Top bar Ad

26/9/18

பிரம்ம முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கோரக்கருடன் நட்பு
  3. ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு
  4. பிரம்ம முனி சமாதி கூடல்‌

முன்னுரை


முற்பகுதி வாழ்க்கை

குஜராத்‌ மாநிலத்தில்‌ துவாரகைக்கு அருகில்‌ உள்ள ஒரு கிராமத்தில்‌ பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16 வயதாகும்‌ முன்பே தான்‌ ஒரு பிரம்ம ஞானி என்று நிரூபித்து வந்தான்‌. தெய்வீக ஆற்றலைக்‌ கொண்டு அவன்‌ மக்களின்‌ நோய்களையும்‌ குறைகளையும்‌ போக்கி வந்தான்‌. மக்கள்‌ அவனை தெய்வமாகவே மதித்து ஞானேஸ்வரர்‌ என்று அழைத்துவந்தனர்‌.

கோரக்கருடன் நட்பு


கோரக்க மகாசித்தர்‌ வட நாட்டு யாத்திரை சென்ற போது தன்‌ தவ வலிமையால்‌ ஞானேஸ்வரரை வெற்றி கொள்ள வேண்டும்‌ என்று அந்த கிராமத்திற்குச்‌ சென்றார்‌. தன்னைக்‌ கண்டு அந்த சிறுவன்‌ அஞ்‌சி ஓட வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ ஒரு புலி மேலேறி அவனை நோக்கிச்‌ சென்றார்‌. அப்போது ஞானேஸ்வரர்‌ ஒரு குட்டிச்சுவரின்‌ அருகில்‌ தன்‌ நண்பர்களுடன்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தார்‌. ஒரு முனிவர்‌ தன்னை காண வருவதைக்‌ கண்ட ஞானேஸ்வரர்‌ நண்பர்களுடன்‌ குட்டிச்‌ சுவரின்மேல்‌ உட்கார்ந்து கொண்டு முனிவரை வரவேற்க விண்ணில்‌ பறந்து சென்றார்‌. அவர்‌ தன்னை நெருங்கி வருவதைத்‌ தடுக்க, கோரக்கர்‌ தன்‌ தவ வலிமையால்‌ பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டார்‌. ஞானேஸ்வரர்‌ அருகில்‌ வந்த அந்த அஸ்திரம்‌ பூமாலையாக மாறி அவர்கழுத்தில்‌ விழுந்தது: அதனால்‌ கோபமுற்ற கோரக்கர்‌ நாகாஸ்திரத்தை ஏவினார்‌. ஞானேஸ்வரர்‌ அந்த நாகத்தைப்பற்றி எய்தவரிடமே திருப்பி விட அது பாம்பாக வந்து கோரக்கர்‌ கழுத்தில்‌ விழுந்தது, அதன் மூலம்‌ ஞானேஸ்வரரின்‌ தெய்வீக ஆற்றல்‌ தம்‌ தவ வலிமையை விட மிகவும்‌ உயர்ந்தது என்பதை உணர்ந்த கோரக்கர்‌ ஆணவம்‌ அடங்கியவராய்‌ ஞானேஸ்வரரை வணங்க இருவரும்‌ நண்பர்களாயினர்‌. பிறகு கோரக்கரும்‌ ஞானேஸ்வரரும்‌ ஒன்று சேர்ந்து வட மதுரை வழியாகக்‌ குருக்ஷேத்திரத்தைச்‌ சென்றடைந்தனர்‌. அங்கு சில காலம்‌ தவவாழ்க்கைக்குப் பின்‌ நேரிடையாக தமிழ்நாடு வந்தனர்‌.

ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு


கோரக்கருடன்‌ தமிழகம்‌ வந்த ஞானேஸ்வரர்‌ சதுரகிரி சித்தர்‌ கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ மொழியைக்‌ கற்றார்‌. தமிழக சித்தர்கள்‌ அவரது தவ வலிமையைக் கண்டு வியந்து அவரை பிரம்மமுனி என்றே அழைத்தனர்‌. பிறகு கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தங்களாலும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழிலையும்‌ செய்ய முடியும்‌ என்று நிரூபிக்க வேண்டி ஒரு யாகம்‌ வளர்த்ததன் மூலம்‌ கஞ்சாச் செடியும்‌, புகையிலைச்‌ செடியும்‌ தோன்றுவதற்குக்‌ காரணமாயினர் ‌.
[ விபரம் கோரக்கர்‌ வரலாற்றில்‌ காணலாம். ]

பிரம்ம முனி சமாதி கூடல்‌


தாம்‌ இயற்கை விதிகளைக்‌ கடந்து யாகம்‌ வளர்த்தது தவறு என்பதை உணர்ந்த பிரம்மமுனி கோரக்கரைப்‌ பிரிந்து தெற்கே சென்று இலங்கையை அடைந்தார்‌. அங்குள்ள திரிகோண மலையில்‌ ஜீவசமாதி கூடியிருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ . பிரம்மமுனி ஜீவ சமாதி அடைந்த போது கோரக்கரும்‌ அவர்‌ அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக