சித்தராதல்
  5. பாம்பாட்டியார் அரசராதல்
  6. சித்தரை வழிபடும் முறை
  7. ஜீவ சமாதி

முன்னுரை


பாம்பாட்டிச் சித்தர்‌ திருக்கோகர்ணத்தைச்‌ சேர்ந்தவர்‌.
[ மத்திய அரசு வெளியிட்டுள்ள நா. கதிரைவேல்‌ பிள்ளையின்‌ தமிழ்‌ மொழி அகராதிச்‌ செய்தி ]
இவர்‌ கோவை, அருகில்‌ உள்ள மருதமலையில்‌ தான்‌ பல காலம்‌ வசித்து வந்ததாகவும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஜோகி இனத்தில்‌ கார்த்திகை மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. சித்தாரூடம்‌ என்னும் நூலையும்‌ இவர்‌ எழுதி உள்ளார்‌.

முற்பகுதி வாழ்க்கை


இவர்‌ சிறுவனாய்‌ இருந்த போதே மலைப்‌ பகுதியிலிருந்த கொடிய நச்சுப்‌ பாம்புகளையெல்லாம் பிடித்தவர்‌. இவரது ஆற்றலை அறிந்த சித்த மருத்துவர்கள்‌ நால்வர்‌ இவரிடம்‌ வந்து, மருந்து தயாரிக்க நவரத்தின பாம்பு ஒன்றைப்‌ பிடித்துத் தர வேண்டும்‌ என்று கேட்டனர்‌. மருத மலை மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும்‌, அதன்‌ தலையில்‌ விலை மிகுந்த மாணிக்கம்‌ இருப்பதாகவும்‌, அதனைப்‌ பிடிப்பவன்‌ பெரிய பாக்யசாலி என்றும்‌ சிலர்‌ பேசிச்‌ சென்றனர்‌. இதனைக்‌ கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர்‌ அதனைப்‌ பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று பாம்பைத்‌ தீவிரமாகத்‌ தேடினார்‌.

நவரத்தின பாம்பு

நவரத்தின பாம்பு என்பது ஒரு முறை கூட நஞ்சை வெளிப்படுத்தாது நீண்ட காலம்‌ வாழ்ந்து முடித்த நாகம்‌. கடைசி காலத்தில்‌ அதன்‌ உடலே குறுகி மிகவும்‌ குட்டையாகி இருக்கும்‌. அதன்‌ நஞ்சு முழுவதும்‌ அதன்‌ தலைபாகத்தில்‌ கட்டுப்பட்டு ஒளி மிக்க மாணிக்கமாக மாறியிருக்கும்‌. அந்த நாகம்‌ இரைதேட நடு இரவில்தான்‌ வெளிவரும்‌. தன்‌ தலையில்‌ உள்ள மாணிக்கத்தைக்‌ கக்கி அதன்‌ ஒளியில்‌ தான்‌ இரைதேடும்‌

ஜீவசமாதியில்‌ ஆழ்ந்திருக்கும்‌ மகாசித்தர்களை ஒத்தது இந்த நவரத்தினப்‌ பாம்பு. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ நவரத்தினப்‌ பாம்பைப் பிடிக்க மலைக் காடுகளிலெல்லாம்‌ அலைந்து திரிந்து அன்று நடு இரவில்‌ அதன்‌ புற்றையும்‌ கண்டுபிடித்துவிட்டார்‌.

புற்றருகில்‌ சென்று மல்லோ சித்தர்தாமும்‌ புனித முள்ள நவரத்தின பாம்புதன்னை வெற்றியுடன்‌ தான்பிடக்கப்‌ போகும்போது வேதாந்தச்‌ சட்டைமுனி அங்கிருந்தார்‌.
போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 பாடல்‌ 3577

அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர்‌ தோன்றினார்‌. இங்கு எதைத்‌ தேடுகிறீர்கள்‌ என்று கேட்டார்‌. அதற்கு பாம்பாட்டி சித்தர்‌ நான்‌ நவரத்ன பாம்பைப்‌ பிடிக்க வந்தேன்‌ அதைக்‌ காணவில்லை என்றார்‌. இதைக்‌ கேட்ட சட்டைமுனி சிரித்தார்‌. நவரத்தினப்‌ பாம்பை நீயே உனக்குள்‌ வைத்துக்‌ கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா! என்று மீண்டும்‌ வினவினார்‌. மிகுந்த உல்லாசத்தைத்‌ தரக்‌ கூடிய ஒரு பாம்பு எல்லோர்‌ உடலிலும்‌ உண்டு; ஆனால்‌ யாரும்‌ அதை அறிவதில்லை. அதனால்‌ வெளியில்‌ திரியும்‌ இந்தப்‌ பாம்பை விட்டுவிடு. உன்‌ உடலில்‌ இருக்கும்‌ அந்தப்‌ பாம்பை அறியும்‌ வழியைத்‌ தேடு. இல்லாத பாம்பைத்‌ தேடி ஓடாதே என்று சொன்னார்‌. எல்லாவற்றையும்‌ கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார்‌ சித்தரின்‌ காலில்‌ விழுந்து வணங்கினார்‌.

குண்டலினிப் ‌பாம்பு

சட்டை முனியின்‌ ஒளிவீசும்‌ ஞானதேகத்தைப்‌ பார்த்த மாத்திரத்தில்‌ பாம்பாட்டியின்‌ மன இருள்‌ அகன்றது. சட்டை முனி அவரைப்பார்த்து, மகனே! புறவுலகில்‌ உலவும்‌ பாம்புகளை அடக்கவல்ல நீ உன்னுள்‌ மூலாதாரத்தில்‌ சுருண்டு கிடக்கும்‌ வாலைப்‌ பாம்பைத்‌ தட்டி எழுப்பப்‌ பிறந்தவன்‌. இந்தப்‌ புற்றில்‌ உள்ள நவரத்தினப்‌ பாம்பைவிட உன்னுள்‌ உள்ள குண்டலினிப் ‌பாம்பு ஆயிரம்‌ மடங்கு ஒளிமிக்கது. உன்‌ ஞானக்‌ கண்ணைத்‌ திறந்து! உனக்கு ஆன்ம வழிகாட்டக்‌ கூடியது, என்று கூறி அவனுக்குக்‌ குண்டலினி தீட்சையும்‌ அளித்தார்‌. அந்த நொடியே தவத்தில்‌ இறங்கிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ கொஞ்ச காலத்திலேயே அஷ்டமாசித்திகளையும்‌ பெற்று மகாசித்தரானார்‌. பிறகு ஊர்‌ ஊராகச்‌ சுற்றித்‌ திரிந்து கொண்டு சித்துக்கள்‌ புரிந்து மக்களை மகிழ்வித்ததோடு மக்களின்‌ பிணிகளையும்‌ போக்கி வந்தார்‌.

சட்டை முனியின்‌ போதனை

சித்தர்‌ கனிவோடு அவரைப்‌ பார்த்து விளக்கமளிக்கத்‌ தொடங்கினார்‌. அற்புதமான இந்த மனித சரீரத்தினுள்‌ ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்‌ கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன்‌ பெயர்‌. தூங்கிக்‌ கொண்டிருக்கும்‌ அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன்‌ நுட்பத்தை அறிவது அரிது. மக்களின்‌ துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப்‌ பாம்பின்‌ உறக்கம்‌ தான்‌.

பாம்பாட்டியார் சித்தராதல்


இறைவனை உணரப்‌ பாடுபடுபவர்களுக்கு சுவாசம்‌ ஒடுங்கும்‌. அப்பொழுது குண்டலினி என்ற அந்தப்‌ பாம்பு விழித்து எழும்‌, அதனால்‌ தியானம்‌ சித்தியாகும்‌ இறைவன்‌ நம்முள்‌ வீற்றிருப்பார்‌. மனிதனுள்‌ இறைவனைக்‌ காணும்‌ ரகசியம்‌ இதுவே என்று சொல்லி முடித்தார்‌ சட்டைமுனி.

குருதேவா! அரும்பெரும்‌ இரகசியத்தை இன்று உங்களால்‌ அறிந்தேன் ‌. மேலான இந்த வழியை விட்டு இனி நான்‌ விலக மாட்டேன்‌ ! என்று சொன்ன பாம்பாட்டியார்‌, சித்தரை வணங்கி எழுந்தார்‌. சித்தர்‌ அருள்புரிந்து விட்டு மறைந்தார்‌. பாம்பாட்டியார்‌ செய்த தொடர்‌ யோக சாதனையால்‌ குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும்‌ சித்தியானது.

பாம்பாட்டியார் அரசராதல்


ஒரு நாள்‌ வான்‌ வழியே உலா வந்து கொண்டிருந்தார் பாம்பாட்டி சித்தர்‌. செல்லும்‌ வழியில்‌ ஒரு குறு நாட்டு மன்னன்‌ இறந்து கிடந்ததைக்‌ கண்டார்‌. அவனைச்சுற்றி அரசியும்‌ மற்றவர்களும்‌ அழுது கொண்டிருந்தனர்‌. அருள்‌ உள்ளம்‌ கொண்ட அந்த இளம்‌ சித்தர்‌ அவர்களுக்கு ஆறுதல்‌ அளிப்பதற்காக தன்‌ கல்பதேகத்தை ஓரிடத்தில்‌ பத்திரமாக ஒளித்துவைத்துவிட்டு சூக்கும சரீரத்துடன்‌ கூடுவிட்டு கூடுபாயும்‌ வித்தையின்‌ வாயிலாக பாம்பாட்டி சித்தர்‌ இறந்து போன அரசனின்‌ உடலில்‌ புகுந்தார்‌. அரசன்‌ எழுந்தான்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சி ஆனால்‌ அரசன்‌ பிழைத்துக்‌ கொண்டாரே தவிர அவர்‌ செய்கைகள்‌ ஏதும்‌ திருப்திகரமாக இல்லை. மக்களின்‌ விமர்சனம்‌ காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள்‌. அவள்‌ மனதில்‌ சந்தேகப்‌ புயல்‌ மெல்ல விஸ்வரூபம்‌ எடுத்தது. அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள்‌ கேட்கத்‌ தொடங்கினாள்‌ ராணி.

"ஐயா! தாங்கள்‌ யார்‌ உண்மையில்‌ எங்கள்‌ அரசரா அல்லது சித்து வித்தைகள்‌ புரியும்‌ சித்தரா?" என்று. "அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப்‌ போக்குவதற்காகவே நான்‌ மன்‌னனது உடலில்‌ புகுந்திருக்கிறேன்‌. என்னுடைய பெயர்‌ பாம்பாட்டிச்‌ சித்தன்‌ என்றார்‌. அரசி உண்மையை உணர்ந்தாள்‌ கைகளைக்‌ கூப்பி எங்களுக்குத்‌ தெய்வமாக வந்து உதவி செய்தீர்‌ நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌ கடைத்தேறும்‌ வழியை உபதேசியுங்கள்‌ என்று வேண்டினாள்‌. அடுத்த கணம்‌, அரசரிடமிருந்து பலப்‌பல தத்துவப்‌ பாடல்கள்‌ உபதேசமாக வந்தன. அவைகளைக்‌ கவனமாக அனைவரும்‌ கேட்டனர்‌.

அதே சமயத்தில்‌ இறந்த அரசனுடைய ஆன்மா பரகாயப் பிரவேச முறையில்‌ இறந்துகிடந்த பாம்பின்‌ உடலில்‌ புகுந்து வெளியே ஓடத்தொடங்கியது. அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறை தவறிய சிற்றின்பத்தில்‌ அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல்‌ கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. அப்போது மன்னன்‌ உடலிலிருந்த சித்தர்‌ அந்த பாம்பைப் பார்த்து 'மன்னா! இன்னும்‌ உன்‌ ஆசைகள்‌ அடங்கவில்லையா?' என்று கேட்க அந்தப்பாம்பும்‌ சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர்‌ அந்தப்‌ பாமபைப் பார்த்து ஆடு பாம்பே என்று முடியும்‌ 129 பாடல்கள்‌ அடங்கிய ஒரு சதகத்தைப்‌ பாடி முடித்தார்‌.


அந்த சதகம்‌.
  1. கடவுள்‌ வணக்கம்‌,
  2. குருவணக்கம்‌,
  3. பாம்பின்‌ சிறப்பு,
  4. சித்தர்‌ வல்லபம்‌,
  5. சித்தர்‌ சம்வாதம்‌,
  6. பொருளாசை விலக்கல்‌
  7. பெண்ணாசை விலக்கல்‌,
  8. அகப்பற்று நீங்குதல்‌

என்னும்‌ எட்டு தலைப்புகளில்‌ எளிய தமிழில்‌ பாமரரும்‌ புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில்‌ சென்று சித்தி அடையும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ இந்த ஞான நூலைப்‌ பாடி முடித்துவிட்டு அரசன்‌ உடலை விட்டு வெளியேறியவுடன்‌ கல்ப உடலில்‌ புகுந்து தம் ‌சித்தர்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அரசர்‌ உடலிலிருந்து சித்தர்‌ வெளியேறினார்‌. அரசர்‌ உடம்பு கீழே விழுந்தது. சித்தர்‌ உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்‌ தொடங்கினாள்‌. அரசர்‌ உடலில்‌ இருந்து வெளியேறிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ தான்‌ பத்திரப்படுத்தி வைத்திருந்த தன்‌ பாம்பாட்டி உடலில்‌ புகுந்தார்‌.

சித்தரை வழிபடும் முறை


பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமிகளின்‌ படத்தை வைத்து, அதன்முன்‌ மஞ்சள்‌, குங்குமம்‌ இட்டு, அலங்கரிக்கப்‌ பட்ட குத்து விளக்கில்‌ தீபம்‌ ஏற்றி வைக்க வேண்டும்‌. ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக்‌ கூறி அர்ச்சித்த பிறகு, மூலமந்திரமான ''ஓம்‌ வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும்‌. பின்னர்‌ நிவேதனமாக சர்க்கரை போடாத பச்சைப்‌ பாலையும்‌, வாழைப்பழங்களையும்‌ வைக்க வேண்டும்‌. பின்‌ உங்கள்‌ பிரார்த்தனையை மனமுருகக்‌ கூறி வேண்டவும்‌.

ராகு பகவான்

பாம்பாட்டி சித்தர்‌ நவக்கிரகங்களில்‌ ராகு பகவானை பிரதிபலிப்பவர்‌. இவரை முறைப்படி வழிபட்டால்‌ நாகதோஷம்‌ அகலும்‌. மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்‌.

நிழல்‌ நிஜமாகவும்‌, நிஜம்‌ நிழலாகவும்‌ தோன்றும்‌ நிலை மாறும்‌. கணவன்‌, மனைவி இடையே உள்ள தாம்பத்யப்‌ பிரச்சினைகள்‌ அகலும்‌. போதைப்‌ பொருட்கள்‌, புகைப்பிடித்தல்‌, குடிப்பழக்கம்‌ போன்ற தீய பழக்கங்கள்‌ அகலும்‌. வெளிநாட்டில்‌ வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள்‌ உண்டாகும்‌.

ஜாதகத்தில்‌ ராகுபகவானால்‌ ஏற்படக்கூடிய களத்திர தோஷம்‌ நீங்கி, நல்ல இடத்தில்‌ திருமணம்‌ நடக்கும்‌. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம்‌ பெருகும்‌. வீண்பயம்‌ அகன்று தன்‌ பலம்‌ கூடும்‌. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள்‌ அகலும்‌. இவருக்கு கருப்பு வஸ்திரம்‌ அணிவித்து வழிபடுதல்‌ விசேஷம்‌. இவருக்கு பூஜை செய்ய சிறந்த நாள்‌ சனிக்கிழமை.

ஜீவ சமாதி


தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல்‌ மக்கள்‌ பிணி தீர்த்துக் கொண்டும்‌ அவர்களுக்கு அறநெறிகளைப்‌ புரிய வைத்துக்கொண்டும்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்றார்‌. விருத்தாச்சலம்‌ சென்றவுடன்‌ தான்‌ பூதவுடலை பிரியும்‌ நேரம்‌ வந்ததை உணர்ந்து அங்கு கோவில் கொண்டுள்ள பழமலை நாதருடன்‌ ஐக்கியமானார்‌ என்று பண்டைய சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. இவர்‌ திருஞானம்‌ என்ற இடத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ மருதமலையில்‌ ஜீவசமாதி அடைந்துள்ளார்‌ என்றும்‌ பல நூல்கள்‌ கூறுகின்றன. மருத மலையில்‌ முருகன்‌ சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்‌ சித்தர்‌ குகை என்று ஒரு குகைக்‌ கோவில்‌ உள்ளது. இவர்‌ தவம்‌ செய்த குகை மருதமலையில்‌ இன்னமும்‌ இருக்கிறது. இவர்‌ மருதமலையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, துவாரகையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, விருத்தாசலத்தில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌ கூறுகின்றனர்‌. மூன்று தலங்களிலும்‌ இவரது நினைவிடம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது.


28/9/18

சட்டை முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சித்தரான சட்டைமுனி
  4. சமாதி கூடல்‌
  5. அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை
  6. சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்

முன்னுரை


சட்டை முனி திருமூலர்‌, கொங்கணவர்‌ கருவூரார்‌ ஆகிய சித்தர்களுடன்‌ வாழ்ந்திருக்கிறார்‌. கயிலாயம்‌ சென்று கம்பளிச்சட்டை அணிந்தவராகத்‌ தமிழகம்‌ திரும்பி வந்ததால்‌ கயிலாயக்‌ கம்பளிச் சட்டை முனி நாயனார்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறார்‌.

முற்பகுதி வாழ்க்கை


சட்டை முனி சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நீண்டகாலம்‌ வாழ்ந்தார்‌ என்று அமுத கலை ஞானம்‌ என்ற நூலில்‌ அகத்தியர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. இவர்‌ சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நெசவுத்‌ தொழில்‌ செய்து வந்தார்‌. மெய்ஞ்ஞானம்‌ பெற்று சதுரகிரி சென்று ஒரு பிராமணர்‌ உடலில்‌ புகுந்து ஒரு கற்ப காலம்‌ வாழ்ந்தார்‌ என்று நொண்டிச்சிந்து என்னும்‌ வாதகாவியத்தில்‌ கருவூரார்‌ கூறியுள்ளார்‌.

(பாடல்கள்‌ 586,587)

போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 என்ற நூலின்படி சட்டைமுனி ஆவணி மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரம்‌ 3 ஆம்‌ பாதத்தில்‌ மிதுன ராசியில்‌ சிங்களவர்‌ தேசத்தில்‌ ஒரு தேவதாசியின்‌ மகனாகப்‌ பிறந்தார்‌. பிழைப்பு தேடி தாய்‌ தந்தையருடன்‌ தமிழகம்‌ வந்தார்‌.

(பாடல்கள்‌ 5874 3875)

அகத்தியர்‌ பெருநூல்‌ காவியம்‌ 433, 434,435 ஆம் பாடல்களின்‌ படி. சட்டைமுனி கோயில்‌ வாயில்களில்‌ நின்று தாம்பாளம்‌ ஏந்திப்‌ பிச்சை எடுத்துப்‌ பெற்றோரைக்‌ காப்பாற்றினார் ‌. திருமணம்‌ செய்து கொண்டு பிள்ளைகளும் பெற்றார். இவற்றிற்கு பிறகு ஒரு நாள் இந்தியாவின் வடகோடியிலிருந்து வந்த சங்கு பூண்ட சன்யாசி ஒருவரை சந்தித்தார்‌. அவரால்‌ கவரப்பட்டு அவருடனேயே வடநாடு சென்று அந்தத் தவ யோகியின்‌ தவக்குடிலிலேயே கொஞ்ச காலம்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்த சன்யாசியோடு கயிலாயம்‌ முதல்‌ கன்யாகுமரி வரை கால்‌நடையாகவே சுற்றி வந்திருக்கிறார்‌. அந்த ஞான குருவே சட்டை முனியின்‌ முதல்‌ வழிகாட்டி எனலாம்‌.

சித்தரான சட்டைமுனி


பிறகு போகரிடம்‌ தீட்சை பெற்று சித்தநெறியில்‌ ஈடுபட்டார்‌. சித்தரான பிறகு கருவூரார்‌ தொடர்பும்‌ கொங்கணவர்‌ தொடர்பும்‌ பெற்றார்‌. சட்டை முனியும்‌ கொங்கணவரும்‌ ஒருவரை ஒருவர்‌ மிகவும்‌ அதிகமாக நேசித்திருக்கிறார்கள்‌. ஞானம்‌, மருத்துவம்‌ போன்றவற்றை ஒருவருக்கொருவர்‌ பகிர்ந்து கொண்டுள்ளனர்‌. கயிலாயக்‌ கம்பளிச்சட்டை முனி பின்‌ நூறு' என்ற நூலின்‌ 40, 80, 87,88,95, 97 ஆகிய பாடல்களில்‌ அவர்‌ கொங்கண வரை மிகவும்‌ புகழ்ந்துள்ளார்‌. குறிப்பாக 40 ஆம்‌ பாடலில்‌ கொங்கணவர்‌ வான்‌ என்ற அந்தரானந்தர்‌ பெற்ற பூரணம்‌ என்றும்‌ கூறுகிறார்‌. கடைசியாக அகத்தியரிடம் தீட்சை பெற்று நிறைநிலை சித்தரானார்.

சட்டை முனி தன் ஞான நூல்களில் மனித குரு யாரையுமே குருவென்று குறிப்பிடவில்லை. சின்மயமேதன்‌ குரு என்று கூறியுள்ளார்‌. இருப்பினும்‌ அகத்தியரின்‌ பெருநூல்காவியம்‌ 12000ல்‌ சட்டைமுனி அஸ்வினி தேவர்களிடம்‌ நான்‌ யாரோவென்று எண்ண வேண்டாம்‌. நான்‌ போகருடைய சீடன்‌ என்று கூறியதாக ஒரு குறிப்பு உள்ளது.

சமாதி கூடல்‌


சட்டை முனி நீண்ட காலம்‌ வாழ்ந்து சீர்காழியில்‌ சமாதி கூடியுள்ளார்‌ என்று ஜனன சாகரத்தில்‌ போகர்‌ கூறியுள்ளார்‌. திருவரங்கத்தில்‌ அரங்கனுடன்‌ கலந்துவிட்டார்‌ என்று சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர்‌ அரங்கனுடன்‌ இணைந்துவிட்டார்‌ என்பதற்கு ஒரு புராணக்கதையும்‌ உள்ளது


அதுவருமாறு:

அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை


சட்டைமுனி சஞ்சாரகதியில்‌ கால்நடையாகவே பல ஊர்களையும்‌ சுற்றிக் கொண்டு வரும்‌ வழியில்‌ ஓரிடத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கோவிலின்‌ கோபுர கலசங்கள்‌ தெரியக்‌ கண்டார்‌. இரவு வருவதற்குள்‌ எப்படியும்‌ அரங்கனை தரிசித்துவிடவேண்டும்‌ என்ற ஆர்வத்தில்‌ அதிவேகமாக நடந்தார்‌. அவர்‌ கோவில்‌ வாயிலை அடைந்த போது நள்ளிரவு வழிபாடும்‌ முடிந்து கோவில் கதவுகள்‌ மூடப்பட்டிருந்தன.

மிகுந்த தாபத்துடன்‌ கோயில்‌ வாயிலில்‌ நின்று கொண்டு அரங்கா, அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கூவினார்‌. அவர்‌ அழைத்த மாத்திரத்தில்‌ கோவில்‌ மணிகள்‌ அடித்தன. மேளதாளங்களும்‌ முரசுகளும்‌ முழங்கின. கோவில்‌ கதவுகள்‌ எழுப்பப்பட்டு ஊர்‌ மக்களும்‌ அர்ச்சகர்களும்‌ திரண்டு கோவிலுக்கு வந்தனர்‌. கோவில்‌ கதவுகள்‌ திறந்திருந்தன. அரங்கன்‌ அருகில்‌ சட்டை முனி அமர்ந்திருந்தார்‌. அரங்கனின்‌ ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ சட்டை முனிமேல்‌ இருக்கக் கண்டனர்‌. அர்ச்சகர்கள்‌ சட்டை முனிமேலிருந்த அணிகலன்களையெல்லாம்‌ கழற்றி அரங்கனுக்கு அணிவித்து விட்டு அவரைத்‌ திருடன்‌ என்று அரசன்‌ முன்‌ கொண்டுபோய்‌ நிறுத்தினர்‌. அவரை அரசன்‌ விசாரித்த போது அவர்‌, எனக்கு எதுவும்‌ தெரியாது, அரங்கனுக்குத் தான்‌ தெரியும்‌ என்றார்‌. அரசன்‌ ஆணைப்படி அவரை கோவிலுக்கு இழுத்துச்‌ சென்று அரங்கன்‌ முன்‌ நிறுத்தினர்‌. சட்டை முனி தம்மை மறந்து அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கத்தினார்‌.

உடனே கோவில்‌ மணிகள்‌ ஒலித்தன. மேளதாங்களும்‌ முழங்கின. அரங்கன்‌ சிலை மேலிருந்த ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ தாமாகவே கழன்று வந்து சித்தரை அலங்கரித்தன. அடுத்தநொடியில்‌ சட்டை முனி ஒளி மயமாக மாறி அரங்கனுடன் கலந்தார்.

இந்த அதிசயத்தை கண்ட அனைவரும் அரங்கனும் சட்டை முனியும் வேறு வேறல்லர்‌. தானே சட்டை முனி என்பதை அனைவருக்கும்‌ நிரூபித்துக் காண்பிக்க அரங்கன்‌ நடத்திய திருவிளையாடலே இது' என்று உணர்ந்தனர்‌. இன்றும்‌ திருவரங்கத்தில்‌ சட்டை முனியே அரங்கனாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ என்று பல வைணவப்‌ பெரியார்கள் கருதுகின்றனர்‌. சைவப்‌ பெரியார்களும்‌ சட்டை முனி சீர்காழியில்‌ சிவப்பரம்பொருளாயிருந்து அருள்புரிந்து வருகிறார்‌ என்று கருகின்றனர்.

சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்


முதல் கதை

சித்தர்களின்‌ ரகசியங்களை எல்லோரும்‌ புரிந்து கொள்ளும்‌ படி வெளிப்படையாக சட்டை முனி தீட்சாவிதி என்ற நூலை எழுதினார்‌. அதைப் பற்றி உரோமரிஷி கோபமாக விமர்சனம் செய்ய தலைமை சித்தரான திருமூலர்‌ அந்த நூலையே கிழித்தெறிந்து விட்டார்‌. தம்மைப்‌ பழிவாங்க சட்டைமுனி தம்முடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்று எண்ணிய உரோம ரிஷி தம்‌ நூல்களை எல்லாம்‌ தம்முடைய குருவான காகபுஜண்டரிடம்‌ கொடுத்தார்‌. காகபுஜண்டரும்‌ அவற்றைத்‌ தம்‌ காக்கைச் சிறகுகளில்‌ பத்திரமாக மறைத்து வைத்திருந்து அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. இது ஒரு கதை.

மற்றொரு கதை

கயிலாய கம்பளிச்‌ சட்டை முனியும்‌ உரோம ரிஷியும்‌ ஒருவரே. இவர்‌ உடம்பில்‌ 3.5 கோடி உரோமங்கள்‌ உள்ளன. இவர் பல யுகங்களாக வாழ்ந்து வருகிறார்‌. இவர் உடம்பிலிருந்து ஒரு உரோமம்‌ உதிர்ந்தால்‌ படைப்புத்‌ தொழில்‌ புரியும்‌ ஒரு பிராமன்‌ இறப்பான்‌. இந்த உரோம ரிஷியாகிய கம்பளிச்‌ சட்டை முனி தம்‌ வாழ்நாளில்‌ பல பிரம்மன்களைக்‌ கண்டவர்‌. இன்னும்‌ கோடிக்கணக்கான பிரம்ம தேவர்களை காண இருப்பவர்‌. இப்போதும்‌ வாழ்ந்து கொண்டிருப்பவர்‌. இன்னும்‌ பல யுகங்கள்‌ வாழ இருப்பவர்‌.

இந்த இருவேறு கதைகளும்‌ சித்தர்‌ இலக்கியங்களிலும்‌, சித்த மருத்துவ நூல்களிலும்‌ இடம்‌ பெற்றுள்ள கதைகள்தான்‌. எந்த கதை உண்மைக்கதை என்பது தான்‌ தெரியவில்லை.


27/9/18

கோரக்கர்‌

பொருளடக்கம்
  1. பிறப்பு
  2. உண்மை வாழ்க்கை
  3. பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன
  4. கண்ணை இழந்து பெற்ற கதை
  5. குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌
  6. அல்லமாத்தேவர்‌ ஆசிபெறுதல்‌
  7. பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி
  8. கடைசி கால தவ வாழ்க்கை
  9. கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை
  10. கோரக்கர்‌ சமாதி கூடல்‌

பிறப்பு


கோரக்கர்‌ கொல்லி மலைச்சாரலில்‌ உள்ள சம்பல்‌ பட்டியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ கார்த்திகை மாதம்‌ ஆயில்யம்‌ நட்சத்திரம்‌ 2ஆம்‌ பாதத்தில்‌ வசிஷ்ட மகரிஷிக்கும்‌ ஒரு குறவர் குடிப்‌ பெண்ணிற்கும்‌ மகனாகப்‌ பிறந்தார்‌.

(போகர்‌ 7000/5912, 5973)

உண்மை வாழ்க்கை


இவர்‌ பிராமணனாகப் பிறந்து கற்ப தேகத்துடன்‌ சேணியத்‌ தொழிலாளியாக வாழ்ந்து வந்தார்‌. ஒரு நாள்‌ ஒரு இடையன்‌ பாம்பு கடித்து இறந்தான்‌. இவர்‌ அவன்‌ உடலில்‌ புகுந்து இடையனாக மாறினார்‌. திரும்பி வந்து தன்‌ கல்ப தேகத்தைத்‌ தேடக்‌ கிடைக்காததால்‌ இடையனாகவே வாழ்ந்தார்‌. சதுரகிரி சென்று பல முனிவர்களுடன்‌ சேர்ந்து கற்ப மூலிகைகளை உண்டு இடையன்‌ உடலையும்‌ கல்ப தேகமாக மாற்றிக் கொண்டார்‌.

(கருவூரார்‌ வாத காவியம்‌ பாடல்கள்‌ 3563 முதல்‌ 577 வரை)

பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன


மச்சேந்திரர்‌ சிவனிடமே ஞானம்‌ பெற்ற மாமுனிவர்‌. தேச சஞ்சாரியான அம்முனிவரிடம்‌ ஒரு நாள்‌ பிச்சையிட்ட ஒரு பெண்‌, தனக்கு மகன்‌ பிறக்க வரமளிக்க வேண்டினாள்‌.அவளுக்கு முனிவர்‌ விபூதி அளித்து! உட்கொள்ளச் சொன்னார்‌. அவள்‌ அதை அடுத்த வீட்டுக்காரியிடம்‌ கூற அவள்‌ அவன்‌ ஒரு வேஷக்‌ காரன்‌. உன்னை மயக்கவே விபூதி கொடுத்திருக்கிறான்‌. அதை அடுப்பில்‌ போட்டு எரித்துவிடு என்றாள்‌. அப்பெண்ணும்‌ அந்த விபூதியை எரியும்‌ அடுப்பில்‌ கொட்டி விட்டாள்‌. சில ஆண்டுகள்‌ கழித்து அவள்‌ வீட்டுக்கு வந்த மச்ச முனி, உன்‌ மகன்‌ எங்கே? என்று கேட்டார்‌. அவள்‌ நடந்ததைக்‌ கூற அவர்‌ அடுப்பெரித்த சாம்பலை எங்கே கொட்டினாய்‌? என்று கேட்டார்‌. அவள்‌ குப்பை மேட்டைக்‌ காட்ட மச்சேந்திரர்‌ கோரக்கா, எழுந்து வா! என்று அழைக்க குப்பைக்‌குள்ளிருந்து அத்தனை ஆண்டுகள்‌ வளர்ந்த பிள்ளையாக கோரக்கர்‌ வெளிப்பட்டார்‌. வெளிப்பட்ட அச்சிறுவன்‌ மச்சமுனியைத்‌ தன்‌ குருவாகக்‌ கொண்டு அவருடன்‌ சென்று விட்டான்‌.

கண்ணை இழந்து பெற்ற கதை


ஒரு நாள்‌ கோரக்கர்‌ பிச்சைக்கு சென்ற போது ஒரு பார்ப்பனி ஒரு வடையைக்‌ கொடுக்க அதைக்‌ கொண்டு போய்‌ குருவுக்குக் கொடுத்தார்‌. அந்த வடையைத்‌ தின்ற மச்சமுனி மீண்டும்‌ ஒரு வடை கேட்க கோரக்கர்‌ அந்த பிராமனியிடம்‌ சென்று என்‌ குருவுக்கு இன்னும்‌ ஒரு வடை வேண்டும்‌ என்றார்‌. உம் குருவுக்காக உமது கண்ணைக்‌ கேட்டால்‌ கொடுப்பீரா? என்று அவள்‌ கேட்க கோரக்கர்‌ உடனே தன்‌ கண்ணைப்‌ பிடுங்கிக் கொடுத்து அவளிடம்‌ வடையை வாங்கிச்சென்று குருவிடம்‌ கொடுத்தார்‌. நடந்ததை அறிந்த குரு தவ வலிமையால்‌ தன்‌ சீடனுக்கு இழந்த கண்ணை வழங்கினார்‌.

குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌


தவயாத்திரையில்‌ மலையாள நாட்டை அடைந்த மச்சமுனி பிரேமளா என்ற பெண்ணிடம்‌ மயங்கி மீனநாதன்‌ என்ற மகனுக்கும்‌ தந்தையாகி விட்டார்‌. குடும்ப வலையிலிருந்து தன்‌ குருவை மீட்க கோரக்கர்‌ கூத்தாடிகளுடன்‌ மத்தளம்‌ வாசிப்பவராகச்‌ சேர்ந்து அவர்கள்‌ வீட்டை அடைந்து குருவைத்‌ தன்னுடன்‌ வருமாறு அழைத்தார்‌. குரு மறுத்தாலும்‌ சீடர்‌ விடவில்லை. ஒரு நாள்‌ குழந்தை மீனநாதன்‌ படுக்கையில்‌ மல உபாதை செய்ய மச்சமுனி கோரக்கரை அழைத்து குழந்தையை நீரில்‌ கழுவி வரச் சொன்னார்‌. கோரக்கர்‌ மீனநாதனைத்‌ துணியுடன்‌ சேர்த்து ஆற்றுக்குக்‌ கொண்டு போய்த்‌ துவைத்து வெயிலில்‌ காயவைத்தார்‌. நடந்ததைக்‌ கேட்ட முனிவர்‌, 'என்மகனை அழைத்து வா' என, சிதைந்த உடல்‌ துகள்கள் யாவும்‌ சேர்ந்து 108 மீனநாதர்களாய்‌ வந்து சேர்ந்தனர்‌. கோரக்கர்‌ அவர்களையெல்லாம்‌ இணைத்து ஒரே மீனநாதனாக்கிக்‌ கொடுத்து விட்டு, குருவைத்‌ தன்னுடன்‌ வரும்படி அழைத்தார்‌. வேறு வழியின்றி மச்ச முனியும்‌ அவருடன்‌ புறப்பட்டு விட்டார்‌. பிரேமளா ஒரு தங்கப் பாளத்தை ஒரு துணியில்‌ சுற்றி மச்சமுனியிடம்‌ வழிச் செலவுக்கு கொடுத்தனுப்பினாள்‌. வழியில்‌ அதைக் கண்ட கோரக்கர்‌ குருவுக்குத்‌ தெரியாமல்‌ அந்த மூட்டையைப்‌ பிரித்து தங்கப்‌ பாளத்தை எடுத்து ஒரு குளத்தில்‌ எறிந்துவிட்டு துணியில்‌ கற்களை வைத்துக்‌ கட்டிவிட்டார்‌.

அதைக்‌ கண்டுபிடித்த குரு நாதர்‌ கோரக்கா! முதலில்‌ நீ என்‌ மகனைக்‌ கொன்றாய்‌. இப்போது என்‌ தங்கத்தைத்‌ திருடினாய் ‌. இனி நீ என்‌ சீடனல்ல என்று கூற கோரக்கர்‌ அங்கிருந்த ஒரு குன்றின்‌ மேல்‌ ஏறி சிறுநீர் கழிக்க அது ஒரு தங்கமலை ஆகிவிட்டது. பிறகு கோரக்கர்‌ முனிவரிடம்‌ குருவே! உங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ‌ என்று கூறி குருவிடம்‌ நல்விடை பெற்றுப்‌ பிரிந்து சென்று விட்டார்‌. மச்சமுனியும்‌ மாயை தெளிந்து நிறைநிலை சித்தராகி பல தலங்களுக்குச்‌ சென்று மக்களுக்கு உதவிகள்‌ புரிந்து விட்டுக்‌ கடைசியில்‌ திருப்பரங்குன்றம்‌ சென்று சமாதி பூண்டார்‌. இவர்‌ சமாதி பூண்ட இடத்தைத் தான்‌ முருகன்‌ தன்‌ ஆறுபடை வீடுகளில்‌ ஒன்றாகக்‌ கொண்டு அருளாட்சி செய்து வருகிறான்‌.

அல்லமாத் தேவர்‌ ஆசிபெறுதல்‌


அல்லமாத்தேவர்‌ மகா ஞானி. நாடி சாஸ்திரத்தை முழுமையாகக்‌ கற்றுணர்ந்தவர்‌. காற்றையே உடலாகக் கொண்ட சித்தர்‌. ஒரு முறை கோரக்கர்‌ அவரிடம்‌ ஒரு வாளைக்‌ கொடுத்து இந்த வாளால்‌ என்னை வெட்டுங்கள்‌ என்றார்‌. அந்த வாளால்‌ அல்லமர்‌ வெட்ட வாள்‌ மழுங்கியதே தவிர கோரக்கர்‌ உடலில்‌ எந்த பாதிப்பும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ அந்த வாளைக்‌ கோரக்கரிடம்‌ கொடுத்து அதே வாளால்‌ தம்மை வெட்டும்படி கூறினார்‌. தேவரை கோரக்கர்‌ வெட்டிய போது வாள்‌ காற்றுக்குள்‌ புகுந்து வெளி வருவதைப் போல்‌ வெளியில்‌ வந்ததே தவிர அல்லமர்‌ உடலில்‌ எந்தச்‌ சலனமும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ பெருமையை உணர்ந்த கோரக்கர்‌ அவரைப்‌ பணிந்து அவரிடம்‌ அருளாசி பெற்றுத்‌ தன்‌ தவயாத்திரையைத்‌ தொடர்ந்தார்‌.

பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி


பிரம்ம ரிஷி குருக்ஷேத்திரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்‌ கற்று சித்தர் கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ முனியாக வாழ்ந்து வந்தார்‌. கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தாங்கள்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழில்களையும்‌ செய்யும்‌ ஆற்றலைப் பெற ஒரு உக்கிரமான வேள்வி நடத்தினர்‌. எதிர்பாரா வண்ணம்‌ யாக குண்டத்திலிருந்து மருள்மாயை, இருள்மாயை என்ற இரு பேரழகிகள்‌ வெளிப்பட்டனர்‌. அதனால்‌ கோபமுற்ற முனிவர்கள்‌ அந்த அழகிகளை சபித்தனர்‌. பிரம்ம முனியால்‌ சபிக்கப்பட்ட இருள்மாயை புகையிலைச் செடியானாள்‌.(ஹோமப் புகையிலிருந்து வெளிப்பட்டதால்‌ அச்செடிக்கு புகையிலைச் செடி என்ற பெயர்‌ வந்தது.) கோரக்கரால்‌ சபிக்கப்பட்ட மருள்‌ மாயை கஞ்சா செடியானாள்‌ (தவ சித்திகளுக்கு அமுதமாக அமைந்ததால்‌ அது கஞ்சா செடி என்ற பெயர்‌ பெற்றது.

கடைசி கால தவ வாழ்க்கை


கோரக்கரின்‌ சிவயோகத்‌ தலயாத்திரையில்‌ ஒரு முறை சதுரகிரி அடி வாரத்தில்‌ உள்ள மகாலிங்க மலைக்‌ குகையில்‌ தவம்‌ மேற்கொண்டார்‌. (அந்தக்‌ குகை, மலை அடிவாரத்திலுள்ள தாணிப் பாறையிலிருந்து 3 கி. மீ உயரே உள்ளது! அந்தக்‌ குகைக்கு அருகில்‌ அவர்‌ வழிபட்ட லிங்கமும்‌ ஒரு நீரோடையும்‌ உள்ளன. அந்த நீரோடை இன்றும்‌ கோரக்கர்‌ தீர்த்தம்‌ என்றே அழைக்கப்‌படுகிறது. கோரக்கர்‌ குகைக்கு மேலே 4 கி. மீ. உயரத்தில்‌ மகா லிங்கேஸ்வரர்‌ லிங்க வடிவில்‌ இருந்து அருளாட்சி செய்துவருகிறார்‌.

இந்த சித்தர்‌ சீனா சென்று அங்கு 500 ஆண்டுகள்‌ சித்து விளையாடியுள்ளார்‌. பின்னர்‌ தமிழகம்‌ வந்து 400 வருட கால தவ வாழ்க்கைக்குப்‌ பின்‌ தில்லைவனம்‌ சென்று சிதம்பர ரகசியத்தை உருவாக்கியதில்‌ போகருடன்‌ இருந்திருக்கிறார்‌. இந்த செய்திகளையும்‌ போகரின்‌ மறுவருகை பற்றியும்‌ தமிழகத்தின்‌ எதிர்காலம்‌ பற்றியும்‌ அவர்‌ சந்திரசேகை 200 என்று நூலில்‌ எழுதியுள்ளார்‌.

அவர்‌ எழுதிய சதுரகிரி மகாத்மியம்‌ என்ற நூலில்‌ திருப்பழனி மல்லூர்‌ தன்னில்‌ போகரோடு தெண்டபாணி உருவம்‌ செய்தோம்‌ என்றும்‌ போகருக்குத்‌ தாமே ஜீவசமாதி எழுப்பியதாகவும்‌ கூறியுள்ளார்‌.

கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை


அத்திரி தபோவனம்‌ திருநெல்வேலி மாவட்டம்‌ அம்பாசமுத்திரம்‌ வட்டத்தில்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலை அடிவாரத்தில்‌ கடல்‌ மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில்‌ உள்ளது. இந்தத்‌ தபோவனத்தில்‌ தான்‌ அத்திரி முனிவரும்‌ அனுசுயா தேவியும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்‌. அவருக்கு எட்டு சீடர்கள்‌ இருந்தனர்‌. அவர்களில்‌ கோரக்கரும்‌ ஒருவர்‌.

ஒரு சமயம்‌ அத்திரி மகரிஷி ஆழ்ந்த தவத்தில்‌ இருந்தார்‌. அவர்‌ தவம் கலைந்து கண் திறந்த போது அவர்‌ சீடர்களில்‌ ஏழு பேர்‌ நீராடச்‌ சென்றிருந்தனர்‌. கோரக்கர்‌ மட்டும்‌ போகாதிருந்ததைக்‌ கண்ட முனிவர்‌ அவர்‌ மட்டும்‌ ஏன்‌ நீராடச்‌ செல்லவில்லை என்று கேட்டார்‌. தானும்‌ சென்றுவிட்டால்‌ குருவிற்கு செய்ய வேண்டிய பனிவிடைகள்‌ தடைபடும்‌ என நினைத்துத் தான்‌ போகாது இருந்து விட்டதாகக்‌ கோரக்கர்‌ கூறினார்‌. கோரக்கரின்‌ குரு பக்தியைப்‌ பாராட்டிய மகரிஷி தாம்‌ தவம்‌ செய்த அத்தி மரத்தடியில்‌ தண்டத்தால்‌ தட்டி, தம்‌ மண்டலத்திலுள்ள நீரைத்‌ தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில்‌ கோரக்கரை நீராடச் செய்தார்‌. இன்றும்‌ அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும்‌ நீர் வற்றும்‌ கோடையிலும்‌ இந்த அத்திரி கங்கையில்‌ மட்டும்‌ ஒரே நிலையில்‌ நீர் பெருகி குடிக் கொண்டே உள்ளது. இந்த கங்கையில்‌ நீராடுவோர்‌ நலம்‌ பல பெற்று நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்‌.

இப்போது அம்பாசமுத்திரத்திற்கு அருகில்‌ உள்ள ஆழ்வார்‌ குறிச்சிக்கு மேற்கே சுமார்‌ 5 கி.மீ. தொலைவில்‌ ஆதிசிவசைலம்‌ எனப்படும்‌ அத்திரி மலைக்கோயில்‌ உள்ளது. இங்குள்ள ஆதி சிவசைல நாதர்‌ அத்திரி முனிவரால்‌ வழிபட்டதால்‌ அத்திரி பரமேஸ்வரர்‌ என்றும்‌ கோரக்கரால்‌ வழிபடப்பட்டதால்‌ கோரக்கநாதர்‌ என்றும் திருப்பெயர்கள்‌ கொண்டுள்ளார்‌. இங்குள்ள ஆறுபடை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின்‌ திருநாமமும்‌ அத்திரிபரமேஸ்வரி என்பதே ஆகும்‌.

திரேதா யுகத்தில்‌ நிகழ்ந்தது


இந்த வரலாறு நமக்குப்‌ புலப்படுத்தும்‌ உண்மைகள்‌:

  • மகரிஷிகளும்‌ சித்தர்களும்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்கள்‌.
  • மக்களுக்கு நன்மை செய்வதற்காகவும்‌ மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும்‌ அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ தாங்களே விரும்பி மறு பிறப்பெடுக்கின்றனர்‌.
  • அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ பிறந்து கொஞ்ச காலம்‌ மக்களிடை வாழ்ந்து ஜீவ சமாதி அடைகின்றனர்‌.
  • ஜீவ சமாதி அடைந்தபிறகும்‌ அருவமாய்‌ இருந்து மக்களுக்கு அருள்‌ புரிந்து வருகின்றனர்‌.
  • அரூபியாக வாழ்ந்து வரும்‌ கோரக்க சித்தரையோ அல்லது அகத்தியர்‌, திருமூலர்‌ போன்ற வேறு ஒரு சித்தரையோ குருவாகக்‌ கொண்டு அவரையே தான்‌ வழிபடும்‌ கடவுளாகவும்‌, வழிகாட்டியாகவும்‌ கொண்டு முழு நம்பிக்கையுடன்‌ அவரை வழிப்பட்டு வந்தால்‌ இப்பிறப்பிலேயே இன்பமான வாழ்வும்‌, மறுபிறப்பில்லா பெருவாழ்வும்‌ அமையும்‌ என்பது திண்ணம்‌.

கோரக்கர்‌ சமாதி கூடல்‌


கடைசி காலத்தில்‌ கோரக்கர்‌ நாகைக்குத்‌ தெற்கேயுள்ள வேளாங்கண்ணியில் 1008 ஆண்டுகள் சிவராஜ யோக நிஷ்டையிலிருந்து அன்னை இராஜராஜேஸ்வரியின் திருக்காட்சி பெற்றார். அங்கிருந்து வடக்கே ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பொய்கை நல்லூரை அடைந்தார். பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வெளியில் வன்னி மரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌.
பொய்கை நல்லூர் திருத்துறைப்பூண்டி பேருந்து வழித்தடத்தில் நாகையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


26/9/18

பிரம்ம முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கோரக்கருடன் நட்பு
  3. ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு
  4. பிரம்ம முனி சமாதி கூடல்‌

முன்னுரை


முற்பகுதி வாழ்க்கை

குஜராத்‌ மாநிலத்தில்‌ துவாரகைக்கு அருகில்‌ உள்ள ஒரு கிராமத்தில்‌ பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16 வயதாகும்‌ முன்பே தான்‌ ஒரு பிரம்ம ஞானி என்று நிரூபித்து வந்தான்‌. தெய்வீக ஆற்றலைக்‌ கொண்டு அவன்‌ மக்களின்‌ நோய்களையும்‌ குறைகளையும்‌ போக்கி வந்தான்‌. மக்கள்‌ அவனை தெய்வமாகவே மதித்து ஞானேஸ்வரர்‌ என்று அழைத்துவந்தனர்‌.

கோரக்கருடன் நட்பு


கோரக்க மகாசித்தர்‌ வட நாட்டு யாத்திரை சென்ற போது தன்‌ தவ வலிமையால்‌ ஞானேஸ்வரரை வெற்றி கொள்ள வேண்டும்‌ என்று அந்த கிராமத்திற்குச்‌ சென்றார்‌. தன்னைக்‌ கண்டு அந்த சிறுவன்‌ அஞ்‌சி ஓட வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ ஒரு புலி மேலேறி அவனை நோக்கிச்‌ சென்றார்‌. அப்போது ஞானேஸ்வரர்‌ ஒரு குட்டிச்சுவரின்‌ அருகில்‌ தன்‌ நண்பர்களுடன்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தார்‌. ஒரு முனிவர்‌ தன்னை காண வருவதைக்‌ கண்ட ஞானேஸ்வரர்‌ நண்பர்களுடன்‌ குட்டிச்‌ சுவரின்மேல்‌ உட்கார்ந்து கொண்டு முனிவரை வரவேற்க விண்ணில்‌ பறந்து சென்றார்‌. அவர்‌ தன்னை நெருங்கி வருவதைத்‌ தடுக்க, கோரக்கர்‌ தன்‌ தவ வலிமையால்‌ பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டார்‌. ஞானேஸ்வரர்‌ அருகில்‌ வந்த அந்த அஸ்திரம்‌ பூமாலையாக மாறி அவர்கழுத்தில்‌ விழுந்தது: அதனால்‌ கோபமுற்ற கோரக்கர்‌ நாகாஸ்திரத்தை ஏவினார்‌. ஞானேஸ்வரர்‌ அந்த நாகத்தைப்பற்றி எய்தவரிடமே திருப்பி விட அது பாம்பாக வந்து கோரக்கர்‌ கழுத்தில்‌ விழுந்தது, அதன் மூலம்‌ ஞானேஸ்வரரின்‌ தெய்வீக ஆற்றல்‌ தம்‌ தவ வலிமையை விட மிகவும்‌ உயர்ந்தது என்பதை உணர்ந்த கோரக்கர்‌ ஆணவம்‌ அடங்கியவராய்‌ ஞானேஸ்வரரை வணங்க இருவரும்‌ நண்பர்களாயினர்‌. பிறகு கோரக்கரும்‌ ஞானேஸ்வரரும்‌ ஒன்று சேர்ந்து வட மதுரை வழியாகக்‌ குருக்ஷேத்திரத்தைச்‌ சென்றடைந்தனர்‌. அங்கு சில காலம்‌ தவவாழ்க்கைக்குப் பின்‌ நேரிடையாக தமிழ்நாடு வந்தனர்‌.

ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு


கோரக்கருடன்‌ தமிழகம்‌ வந்த ஞானேஸ்வரர்‌ சதுரகிரி சித்தர்‌ கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ மொழியைக்‌ கற்றார்‌. தமிழக சித்தர்கள்‌ அவரது தவ வலிமையைக் கண்டு வியந்து அவரை பிரம்மமுனி என்றே அழைத்தனர்‌. பிறகு கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தங்களாலும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழிலையும்‌ செய்ய முடியும்‌ என்று நிரூபிக்க வேண்டி ஒரு யாகம்‌ வளர்த்ததன் மூலம்‌ கஞ்சாச் செடியும்‌, புகையிலைச்‌ செடியும்‌ தோன்றுவதற்குக்‌ காரணமாயினர் ‌.
[ விபரம் கோரக்கர்‌ வரலாற்றில்‌ காணலாம். ]

பிரம்ம முனி சமாதி கூடல்‌


தாம்‌ இயற்கை விதிகளைக்‌ கடந்து யாகம்‌ வளர்த்தது தவறு என்பதை உணர்ந்த பிரம்மமுனி கோரக்கரைப்‌ பிரிந்து தெற்கே சென்று இலங்கையை அடைந்தார்‌. அங்குள்ள திரிகோண மலையில்‌ ஜீவசமாதி கூடியிருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ . பிரம்மமுனி ஜீவ சமாதி அடைந்த போது கோரக்கரும்‌ அவர்‌ அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


25/9/18

திருமூலர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. நம்பத் தகுந்த வரலாறு
  3. சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு
  4. திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌
  5. வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை
  6. திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து

முன்னுரை


திருமூல நாயனாரும்‌ திருமூல சித்தரும்‌ ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூலநாயனாரின் புராணக்கருத்து. திருமூல நாயனாரின்‌ ஞானமும்‌ (77 பாடல்கள்‌) சித்தர்‌ திருமூலரின்‌ மந்திரமும்‌ அவர்‌ தவத்தினால்‌ சிவநிலை அடைந்தார்‌ என்பதையே வலியுறுத்‌துகின்றன. அவர்‌ தவ வாழ்க்கையை வாழ்ந்தார்‌ என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும்‌ புராணங்களும் கூறுகின்றன.

நம்பத் தகுந்த வரலாறு


நாயன்மார்களில்‌ திருமூலர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி மாதம்‌ மூல நட்சத்திரம்‌. இது சிதம்பரம்‌ முதலான அனைத்து சிவாலயங்களும்‌ கொண்டுள்ள நட்சத்திரம்‌. இந்த சித்தர்‌ மூல நட்சத்திரத்தில்‌ பிறந்ததால் திருமூலர்‌ என்று அழைக்கப்படுகிறார்‌ என்று கொள்வதே பொருத்தமானது.

அவர்‌ வேளாளர்‌ குலம்‌ ஒன்றின்‌ 21 வது தலைமுறையைச்‌ (போகர்‌ 7000/5737). ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள்‌ சமாதி கூடியே வாழ்ந்தவர்‌ (போ. 5862). அவர்‌ திருமந்திரம்‌ 3000 பாடல்களைப் பாடியுள்ளார்‌. கடைசியில்‌ (3000 ஆண்டு முடிவில்‌) திருவாவடுதுறையில்‌ உள்ள சிவாலயத்தின்‌ மேற்கேயுள்ள அரச மரத்தடியில்‌ ஜீவ சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌. இதற்குத்‌ திருவாவடுதுறை தலபுராணமே சான்றாக உள்ளது.

சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு


பாடல்கள்‌ 3564-3591

திருமூலர்‌ - பெயர்க்காரணம்

கயிலைநாதனின்‌ முதல்‌ பெரும்‌ காவலரான திருநந்தி தேவரின்‌ மாணாக்கரில்‌, எண்‌ வகை சித்திகளும்‌ கைவரப்பெற்ற சிவயோகியார்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ அகத்திய முனிவரிடம்‌ கொண்ட நட்பின்‌ காரணமாக, அவரோடு சில காலம்‌ தங்க எண்ணினார்‌. இதையடுத்து அந்த சிவயோகியார்‌, அகத்திய முனிவர்‌ தங்கி அருள்‌ புரியும்‌ பொதிகை மலையை அடையும்‌ பொருட்டு, திருக்கயிலையில்‌ இருந்து புறப்பட்டார்‌. வழியில்‌ உள்ள சிவாலயங்களை தரிசித்து விட்டு, இறுதியில்‌ திருவாவடுதுறையை அடைந்தார்‌.

மூலன்

சில காலம்‌ அங்கேயே தங்கியிருந்தார்‌. சிறிது நாட்கள்‌ கழித்து அங்கிருந்து புறப்பட திட்டமிட்டார்‌. அப்போது அவரை அந்த காட்சி தடுத்து நிறுத்தியது. காவிரிக்‌ கரையில்‌ சோலைகளாக இருந்த இடத்தில்‌ மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த பசுக்கூட்டம்‌ கதறி அழுவதைக்‌ கண்டு திகைத்துப்‌ போனார்‌ அந்த சிவயோகியார்‌. பசுக்களின்‌ இந்த பெரும்‌ துயரத்தை அறிய முற்பட்டார்‌ சிவயோகியார்‌. அதற்கு பதிலும்‌ கிடைத்தது. அந்தணர்கள்‌ வாழும்‌ சாத்தனூரிலே தொன்றுதொட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வரும்‌ இடையரான மூலன்‌ என்பவர்‌ இறந்து விட்டார்‌. அவர்‌ இறப்பை தாங்க முடியாத பசுக்கள்‌, அந்த மூலனின்‌ உடலைச்‌ சுற்றி சுழன்று வந்து நாக்கால்‌ நக்கியபடியும்‌, மோப்பம்‌ பிடித்தபடியும்‌ வருந்திக்‌ கொண்டிருந்தன. மேய்ப்பவன்‌ இறந்தமையால்‌ பசுக்கள்‌ அடைந்த துயரத்தினைக்‌ கண்ட சிவயோகியார்‌, அந்தப்‌ பசுக்களின்‌ துயர்‌ துடைக்க முன்‌ வந்தார்‌.

பரகாயப்‌ பிரவேசம்

எண்‌ வகை சித்திகளையும்‌ கற்றுத்‌ தேர்ந்திருந்த அவர்‌, அவற்றுள்‌ ஒன்றான பரகாயப்‌ பிரவேசம்‌ (கூடுவிட்டு கூடு பாய்தல்‌) என்ற சித்தியை கையாண்டார்‌. அதன்படி தன்‌ உடலை மறைவாக இருக்கும்படி செய்து விட்டு, மந்திரத்தை பிரயோகம்‌ செய்து, தன்‌ உடலில்‌ இருந்து, இறந்து கிடந்த மூலனின்‌ உடலுக்கு தன்‌ உயிரை மாற்றம்‌ செய்தார்‌. மூலன்‌ எழுந்தார்‌. மூலனின்‌ உடலில்‌ தன்‌ உயிரை செலுத்தியதன்‌ காரணமாக அவர்‌ திருமூலர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. தன்‌ மேய்ப்பாளன்‌ எழுந்த மகிழ்ச்சியில்‌, அவரைச்‌ சுற்றியிருந்த பசுக்கள்‌, நாவால்‌ நக்கியும்‌, மோந்தும்‌, கனைத்தும்‌ தங்கள்‌ மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பின்னர்‌ மகிழ்வில்‌ மேய்ச்சலை தொடர்ந்தன.

பின்னர்‌ மகிழ்ச்சிப்‌ பெருக்கில்‌ வயிறார மேய்ந்த பசுக்கள்‌, கூட்டமாகச்‌ சென்று காவிரியாற்றில்‌ நன்னீர்‌ பருகிக்‌ கரையேறின. அப்பசுக்களைக்‌ குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்‌ படி செய்து பாதுகாத்தருளினார்‌ திருமூலர்‌. மாலை பொழுது வந்ததும்‌, பசுக்கள்‌ தம்‌ தம்‌ கன்றுகளை நினைத்து, தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. பசுக்கள்‌ செல்லும்‌ வழியில்‌ தொடர்ந்து சென்ற திருமூலர்‌, பசுக்கள்‌ யாவும்‌ தம்‌ தமது வீடுகளுக்கு செல்வதை வழியில்‌ நின்று கவனித்தார்‌. இந்த நிலையில்‌ மாலைப்‌ பொழுது கடந்தும்‌ தன்‌ கணவர்‌ வராததை எண்ணி வருந்திய மூலனின்‌ மனைவி, கணவனைத்‌ தேடி சிவயோகியார்‌ நின்ற இடத்திற்கு வந்தாள்‌. அங்கு தன்‌ உணர்வற்று நின்ற தன்‌ கணவனைக்‌ கண்டு அவரைத்‌ தொட முயன்றாள்‌. அப்போது திருமூலர்‌ உருவில்‌ இருந்த சிவயோகியார்‌ சற்று பின்‌ வாங்கி, அந்தப்‌ பெண்மணியை தடுத்து நிறுத்தினார்‌. கணவர்‌ தன்னைக்‌ கண்டு அஞ்சி பின்வாங்குவதை பார்த்து அந்தப்‌ பெண்‌ கலங்கி நின்றாள்‌.

பற்றற்ற நிலை

திருமூலரோ, 'பெண்ணே! நீ எண்ணியவாறு இங்கு உனக்கு, என்னுடன்‌ எத்தகைய உறவும்‌ இல்லை' என்று கூறிவிட்டு, அந்த ஊரில்‌ இருந்த பொது மடத்தில்‌ புகுந்து சிவயோகத்தில்‌ ஆழ்ந்தார்‌. மூலனின்‌ மனைவி, ஊர்‌ பெரியவர்கள்‌ பலரையும்‌ அழைத்துச்‌ சென்று பார்த்தும்‌, சிவயோகியார்‌ அசைவற்று இருந்தார்‌.

அவரது உடல்‌ யோகத்தில்‌ ஆழ்ந்திருந்தது. ஊர்‌ பெரியவர்கள்‌, மூலனின்‌ மனைவியிடம்‌, 'அவர்‌ பற்றற்ற நிலைக்கு சென்றுவிட்டார்‌. இனி திரும்ப மாட்டார்‌ என்று கூறி அழைத்துச்‌ சென்றனர்‌. மூலனின்‌ மனைவி கதறியபடி அவ்விடம்‌ விட்டு அகன்றாள்‌. மறுநாள்‌ தன்‌ உடலை மறைத்து வைத்த இடத்திற்கு சென்ற சிவயோகியார்‌, உடலைக்‌ காணாது கலக்கமுற்றார்‌ அப்போது இது ஈசனின்‌ எண்ணம்‌ என்பதையும்‌, சிவாகமங்களின்‌ அரும்பொருளை திருமூலரது வாக்கினால்‌ தமிழிலே வகுத்துரைக்கக்‌ கருதியதால்‌ போடப்பட்ட திருவிளையாடல்‌ என்பதையும்‌ அவர்‌ தெளிந்து உணர்ந்து கொண்டார்‌.

இதையடுத்து திருவாவடுதுறை கோவிலை அடைந்த திருமூலர்‌ அங்கிருந்த, அரச மரத்தடியில்‌ அமர்ந்து, ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம்‌ பாடல்களை எழுதினார்‌. பின்னர்‌ கயிலைநாதர்‌ இருப்பிடம்‌ சென்றடைந்தார்‌.

திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌


வீரசேனத் திருமூலர் கதை

பாண்டிய நாட்டைச்‌ சேர்ந்த இராசேந்திரபுரி ஒரு சிற்றரசு. அவ்வூர்‌ மன்னனான வீரசேனன்‌ இரக்கமற்றவன்‌. தன்‌ மகிழ்ச்சிக்‌காக கொலையும் செய்யக்‌ கூடியவன்‌. பசி, பட்டினியால்‌ வாடிய அவன்‌ நாட்டு மக்களும்‌ அவனுடைய அன்பு மனைவியும் கூட அவனை வெறுத்தனர். _ ஒருநாள்‌ ஒரு கொடிய நாக விஷத்தை நுகர்ந்து அவன்‌ இறந்து விட்டான்‌. அப்போது சூக்கும உடலோடு விண்‌ வழியில்‌ சென்று கொண்டிருந்த திருமூலர்‌ அம்மன்னனின்‌ உடலைச்‌ சுற்றி அரசியாரும்‌ மந்திரிகளும்‌ அழுது புலம்பிக்கொண்டிருந்ததைக்‌ கண்டார்‌. சதுரகிரி சென்று அம்மலை இடுக்கொன்றில்‌ தன்‌ கல்பதேகத்தை மறைத்து வைத்ததுடன்‌ அதற்குத்தன்‌ முதன்மைச்‌ சீடரான குருராஜனைக்‌ காவல்‌ வைத்து விட்டு சூக்கும உடலுடன்‌ அரண்மனைக்கு வந்து இறந்த மன்னனின்‌ உடலில்‌ புகுந்து வீரசேனத்‌ திருமூலரானார்‌. திருமூலவீரசேனர்‌ ஆட்சியில்‌ இராசேந்திரபுரி செழிப்படைந்தது. மக்கள்‌ எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்‌. அரசியும்‌ பழைய வீரசேனனிடம்‌ அடைந்திராத இன்பங்களை திருமூல வீரசேனரிடம்‌ அனுபவித்தாள்‌. மன்னன்‌ உடலில்‌ இருப்பவர்‌ ஒரு மகா சித்தர்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டாள்‌. அவரிடம்‌ அன்பொழுகப்‌ பேசி, அவர்‌ தம்‌ கற்பதேகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும்‌ அத்தேகத்தையும்‌ எரித்து அழிக்கும்‌ முறைகளையும்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டாள்‌. பிறகு மலைவாழ்‌ மக்களான பளிங்கர்களுக்கு பணம் கொடுத்து சித்தரின்‌ உடலை அழிக்கச்‌ சொன்னாள்‌.

சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நாள்‌ விதி விளையாடியது. நீண்ட காலமாகத்‌ தன்‌ குரு திரும்பி வராததால்‌ குருராஜன்‌ திருமூலரைத்‌ தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தார்‌. அவர்‌ நகர்ப்புறம்‌ வந்த சமயம்‌ பார்த்து பளிங்கர்கள்‌, அரசி கூறிய படி. சித்தரின்‌ கல்ப தேகத்தை எரித்து விட்டனர்‌. அன்று வேட்டைக்குச்‌ சென்ற மன்னர்‌ வழியில்‌ தன்‌ சீடன்‌ வருவதைக்‌ கண்டு பயந்து அவரை அழைத்துக்கொண்டு மலைக்குகைக்குச்‌ சென்றார்‌. தான்‌ பயந்தபடி தன்‌ கல்ப தேகம்‌ எரிந்து கிடந்ததைக்‌ கண்ட திருமூலர்‌ நடந்தவற்றையெல்லாம்‌ ஞானத்தால்‌ உணர்ந்து! தெளிந்தார்‌. குருராஜரைத்‌ தனித்து தவம்புரிந்து கரையேற வாழ்த்தி அனுப்பிவிட்டு அரண்மனைக்கு வந்தார்‌. வந்த சில நாட்களிலேயே மீண்டும்‌ தம்‌ தவ வாழ்க்கையைத்‌ தொடர சதுரகிரிக்கே திரும்ப வந்துவிட்டார்‌.

வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை


திருவானைக்காவில்‌ சம்புகேசன்‌ என்ற பிராமணன்‌ ஞான மார்க்கக்‌ கல்வியில்‌ சிறந்து விளங்கினான்‌. குருவின்‌ துணையில்லாமலே தன்னால்‌ தவம் பயில முடியும்‌ என்ற கர்வத்தில்‌ அவன்‌ சதுரகிரி சென்று அங்கு பிராணாயாமத்தைத்‌ தொடங்கினான்‌. தவறாகக் கும்பகம்‌ செய்ததன்‌ விளைவாக மூச்சை வெளிவிட முடியாமல்‌ உயிர்நீத்தான்‌. அவனது ஆவிபிரிந்த அரைமணி நேரத்திற்குள்‌ அங்கு வந்த வீரசேனத் திருமூலர்‌, அரசன்‌ உடலிலிருந்து வெளிப்பட்டு சம்புகேசன்‌ உடலில்‌ புகுந்து சம்பு கேசத் திருமூலரானார்‌. தான்‌ குடியிருந்த அரசனின்‌ உடல்‌ பழுதுபடக் கூடாது என நினைத்து அவன்‌ உடலை ஒரு மரப்பொந்தில்‌ வைத்து மூடினார்‌. அந்த மகாசித்தரின்‌ கைப்பட்ட அந்த மரப்பொந்து தானாகவே மூடிக்கொண்டது. அந்த மரம்‌ இனி அரச மரம்‌ என்ற பெயரில்‌ தழைக்கட்டும்‌ என்று வாழ்த்திவிட்டு சதுரகிரி காட்டுப் பகுதியில்‌ மீண்டும்‌ தம் தவ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌. அந்த மலைப்பகுதியிலும்‌ அவருக்கு பல சீடர்கள்‌ வந்து சேர்ந்தனர்‌. அவர்களையெல்லாம்‌ உயர்ந்த தவயோகிகளாக உருவாக்கி சத்தி பெறச்‌ செய்தார்‌. அதோடு திருமந்திரம்‌ எண்ணாயிரம்‌ முதலான பல நூல்களையும்‌ எழுதி முடித்துவிட்டு சம்புகேசத்‌ திருமூலராக அங்கேயே சமாதி பூண்டார்‌ என்று அகத்தியரின்‌ செளமிய சாகரம்‌ கூறுகிறது.

திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து


சென்னை சித்த மருத்துவ நூல்‌ ஆய்வு மைய நூல்கள்‌ திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி அடைந்துள்ளார்‌ என்று கூறுகின்றன. இதே கருத்தை போக முனிவரும்‌ கூறியுள்ளார்‌. போகர்‌ ஜனன சாகரம்‌ 312 ஆம்‌ பாடலின்படி திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி கூடி லிங்க வடிவில்‌ உள்ளார்‌. தில்லை நடராஜர்‌ கோவிலில்‌ அவர்‌ சன்னதி ஸ்ரீமூலன்‌ சன்னதி என்றே உள்ளது. அவருடன்‌ வாழ்ந்த பதஞ்சலி முனிவரும்‌, வியாக்ர பாதரும்‌ அக்கோவிலில்‌ சிலை வடிவில்‌ உள்ளனர்‌. திருமூலர்‌ சன்னதியை மையமாகக்‌ கொண்டு தான்‌ பாண்டிய மன்னர்களின்‌ ஆதரவில்‌ கருவூர்த்தேவரால்‌ சிதம்பரம்‌ நடராஜர்‌ கோவில்‌ கட்டப்பட்டது.

(போகர்‌ ஏ. 5769).

24/9/18

கொங்கணவர்‌

பொருளடக்கம்
  1. பிறப்பு‌
  2. குடும்ப வாழ்க்கை
  3. பளிங்கரான வரலாறு
  4. போகரின்‌ சிஷ்யர்
  5. போகரின்‌ உபதேசம்
  6. திருமழிசை ஆழ்வார்‌ சந்திப்பு
  7. கெளதமர்‌ தொடர்பும்‌ நிறைநிலை அடைவும்‌
  8. கொக்கை எரித்த கதை
  9. கர்வம்‌ அகன்றது
  10. மாயை
  11. குளிகைகள்‌ எரிந்து சாம்பலாதல்
  12. சமாதி கூடல்‌

பிறப்பு‌


கொங்கு நாட்டில்‌ இவர்‌ பிறந்தமையால்‌ இவரைக்‌ கொங்கணவர்‌ என்றே அழைத்தனர்‌. இவர்‌ கோவைக்கு அருகேயுள்ள பகுதியில்‌ வசித்தார்‌ எனச்‌ சிலரும்‌, கோவை மாவட்டம்‌ தாராபுரத்துக்கு அடுத்து இருக்கும்‌ ஒதிய மலையில்‌ வாழ்ந்தவர்‌ என்று சிலரும்‌ கூறுவர்‌. கொங்கணவர்‌ கொங்கு நாட்டில்‌ சங்கர குலத்தில்‌ உத்திராடம்‌ நட்சத்திரம்‌ முதல்‌ பாதத்தில்‌ (தனுசுராசியில்‌) பிறந்தவர்.

‌ (போகர்‌ 7000/5908,5909)
கொங்கு நாட்டில்‌ ஊதியூர்‌ மலைப்பகுதியில்‌ அவர்‌ பிறந்து வாழ்ந்ததால்‌ அம்மலை கொங்கணகிரி என்றும்‌ அழைக்கப்படுகிறது. ‌

குடும்ப வாழ்க்கை


அகத்தியர்‌ பெருநூல்‌ காவியம்‌ மட்டுமே கொங்கணவரது பிறப்பு வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. கொங்கணவரின்‌ பெற்றோர்‌ இரும்பை உருக்கிக்‌ கலங்கள்‌ (பாத்திரங்கள்‌) செய்து கோயில்‌ வாசலில்‌ வைத்து விற்றுத்‌ தம்‌ பிழைப்பை நடத்தி வந்தார்கள்‌. ஏழ்மையான நிலையில்‌ வாழ்ந்தாலும்‌ யோகியர்‌, சாதுக்கள்‌ போன்றோரைக்‌ கண்டால்‌ அவர்களுக்கு வேண்டியவற்றைக்‌ கொடுத்தும்‌, உபசாரங்கள்‌ பலவற்றைச்‌ செய்தும்‌ ஏவல்‌ கேட்டும்‌ பண்போடு வாழ்ந்து வந்தனர்‌. ‌

கொங்கணவர்‌ பதினாறு வயதிலேயே இரும்புப்‌ பாத்திரங்கள்‌ செய்வதில்‌ நிபுணராகி விரைவில்‌ பாத்திர வியாபாரத்தில்‌ பெரும்‌ வணிகரானார்‌. கொங்கணவர்‌ தம்‌ பெற்றோர்‌ போலவே இரும்புக்‌ கலங்களைச்‌ செய்து விற்றுப்‌ பிழைத்து வந்தார்‌. பணம்‌ தேடிச்‌ சேர்த்தார்‌. திருமணமும்‌ செய்து கொண்டார்‌. மாடமாளிகைகள்‌ கட்டி வாழ்ந்தார்‌. அதோடு முனிவர்களைப்‌ பெரிதும்‌ உபசரித்து வந்தார்‌. அம்முனிவர்களும்‌ அகமகிழ்ந்து இவருக்கு மெய்ஞ்ஞானத்தை ஊட்டி வந்தனர்‌. அதனால்‌ அவர்‌ குடும்ப வாழ்க்கையைத்‌ துறந்து துறவியானார்.

‌ (அகத்தியர்‌ 12000/ 4வது காண்டம்‌ 414 ஆம்‌ பாடல்‌).
தம்மை நாடி வரும்‌ அதிதிகள்‌, சாதுக்கள்‌, ரிஷிகள்‌ முதலானோர்க்கு பால்‌, பழம்‌ ஆகியவற்றுடன்‌ அன்னமும்‌ படைத்து உபசரித்தார்‌. இதனால்‌ மனம்‌ மகிழ்ந்த ரிஷிகள்‌,

தெள்ளமிர்தம்‌ ஆனதொரு பால்‌ பழத்தால்‌ தேற்றமுடன்‌ கொங்கணற்கு மனதுவந்து உள்ளபடி மெய்ஞ்ஞானப்‌ பாலை ஐயா உந்தமற்கு உபதேசம்‌ செய்ததாலே கள்ளமிலாக்‌ கொங்கணரும்‌ மனதுவந்து காசினியில்‌ சமுசாரம்‌ துறந்திட்டாரே
என்றனர்‌.

பொருள்‌ : தம்மை நாடி வந்த ரிஷிகளுக்கு கொங்கணவர்‌ பசும்பாலினை அருந்தக்‌ கொடுத்தார்‌. அவர்கள்‌ கொங்கணருக்கு மெய்ஞ்ஞானம்‌ என்னும்‌ பாலை ஊட்டினர்‌ அதனால்‌ அவருள்‌ இருந்த அஞ்ஞானம்‌ அழிந்து, மெய்ஞ்ஞானம்‌ கைவரப்‌ பெற்றார்‌. இல்லற வாழ்க்கையைத்‌ துறந்து துறவியானார்‌....

பளிங்கரான வரலாறு


அவர்‌ கூடுவிட்டுக்‌ கூடு பாய்தல்‌ முதலான அஷ்ட மாசித்திகளையும்‌ பெற்று மகாசித்தரானார்‌. ஒரு சமயம்‌ அவர்‌ மலைச்சாரல்களிலுள்ள காடுகள்‌ வழியே சென்று கொண்டிருந்த போது மலைவாழ்‌ பளிங்கர்‌ இனத்தைச்‌ சேர்ந்த ஒருவன்‌ இறந்து கிடந்ததைக்‌ கண்டார்‌. அவன்‌ இனத்தவர்கள்‌ கதறி அழுததைக்‌ கண்டு அவர்கள்‌ மீது இரக்கமுற்றுத்‌ தன்‌ சரீரத்தைவிட்டு அந்தப்‌ பளிங்கனின்‌ சரீரத்தில்‌ புகுந்து ஒரு பளிங்கனாகவே மாறிவிட்டார்‌. அவர்‌ மறைத்துவைத்திருந்த அவரது உடலைக்கண்ட பளிங்கர்கள்‌ அதை எரித்து சாம்பலாக்கிவிட்டனர்‌. அது முதல்‌ அவர்‌ ஒரு பளிங்கனாகவே கடைசி வரை வாழ்ந்து வந்தார்‌.

(கருவூரார்‌ வாதகாவியம்‌ 700/ பாடல்கள்‌ 277, 218)

அதன்பிறகு போகர்‌ அவருக்கு குருவாக அமைந்தார்‌. போகரிடம்‌ ஞானம்பெற்ற பின்‌ அகத்தியரிடமும்‌ சிடராயிருந்து தவ யோகத்தில்‌ ஈடுபட்டு சித்தராக வாழத் தொடங்கினார்‌.

போகரின்‌ சிஷ்யர்


போகரின்‌ சிஷ்யர்களுள்‌ சற்று வித்தியாசமானவர்‌ கொங்கணர்‌. இவரின்‌ மனைவி அதிக பேராசை மிக்கவள்‌. கோடி, கோடியாய்‌ பொற்காசுகளும்‌, நவரத்தின மணிகளும்‌, தனது வீட்டில்‌ கொட்டி செழிக்க வேண்டும்‌ என்று விரும்பினாள்‌. அப்படி சம்பாதிக்க துப்பு இல்லாதவர்கள்‌, ஆணாக இருந்தாலும்‌ அவர்கள்‌ பேடிகள்‌ தான்‌ என்னும்‌ கூற்றில்‌ வலுவாக இருந்தாள்‌. இது கொங்கணரின்‌, வாழ்வை மிகவும்‌ பாதித்தது. அந்த நிலையில்‌ தான்‌, ஒரு சித்தர்‌ கொங்கணவர்‌ பார்க்க, தங்கக்‌ காசுகளை வரவழைத்தும்‌, கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும்‌ அற்புதம்‌ செய்தார்‌. இந்த இடத்தில்‌ தான்‌ கொங்கணரும்‌ விழுந்து போனார்‌. தாமும்‌ இந்த வித்தைகளைக்‌ கற்றுத்‌ தேற வேண்டும்‌, என்ற ஆவல்‌ அவரது மனதில்‌ எழுந்தது.

போகரின்‌ உபதேசம்


ஒரு நாள்‌, போகரின்‌ தரிசனம்‌ கொங்கணருக்கு கிடைத்தது. அவரிடம்‌ கொங்கணர்‌, தான்‌ கைதேர்ந்த சித்தன்‌ ஆகிட மந்திர உபதேசம்‌ அளிக்குமாறு கேட்டார்‌. அதற்கு போகர்‌, உபதேசம்‌ செய்வது எளிது என்றும்‌, அதனைப்‌ பின்‌ பற்றித்‌ தவம்‌ செய்வதில்‌ தான்‌ எல்லாம்‌ உள்ளது என்னும்‌ உண்மையை கொங்கணருக்கு எடுத்து உரைத்தார்‌. மேலும்‌ அவர்‌ கூறும்‌ பொழுது தவம்‌ செய்வது என்பது உயிரை வளர்க்கும்‌ செயல்‌ போன்றது இல்லை, என்றும்‌. அதற்கு நேர்‌ மாறானது என்றும்‌ கூறினார்‌. எனினும்‌, கொங்கணர்‌ விடுவதாக இல்லை, தன்னால்‌, தன்னையே மறந்து தவம்‌ செய்ய முடியும்‌ என்றும்‌. தவம்‌ கலையாமல்‌ அதனைத்‌ தொடர இயலும்‌ என்றும்‌ வாதாடினார்‌. இதற்கு மேல்‌, கொங்கணரின்‌ தலை எழுத்து என்று மந்திர உபதேசம்‌ செய்து விட்டு போகர்‌ அந்த இடத்தை விட்டுச்‌ சென்றார்‌.

போகரின்‌ உபதேசம்‌, கொங்கணரை கடும்‌ தவத்தில்‌ மூழ்கடித்தது. போகர்‌ அழுத்தமாக கூறிய அந்த வார்த்தைகள்‌ யாவும்‌, தவத்திற்கு இடையூறு வரும்‌ பொழுது எல்லாம்‌ கொங்கணரை எச்சரிக்கை செய்து, தவத்தை தொடர வைத்தது. ஆனால்‌ கொங்கணர்‌ வகையில்‌, அவருடன்‌ மோத இயலாமல்‌ பஞ்சபூதங்கள்‌ செயல்‌ இழந்தாலும்‌, மாயை அவரை விட வில்லை. மாயையின்‌ காரணத்தால்‌ தவத்திற்கு பதில்‌, ஏன்‌ யாகம்‌ செய்து நாம்‌ சித்தனாகக்‌ கூடாது? என்ற எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ மெல்லத்‌ தோன்றியது.
( தவம்‌ என்பது உலகம்‌ நல்வழிப்‌ பட செய்யும்‌ சுயனலமற்ற தர்மம்‌, ஆனால்‌ யாகம்‌ அல்லது ஹோமம்‌ என்பது தன்னலம்‌ கருதி ஒருவர்‌ சுயநலத்துடன்‌ செய்வது )

திருமழிசை ஆழ்வார்‌ சந்திப்பு


அவர்‌ வழிப்பயணத்தில்‌ திருமழிசை ஆழ்வாரை சந்தித்தார்‌. தான்‌ வைத்திருந்த ரசக்‌ குளிகையைக்‌ காண்பித்து, இது காணி கோடியை பேதிக்கும்‌ என்றார்‌.ஆனால்‌ ஆழ்வாரோ தன்‌ உடம்பின்‌ அழுக்கைத்‌ திரட்டிக் கொடுத்து இது காணிகோடா கோடியைப்‌ பேதிக்கும்‌ என்றார்‌. கொங்கணவர்‌ ஆழ்வாரின்‌ பெருமையை உணர்ந்து அவரை வணங்கி விடைபெற்றுத்‌ தன்‌ பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌.

கெளதமர்‌ தொடர்பும்‌ நிறைநிலை அடைவும்‌


ஆனால்‌, கொங்கணர்‌ இது வரை செய்த தவப்‌ பயனின்‌ விளைவாக கெளதமர்‌ என்னும்‌ மகரிஷி அவர்‌ முன்‌ தோன்றி. உண்மை நிலையை அவருக்கு விளக்கிக்‌ கூறவே. கொங்கணர்‌, உண்மையை அறிந்து மீண்டும்‌ தவத்தில்‌ மூழ்கிப்‌ பெரிய தவ சீலராக மாறினார்‌. அவர்‌ ஒரு மலை அடிவாரத்தை அடைந்த போது அங்கே தம்‌ உள்ளுணர்வில்‌ இன்பமயமான தெய்வீகத் தோற்றங்கள்‌ பலவற்றைக்‌ கண்டார்‌. அதோடு இனிமையான பல வாத்திய ஒலிகளையும்‌ கேட்டார்‌. அதைத்‌ தொடர்ந்து அங்கே கெளதம ரிஷி ஒரு சமாதியிலிருந்து வெளிப்பட்டார்‌. அவர்‌ உபதேசம்‌ பெற்ற கொங்கணவர்‌ தம்‌ தவவலிமையை மேலும்‌ பெருக்கிக் கொள்ள பனிரண்டு ஆண்டுகள்‌ கடுந்தவம்‌ புரிந்தார்‌. மிக்க தவ வலிமையுடன்‌ வெளிப்பட்ட கொங்கணவர்‌ தான்‌ ஒரு சர்வசக்தி வாய்ந்த ரிஷியாக உயரவேண்டும்‌ என்ற ஆசையில்‌ ஒரு யாகம்‌ செய்யத்‌ தொடங்கினார்‌. அப்போது ஒளி உடலுடன்‌ அவர்‌ முன்‌ தோன்றிய கெளதமர்‌, தகுதிக்குமேல்‌ ஆசைப்ட்ட கொங்கணவரை சபித்துவிட்டார்‌. கொங்கணவர்‌ கெளதமரை வணங்கி சாபவிமோசனம்‌ கேட்க, முனிவர்‌ “சாபவிமோசனம்‌ பெற தில்லை வனத்திற்குப்‌ போ என்று கூறிவிட்டு மறைந்தார்‌.

தில்லைவனம்‌ சென்ற கொங்கணவர்‌ முன்‌ பராசர முனிவர்‌ தோன்றி சாபவிமோசனம்‌ அளித்தார்‌. அதன்பிறகு கெளதமர்‌ அங்கு தோன்றி யாகம்‌ செய்ய வரமளித்தார்‌. இவ்வளவு நல்வரங்கள்‌ பெற்ற நிலையிலும்‌, கொங்கணவர்‌ தம்‌ மனதில்‌ ஏதோ குறை இருந்து வருவதை உணர்ந்து தன்‌ குருநாதரான போகரிடம்‌ சென்று சரணடைந்தார்‌. குருவின்‌ ஆணைப்படி திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று நிர்வாணத்‌ தீட்சை முதலான பல அரிய தீட்சைகளைப்‌ பெற்று உயர்ந்த சித்தராக ஓரிடத்தில்‌ தங்கி வாழ்ந்தார்‌. அங்கு அவரிடம்‌ 500க்கும்‌ அதிகமான சீடர்கள்‌ சேர்ந்தார்கள்‌. அவர்கள்‌ அனைவரும்‌ ஞானமார்க்கத்திலும், குளிகை மார்க்கத்திலும்‌ தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள்‌.

கொங்கணர்‌ யாகம்‌ வளர்த்து, குறுக்கு வழியில்‌ தவ சீலராக மாற முற்படும்‌ பொழுது நடந்த சம்பவம்‌ ஒன்று உள்ளது.

கொக்கை எரித்த கதை


அந்த நாளில்‌, கொங்கணர்‌ தனது யாகத்தின்‌ பயனாக, எதை கோபத்துடன்‌ பார்த்தாலும்‌ (ஒரு மரத்தைப்‌ பார்த்தாலும்‌ கூட) பற்றி எறியும்‌. அப்பொழுது ஒரு நாள்‌, ஒரு கொக்கு, கொங்கணர்‌ நடத்திய வேள்வியின்‌ பொழுது, அவர்‌ மேல்‌, எச்சம்‌ இட்டது. கொங்கணர்‌ விடுவாரா? அவர்‌ தான்‌ தற்பொழுது மாயையின்‌ பிடியில்‌ உள்ளாரே! உடனே, அவர்‌ அந்தக்‌ கொக்கை கோபத்துடன்‌ பார்க்க, அந்தக்‌ கொக்கு பற்றி எரிந்தது. தனது இந்த தபோ பலத்தால்‌ கொங்கணர்‌, பெரும்‌ கர்வத்தில்‌ இருந்தார்‌.

இவரும்‌, திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும்‌ சமகாலத்தவர்களே. இப்படி இருக்கும்‌ பொழுது தான்‌, கொங்கணர்‌, கொக்கை எரித்த கோபத்துடன்‌ அவர்‌ அடுத்து யாசகம்‌ கேட்டு சென்ற இடம்‌ வள்ளுவரின்‌ குடிசைக்கு. பலகாலம்‌ உணவின்றி இருந்ததால்‌ பசி வயிற்றைக்‌ கிள்ள அவர்‌ அருகில்‌ இருந்த திருவள்ளுவர்‌ வீட்டிற்குப்‌ பிச்சைக்குச்‌ சென்றார்‌. வள்ளுவரின்‌, மனைவி வாசுகி, வள்ளுவருக்கு பணிவிடைகள்‌ செய்வதில்‌ மும்முரமாக இருந்தாள்‌. காரணம்‌, அவள்‌ பெரும்‌ பதி விரதை. கொங்கணர்‌, யாசகம்‌ கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்கு பிச்சை இடும்‌ படி ஆனது. இந்த காரணத்தை அறியாத கொங்கணர்‌, உனக்குத்‌ தான்‌ என்ன ஒரு அலட்சியம்‌ ... என்று வாசுகியை எரிப்பது போலப்‌ பார்த்தார்‌. வாசுகிக்கு, அந்தப்‌ பார்வையின்‌ பொருள்‌ புரிந்தது கொக்கென்று, நினைத்தாயோ கொங்கணவா? என்று திருப்பிக்‌ கேட்க கொங்கணர்‌ ஆடிப்‌ போனார்‌.
இச்சம்பவம் கொங்கணவர் வாத காவியத்தில் இடம் பெற்றுள்ளது.

கர்வம்‌ அகன்றது


இப்பொழுது அவர்‌ மனதில்‌ இரண்டு கேள்விகள்‌. எப்படி வாசுகியால்‌ தன்னை அறிய முடிந்தது? இது முதல்‌ கேள்வி. அடுத்த கேள்வி, எல்லாவற்றையும்‌ எரிக்கும்‌ தன்மை கொண்ட தனது கோபப்‌ பார்வை, எப்படி, வாசுகியை மட்டும்‌ விட்டு வைத்தது? என்பது. அதற்கான விடை பிறகு தான்‌ அவருக்கு புரிந்தது. ஹோமம்‌ வளர்ப்பது, யாகம்‌ புரிவது, தவம்‌ செய்வது அனைத்தையும்‌ விட மேலான செயல்‌, “தான்‌” என்ற அகந்தை இல்லாமல்‌ பணிவிடை புரிவது, தனக்கென வாழ்வது. அந்த நொடி, கொங்கணருக்கு தனது தவச்‌ செயலால்‌ உருவான கர்வம்‌ பொடிப்‌ பொடி ஆனது. இப்படி கொங்கணவர்‌ தனது அனுபவத்தால்‌ அறிந்தது ஏராளம்‌. இது போல இன்னொரு சம்பவமும்‌, கொங்கணர்‌ வாழ்வில்‌ நடந்தது.

மாயை


இவரது குருவான போகர்‌ அவர்களுக்கு, ஒரு பெண்ணின்‌ மீது மோகம்‌ என்னும்‌ பிரமை ஆட்கொண்டது. ஆனால்‌, அவளோ அவருக்கு வசப்படாமல்‌ போனால்‌, இதனால்‌ போகர்‌, சோகத்தில்‌ மூழ்கினார்‌. இதனை அறிந்த கொங்கணர்‌, குருவின்‌ வருத்தத்தை போக்க, ஒரு கற்‌சிலையை, உயிருள்ள பெண்ணாக மாற்றி போகரிடம்‌ அளித்து பெருமைப்பட்டார்‌. இதனைப்‌ பார்த்த போகர்‌, கொங்கணரை பார்த்து சிரித்தார்‌. அவ்வாறு போகர்‌, சிரிப்பதன்‌ காரணத்தை கேட்ட கொங்கணரிடம்‌, போகர்‌ சொன்னாராம்‌ "கொங்கணவா, இது போல கல்லுக்கு, உயிர்‌ கொடுக்கும்‌ வித்தை எனக்கு தெரியாது என்று நினைக்கின்றாயா? மாயையில்‌ வந்தது, மாயையில்‌ தான்‌ செல்லும்‌. என்‌ மனதைக்‌ கவர்ந்த அந்தப்‌ பெண்ணிடம்‌, அழகைத்‌ தவிர்த்து பல சிறப்பம்சங்கள்‌ உள்ளது. அதனை, உன்னால்‌ இந்த கற்சிலையில்‌ இருந்து தோன்றிய இந்த பெண்ணுக்கு அளிக்க முடியுமா? என்று வினவினார்‌. அப்போதே கொங்கணர்‌, உண்மை நிலையை அறிந்து கொண்டார்‌.

இவ்வாறு கொங்கணரை மாயை பல இடங்களில்‌ கொள்ளை கொண்டது, இது போன்று இன்னொரு சம்பவமும்‌ கொங்கணர்‌ வாழ்வில்‌ நடந்தது.

குளிகைகள்‌ எரிந்து சாம்பலாதல்


அது என்னவெனில்‌. சில குளிகைகள்‌ வைக்கப்பட்ட இடத்தில்‌ கல்லோ, மண்ணோ இருந்தால்‌, அதை சாம்பலாக்கி விடும்‌. இப்படிப்‌ பட்ட குளிகைகளில்‌ ஒன்றை சிவலிங்கத்தின்‌ மீது வைத்தார்‌. ஆனால்‌, சிவலிங்கத்தின்‌ மீது பட்ட சில நொடிகளில்‌, அந்தக்‌ குளிகைகளே சாம்பல்‌ ஆனது. சிலர்‌, இதனை இப்படியும்‌ கூறுவர்‌, கொங்கணர்‌ மருத்துவ குணம்‌ கொண்ட குளிகையை மலரிலும்‌ ,மேலாகக்‌ கருதி சிவனின்‌ மீது வைத்தார்‌. ஆனால்‌, சிவனோ பக்தர்கள்‌ அன்போடு அளிக்கும்‌ மலர்கள்‌ அந்த மருத்துவ குணம்‌ கொண்ட குளிகைகளை விட மேல்‌ ஆனது என்பதை காட்டவே, அந்தக்‌ குளிகைகளை எரித்துக்‌ காட்டியதாகவும்‌ சொல்வர்‌.

சமாதி கூடல்‌


தமக்கு சமாதி கூடும்‌ காலம்‌ கூடிவந்து விட்டதை உணர்ந்த கொங்கணவர்‌ திருத்தணிகை சென்று வீரட்டகாசமூர்த்தியின்‌ தலைமேல்‌ தம்‌ குளிகையை வைத்தார்‌. லிங்க வடிவில்‌ இருந்த அந்த சிவமூர்த்தி அக்குளிகையை நீராக்கி அழித்து விடாமல்‌ தம்முள்‌ ஈர்த்து மறைத்துக்‌ கொண்டார்‌. தன்‌ தவறை உணர்ந்த சித்தர்‌ சிவபெருமானைப்‌ பணிந்து வழிபட்டு தம்‌ குளிகையைத்‌ திரும்பப்பெற்றார்‌. அதன்‌ பிறகு நேரே திருப்பதி சென்று திருவேங்கட மலைமீது தங்கி தவத்தைத்‌ தொடங்கினார்‌.அப்போது வனேந்திரன்‌ என்ற சிற்றரசன்‌ அவரிடம்‌ வந்து சடனானான்‌. அவனுக்கு ஏற்ற எளிய முறையில்‌ தவ வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டு அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்‌. இப்போது அவர்‌ திருப்பதி மலைமீது அருள்மிகு வெங்கடேசப்‌ பெருமாளாக இருந்து கோடிக்கணக்கான பக்தர்களின்‌ குறைகளைத்‌ தீர்த்து வருவதுடன்‌ நாடி வருபவர்களுக்கெல்லாம்‌ வளமான வாழ்வளித்தும்‌ வருகிறார்‌.


23/9/18

சிவவாக்கியர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. தவ வாழ்க்கை
  3. இல்லறத் துறவி
  4. அவர்‌ வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்‌
  5. இல்‌லற வாழ்க்கை
  6. பற்றற்ற நிலை
  7. கொங்கணவர் நட்பு
  8. துறவு வாழ்க்கை
  9. சமாதி கூடல்‌

முன்னுரை


சிவ வாக்கியர்‌ சங்கர குலத்தில்‌ தை மாதம்‌ மகம்‌ நட்சத்திரத்தில்‌ (சிம்ம ராசியில்‌) பிறந்தார்‌. பிறக்கும்‌ போதே சிவசிவ என்று சொல்லிக் கொண்டே பிறந்தவர்‌ என்பதால்‌ சிவ வாக்கியர்‌ என்று அழைக்கப் பெற்றார்‌ என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. இவர்‌ தனது பாடல்‌ தொகுப்பிற்கு சிவவாக்கியம் என்று பெயர்‌ சூட்டியுள்ளார்‌. அந்த நூலின்‌ காப்புச் செய்யுளாகிய

அரியதோர்‌ நமச்சிவாயம்‌ ஆதிஅந்தம்‌ ஆனதும்‌ ஆறிரண்டு நூறுதேவர்‌ அன்றுரைத்தமந்திரம்‌ அரியதோர்‌ எழுத்தை உன்னி சொல்வேன்‌ சிவ வாக்கியம்‌ தோஷ தோஷபாவமாயை தூர தூரஓடவே
என்ற பாடலைக் கொண்டு அவர்‌ நூல்‌ தலைப்பை உணரமுடிகிறது. சிவ வாக்கியம்‌ என்ற நூலை எழுதியதாலேயே அவர் சிவவாக்கியர்‌ என்று அழைக்கப்பட்டார்‌ என்று கொள்வதே பொருத்தமாகும்‌.

தவ வாழ்க்கை


சிவ வாக்கியரின்‌ தந்தை தெய்வச்‌ சிலைகள்‌ செய்து விற்றுப்‌ பிழைப்பு நடத்தி வந்தவர்‌. தாயோ அருந்ததிக்கு ஒப்பான கற்புடைய மங்கை. இந்தத்‌ தம்பதியர்‌ சித்தர்களை அடுத்து வாழ்ந்து வந்தனர்‌. தங்கள்‌ மகன்‌ பெரிய தவயோகியாக வர வேண்டும்‌ என்பதற்காக தக்க குரு ஒருவரைத்‌ தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு ஞானக்கல்வி புகட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள்‌. சிவ வாக்கியரும்‌ பதினெண்‌ சித்தர்களில்‌ பலரை நாடி அவர்களிடம்‌ ஆர்வமுடன்‌ வேதாந்தம்‌ கற்று யோக நெறியில்‌ சென்று சகல சித்திகளும்‌ அடையப் பெற்றார்‌. (இச்செய்திகள்‌ அகத்தியர்‌ 12000 நூலில்‌ 434 முதல்‌ 441 வரை உள்ள பாடல்களில்‌ இடம்பெற்றுள்ளன.

இல்லறத் துறவி


துறவியாக வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென்று திருமணம்‌ செய்து கொள்ளும்‌ ஆசை எழுந்தது. பெற்றோரும்‌ தகுதி வாய்ந்த ஒரு பெண்ணைப்‌ பார்த்து அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைத்தார்கள்‌ (போகர்‌7000 சப்தகாண்டம்‌ பாடல்கள்‌ 5759, 5760). மேலும்‌ இவர்‌ திருமூலர்‌ மரபில்‌ வந்த பெண்ணின்‌ மகன்‌ என்றும்‌ இவரது குடும்ப வாழ்க்கையில்‌ இவருக்கு சிவானந்தர்‌ என்ற சித்தபுருஷர்‌ மகனாகப்‌ பிறந்தார்‌ என்றும் போகர்‌ கூறுகிறார்‌. ஏழாண்டு குடும்ப வாழ்விற்குப்‌ பிறகு மீண்டும்‌ துறவு மேற்கொண்டு பல ஊர்களும்‌ சுற்றிப்‌ பல சீடர்களுக்கு தவ யோகம்‌ பயிற்றுவித்து விட்டு கடைசியாக கும்பகோணத்தில்‌ சமாதி பூண்டார்‌. இதுதான்‌ சிவவாக்கியரின்‌ நம்பத்தகுந்த உண்மை வரலாறு.

அவர்‌ வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்‌


சிவ வாக்கியரின்‌ திருமண வாழ்க்கையைப்‌ பற்றி செவி வழிச் செய்தியாக ஒரு கதை உள்ளது. அக்கதையைத்‌ திருநெல்வேலி முருகதாச சுவாமிகள்‌ (1840-1899) பாடியுள்ள புலவர்‌ புராணம்‌ உறுதி செய்கிறது. அக்கதை வருமாறு:

சிவ வாக்கியர்‌ சித்தன்‌ போக்கு சிவன்‌ போக்கு என்ற பழமொழிக்கிணங்க தமிழகத்திலிருந்து கால்‌நடையாகவே காசிக்குச்‌ சென்றார்‌. காசியில்‌ ஒரு தெரு ஓரத்தில்‌ ஒரு சக்கிலியன்‌ செருப்பு தைத்துக் கொண்டிருந்தான்‌. அவன்‌ முகத்தில்‌ காணப்பட்ட பிரம்மதேஜஸ்‌ சிவவாக்கியரை அவன்‌ பால்‌ ஈர்த்தது. அவர்‌ அவனை அடைந்த மாத்திரத்தில்‌ அந்த சக்கிலியன்‌ தன்‌ பையிலிருந்த ஒரு நாணயத்தையும்‌ ஒரு பேய்ச்‌ சுரைக்காயையும்‌ கொடுத்து இந்த நாணயத்தை கங்கையிடம்‌ கொடுத்துவிட்டு இந்த பேய்ச்‌ சுரைக்காயைக்‌ கழுவிக்கொண்டு வா என்று கூறினான்‌.

ஏன்‌ என்று கேட்காமல்‌ கங்கைக்‌ கரையை அடைந்த சிவவாக்கியர்‌ அந்த நாணயத்தை கங்கையில்‌ வீசி எறிந்தார்‌. உடனே வளையல்‌ அணிந்த ஒரு கை கங்கையிலிருந்து வெளிப்பட்டு அந்தக்‌ காசைப்‌ பெற்றுக்கொண்டது. பிறகு அவர்‌ சுரைக்காயைக்‌ கழுவி எடுத்துக் கொண்டு சக்கிலியனிடம்‌ வந்தார்‌.

சக்கிலியன்‌, நீ கங்கையில்‌ போட்ட காசை இங்கே வாங்கிக் கொள்‌ என்று தன்‌ தோல் பையைத் திறந்தான்‌.அதில்‌ கங்கை நீர்‌ நிறைந்திருந்தது. அத்தண்ணீரிலிருந்து கங்கா தேவியின்‌ வலக்கை வெளிப்பட்டு அந்தக்‌ காசை சிவவாக்கியரிடம்‌ கொடுத்தது. பிறகு சக்கிலியன்‌ கொஞ்சம்‌ மணலையும்‌ அந்தப்‌ பேய்ச்‌ சுரைக்காயையும்‌ அவரிடமே கொடுத்து இதை எந்தப்‌ பெண்‌ சமைத்துக்‌ கொடுக்கிறாளோ அவளை மணந்துகொள்‌. உன்‌ வாழ்க்கை நன்றாக அமையும்‌, என்று வாழ்த்தி அனுப்பினான்‌. தான்‌ எண்ணி வந்த நோக்கம்‌ இந்த சக்கிலியனுக்கு எப்படித்‌ தெரியும்‌? என்ற ஆச்சர்யத்துடன்‌ அவனையே குருவாகக்‌ கொண்டு அவன் காலைத் தொட்டு வணங்கி விட்டு அந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும்‌ எடுத்துக்கொண்டு விரைந்து தமிழகம்‌ வந்து சேர்ந்தார்‌.

இல்‌லற வாழ்க்கை


சிவவாக்கியர்‌ தமிழ்‌ மண்ணை மிதித்ததும்‌ பிராமணர்‌ முதலான நால்வகை வருணங்களையும்‌ சேர்நத கன்னிப்‌ பெண்களை அணுகி இந்த மண்ணையும்‌ பேய்ச்‌ சுரைக்காயையும்‌ சேர்த்து சமைத்துக்‌ கொடுக்க முடியுமா ? என்று கேட்டார்‌. அப்பெண்கள்‌ அனைவரும்‌ இவரைப்‌ பைத்தியக்காரன்‌ என்று கூறி சிரித்து ஏளனம்‌ செய்தனர்‌. கடைசியாக மூங்கில்‌ வெட்டிக்‌ கூடை முறம்‌ தயாரித்து விற்றுப்‌ பிழைக்கும்‌ ஒரு குறவர்‌ சேரிக்குச்‌ சென்றார்‌. அங்கு ஒரு சிறு குடிசை வாயிலில்‌ நின்று கொண்டிருந்த கள்ளம்கபடமற்ற ஒரு கன்னிப்பெண்‌ இவர்‌ கவனத்தைக்‌ கவர்ந்தாள்‌. அவளைப்‌ பார்த்து, உன்‌ பெற்றோர்‌ வீட்டில்‌ இல்லையா? என்று கேட்டார்‌. அப்பெண்‌, அவர்கள்‌ வீட்டில்‌ இல்லை; எங்கு சென்றார்களோ, தெரியவில்லை என்றாள்‌.

சிவ வாக்கியர்‌ தான்‌ கொண்டு வந்த மண்ணையும்‌ பேய்ச் சுரைக்காயையும்‌ அவளிடம்‌ கொடுத்து “நான்‌ அதிகப்‌ பசியோடு நீண்ட தூரம்‌ நடந்து வந்திருக்கிறேன்‌. நீ இவற்றைச்‌ சமைத்துக்‌ கொடுப்பாயா? என்று கேட்டார்‌. அந்தக்‌ குறப்பெண்‌ அந்த மண்ணை அரிசியாகவே எண்ணி அந்த மண்ணையும்‌ பேய்ச்சுரைக்காயையும்‌ சுவைபட சமைத்து அவருக்கு உணவு படைத்தாள்‌. அவரும்‌ அந்த உணவை அமுதமென சுவைத்து சாப்பிட்டுவிட்டு அந்த வீட்டின்‌ புறத்திலேயே சிறிது நேரம்‌ தங்கியிருந்தார்‌.

அவளுடைய பெற்றோர்‌ வந்தவுடன்‌ அவர்களிடம்‌, நான்‌ உங்கள்‌ பெண்ணை மணம்‌ செய்துகொள்ள வேண்டும்‌ என்பது என்‌ குரு நாதரின்‌ கட்டளை. உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார்‌. அவர்கள்‌ 'திருமணத்திற்குப்பின்‌ நீங்கள்‌ எங்கள்‌ சேரியிலேயே வாழவேண்டும்‌. சரியென்றால்‌ எங்கள்‌ பெண்ணைக்‌ கொடுக்கிறோம்‌ என்றனர்‌. அவரும்‌ அதற்கு சம்மதித்து அக்குறப் பெண்ணை மணந்து கொண்டு குறவர்‌ தொழிலையே செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்‌. (இச்செய்தி அபிதான சிந்தாமணியிலும்‌ இடம்‌ பெற்றுள்ளது?

பற்றற்ற நிலை


ஒரு நாள்‌ காட்டில்‌ அவர்‌ ஒரு மூங்கில்‌ மரத்தை வெட்டிய போது அதிலிருந்து ஏராளமான தங்கத் துகள்கள்‌ கொட்டின. அவைகளைப்‌ பார்த்து அவர்‌ ஆட்கொல்லி, ஆட்கொல்லி என்று கத்திக்கொண்டு அஞ்சி ஓடினார்‌. அதைக் கண்ட நான்கு பேர் வழிமறித்து, ஏன்‌ இப்படி ஓடுகிறாய்‌? என்று கேட்க அவர்‌ மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி வெளிப்பட்டது ! என்று பதிலளித்தார்‌. அந்த நால்வரும்‌ சிவவாக்கியரை அழைத்துக் கொண்டு போய்‌ அந்த மூங்கில்‌ மரத்தைப்‌ பார்த்தபோது அதிலிருந்து ஏராளமாகத்‌ தங்கத்‌ துகள்கள்‌ கொட்டியிருக்கக்‌ கண்டனர்‌.

அவர்கள்‌ இதைத்தான்‌ ஆட்கொல்லி என்கிறாயா? என்று கேட்டு அவரை அனுப்பி விட்டு அந்தப்‌ பொன்‌ துகள்கைளை ஒரு மூட்டையாகக்‌ கட்டினர்‌. சூரியன்‌ மறைந்தவுடன்‌ அந்தப்‌ பொன்‌ மூட்டையைத்‌ தூக்கிச்‌ செல்ல முடிவு செய்தனர்‌. அந்த மூட்டையைக்‌ காக்கும்‌ பணியில்‌ இருவர்‌ இருக்க மற்ற இருவரும்‌ நால்வருக்கும்‌ உணவு வாங்கி வரச்‌ சென்றனர்‌. காவல்‌ இருந்தவர்கள்‌ உணவு வாங்கி வரச்‌ சென்றவர்களைக்‌ கிணற்றில்‌ தள்ளிக் கொன்று விடவும்‌, உணவு வாங்கச்‌ சென்றவர்கள்‌, காவல்‌ இருந்தவர்களுக்கு உணவில்‌ விஷம்‌ கலந்து கொடுத்துக் கொன்று விடவும்‌ திட்டமிட்டுச்‌ செயல்பட்டனர்‌. அவர்களின்‌ திட்டப்படி விஷ உணவுடன்‌ வந்தவர்களை காவல்‌ இருந்த இருவரும்‌ கிணற்றில்‌ தள்ளி அவர்கள்‌ மீது பெருங்கல்லைப் போட்டுக் கொன்று விட்டு கடும்‌ பசி மயக்கத்தில்‌ வேக வேகமாக விஷ உணவை உண்டு அழிந்தனர்‌.

கொங்கணவர் நட்பு


ஒரு நாள்‌ சிவவாக்கியர்‌ கீரை பறித்துக் கொண்டிருந்த போது அவரது தவ ஒளியால்‌ ஈர்க்கப்பட்டு வான்வழியே சென்ற கொங்கணவர்‌ அவரிடம்‌ வந்து அளவளாவிச்‌ சென்றார்‌. பின்‌ ஒரு நாள்‌ கொங்கணவர்‌ அவர்‌ வீட்டிற்கு வந்த போது சிவ வாக்கியர்‌ வீட்டில்‌ இல்லை. தனித்திருந்த அவர்‌ மனைவியிடம்‌ வீட்டில்‌ கிடந்த பழைய இரும்புத்‌ துண்டுகளைக்‌ கொண்டு வரச்‌ சொன்னார்‌. அவைகளையெல்லாம்‌ தங்கமாக்கிக்‌ கொடுத்து விட்டுச்‌ சென்றார்‌. வீட்டுக்கு வந்த சிவவாக்கியர்‌ தன்‌ மனைவியிடம்‌ ஆட்கொல்லியான அந்தத்‌ தங்கத்‌ துண்டுகளை யெல்லாம்‌ கிணற்றில்‌ எறிந்து விடச்‌ சொன்னார்‌. அப்புனிதவதியும்‌ எவ்வித மனச்‌ சலனமுமின்றி அவைகளைக்‌ கொண்டு போய்‌ ஊர்ப் புறத்திலுள்ள பாழுங்கிணற்றில்‌ போட்டு விட்டாள்‌. அதன் பின்‌ சிவவாக்கியர்‌ ஒரு பாறையின் மேல்‌ சிறுநீர்‌ கழித்து விட்டு வந்து மனைவியிடம்‌, இப்பாறை மேல்‌ தண்ணீர்‌ ஊற்று என்றார்‌, அவள்‌ தண்ணீர்‌ ஊற்றியவுடன்‌ பாறை தங்கமாக மாறியது. இத் தங்கத்தையெல்லாம்‌ எடுத்துக் கொள்‌ என்று அவர்‌ கூற அவர்‌ மனைவி <>தங்களுக்கு வேண்டாதது எனக்கு எதற்கு? என்று கூறி மறுத்து விட்டாள்‌. அக்குற மகளுடன்‌ ஏழு ஆண்டுகள்‌ குடும்பம்‌ நடத்திவிட்டு. இல்லறத்தை துறந்து பற்றற்ற துறவியாக வாழத்‌ தொடங்கினார்‌.

துறவு வாழ்க்கை


சிவ வாக்கியர்‌ ஊர்‌ ஊராய்ச்‌ சுற்றி மக்கள்‌ குறைகளைத்‌ தீர்த்து வந்தார்‌. தங்கம்‌ தயாரிக்கும்‌ முறையைக்‌ கற்றுக்கொள்ளும்‌ ஆசையில்‌ பலரும்‌ அவரிடம்‌ சீடராக வந்தனர்‌. அப்போது இந்த உலகியல்‌ இன்பங்கள்‌ எல்லாம்‌ அற்பமானவை என்று உணர்வாய்‌. முக்தி என்னும்‌ உண்மையான ஆன்ம விடுதலை வேண்டுமா? தொடர்ந்து வரும்‌ பிறவித்‌ துன்பங்களுக்குக்‌ காரணமான சரீர சுகம்‌ வேண்டுமா? என்று கேட்டார்‌. அந்த சீடனும்‌ <>எனக்கு ரசவாதமும் வேண்டாம்‌; தங்கமும்‌ வேண்டாம்‌, சமாதி கூடி சித்தி பெற அருள் புரியுங்கள்‌' என்று வேண்டி முக்தி தரும்‌ சித்தர் வழியில்‌ செல்லத்‌ தொடங்கினான்‌. பின்னர்‌ பல சீடர்களும்‌ வந்து அவரிடம்‌ தீட்சை பெற்று சித்தி அடைந்தார்கள்‌.

சமாதி கூடல்‌


இவ்வாறு பல ஊர்களுக்கும்‌ தவ யாத்திரையாக சென்றார்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ தவக் குடில்கள்‌ அமைத்துக் கொண்டு தவயோகம்‌ பயின்று வந்தார்‌. அவ்வாறு அவர்‌ தங்கி வாழ்ந்த ஊர்களில்‌ சிவன்‌ மலையும்‌ ஒன்று. இத்தலத்தில்‌ அவர் முன்‌ முருகப் பெருமான்‌ தோன்றி அருளாசி வழங்கியதாகக்‌ கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக இந்த சிவன்‌ மலையில்‌ சிவவாக்கியர்‌ குகை ஒன்றும்‌ உள்ளது. இம்மலை உச்சியில்‌ முருகன்‌ கோவிலும்‌ மலை அடிவாரத்தில்‌ ஒரு சிவன்‌ கோவிலும்‌ (நஞ்சண்டேஸ்வரர்‌ திருக்கோவில்‌) உள்ளன. இவ்வாறு பல ஊர்களுக்கும்‌ சென்று தவ வாழ்க்கையும்‌ சிவ வழிபாடும்‌ செய்து வந்தார்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ மக்களுக்குப்‌ பிணி நீக்கல்‌ முதலான பல தொண்டுகளும்‌ செய்து வந்தார்‌. கடைசியில்‌ குடந்தை மாநகரை அடைந்து அங்கேயே சமாதி பூண்டார்‌. இன்றும்‌ ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும்‌ குடந்தையில்‌ உள்ள அவரது சமாதி பீடத்திற்கு பூசைகள்‌ நடைபெற்று வருகின்றன.


22/9/18

இராமதேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. நாகையில்‌ சட்டை நாதர் பிரதிஷ்டை
  3. இராமதேவர் மெக்கா செல்லல்‌
  4. மெக்காவில்‌ இராமதேவர்‌
  5. 40 வருடக்கடுந்தவம்‌
  6. ஜீவ சமாதி்‌

முன்னுரை - ‌தோற்றம்


‌ இராமதேவர்‌ நாகைப்பட்டினத்தைச்‌ சேர்ந்தவர்‌. அவர்‌ புலத்தியரின்‌ சீடர்‌ என்பதை பரிபாஷை விளக்கம்‌ இருபத்தேழு என்ற நூலின்‌ காப்புச்‌ செய்யுளில்‌

குண்டலிதான்‌ பூண்ட புலத்தியர்தன்‌ பாதம்‌ குருமொழிதான்‌ ஆயிரத்தின்‌ பீடம்போற்றி
என்று தெளிவாகப்‌ பாடியுள்ளார்‌.

இவர்‌ வைணவ பிராமண குலத்தில்‌ மாசி மாதம்‌ பூரம்‌ நட்சத்திரம்‌ இரண்டாம் பாதத்தில் ‌(சிம்ம ராசியில்‌) பிறந்தவர்‌ என்று போகர்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ கூறியுள்ளார்‌. குருவருளால்‌ இவர்‌ குண்டலினி யோகம்‌ செய்து மகாசக்தியாகிய மனோன்மணி தன்னுள்‌ இருந்து தன்னை வழி நடத்திச்‌ செல்வதை உணர்ந்தவர்‌. அவர்‌ இராமதேவர்‌ பூஜா விதி என்ற சிறு நூலின்‌ காப்புச்‌ செய்யுளை

ஆதியென்ற மணிவிளக்கை அறியவேணும்‌ அகண்ட பரிபூரணத்தைக்‌ காணவேணும்‌

எனத்தொடங்கி அதில்‌ வாலைத்‌ தெய்வத்தின்‌ வழிபாட்டு மந்திரம்‌. வாசியோகம்‌, சாகாக்கலை ஆகியவற்றை விளக்கியுள்ளார்‌. அதில்‌ இறைவனுக்கு செய்யும்‌ பூஜைகள்‌ வீண்‌ போகா என்று உறுதிபடக்‌ கூறியுள்ளார்‌.

நாகையில்‌ சட்டை நாதர் பிரதிஷ்டை


அவரது உள்ளத்தில்‌ காசி விஸ்வநாதரை தரிசிக்கவேண்டும்‌ என்ற பேரவா எழுந்தது தன்னை மறந்து நடைப்பயணமாகவே காசி சென்றடைந்தார்‌. அங்கே விஸ்வநாதரை மனமுருகத் தொழுதுவிட்டு வந்து கங்கையில்‌ மூழ்கிய போது அவர்‌ கையில்‌ சட்டை நாத சுவாமியின்‌ விக்ரகம்‌ கிடைத்தது. அந்த லிங்கத்தைக்‌ கொண்டு வந்து நாகையில்‌ பிரதிஷ்டை செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எழவே சற்றும்‌ தாமதிக்காது உடனே விண்‌ வழியே நாகை வந்து அதைப்‌ பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார்‌.

சட்டை நாதர்‌ அருளால்‌ அவருக்கு பல்வேறு சித்திகளும்‌ சித்தர்களின்‌ தொடர்பும்‌ கிடைத்தன. அந்த சட்டை நாதர்‌ இப்போது நாகையில்‌ நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோவிலின்‌. தென்மேற்கில்‌ ஒருகல்‌ தொலைவில்‌ தனிக் கோவில்‌ கொண்டு அருள்மிகு சட்டையப்பராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

இராமதேவர் மெக்கா செல்லல்‌


இராமதேவர்‌ முகம்மதியராக மாறியபிறகு யோகோபு வைத்திய வாத சூத்திரம்‌ என்ற நூலை எழுதியுள்ளார்‌. தான்‌ மெக்கா சென்றதற்கான முக்கிய காரணத்தை அதில்‌ அவர்‌ விளக்கியுள்ளார்‌.

அக்காரணமாவது

இராமதேவர்‌ கைலாச சட்டை நாதர்‌ தீட்சை இருநூறு என்ற நூலை எழுதி முனிவர்களின்‌ தலைவரான திருமூலரிடம்‌ கொடுத்தார்‌. திருமூலர்‌ அதைக் கிழித்தெறிந்தார்‌. அப்போது அங்கிருந்த அகத்தியர்‌ முதலான முனிவர்கள்‌ இதை ஏன்‌ கிழித்தீர்‌? எனக்கேட்க திருமூலர்‌ பதில்‌ ஏதும்‌ கூறவில்லை. அடுத்து இராமதேவர்‌ அதே வினாவை விடுத்த போது நீ கேட்க வேண்டா. மேட்டினம்‌ பேசாதே. போ,போ! என்று கடிந்து கொண்டார்‌.

அப்போது அரபு நாட்டு வணிகர்கள்‌ அடிக்கடி கப்பலில்‌ நாகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்‌. அப்போது அரபு நாட்டுப்‌ பாலை நிலத்தில்‌ அபூர்வமான கல்ப மூலிகைகள்‌ நிறைய வளர்ந்திருந்தன என்று பல சித்தர்கள்‌ இராம தேவரிடம்‌ கூறியிருந்தனர்‌. இவ்விரு காரணங்களாலும்‌ எப்படியும்‌ மெக்கா சென்று வர வேண்டும்‌ என்ற எண்ணம்‌ சித்தர்‌ மனதில்‌ ஆழப்‌பதிந்தது. ஒரு நாள்‌ அதே எண்ணத்தில்‌ இராமதேவர்‌ தன்னை மறந்த நிலையில்‌ தியானத்தில்‌ ஆழ்ந்தார்‌. தியான நிலை கலைந்து விழித்து பார்த்த போது தான்‌ அறியாமலே அவர்‌ மெக்கா வந்திருப்பதை உணர்ந்தார்‌.

மெக்காவில்‌ இராமதேவர்‌


மெக்கா மக்கள்‌ எல்லோரும்‌ இஸ்லாமியர்‌. திடீரென்று வேற்று நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லீம்‌ அல்லாத ஒருவரைக் கண்ட அம்மக்கள்‌ இராமதேவரைப்‌ பார்த்து நீ யார்‌ எப்படி எங்கள்‌ ‌ நாட்டிற்கு வந்தாய்‌? உன்னைக்‌ கொன்றுவிடுவோம்‌ என்று பயமுறுத்தினர்‌. நான்‌ ஒரு தவயோகி. இங்கு நான்‌ எப்படி வந்தேன்‌ என்பது எனக்கே தெரியவில்லை என்று இராம தேவர்‌ கூற அங்கிருந்த முஸ்லிம்‌ ஞானி ஒருவர்‌ இவர்‌ கூறுபவை எல்லாம்‌ உண்மை என்று கூறினார்‌.

மெக்கா மக்கள்‌ உன்னை நாங்கள்‌ நம்புகிறோம்‌. நீ முஸ்லீமாக மாறினால் தான்‌ எங்கள் நாடடில்‌ வாழ முடியும்‌ என்று கூறினர்‌. இராமதேவர்‌ முஸ்லீமாக மாறி யாக்கோபு என்ற புதியபெயருடன்‌ அந்த மக்களுடன்‌ ஒன்றுபட்டு வாழ்ந்தார்‌. அம்‌மக்களுக்கு உபதேசம்‌ செய்தல்‌, மருத்துவம்‌ பார்த்தல்‌ போன்ற பல வழிகளில்‌ உதவி செய்து மெக்கா மக்கள்‌ பேரன்புக்குப்‌ பாத்திரராகி நீண்ட காலம்‌ அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார்‌. இந்தச்‌ செய்திகள்‌ யாவும்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ இடம் பெற்றுள்ளன.

ஒரு நாள்‌ நபிகள்‌ நாயகம்‌ ஒளி உருவில்‌ யாகோபுக்குக்‌ காட்சியளித்து தெய்வீக சாதனைகள்‌ புரியும்‌ நுட்பங்களை விளக்கி அருளினார்‌. பின்னர்‌ மகாசித்தரான போகர்‌ அவர் முன் தோன்றி கொஞ்ச காலம்‌ மக்கள்‌ தொண்டு செய்து விட்டு ஜீவ சமாதி அடையும்படி கூறி மறைந்தார்‌. போகர்‌ கூறிய படி மக்கள்‌ தொண்டு செய்து வந்த யாகோபு சித்தர்‌ காற்றையே உடலாகக்‌ கொண்ட காலங்கி நாதரின்‌ ஆசிபெற விரும்பி அவரை நினைத்து கடுந்தவம்‌ புரிந்தார்‌. காலாங்கிநாதர்‌ அருளுடலுடன்‌ தோன்றி, ஜீவசமாதி கூடி மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ வாழ்த்துரை கூறி மறைந்தார்‌. யாகோபு சித்தரும்‌ ஜீவ சமாதி கூடி தவம்புரியத்‌ தொடங்கினார்‌.

40 வருடக்கடுந்தவம்‌


அவர்தம்‌ சீடர்களை அழைத்து நான்‌ பூமிக்கடியில்‌ தவம்‌ செய்யப்‌ போகிறேன். பத்து ஆண்டுகள்‌ கழித்து தான்‌ வெளிப்‌படுவேன்‌. என்று கூறி ஒரு குழிதோண்டி அதில்‌ இறங்கி சமாதி பூண்டார்‌. சில நாட்களில்‌ அவருடைய சீடர்கள்‌ எல்லோரும்‌ யாகோபு இறந்து விட்டார்‌. இனிமேலா வெளியில்‌ வரப்போகிறார்‌? என்று கேலியாகப்‌ பேசிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றனர்‌. காலப்போக்கில்‌ அவர்களில்‌ சிலர்‌ இறந்து விட்டனர்‌. பலர்‌ வாழ்ந்து கொண்டிருந்தனர்‌. ஒரே ஒரு சீடர் மட்டும்‌ குரு மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையுடன்‌ 10 ஆண்டுகளும்‌ அவருடைய சமாதிக்கு அருகிலேயே தங்கியிருந்து தவ வழிபாடு செய்து வந்தார்‌.

யாகோபு, தாம்‌ குறிப்பிட்டு சொன்னது போல்‌ பத்தாண்டு முடிவில்‌ சமாதி கலைந்து வெளியே வந்தார்‌.அவர்‌ வெளிப்பட்டதும்‌

அங்கேயே தங்கியிருந்த சீடர்‌ குருவிடம்‌ நடந்தவைகளை யெல்லாம்‌ கூறினார்‌. அவற்றைக் கேட்ட குருநாதர்‌, 'நான்‌ மீண்டும்‌ சமாதி கூடிச் செல்கிறேன்‌. திரும்பி வர முப்பதாண்டுகள்‌ ஆகும்‌. நான்‌ சமாதிக்குள்‌ போனவுடன்‌ என்னை கேலி பேசியவர்கள்‌ எல்லோரும்‌ கண்கள்‌ குருடாகி விடுவார்கள்‌ என்று கூறிவிட்டு மறுபடியும்‌ சமாதிக்குள்‌ சென்றுவிட்டார்‌. அவர்‌ சமாதி கூடிய அதே நேரத்தில்‌ கேலி செய்த சீடர்கள்‌ யாவரும்‌ குருடராயினர்‌. இம்முறை அவர்கள்‌, தாங்கள்‌ செய்த குற்றங்களை உணர்ந்து திரும்பிவந்து சமாதிக்கு அருகிலேயே குரு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்‌. முப்பதாண்டு கழித்து வெளிப்பட்ட குருநாதர்‌ அவர்கள்‌ செய்த குற்றங்களை மன்னித்தார்‌. சீடர்கள்‌ யாவரும்‌ கண்பார்வை பெற்றனர்‌. யாகோபு அவர்களுடன்‌ சில காலம்‌ தங்கியிருந்து அவர்களுக்குப்‌ பல உபதேசங்களைச்‌ செய்ததுடன்‌ பல மருத்துவ நூல்களையும்‌ எழுதிக் கொடுத்து விட்டுத்‌ தமிழகம்‌ வந்தார்‌.

ஜீவ சமாதி


தமிழகம்‌ வந்த யாகோபு மீண்டும்‌ இராமதேவராக மாறி சதுரகிரி மலைப்பகுதியில்‌ உள்ள ஒருவனத்தில்‌ தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்‌. அக்காலத்தில்‌ தாம்‌ அரபு மொழியில்‌ எழுதிய மருத்துவ நூல்களை எல்லாம்‌ தமிழில்‌ மொழி பெயர்த்தார்‌. அவர்‌ தங்கியிருந்த வனம்‌ இராமதேவர்‌ வனம்‌ என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு நிரந்தரமாக ஜீவசமாதி கூடும்‌ காலம்‌ நெருங்கி விட்டதை உணர்ந்தார்‌. உடனே அவர்‌ சதுர கிரியைவிட்டு அழகர்‌ மலைக்குச்‌ சென்றடைந்து அம் மலைமேல்‌ ஜீவசமாதி அடைந்தார்‌. அவர் ஜீவசமாதி அடைந்தவிடத்தில் தான்‌ இப்போது! பழமுதிர்ச்சோலை முருகன்கோயில்‌ உள்ளது. அந்த முருகன்‌ கோவிலில்‌ சித்தர்பிரான்‌ இராமதேவர்‌ அருள்மிகு முருகக்‌ கடவுளாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறார்‌.


21/9/18

இடைக்காடர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. இடைக்‌காடரும் நவநாத சித்தரும்
  3. போகரும் இடைக்காடரும்
  4. திருமாலின் அவதாரம்
  5. வாழ்ந்த காலம்
  6. 12 ஆண்டு கடும்‌ பஞ்சம்
  7. 12 வருடங்கள்‌ கடந்த பின்
  8. தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌
  9. மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்
  10. அவர்‌ சமாதி பற்றிய கருத்து
  11. அமைந்துள்ள இடம்

முன்னுரை


பன்னெடுங்காலமாக திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வரும்‌ மகாசித்தர்‌ இடைக்காடர்‌. திருப்பதியில்‌ கொங்கணவர்‌ வேங்கடவனாய்‌ இருந்து வரையாது செல்வ வளத்தை வழங்கிக்‌ கொண்டிருப்பது போல்‌ இடைக்காடர்‌ திருவண்ணாமலையில்‌ எண்ணற்ற சித்தர்கள்‌ தோன்றி மக்களிடையே அருள்‌ நெறியை இந்த நில உலகம்‌ உள்ள வரை பரப்பிக் கொண்டிருக்க வழியமைத்து வருகிறார்‌. பதினெண்‌ சித்தர்களின்‌ சமாதிக்‌ கோவில்களில்‌ அருணாசலேஸ்வரர்‌ கோவிலிலுள்ள அண்ணாமலையார்‌ பாதம்‌ என்ற வழிபாட்டிடமே இடைக்காடர்‌ சமாதிகொண்டுள்ள இடம்‌ என்பது பெரும்பாலோர்‌ கருத்து.

இடைக்‌காடரும் நவநாத சித்தரும்


நவநாத சித்தர்கள்‌ இடைவிடாது நாதோபாசனை செய்து கொண்டு சதாசர்வ காலமும்‌ உருவமற்றவர்களாக விண்வெளியில் ‌சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்கள்‌. ஒரு சமயம்‌ அவர்களில்‌ ஒருவருடைய அருட்கடாட்சம்‌ இடைக்காடர்‌ மேல்‌ பட்டது. அப்போது இடைக்காடர்‌ ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவன்‌. தொண்டை மண்டலத்தில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்திட்டு என்ற பகுதியில்‌ வாழ்ந்து வந்தார்‌. தினமும்‌ மலைச்சாரலில்‌ உள்ள இடையன்மேடு என்ற பகுதியில்‌ ஆடுகளை மேயவிட்டு காலை முதல் மாலை வரை ஆட்டோடும் கோலைத் தரையில் பிடித்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் தவம்‌ செய்து கொண்டிருப்பது அவர்‌ வழக்கம்‌. அப்போது அவருடைய உடல்‌ பூமியில்‌ இருந்தாலும்‌ அவரது மனம்‌ மட்டும்‌ பிரம்மத்தை நாடி விண்வெளியில்‌ அலைந்து கொண்டிருக்கும்‌. இந்த நிலையில்‌ அவரைப்‌ பல நாள்‌ பார்த்துக்கொண்டு விண்வெளியில்‌ சென்று கொண்டிருந்த அந்த நவநாதசித்தர்‌ இவருடைய பிரம்மோபசனையால்‌ ஈர்க்கப்பட்டு ஒருநாள்‌ பூமியில்‌ இறங்கி இடைக்காடர்‌ முன்‌ நின்றார்‌. இடைக்காட்டு முனிவரும்‌ அந்த விண்ணக சித்தரின்‌ தெய்வீக சக்தியால்‌ உந்தப்பட்டு கண்விழித்துப்‌ பார்த்தார்‌. அப்பொழுது நவநாத சித்தருக்கு அருந்த ஆட்டுப்பால்‌ கொடுத்து உபசரித்தார்‌. அதனால்‌ அகம்‌ மகிழ்ந்த நவநாத சித்தர்‌ இவருக்கு மானசீக தீட்சையாக பிரம்மோபதேசம்‌ செய்து விட்டு மறைந்தார்‌. அது முதல்‌ இவர்‌ கவிபாடும்‌ திறம் பெற்ற மகாசித்தராக விளங்கினார்‌. இந்த செய்தி அபிதான சிந்தாமணியிலும்‌ காணப்படுகிறது.

போகரும் இடைக்காடரும்


பல சித்த இலக்கியங்களில்‌ இவர்‌ போகரின்‌ சீடர்‌ என்ற குறிப்பே காணப்படுகிறது. இவர்‌ போகரின்‌ சீடர்களில்‌ ஒருவர்‌ என்பது போகரின்‌ வாழ்க்கை வரலாற்றிலிருந்தும்‌ தெரிய வருகிறது. இந்தக்‌ கருத்தே மிகவும்‌ நம்பத்தகுந்ததாகவும்‌ உள்ளது. இக் கருத்துப்படி ஒரு நாள்‌ போகசித்தர்‌ விண்வழியே போய்க் கொண்டிருந்த போது, சிறுவனாகிய இடைக்காடனின்‌ தவத்தால்‌ ஈர்க்கப்பட்டு பூமிக்கு வந்து கொஞ்சம்‌ நாள்‌ இடைக்காடருடனிருந்து அவருக்கு சித்த வித்தைகளைக்‌ கற்றுக்கொடுத்தார்‌. போகரிடமிருந்து மருத்துவம்‌, வானியல்‌, சோதிடம்‌, முதலியவற்றையும்‌ இவர்‌ முழுமையாகக்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. அவை பற்றி பல நூல்களும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ இவர்‌ எழுதிய சாரீரம்‌ என்ற மருத்துவ நூல்‌ மிகவும்‌ சிறந்த நூலாகக்‌ கருதி போற்றப்பட்டு வருகிறது.

திருமாலின் அவதாரம்


இடைக்காடர்‌ திருமாலின்‌ அவதாரம்‌ என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. ஒரு சமயம்‌ விஷ்ணு பக்தர்கள்‌ பலர்‌ இவரிடம்‌ வந்து, திருமாலின்‌ பத்து அவதாரங்களில்‌ எந்த எந்த அவதார மூர்த்திகளை வழிபட்டால்‌ விரைவில்‌ நன்மைகள்‌ கிட்டும்‌ என்று கேட்டனர்‌. அவர்களிடம்‌ ஏழை, இடையன்‌, இளிச்ச வாயன்‌ ஆகிய மூவருக்கும் விழாக்கள் எடுத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு எல்லா வளங்களும் கிட்டும் என்று கூறினார். இவைகளில் ஏழை என்ற சொல் இராமாவதாரத்தையும் இடையன் என்ற சொல் கிருஷ்ணாவதாரத்தையும் இளிச்சவாயன் என்ற சொல் நரசிம்ம அவதாரத்தையும் குறிப்பனவாகும். மேலும் இவர் இடையர் குலத்தில் பிறந்தவர். பிறவியிலேயே கருவில் திருவுடையவராக விளங்கிய சித்தர். இவருடைய சித்தர் பாடல்களில் தாண்டவக்கோனே கோணரே என்று கோகுலே வாசனை விழித்துப் பாடும் கண்ணிகளும் உள்ளன. இவைகள்‌ யாவும்‌ இவரைத்‌ திருமாலின்‌ அவதாரமாகவே மக்கள்‌ கருதினர்‌ என்பதை உறுதி செய்கின்றன.

வாழ்ந்த காலம்


இடைக்காடர்‌ கடைச்சங்க காலத்தில்‌ வாழ்ந்தவர்‌. புறநானூற்றிலும்‌ (எ.கா. வாகைத்‌ திணையில்‌ 42 ஆம்‌ பாடல்‌), நற்றிணை முல்லைத்‌ திணையிலும்‌, குறுந்தொகையிலும்‌ அவர்‌ பாடல்கள்‌ இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவ மாலை அவரால்‌ பாடப்பட்ட சங்க காலத்‌ தனி நூல்‌.
நற்றினை 142 ஆம்‌ பாடலில்‌

ஆயன்‌ மழையில்‌நனைந்தபடியே ஊன்று கோல்மேல்கால்வைத்து நின்று கொண்டு ஆட்டை அழைக்கஒரு பாடல்‌ பாட, அதைப்பார்த்து ஆட்டைக்‌ கவரவந்த நரி பயந்தோடும்‌

என்று கூறும்‌ அடிகள்‌ கருத்துச்‌ சுவையும்‌ கவி நயமும்‌ மிக்கவை.

கடுகைத்துளைத்து எழுகடலைப்‌ புகட்டி குறுகத்தரித்த குறள்‌

என்று திருக்குறளின்‌ பெருமையை கடைச்சங்க காலப்‌ புலவர்களிடையே எடுத்துக்கூறிய பெரும்‌ புலவர்‌ இவர்‌. இவர்‌ தமிழ்ச்சங்கம்‌ (கடைச்சங்கம்‌) அழிந்து போகச்‌ சாபம்‌ கொடுத்தாரென்றும்‌, குளமுற்றத்‌ துஞ்சிய கிள்ளி வளவனைப்‌ பாடியுள்ளார்‌ என்றும்‌ கபிலரின்‌ சமகாலத்தவர்‌ என்றும்‌ தெரியவருகிறது.

வாழ்ந்த பகுதி


இவர்‌ பல சான்றோர்களை ஈன்றெடுத்த தொண்டை நாட்டில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்‌ திட்டு என்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. இடையர்‌ குலத்தில்‌ பிறந்த இவர்‌ சிறுவயதில்‌ ஆடு மேய்ப்பதையே தொழிலாகக்‌ கொண்டிருந்தார்‌. பெரிய சித்தராக மாறி இயற்கையையே கட்டுப்‌படுத்தும்‌ அளவிற்கு தவவலிமை பெற்றிருந்தவர்‌. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்‌ கோவிலில்‌ சமாதி கொண்டுள்ளார்‌.

இவர்‌ மதுரைக்குக்‌ கிழக்கிலுள்ள இடைக்காட்டில்‌ பிறந்தவராகவோ மலையாளப்‌ பகுதியில்‌ உள்ள இடைக்காடு என்னும்‌ ஊரில்‌ தோன்றியவராகவோ இருக்கக்‌கூடும்‌ என்ற கருத்தும்‌ நிலவுகிறது. இவைகளை உறுதிசெய்யப்‌ போதிய ஆதாரங்கள்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை.

12 ஆண்டு கடும்‌ பஞ்சம்‌


அவர்‌ தன்‌ சோதிட ஞானத்தைக்‌ கொண்டு விரைவில்‌ 12 ஆண்டுகள்‌ மழை பெய்யாது நாடே பசியாலும்‌ பஞ்சத்தாலும்‌ அழியப்‌ போகிறது. மனித இனம்‌ மட்டுமல்லாது ஆடு மாடுகளும்‌ மரம்‌ செடிகொடிகளும்‌ பாலை நிலமாக மாறப்‌ போகிறது' என்று கண்டுணர்ந்தார்‌. அந்தப்‌ பஞ்சத்தில்‌ தன்‌ ஆடுகளை எப்படியும்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்று முடிவுசெய்தார்‌. அதன்‌ விளைவாக பாலை வனப்பகுதிகளிலும்‌ வற்றாது காடாக வளர்ந்திருக்கும்‌ எருக்கன்‌ செடிகளின்‌ இலை தழைகளை மட்டும்‌ தன்‌ ஆடுகளுக்கு உணவாகக்‌ கொடுத்தார்‌. மற்ற எந்த மரம்‌ செடி கொடிகளையும்‌ அவற்றின்‌ கண்களுக்கே காட்டாது வளர்த்தார்‌. வறட்சியிலும்‌ வளர்ந்து பலன்தரக்கூடிய குறுவரகு என்ற தானியத்தை சேற்றில்‌ கலந்து சுவர்‌ எழுப்பித்‌ தன்‌ குடிலை அமைத்துக் கொண்டார்‌. தன்‌ குடிலைச்‌ சுற்றி குறுவரகு கலந்த மண்‌ சுவரை எழுப்பிக் கொண்டார்‌.

எருக்கிலையை மட்டுமே உணவாக உண்டு வந்த ஆடுகளுக்கு எருக்கிலையின்‌ நச்சுத்தன்மையால்‌ உடல்‌ முழுவதிலும்‌ நமைச்சல்‌ ஏற்பட்டது. அரிப்பு வரும் போதெல்லாம்‌ அந்த ஆடுகள்‌ தங்கள்‌ முதுகுகளை அந்த சுவர்களில்‌ தேய்த்துக் கொண்டன. அப்போது மண்ணுடன்‌ சேர்ந்து உதிர்ந்த குறுவரகை சுத்தம்‌ செய்து அதையே இடைக்காடர்‌ உணவாகக்‌ கொண்டார்‌. தன்‌ விருந்தினர்களுக்கும்‌ குறுவரகுப்‌ பண்டங்களையும்‌ ஆட்டுப்‌ பாலையுமே கொடுத்து உபசரித்தார்‌.

அவர்கள்‌ இந்த உணவுமுறைக்குப்‌ பழகிப் போவதற்கும்‌ பஞ்சம்‌ தொடங்குவதற்கும்‌ காலம்‌ சரியாக அமைந்துவிட்டது. அந்தப்‌ பஞ்சத்தில்‌ மனிதர்களும்‌ மாண்டழிந்தனர்‌. ஆடு, மாடுகளும்‌ மரம்‌,செடி,கொடிகளும் கூட அறவே பட்டொழிந்தன. இடைக்‌ காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ மட்டுமே உயிர்‌ வாழ்ந்து கொண்டிருந்தனர்‌.

12 வருடங்கள்‌ கடந்த பின்


12 வருடங்கள்‌ கடந்த பின்‌ ஒரு நாள்‌ பூமியைச்‌ சுற்றிப்‌ பார்த்துக்‌ கொண்டு வான்வெளியில்‌ போய்க்கொண்டிருந்த நவக்கிரக நாயகர்கள்‌ பூமியில்‌ காணும்‌ இடமெங்கும்‌ உயிரற்ற வறண்ட பாலைவனமாக உள்ள போது இடைக்காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ எப்படி உயிர் வாழ்கின்றனர்‌? என்பதைத்‌ தெரிந்துகொள்ள இடைக்காடர்‌ குடிசையின்‌ முன்‌ விண்ணிலிருந்து இறங்கினர்‌. இடைக்காடர்‌ அவர்களுக்குத்‌ தாராளமாக குறுவரகுப்‌ பண்டமும்‌ ஆட்டுப்‌ பாலும்‌ கொடுத்து உபசரித்தார்‌. எருக்கிலைகளை மட்டுமே உண்டு வளர்ந்த அந்த ஆடுகளின்‌ பாலில்‌ எருக்கன்‌ செடிக்குரிய நச்சுத் தன்மை நிறைந்திருந்ததால்‌ ஆட்டுப்‌ பாலைக் குடித்த நவக்கிரக நாயகர்கள்‌ தூக்க மயக்கம்‌ போதை மயக்கம்‌ இரண்டும்‌ சேர சாப்பிட்ட களைப்பில்‌ படுத்து மெய்மறந்து தூங்கிவிட்டனர்‌. இடைக்காடர்‌ தன்‌ சோதிட ஞானத்தையும்‌ தவ வலிமையையும்‌ கொண்டு, தூக்க மயக்கத்தில்‌ தம்மை மறந்து கிடந்த நவக்கிரக நாயகர்களை, நல்ல மழை பொழிவதற்கு ஏற்ற வகையில்‌ இடம்‌ மாற்றிப்‌ படுக்க வைத்தார்‌. நாயகர்கள்‌ இடம்‌ மாறியதற்கு ஏற்ப பூமியைச்‌ சூழ்ந்து விண்வெளியில்‌ அமைந்துள்ள துவாதச மண்டலத்தில்‌ நவக்கிரகங்களும்‌ இராசிகள்‌ மாறி அமைந்தன. சிறிது நேரத்திலேயே வானத்தில்‌ கருமேகம்‌ சூழ்ந்திட பூமியின்‌ மேல்‌ இடிமுழக்கத்துடன்‌ பெருமழை பெய்ந்தது. வறண்டிருந்த பூமி வெள்ளக்காடாக மாறியது.

திடீரென்று ஏற்பட்ட குளிரால்‌ உந்தப்‌ பட்டு விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள்‌ தாங்கள்‌ ஒன்பது பேரும்‌ இடம்‌ மாறி இருந்ததையும்‌ பாலைவனச்‌ சுற்றுச்‌ சூழல்‌ சோலைவனமாக மாறி இருந்ததையும்‌ கண்டு ஆச்சரியக்‌ களிப்பில்‌ ஆழ்ந்தனர்‌. சித்தர்களுக்குப்‌ பிறகு தான்‌ தெய்வங்கள்‌ எல்லாம்‌ என்பதை உளமாற உணர்ந்தனர்‌. அவர்கள்‌, இந்த மாமனிதர்‌ மக்கள்‌ நலத்திற்காக மாமழை பொழியவைத்த மெய்ஞ்ஞானி. இந்தப்‌ பேரருளாளர்‌ உலகம்‌ உள்ளளவும்‌ விண்ணவர்‌ போற்றுதலுக்கும்‌ மக்கள்‌ வழிபாட்டிற்கும்‌ உரிய பெருந்தெய்வமாயிருந்து தீப வடிவத்தில்‌ தரிசனம்‌ கொடுத்த வண்ணம்‌ அருளாட்சி செய்து வருவாராக என்று இடைக்காடரை வாழ்த்தி விட்டு விண்ணகம்‌ ஏகினர்‌. அவர்‌ இன்றும்‌ அருணாசலத்‌ தீபமாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌


முதலில்‌ அவர்‌ சூனியமே பரம்பொருள்‌ என்பதை உணர வேண்டும்‌. இல்லையேல்‌ ஆன்மா பிரம்ம நிலைக்கு உயர வேறு வழியே இல்லை என்கிறார்‌.

வானியல்போல வயங்கும்‌ பிரமமே சூனியம்‌ என்றறிந்து ஏத்தாக்கால்‌ ஊனியல்‌ ஆவிக்கொரு கதியில்லையென்று ஓர்ந்து கொள்வீர்‌ நீர்‌ கோனாரே.

அடுத்ததாக எல்லாமாகவும்‌ ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியாகவும்‌ உள்ள அந்தப்‌ பரம்பொருளை அல்லும்‌ பகலும்‌ மனதில்‌ இருத்தித்‌ தவம்‌ புரிந்தால்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழலாம்‌. இதற்கு மந்திரம்‌ எதுவும்‌ சொல்ல வேண்டுவதில்லை என்றிறார்‌.

சொல்லில்‌ சகல நிட்களன மானதை சொல்லினால்‌ சொல்லாமல்‌ கோனாரே அல்லும்‌ பகலும்‌ அகத்தில்‌ இருத்திடில்‌ அந்தகன்‌ கிட்டுமோ கோனாரே?

ஒரு குருவின்‌ வழிகாட்டலைக்‌ கொண்டே இந்த தவமுறையைப்‌ பயில வேண்டும்‌ என்கிறார்‌. செவிதனில்‌ கேளாத மறை தாண்டவக்கோனே - குரு செப்பில்‌ வெளியாமலவோ தாண்டவக்கோனே. அதனால்‌ தவறான பாதையில்‌ சென்று அழிந்து விடாமல்‌ குரு மூலமாக உன்‌ உள்ளே உள்ள மெய்‌ விளக்கை உணர வேண்டும்‌ என்கிறார்‌.

கை விளக்குக்‌ கொண்டு கடலில்‌ வீழ்வார்‌ போல மெய்வினக்குன்‌ உள்ளிருக்க வீழ்குவதேன்‌ புல்லறிவே

அப்படி. குருவின்‌ மூலமாக உள்‌ ஒளிபெற்று விட்டால்‌ நீயே பிரம்மத்தைக்‌ கண்ட குருவின்‌ நிலைக்கு உயர்ந்துவிடுவாய்‌. அப்படி. உயர்ந்தபிறகு நீ மற்றவருக்கு வழிகாட்டி அவர்களைக்‌ கரையேற்ற வேண்டும்‌ என்கிறார்‌.

இருட்டறைக்கு நல்விளக்காய்‌ இருக்கும்‌ உன்றன்‌ வல்லமையை அருள்‌ துறையுள்‌ நிறுத்தி விளக்காகுக நீ புல்லறிவே,

மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்


அவர்‌ வைணவ பக்தர்களுக்கு, இராமனையும்‌ கிருஷ்ணனையும்‌ நரசிம்ம மூர்த்தியையும்‌ விழா எடுத்து வழிபட்டால்‌ எல்லா நலன்களும்‌ பெருகும்‌ என்று கூறியுள்ளதை முன்னரே கண்டோம்‌. சிவனை வழிபட்டால்‌ கர்மவினைகள்‌ அகன்று நற்கதி கிடைக்கும்‌ என்றும்‌ கூறியுள்ளார்‌.

சூரியன்‌ வாள்பட்ட துய்ய பனிக்கெடும்‌ தோற்றம்போல்‌ வெவ்வினை தூள்படவே நாரி இடப்‌ பாகன்தான்‌ நெஞ்சில்‌ போற்றியே நற்கதி சேர்ந்திடும்‌ கோனாரே

அவர்‌ உருவ வழிபாட்டை மறுக்கவில்லை. கடவுளை எந்த உருவத்தில்‌ வழிபட்டாலும்‌ தெய்வ அருள்‌ கிடைக்கும்‌ என்றே கூறினார். அவர் காலத்தில் மக்கள் கோவில்கள் கட்டி பல்வேறு தெய்வங்களுக்கும் விழா எடுத்து வழிபாடுகள் செய்தனர். அவர்கள் வழிபாடுகளில் ஆடம்பரங்களும் வெளிப்பகட்டும் இருந்தனவே தவிர மனிதர்களின் உள்ளங்களில்‌ உண்மையான பக்தி இல்லை. இதனால்‌ கிரகக்கோளாறுகளும்‌ இயற்கைச்‌ சீற்றங்களும்‌ பெருகும்‌.அதனால் மக்கள்‌ துன்புறுவார்கள்‌. அவர்களுடைய விதியை அவர்கள்‌ அனுபவித்துதான்‌ தீரவேண்டும்‌ என்று கவலைப்பட்டார்‌.

அவர்‌ சமாதி பற்றிய கருத்து


அவர்‌ கார்த்திகை மாதத்தில்‌ திருக்கார்த்திகை நட்சத்திரம்‌ கூடிய பெளர்ணமி இரவில்‌, இப்போது அண்ணாமலையார்‌ பாதம்‌ உள்ள இடத்தில்‌ சமாதி கூடினார்‌ என்றும்‌ பொதுமக்கள்‌ காண அவருடைய ஆன்மா ஒளித்திரளாக விண்நோக்கி சென்றது என்றும்‌, அந்த நாளே இன்றும்‌ அண்ணாமலை தீப விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும்‌ கருதப்படுகிறது. அண்ணாமலை தீபத் திருவிழாவன்று அவர்‌ சமாதி அடைந்த திருவண்ணாமலை நகரமெங்கும்‌ நீண்டகாலமாக அன்னதானம்‌ நடைபெற்று வருகிறது. இவர் வாழ்ந்த காலத்தில்‌ தன்னை நாடிவந்தவர்களுக்கெல்லாம்‌ அன்புடன்‌ உணவளித்து விருந்து உபசாரம்‌ செய்வதை தன்‌ கடமையாகவே கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்‌. அதன்‌ பிரதிபலிப்பே இப்போதும்‌ தீபத் திருநாளன்று நடைபெற்று வரும்‌ அன்னதானங்கள்‌.

ஓம் இடைக்காடரே நமஹ ஓம் அருணாசலேஸ்வராய நமோநமஹ

இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும்‌ வீட்டில்‌ இருந்தபடியே வழிபாடு செய்தாலும்‌ போதும்‌ அருணாசலேஸ்வரரின்‌ திருவருளால்‌ இல்லத்தில்‌ எல்லா வளங்களும்‌ பொங்கும்‌. வாழ்க்கை இன்பமாக அமையும்‌

அமைந்துள்ள இடம்


சென்னையிலிருந்து புதுவை செல்லும்‌ கிழக்குக்‌ கடற்கரை சாலையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ செய்யூர்வட்டத்தில்‌ கடப்பாக்கம்‌ என்ற திருத்தலம்‌ உள்ளது. இந்த ஊர்‌ பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ சென்றால்‌ அருள்மிகு உண்ணாமுலை அம்மன்‌ உடனுறை அருணாசலேஸ்வரர்‌ ஆலயம்‌ உள்ளது. இந்த ஆலயம்‌ காசிப்பாட்டை என்ற சாலையில்‌ கடற்கரைக்கு அருகில்‌ உள்ளது. [இவ்வூர்‌ சென்னையிலிருந்து 105 கி.மீ. தெற்கே உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும்‌ உள்ளன. கோவில்‌ மாலை 4.00 மணி முதல்‌ 7.00 மணி வரை திறந்திருக்கும்‌ என்றாலும்‌ கோவில்‌ அர்ச்சகரின்‌ வீடு பக்கத்திலேயே இருப்பதால்‌ எந்த நேரத்தில்‌ சென்றாலும்‌ இவ்வாலயத்தில்‌ மனநிறைவோடு இறை தரிசனம்‌ செய்யலாம்‌.] இக்கோவிலுக்கு அருகில்‌ வங்கக்‌ கடலில்‌ காணப்படும்‌ இடையன்‌ திட்டு என்ற இடத்தில்‌ இப்போது இடைக்காடர்‌ அருவ நிலையில்‌ வாழ்ந்து வருகிறார்‌. இவர்‌ ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும்‌ இங்குள்ள அருணாசலேஸ்வரரை ஒளிவடிவில்‌ சென்று வழிபட்டு வருகிறார்‌ என்று தெரிகிறது. திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரர்‌ பாத பீடத்தில்‌ ஜீவ சமாதி கொண்ட இந்த சித்தர்‌ கடப்பாக்கம்‌ அருணாசலேஸ்வரர்‌ மூலம்‌ இப்பகுதியில்‌ வாழும்‌ எளிய மக்களுக்கு மறைமுகமாக உதவிகள்‌ செய்து கொண்டும்‌ அருள் வழிகாட்டிக் கொண்டும்‌ வரவேண்டும்‌ என்பதும்‌ அருணைமலையாளின்‌ திருவுளம்‌ போலும்‌. இக்கோவிலில்‌ சிவராத்திரிக்கு மறுநாள்‌ சூரிய உதய ஒளியும்‌ மாசி, பங்குனி மாதங்களில்‌ பெளர்ணமி உதய நிலவு ஒளியும்‌ மூலவர் மீது படுவது இத்திருத்தலத்தின்‌ தனிச்சிறப்பு.


16/9/18

காலங்கிநாதர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணம்
  3. தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌
  4. சதுரகிரியில்‌ காலங்கிநாதர்
  5. வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு
  6. சமாதி கூடிய இடம்
  7. பிற்சேர்க்கை

முன்னுரை - தோற்றம்


காலங்கிநாதர் 3000ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்.
(போகர் 7000/5743)

இவர் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் மயன் சாதியில் விஸ்வகர்மாவகத் தோன்றியவர் (போ.ஏ.5698). திருமூலருக்கு முதன்மையான சீடராயிருக்கும் பெரும்பேறு பெற்றவர். மூன்று யுகங்கள் சமாதி கூடியிருந்தவர். பாரதத்திலிருந்து ககன குளிகையின் உதவியால் விண்வெளியில் சீன நாட்டிற்கு சென்றவர். சீனாவில் சமாதி கூடியிருந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அடிக்கடி சமாதியிலிருந்து வெளிப்பட்டு சீன நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தந்ததுடன் அருளுதவிகளும் செய்து வந்தார்

பெயர்க் காரணம்


இவரது பெயர்‌க்காரணம்‌ அரியானூர்‌ கரியபெருமாள்‌ வரலாற்றில்‌ இடம் பெற்றுள்ளது. (அரியானூர்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளது. கோவில்‌ அரியானூர்‌ பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில்‌ கஞ்ச மலை அடிவாரத்தில்‌ காட்டுக்குள் உள்ளது. இந்தப்‌ பெருமாள்‌ வரலாற்றுப்படி இந்த மாகசித்தர் சீனா நாட்டில்‌ உள்ள காலங்கி என்ற ஊரிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற பெயரைப்‌ பெற்றார்‌. பெரும்‌பாலோர்‌ கூறும்‌ மற்றொரு காரணம்‌. இவர்‌ உடல் எலும்பு, தசை, இரத்தம்‌, நரம்பு போன்ற அங்கங்களால்‌ ஆனதல்ல. காற்றையே உடம்பாகக்‌ கொண்டவர்‌ [கால்‌-காற்று; அங்கி - உடல்‌ ] அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற காரணப் பெயரைப்‌ பெற்றுள்ளார்‌.

தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌


இந்த உண்மை போகர் சப்‌தகாண்டம்‌ 7000ல்‌ இடம்‌ பெற்றுள்ளது. திரேதாயுகத்தில்‌ ஒரு சமயம்‌ ஒரு மிகப்‌ பெரிய நீர்ப்பிரளயம்‌ ஏற்பட்டது. மழை வெள்ளத்தில்‌ உலகமே அழிந்துவிடும் போல்‌ இருந்தது. மழை வெள்ளத்தில்‌ பூமியே கொஞ்சம்‌ கொஞ்சமாக மூழ்கிக்‌ கொண்டிருந்த போது காலங்கிநாதர்‌ ஒரு மலையின்‌ உச்சியை நோக்கி மேலும்‌ ஏறிப் போய்க் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுமியிருந்த ரிஷிகள் பலர் இதற்கும் மேலே செல்ல எங்களுக்கு சக்தி, இல்லை. வினாடிக்கு வினாடி நீர்மட்டம்‌ உயர்ந்து கொண்டே இருக்கிறது. உன்னால்‌ முடிந்தால்‌ நீ மேலே போய்விடு என்று கூறினார்கள்‌. மேலே ஏறிச்சென்ற காலங்கிநாதர்‌ எதிரே மிகப்‌ பெரிய புலி ஒன்று படுத்துக்கிடக்கக்‌ கண்டார்‌. பார்த்த மாத்திரத்தில்‌ அது! ஒரு புலியல்ல; புலி உருவில்‌ படுத்திருப்பவர்‌ ஒரு மகா சித்தரே என்பதை உணர்ந்து கொண்டார்‌
(செய்தி போகர்‌ 7000/6867 ஆம்‌ பாடலில்‌ இடம்பெற்றுள்ளது)

மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல காலங்கி நாதர்‌ ஒருவர்‌ பின்‌ ஒருவராக மச்சரிஷியையும்‌, கூர்ம ரிஷியையும்‌, வராக ரிஷியையும்‌, நரசிம்ம ரிஷியையும்‌ கண்டார்‌. மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல வாமனரிஷி, பரசுராமரிஷி, ராமரிஷி, பலராமரிஷி, பெளத்த ரிஷி. கல்கிரிஷி ஆகிய பத்து ரிஷிகளையும்‌ சந்தித்து ஆசிபெற்றார்‌. இவர்களையே கலியுக மனிதர்கள்‌ திருமாலின்‌ தசாவதாரங்கள்‌ என்று கூறியுள்ளனர்‌.

சதுரகிரியில்‌ காலங்கிநாதர்‌:


(ஞானவிந்த ரகசியம்‌' என்ற 30 பாடல்கள்‌ கொண்ட நூலில்‌ தன்‌ தவ வாழ்க்கை பற்றி காலங்கி. நாதரே கூறியது)

காலங்கிநாதர்‌ சதுரகிரி மலைப்‌ பகுதியில்‌ நீண்ட காலம்‌ தவ வாழ்க்கை வாழ்ந்தார்‌. அக்காலத்தில்‌ அம்மலைக்‌ குகைகளில்‌ நீண்டகால தவத்தில்‌ ஈடுபட்டிருந்த உயர்நிலை சித்தர்களையும்‌. மகரிஷிகளையும்‌ பற்றிக்‌ கூறியுள்ளார்‌. 9ஆம்‌ பாடலில்‌, அம்மலைக்கு சதுரகிரி என்ற பெயர்‌ வந்த காரணம்‌ வேதங்கள்‌ நான்கும்‌ ஒன்றாய்‌ சார்ந்திங்கு ஓருருவாய்‌ சமைந்ததாலே என்கிறார்‌. இதே பாடலில்‌ இங்குள்ள மகாலிங்கரின்‌ அடியைப்‌ போற்றி விண்ணவரும்‌, மண்ணவரும்‌ உயர்‌ முனிவர்‌ சித்தர்‌ எனப்‌ பெயர்‌'பெற்றாரே' என்கிறார்‌. 11-ஆம்‌ பாடலில்‌, அப்பகுதியில்‌ "நவசித்தர்‌ குகை ஒன்றுண்டு; நின்றந்தச்‌ சித்தர்களை மனத்துள்‌ எண்ணிநிதானமாய் அவ்வழியில்‌ போக வேண்டும் என்கிறார். அடுத்த மூன்று பாடல்களில் பாம்பாட்டி சித்தர் அத்திரி முனிவர், நாதாந்த சித்தர், வேதாந்த சித்தர், குதம்பை சித்தர், ஞான சித்தர், மிருகண்டேயர் வராரிஷி, தவ சித்தர், யோக சித்தர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரமர், அகப்பை சித்தர், நாதரிஷி, வியாச முனிவர், ஆகிய சித்தர்களும் மகரிஷிகளும் வாழ்ந்து வரும் குகைகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு


காலங்கி நாதர்‌ சதுரகிரியில்‌ தவம்‌ இயற்றிக்‌ கொண்டிருந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ வணிகன்‌ ஒருவன்‌ அவரிடம்‌ ஓடிவந்து அவர்‌ காலில்‌ விழுந்து ஐயனே! ஒரு சிவாலயம்‌ கட்ட வேண்டும் ‌ என்ற ஆசையில்‌ ஆலயத்திருப்பணி வேலையையும்‌ தொடங்கிவிட்டேன்‌. தொடக்க காலத்திலேயே கட்டடம்‌ எழுப்பும்‌ பணியில்‌ கையில்‌ இருந்த செல்வம்‌ எல்லாம்‌ கரைந்துவிட்டது. வீடு நிலம்‌ எல்லாவற்றையும்‌ விற்று செலவு செய்துவிட்டேன்‌. ஆலயத்திருப்பணியில்‌ முழுமையாக ஈடுபட்டதில்‌ தொழிலையும்‌ விட்டுவிட்டேன்‌. இப்போது உணவுக்கும்‌ வழியின்றித் ‌திண்டாடுகிறேன்‌. செல்வந்தர்களும்‌, மன்னரும்கூட எனக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்‌. இப்போது எனக்கு உங்களை விட்டால்‌ வேறு கதி இல்லை என்று வேண்டிக்‌ கதறினான்‌. காலங்கிநாதரோ அவனுக்கு பதில்‌ ஏதும்‌ கூறவில்லை. இருப்பினும்‌ வணிகன்‌ மனம்‌ தளரவும்‌ இல்லை. முனிவரை விட்டுச்‌ செல்லவும்‌ இல்லை. இரவு பகலாக அவருக்குத்‌ தொண்டு செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்‌. ஓர்‌ இரவு ஆழ்ந்த தூக்கத்தில்‌ அவன்‌ எப்போது நான்‌ கோவில்‌ கட்டுவேன்‌? எப்போது என்‌ ஐயனைப்‌ பிரதிஷ்டை செய்வேன்‌? என்று பிதற்றிக்‌ கொண்டிருந்தான்‌. அதைக்‌ கண்ணுற்ற முனிவ‌ர் அவன்‌ கோவில்‌ கட்டவே விரும்புகிறான் என்பதைப் புரிந்து கொண்டு அவன் மேல் இரக்கப்பட்டு அவனுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்‌. மலை மேலிருந்த பல அரிய மூலிகைகளைக்‌ கொண்டு வகாரத்‌ தைலம் என்ற தைலத்தைத்‌ தயாரித்து அதிலிருந்து சுத்த தங்கத்தைத்‌ தயாரித்துக்‌ கொடுத்தார்‌. வணிகனும்‌ அத்தங்கத்தை விற்று திருக்கோவிலைக்‌ கட்டி முடித்தான்‌.

மேலும்‌ வகாரத்‌ தைலம்‌ பொங்கிக்‌ கொண்டிருந்ததைக்‌ கண்ட சித்தர்‌ செம்பொன்‌ உண்டாக்கக்கூடிய அத்தைலத்தைத்‌ தீயோர்‌ எவரும்‌ எடுத்துப்‌ பயன்படுத்தக்‌ கூடாது என்பதற்காக அதை ஒரு கிணற்றில்‌ தேங்க வைத்தார்‌. அக்கிணற்றின்மேல்‌ ஒரு பாறையைப்‌ போட்டு மூடிவிட்டு அதன்‌ நான்கு புறத்திலும்‌ வராகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன்‌ ஆகியோரைக்‌ காவலுக்கு வைத்துவிட்டு மீண்டும்‌ தவமியற்ற வேறோரிடத்திற்குச்‌ சென்று விட்டார்‌. இந்த வரலாறு சதுரகிரி தல புராணத்தில்‌ உள்ளது.

சமாதி கூடிய இடம்


காலங்கிநாதர்‌ சீனநாடு இந்தியாவின்‌ வட, மத்திய பகுதிகளையெல்லாம்‌ சுற்றிக்கொண்டு கடைசியாக தமிழகம்‌ வந்து சேலம்மாவட்டத்தில்‌ உள்ள கஞ்சமலையில்‌ தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார்‌. அப்போது மலையடிவாரத்தில்‌ சுயம்புவாக இரண்டு லிங்கங்கள்‌ தோன்றக்‌ கண்டார்‌. ஞானதிருஷ்டியால்‌ அந்த லிங்கங்கள்‌ இரண்டும்‌ லவன்‌, குசன்‌ என்று கண்டுணர்ந்தார்‌. அந்த லிங்கங்களுக்கு அவை தோன்றிய இடத்திலேயே கோவில்கட்டி வழிபட்டும்‌ வந்தார்‌. கடைசியில்‌ அங்கேயே ஜீவ சமாதியும்‌ அடைந்தார்‌. இவை யாவும்‌ திரேதா யுகத்தில்‌ நடந்து முடிந்தவை.இவையெல்லாம்‌ நடந்து முடிந்து பல ஆயிரம்‌ ஆண்டுகள்‌ ஆகிவிட்டன. கலியுகம்‌ தோன்றியே ஐயாயிரம்‌ ஆண்டுகளும்‌ கடந்துவிட்டன. லவகுசர்‌ கோவிலும்‌ சித்தர்‌ சமாதியும்‌ சிதைந்துபோய்‌ காலத்தால்‌ மண்‌ மூடி புதைந்துவிட்டன.ஒரு மூலவர்‌ பெருமாள்‌ சன்னதியும்‌ துவஜஸ்தம்பமுமே அங்கே கோவில்‌ இருந்ததற்கு அடையாளமாக எஞ்சி நின்றன.

சமீப காலத்தில்‌ கஞ்சமலைப்‌ பகுதியில்‌ வாழ்ந்து வரும்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவருக்கு, சமாதிகூடிய காலங்கி நாதரின்‌ திருவருள்‌ கிடைக்கப்பெற்றது. தெய்வ நிலையில்‌ வாழ்ந்து வரும்‌ அந்த சித்தரின்‌ அருளால்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவர்‌ உள்ளுணர்வில்‌ “நீண்ட காலத்திற்கு முன்‌ அங்கு லவகுசர்களின்‌ கோவில்‌ இருந்தது. அவர்களுக்குப்‌ பக்கத்திலேயே காலங்கி நாதரின்‌ ஜீவசமாதியும்‌ இருந்தது. சீதா தேவியார்‌ தன்‌ இரு பிள்ளைகளுடன்‌ அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்தபோது லவன்‌, குசன்‌ ஆகிய இருவரில்‌ குசன்‌ மட்டும்‌ தீயில்‌ கருவ கரிய மேனியுடன்‌, வெளிப்பட்டு இங்கு கரியபெருமாள்‌ என்ற திருப்பெயருடன்‌ கோவில்‌ கொண்டுள்ளார்‌. அருகிலேயே காலங்கிநாதரும்‌ கரடி சித்தர்‌ என்ற பெயருடன்‌ ஜீவ சமாதி பூண்டுள்ளார்‌ என்ற உண்மைகள்‌ தோன்றின.

அதைத்‌ தொடாந்து காலங்கிநாதரின்‌ கட்டளையைத்‌ தலைமேல்‌ கொண்டு அருவநிலையிலுள்ள அந்த மகாசித்தரின்‌ அனுக்ரகத்துடன்‌ சந்திரப்‌ பிரகாசர்‌ கரிய பெருமாள்‌ கோவிலை கஞ்சமலைக்கு அருகில்‌ உள்ள அரியானூரில்‌ சித்தர்‌ சமாதி கூடிய இடத்திலேயே எழுப்பினார்‌. மூலவருக்கு இடப்பாகத்திலேயே காலங்கிநாதரின்‌ சிலையையும்‌ பிரதிஷ்டை செய்தார்‌. கடந்த 2003. ஆம்‌ ஆண்டில்தான்‌ இக்கோவிலின்‌ குட முழுக்கும்‌ நிறைவேறியது இன்றும்‌ காலங்கிநாதர்‌ கரடிசித்தர்‌ என்ற திருநாமத்துடன்‌ அக்கோவிலில்‌ குடிகொண்டிருந்து மக்களுக்கு உதவி செய்து வருவதுடன்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வருகிறார்‌. அவருக்குக்‌ கரடி சித்தர்‌ என்ற பெயர்‌ வந்த வரலாறு பிற்சேர்க்கையாக உள்ளது.
காலங்கி நாதர்‌ கஞ்சமலையில்தான்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்பதைக்‌ கீழ்‌ வரும்‌ நிகழ்ச்சி உறுதிபடுத்துகிறது.
இதன்படி:

காலங்கிநாதர்‌ அவருடைய குருநாதர்‌ திருமூலருடன்‌ கஞ்சமலைப்பகுதிக்கு வந்தார்‌. சீடரை உணவு சமைக்கச்‌ சொல்லிவிட்டு குருநாதர்‌ மலைச்சாரல்களில்‌ மூலிகைகளைத்‌ தேடிச்‌ சென்று விட்டார்‌. அரிசி வெந்து கொண்டிருந்த போது காலங்கி, அருகில்‌ இருந்த ஒரு செடியின்‌ குச்சியை ஒடித்து அதைக் கொண்டு சோற்றைக் கிளறினார்‌. அதன்‌ விளைவாக சோறு கருப்பாகிவிட்டது. குரு வந்தால்‌ கோபிப்பாரே என்ற பயத்தில்‌ அவர்‌ கருகியிருந்த சோறு முழுவதையும்‌ தானே சாப்பிட்டுவிட்டார்‌. சாப்பிட்ட மாத்திரத்தில்‌ அவர்‌ ஒரு இளம்‌ வாலிபனாக மாறிவிட்டார்‌.அவர்கிளறிய குச்சி ஒரு அரிய மூலிகை என்பது அப்போதுதான்‌ அவருக்குத்‌ தெரிந்தது.திரும்பி வந்த திருமூலர் தன் சீடனின் உடலில் ஏற்பட்ட மற்றத்தினைக் கண்டுவியந்து தனக்கும் அந்த இளமை வரவேண்டும் என்றார்.காலங்கிநாதர் தன் விரல்களைத் தொண்டைக்குள் வீட்டுக் குமட்டி சாப்பிட்ட சோற்றையெல்லாம் வாந்தி எடுத்தார் அதை சாப்பிட்ட மாத்திரத்தில்‌ குருநாதர்‌ திருமூலரும்‌ இளைஞராகி விட்டார் இதனால்‌ பெருமகிழ்ச்சி அடைந்த குருநாதர்‌ தன்‌ சீடருக்கு தவத்திட்சை அளித்து காலங்கிநாதரை சுத்தசித்தர்‌ நிலைக்கு உயர்த்திவிட்டார்

நிறைநிலை சித்தரான காலங்கி நாதர்‌ மீண்டும்‌ ஆயிரம்‌ ஆண்டுகள் கஞ்சமலையின்‌ தெற்கேயுள்ள உத்தம சோழபுரத்தில்‌ எழுந்தருளியிக்கிற கரபுரீஸ்வரர் நினைத்து தவமிருந்தார். பிறகு ஒரு நாள் ஆதிசிவன் அவர் ‌முன்‌ தோன்றி அவருக்கு சித்தேஸ்வரர்‌ என்ற திருநாமம்‌ சூட்டி கஞ்ச மலைப்பகுதியிலேயே இருந்து அருளாட்சி அருளாட்சி செய்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்‌.
இறைவன் கட்டளைக்கிணங்க காலங்கிநாதர் கஞ்ச மலையிலயே வீராசனத்தில்‌ இரண்டு யுக காலமாக சித்தேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

இன்றும்‌ பெளர்ணமிதோறும்‌ சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் ‌18 கி.மீ. சுற்றளவு கொண்டுள்ள கஞ்ச மலையைச்‌ சுற்றி கிரிவலம்‌ வந்து கஞ்சமலை சித்தேஸ்வரராக அருள்புரியும்‌ காலாங்கிநாதரை வழிபட்டு நலம்பெற்று வருகின்ற பக்தர்கள்‌ ஏராளம்.

இந்த மலைக்கோவிலுக்கு சேலம்‌ பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்துகள்‌ செல்கின்றன. இக்கோவிலில்‌ சித்தேஸ்வரராக இருந்து இறைமாட்சி செய்துவரும்‌ காலங்கி நாதர்‌ கஞ்சமலை சித்தர் ‌ என்றும்‌ வழங்கப்படுகிறார்‌.
ஆனால்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ 5742 ஆம்‌ பாடலில்‌:

சித்தான காலங்கி முனிவர்தானும்‌ சிறப்புடனே சீனபுதிதன்னிலசென்று முனையானை சமாதி தனிலிறங்கியல்லோ பக்தியுள சீனபதி மாந்தருக்கு பலகாலும்‌ தரிசனங்கள்‌ புரிகுவாரே
என்றுள்ளவாறு காலங்கிநாதர்‌ சீன தேசத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌.

ஒரு சமயம்‌ போக முனிவர்‌ சீன நாட்டில்‌ காலங்கிநாதர்‌ சமாதி அடைந்திருந்த முக்காதக்‌ கோட்டைக்குள்‌ நுழைந்து அவரை வணங்கி நின்றார்‌. அப்போது சமாதி கூடத்தின்‌ கதவு தானாகவே திறந்து கொண்டது. காலங்கிநாதர்‌ ஒளிமயமாகப்‌ போகருக்குத்‌ தரிசனம்‌ தந்தார்‌. இந்த இருவேறு ஆதாரங்களின்படி காலங்கிநாதர்‌ சீனாவில்‌ சமாதியடைந்துள்ளார்‌ என்று எண்ண வேண்டியுள்ளது.

போகரின்‌ 'ஜனன சாகரம்‌' என்ற நூலின்‌ 306 ஆம்‌ பாடலில்‌வரும்‌,
ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு அவருடன்‌ பதினெண்‌ பேரதிலேயாச்சு சோதியென்ற காலங்கி நாதர்தாமும்‌ துலங்குகின்ற காஞ்சிபுரந்தனிலேயாகும்‌

என்ற அடிகளின்படி காலங்கிநாதர்‌ காஞ்சிபுரத்தில்‌ ஜோதி வடிவிலே சிவத்துடன்‌ கலந்தார்‌ என்று கொள்ள வேண்டியுள்ளது: காலங்கிநாதர்‌ திருக்கடவூரில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ சில சித்த ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர் எங்கே சமாதி கொண்டுள்ளார்‌ என்பது சரியாகத்‌ தெரியவில்லை என்றாலும் அவரை உண்மையாக வழிப்பட்டு வரும் பக்தர்கள் அனைவர்களின் இதயங்களில் குடிகொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது மட்டும் உலகம் உள்ளளவும் மறுக்க முடியாத உண்மை.

பிற்சேர்க்கை


காலங்கிநாதருக்கு கரடிசித்தர் என்ற பெயர் வந்த வரலாறு

அக்காலத்தில்‌ உத்தம சோழபுரத்தில்‌ வாழ்ந்து வந்த காடன்‌ என்பவனுக்கு நான்கு பெண்கள்‌ இருந்தனர்‌. அவனுடைய தங்கை மகன் ஒருவன்‌ அவனிடம்‌ வேலை செய்து வாழ்ந்துவந்தான்‌. தன்‌ பெண்கள் பெரியவர்கள்‌ ஆனதும்‌ தன்‌ முதல்‌ மகளைத்தன்‌ மருமகனுக்குத்‌ திருமணம்‌ செய்து கொடுப்பதாக வாக்களித்‌தார். ஆனால் வாக்கு தவறி அவனை வேறு ஒரு உறவினனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவ்வாறே வாக்கு தவறி இரண்டாவது மகளையும்,மூன்றாவது மகளையும்கூட வேறு இருவருக்கு மணம் முடித்து விட்டார்

காடனின் மருமகன்,தன்மாமன் அவனது நான்காவது மகளையும் தனக்கு மணம் செய்து கொடுக்கமாட்டான் என்பதை தெரிந்திருந்தாலும்‌ தன்‌ மாமன்‌ வாழ உண்மையாக உழைத்து வந்தான்‌. ஒருநாள்‌ மாமனும்‌ மருமகனும்‌ மலைக்காட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது காடன்‌ தன்‌ மருமகனிடம்‌, என்‌ நான்காவதுதமகள்‌ உனக்குத்தான்‌ என்றான்‌. அதைச்‌ சிறிதும்‌ நம்பாத மருமகன்“தான்‌ இனியும்‌ ஏமாறத்‌ தயாராக இல்லை. உன்‌ கடைசி மகளையும் நீ விரும்பும்‌ வேறு யாருக்காவது கொடுத்துவிடு. நான்‌ என் வழியைப்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌” என்றான்‌. அப்போது மலையில்‌ சித்தேஸ்வரராகக்‌ கோயில்‌ கெண்டிருந்து அருளாட்சி செய்து வரும்‌ காலங்கிநாதர்‌ ஒரு கரடி உருக்கொண்டு கரபூரீஸ்வரரை வழிபடுவதற்காக அவ்வழியே வந்தார்‌.அக்கரடியைக்‌ கண்ட காடன்‌, அவ்விலங்கு ஒரு மகா சித்த புருஷர்‌ என்பதை அறியாதவனாய்‌, அக்கரடியைக்‌ காண்பித்து, இக்கரடி சாட்சியாக என்‌ மகளை உனக்கே திருமணம்‌ செய்து கொடுக்கிறேன். இது சத்தியம், என்று மருமகனுக்கு வாக்கு கொடுத்தான்.

கொஞ்சம்‌ நாள்‌ கழித்து காடன்‌ தன்‌ மகளுக்கு வெளியில்‌ மாப்பிள்ளை தேடத்‌ தொடங்கினான்‌. அப்போது ஒரு நாள்‌ அவன்‌ மருமகன்‌ தங்கள்‌ உறவினர்கள்‌ யாவரையும்‌ கூட்டமாக அழைத்து வந்து வைத்துக்கொண்டு அவர்கள்‌ முன்னிலையில்‌ காடன்‌ மூன்று முறை சத்தியம்‌ தவறியதையும்‌, நான்காவதாகத்‌ தனக்குக்‌ கரடியை சாட்சியாக வைத்து சத்தியம்‌ செய்ததையும்‌. இப்போதும்‌ சத்தியம்‌ தவறிப்‌ பேசுவதையும்‌ விபரமாக எடுத்துரைத்தான்‌ . காடன்‌, தன்‌ மருமகன் தான்‌ பொய்‌ கூறுகிறான்‌ என்றான்‌. அதனால்‌ மனம்‌ உடைந்த மருமகன்‌ கடவுளை நினைத்து “நான்‌ சொல்வது உண்மையென்றால்‌ அந்தக்‌ கரடியே வந்து சாட்சி சொல்லி உண்மையை வெளிப்படுத்தட்டும்‌' என்று மனமுருகி வேண்டினான்‌. அடுத்த நொடியே காலங்கிநாதர்‌ அனைவரும்‌ காண கரடி உருவில்‌ அங்கே தோன்றி, மூன்று முறை தலை அசைத்து மருமகன்‌ சொன்னது உண்மையென்று நிரூபித்து அவனுக்கே காடன்‌ தன்மகளை மணம்‌ முடித்துக்‌ கொடுக்க வைத்தார்‌. அதுமுதல்‌ அவர்‌. கரடி சித்தர்‌ என்ற பெயராலும்‌ வழிபடப்பட்டு வருகிறார்‌. இந்த நிகழ்ச்சி கஞ்சமலை “அருள்மிகு சித்தேஸ்வர்‌ சுவாமி திருக்கோயில்‌ தல வரலாறு' என்ற நூலில்‌ இடம்பெற்றுள்ளது.