Top bar Ad

27/9/18

கோரக்கர்‌

பொருளடக்கம்
  1. பிறப்பு
  2. உண்மை வாழ்க்கை
  3. பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன
  4. கண்ணை இழந்து பெற்ற கதை
  5. குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌
  6. அல்லமாத்தேவர்‌ ஆசிபெறுதல்‌
  7. பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி
  8. கடைசி கால தவ வாழ்க்கை
  9. கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை
  10. கோரக்கர்‌ சமாதி கூடல்‌

பிறப்பு


கோரக்கர்‌ கொல்லி மலைச்சாரலில்‌ உள்ள சம்பல்‌ பட்டியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ கார்த்திகை மாதம்‌ ஆயில்யம்‌ நட்சத்திரம்‌ 2ஆம்‌ பாதத்தில்‌ வசிஷ்ட மகரிஷிக்கும்‌ ஒரு குறவர் குடிப்‌ பெண்ணிற்கும்‌ மகனாகப்‌ பிறந்தார்‌.

(போகர்‌ 7000/5912, 5973)

உண்மை வாழ்க்கை


இவர்‌ பிராமணனாகப் பிறந்து கற்ப தேகத்துடன்‌ சேணியத்‌ தொழிலாளியாக வாழ்ந்து வந்தார்‌. ஒரு நாள்‌ ஒரு இடையன்‌ பாம்பு கடித்து இறந்தான்‌. இவர்‌ அவன்‌ உடலில்‌ புகுந்து இடையனாக மாறினார்‌. திரும்பி வந்து தன்‌ கல்ப தேகத்தைத்‌ தேடக்‌ கிடைக்காததால்‌ இடையனாகவே வாழ்ந்தார்‌. சதுரகிரி சென்று பல முனிவர்களுடன்‌ சேர்ந்து கற்ப மூலிகைகளை உண்டு இடையன்‌ உடலையும்‌ கல்ப தேகமாக மாற்றிக் கொண்டார்‌.

(கருவூரார்‌ வாத காவியம்‌ பாடல்கள்‌ 3563 முதல்‌ 577 வரை)

பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன


மச்சேந்திரர்‌ சிவனிடமே ஞானம்‌ பெற்ற மாமுனிவர்‌. தேச சஞ்சாரியான அம்முனிவரிடம்‌ ஒரு நாள்‌ பிச்சையிட்ட ஒரு பெண்‌, தனக்கு மகன்‌ பிறக்க வரமளிக்க வேண்டினாள்‌.அவளுக்கு முனிவர்‌ விபூதி அளித்து! உட்கொள்ளச் சொன்னார்‌. அவள்‌ அதை அடுத்த வீட்டுக்காரியிடம்‌ கூற அவள்‌ அவன்‌ ஒரு வேஷக்‌ காரன்‌. உன்னை மயக்கவே விபூதி கொடுத்திருக்கிறான்‌. அதை அடுப்பில்‌ போட்டு எரித்துவிடு என்றாள்‌. அப்பெண்ணும்‌ அந்த விபூதியை எரியும்‌ அடுப்பில்‌ கொட்டி விட்டாள்‌. சில ஆண்டுகள்‌ கழித்து அவள்‌ வீட்டுக்கு வந்த மச்ச முனி, உன்‌ மகன்‌ எங்கே? என்று கேட்டார்‌. அவள்‌ நடந்ததைக்‌ கூற அவர்‌ அடுப்பெரித்த சாம்பலை எங்கே கொட்டினாய்‌? என்று கேட்டார்‌. அவள்‌ குப்பை மேட்டைக்‌ காட்ட மச்சேந்திரர்‌ கோரக்கா, எழுந்து வா! என்று அழைக்க குப்பைக்‌குள்ளிருந்து அத்தனை ஆண்டுகள்‌ வளர்ந்த பிள்ளையாக கோரக்கர்‌ வெளிப்பட்டார்‌. வெளிப்பட்ட அச்சிறுவன்‌ மச்சமுனியைத்‌ தன்‌ குருவாகக்‌ கொண்டு அவருடன்‌ சென்று விட்டான்‌.

கண்ணை இழந்து பெற்ற கதை


ஒரு நாள்‌ கோரக்கர்‌ பிச்சைக்கு சென்ற போது ஒரு பார்ப்பனி ஒரு வடையைக்‌ கொடுக்க அதைக்‌ கொண்டு போய்‌ குருவுக்குக் கொடுத்தார்‌. அந்த வடையைத்‌ தின்ற மச்சமுனி மீண்டும்‌ ஒரு வடை கேட்க கோரக்கர்‌ அந்த பிராமனியிடம்‌ சென்று என்‌ குருவுக்கு இன்னும்‌ ஒரு வடை வேண்டும்‌ என்றார்‌. உம் குருவுக்காக உமது கண்ணைக்‌ கேட்டால்‌ கொடுப்பீரா? என்று அவள்‌ கேட்க கோரக்கர்‌ உடனே தன்‌ கண்ணைப்‌ பிடுங்கிக் கொடுத்து அவளிடம்‌ வடையை வாங்கிச்சென்று குருவிடம்‌ கொடுத்தார்‌. நடந்ததை அறிந்த குரு தவ வலிமையால்‌ தன்‌ சீடனுக்கு இழந்த கண்ணை வழங்கினார்‌.

குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌


தவயாத்திரையில்‌ மலையாள நாட்டை அடைந்த மச்சமுனி பிரேமளா என்ற பெண்ணிடம்‌ மயங்கி மீனநாதன்‌ என்ற மகனுக்கும்‌ தந்தையாகி விட்டார்‌. குடும்ப வலையிலிருந்து தன்‌ குருவை மீட்க கோரக்கர்‌ கூத்தாடிகளுடன்‌ மத்தளம்‌ வாசிப்பவராகச்‌ சேர்ந்து அவர்கள்‌ வீட்டை அடைந்து குருவைத்‌ தன்னுடன்‌ வருமாறு அழைத்தார்‌. குரு மறுத்தாலும்‌ சீடர்‌ விடவில்லை. ஒரு நாள்‌ குழந்தை மீனநாதன்‌ படுக்கையில்‌ மல உபாதை செய்ய மச்சமுனி கோரக்கரை அழைத்து குழந்தையை நீரில்‌ கழுவி வரச் சொன்னார்‌. கோரக்கர்‌ மீனநாதனைத்‌ துணியுடன்‌ சேர்த்து ஆற்றுக்குக்‌ கொண்டு போய்த்‌ துவைத்து வெயிலில்‌ காயவைத்தார்‌. நடந்ததைக்‌ கேட்ட முனிவர்‌, 'என்மகனை அழைத்து வா' என, சிதைந்த உடல்‌ துகள்கள் யாவும்‌ சேர்ந்து 108 மீனநாதர்களாய்‌ வந்து சேர்ந்தனர்‌. கோரக்கர்‌ அவர்களையெல்லாம்‌ இணைத்து ஒரே மீனநாதனாக்கிக்‌ கொடுத்து விட்டு, குருவைத்‌ தன்னுடன்‌ வரும்படி அழைத்தார்‌. வேறு வழியின்றி மச்ச முனியும்‌ அவருடன்‌ புறப்பட்டு விட்டார்‌. பிரேமளா ஒரு தங்கப் பாளத்தை ஒரு துணியில்‌ சுற்றி மச்சமுனியிடம்‌ வழிச் செலவுக்கு கொடுத்தனுப்பினாள்‌. வழியில்‌ அதைக் கண்ட கோரக்கர்‌ குருவுக்குத்‌ தெரியாமல்‌ அந்த மூட்டையைப்‌ பிரித்து தங்கப்‌ பாளத்தை எடுத்து ஒரு குளத்தில்‌ எறிந்துவிட்டு துணியில்‌ கற்களை வைத்துக்‌ கட்டிவிட்டார்‌.

அதைக்‌ கண்டுபிடித்த குரு நாதர்‌ கோரக்கா! முதலில்‌ நீ என்‌ மகனைக்‌ கொன்றாய்‌. இப்போது என்‌ தங்கத்தைத்‌ திருடினாய் ‌. இனி நீ என்‌ சீடனல்ல என்று கூற கோரக்கர்‌ அங்கிருந்த ஒரு குன்றின்‌ மேல்‌ ஏறி சிறுநீர் கழிக்க அது ஒரு தங்கமலை ஆகிவிட்டது. பிறகு கோரக்கர்‌ முனிவரிடம்‌ குருவே! உங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ‌ என்று கூறி குருவிடம்‌ நல்விடை பெற்றுப்‌ பிரிந்து சென்று விட்டார்‌. மச்சமுனியும்‌ மாயை தெளிந்து நிறைநிலை சித்தராகி பல தலங்களுக்குச்‌ சென்று மக்களுக்கு உதவிகள்‌ புரிந்து விட்டுக்‌ கடைசியில்‌ திருப்பரங்குன்றம்‌ சென்று சமாதி பூண்டார்‌. இவர்‌ சமாதி பூண்ட இடத்தைத் தான்‌ முருகன்‌ தன்‌ ஆறுபடை வீடுகளில்‌ ஒன்றாகக்‌ கொண்டு அருளாட்சி செய்து வருகிறான்‌.

அல்லமாத் தேவர்‌ ஆசிபெறுதல்‌


அல்லமாத்தேவர்‌ மகா ஞானி. நாடி சாஸ்திரத்தை முழுமையாகக்‌ கற்றுணர்ந்தவர்‌. காற்றையே உடலாகக் கொண்ட சித்தர்‌. ஒரு முறை கோரக்கர்‌ அவரிடம்‌ ஒரு வாளைக்‌ கொடுத்து இந்த வாளால்‌ என்னை வெட்டுங்கள்‌ என்றார்‌. அந்த வாளால்‌ அல்லமர்‌ வெட்ட வாள்‌ மழுங்கியதே தவிர கோரக்கர்‌ உடலில்‌ எந்த பாதிப்பும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ அந்த வாளைக்‌ கோரக்கரிடம்‌ கொடுத்து அதே வாளால்‌ தம்மை வெட்டும்படி கூறினார்‌. தேவரை கோரக்கர்‌ வெட்டிய போது வாள்‌ காற்றுக்குள்‌ புகுந்து வெளி வருவதைப் போல்‌ வெளியில்‌ வந்ததே தவிர அல்லமர்‌ உடலில்‌ எந்தச்‌ சலனமும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ பெருமையை உணர்ந்த கோரக்கர்‌ அவரைப்‌ பணிந்து அவரிடம்‌ அருளாசி பெற்றுத்‌ தன்‌ தவயாத்திரையைத்‌ தொடர்ந்தார்‌.

பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி


பிரம்ம ரிஷி குருக்ஷேத்திரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்‌ கற்று சித்தர் கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ முனியாக வாழ்ந்து வந்தார்‌. கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தாங்கள்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழில்களையும்‌ செய்யும்‌ ஆற்றலைப் பெற ஒரு உக்கிரமான வேள்வி நடத்தினர்‌. எதிர்பாரா வண்ணம்‌ யாக குண்டத்திலிருந்து மருள்மாயை, இருள்மாயை என்ற இரு பேரழகிகள்‌ வெளிப்பட்டனர்‌. அதனால்‌ கோபமுற்ற முனிவர்கள்‌ அந்த அழகிகளை சபித்தனர்‌. பிரம்ம முனியால்‌ சபிக்கப்பட்ட இருள்மாயை புகையிலைச் செடியானாள்‌.(ஹோமப் புகையிலிருந்து வெளிப்பட்டதால்‌ அச்செடிக்கு புகையிலைச் செடி என்ற பெயர்‌ வந்தது.) கோரக்கரால்‌ சபிக்கப்பட்ட மருள்‌ மாயை கஞ்சா செடியானாள்‌ (தவ சித்திகளுக்கு அமுதமாக அமைந்ததால்‌ அது கஞ்சா செடி என்ற பெயர்‌ பெற்றது.

கடைசி கால தவ வாழ்க்கை


கோரக்கரின்‌ சிவயோகத்‌ தலயாத்திரையில்‌ ஒரு முறை சதுரகிரி அடி வாரத்தில்‌ உள்ள மகாலிங்க மலைக்‌ குகையில்‌ தவம்‌ மேற்கொண்டார்‌. (அந்தக்‌ குகை, மலை அடிவாரத்திலுள்ள தாணிப் பாறையிலிருந்து 3 கி. மீ உயரே உள்ளது! அந்தக்‌ குகைக்கு அருகில்‌ அவர்‌ வழிபட்ட லிங்கமும்‌ ஒரு நீரோடையும்‌ உள்ளன. அந்த நீரோடை இன்றும்‌ கோரக்கர்‌ தீர்த்தம்‌ என்றே அழைக்கப்‌படுகிறது. கோரக்கர்‌ குகைக்கு மேலே 4 கி. மீ. உயரத்தில்‌ மகா லிங்கேஸ்வரர்‌ லிங்க வடிவில்‌ இருந்து அருளாட்சி செய்துவருகிறார்‌.

இந்த சித்தர்‌ சீனா சென்று அங்கு 500 ஆண்டுகள்‌ சித்து விளையாடியுள்ளார்‌. பின்னர்‌ தமிழகம்‌ வந்து 400 வருட கால தவ வாழ்க்கைக்குப்‌ பின்‌ தில்லைவனம்‌ சென்று சிதம்பர ரகசியத்தை உருவாக்கியதில்‌ போகருடன்‌ இருந்திருக்கிறார்‌. இந்த செய்திகளையும்‌ போகரின்‌ மறுவருகை பற்றியும்‌ தமிழகத்தின்‌ எதிர்காலம்‌ பற்றியும்‌ அவர்‌ சந்திரசேகை 200 என்று நூலில்‌ எழுதியுள்ளார்‌.

அவர்‌ எழுதிய சதுரகிரி மகாத்மியம்‌ என்ற நூலில்‌ திருப்பழனி மல்லூர்‌ தன்னில்‌ போகரோடு தெண்டபாணி உருவம்‌ செய்தோம்‌ என்றும்‌ போகருக்குத்‌ தாமே ஜீவசமாதி எழுப்பியதாகவும்‌ கூறியுள்ளார்‌.

கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை


அத்திரி தபோவனம்‌ திருநெல்வேலி மாவட்டம்‌ அம்பாசமுத்திரம்‌ வட்டத்தில்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலை அடிவாரத்தில்‌ கடல்‌ மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில்‌ உள்ளது. இந்தத்‌ தபோவனத்தில்‌ தான்‌ அத்திரி முனிவரும்‌ அனுசுயா தேவியும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்‌. அவருக்கு எட்டு சீடர்கள்‌ இருந்தனர்‌. அவர்களில்‌ கோரக்கரும்‌ ஒருவர்‌.

ஒரு சமயம்‌ அத்திரி மகரிஷி ஆழ்ந்த தவத்தில்‌ இருந்தார்‌. அவர்‌ தவம் கலைந்து கண் திறந்த போது அவர்‌ சீடர்களில்‌ ஏழு பேர்‌ நீராடச்‌ சென்றிருந்தனர்‌. கோரக்கர்‌ மட்டும்‌ போகாதிருந்ததைக்‌ கண்ட முனிவர்‌ அவர்‌ மட்டும்‌ ஏன்‌ நீராடச்‌ செல்லவில்லை என்று கேட்டார்‌. தானும்‌ சென்றுவிட்டால்‌ குருவிற்கு செய்ய வேண்டிய பனிவிடைகள்‌ தடைபடும்‌ என நினைத்துத் தான்‌ போகாது இருந்து விட்டதாகக்‌ கோரக்கர்‌ கூறினார்‌. கோரக்கரின்‌ குரு பக்தியைப்‌ பாராட்டிய மகரிஷி தாம்‌ தவம்‌ செய்த அத்தி மரத்தடியில்‌ தண்டத்தால்‌ தட்டி, தம்‌ மண்டலத்திலுள்ள நீரைத்‌ தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில்‌ கோரக்கரை நீராடச் செய்தார்‌. இன்றும்‌ அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும்‌ நீர் வற்றும்‌ கோடையிலும்‌ இந்த அத்திரி கங்கையில்‌ மட்டும்‌ ஒரே நிலையில்‌ நீர் பெருகி குடிக் கொண்டே உள்ளது. இந்த கங்கையில்‌ நீராடுவோர்‌ நலம்‌ பல பெற்று நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்‌.

இப்போது அம்பாசமுத்திரத்திற்கு அருகில்‌ உள்ள ஆழ்வார்‌ குறிச்சிக்கு மேற்கே சுமார்‌ 5 கி.மீ. தொலைவில்‌ ஆதிசிவசைலம்‌ எனப்படும்‌ அத்திரி மலைக்கோயில்‌ உள்ளது. இங்குள்ள ஆதி சிவசைல நாதர்‌ அத்திரி முனிவரால்‌ வழிபட்டதால்‌ அத்திரி பரமேஸ்வரர்‌ என்றும்‌ கோரக்கரால்‌ வழிபடப்பட்டதால்‌ கோரக்கநாதர்‌ என்றும் திருப்பெயர்கள்‌ கொண்டுள்ளார்‌. இங்குள்ள ஆறுபடை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின்‌ திருநாமமும்‌ அத்திரிபரமேஸ்வரி என்பதே ஆகும்‌.

திரேதா யுகத்தில்‌ நிகழ்ந்தது


இந்த வரலாறு நமக்குப்‌ புலப்படுத்தும்‌ உண்மைகள்‌:

  • மகரிஷிகளும்‌ சித்தர்களும்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்கள்‌.
  • மக்களுக்கு நன்மை செய்வதற்காகவும்‌ மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும்‌ அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ தாங்களே விரும்பி மறு பிறப்பெடுக்கின்றனர்‌.
  • அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ பிறந்து கொஞ்ச காலம்‌ மக்களிடை வாழ்ந்து ஜீவ சமாதி அடைகின்றனர்‌.
  • ஜீவ சமாதி அடைந்தபிறகும்‌ அருவமாய்‌ இருந்து மக்களுக்கு அருள்‌ புரிந்து வருகின்றனர்‌.
  • அரூபியாக வாழ்ந்து வரும்‌ கோரக்க சித்தரையோ அல்லது அகத்தியர்‌, திருமூலர்‌ போன்ற வேறு ஒரு சித்தரையோ குருவாகக்‌ கொண்டு அவரையே தான்‌ வழிபடும்‌ கடவுளாகவும்‌, வழிகாட்டியாகவும்‌ கொண்டு முழு நம்பிக்கையுடன்‌ அவரை வழிப்பட்டு வந்தால்‌ இப்பிறப்பிலேயே இன்பமான வாழ்வும்‌, மறுபிறப்பில்லா பெருவாழ்வும்‌ அமையும்‌ என்பது திண்ணம்‌.

கோரக்கர்‌ சமாதி கூடல்‌


கடைசி காலத்தில்‌ கோரக்கர்‌ நாகைக்குத்‌ தெற்கேயுள்ள வேளாங்கண்ணியில் 1008 ஆண்டுகள் சிவராஜ யோக நிஷ்டையிலிருந்து அன்னை இராஜராஜேஸ்வரியின் திருக்காட்சி பெற்றார். அங்கிருந்து வடக்கே ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பொய்கை நல்லூரை அடைந்தார். பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வெளியில் வன்னி மரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌.
பொய்கை நல்லூர் திருத்துறைப்பூண்டி பேருந்து வழித்தடத்தில் நாகையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக