Top bar Ad

28/9/18

சட்டை முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சித்தரான சட்டைமுனி
  4. சமாதி கூடல்‌
  5. அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை
  6. சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்

முன்னுரை


சட்டை முனி திருமூலர்‌, கொங்கணவர்‌ கருவூரார்‌ ஆகிய சித்தர்களுடன்‌ வாழ்ந்திருக்கிறார்‌. கயிலாயம்‌ சென்று கம்பளிச்சட்டை அணிந்தவராகத்‌ தமிழகம்‌ திரும்பி வந்ததால்‌ கயிலாயக்‌ கம்பளிச் சட்டை முனி நாயனார்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறார்‌.

முற்பகுதி வாழ்க்கை


சட்டை முனி சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நீண்டகாலம்‌ வாழ்ந்தார்‌ என்று அமுத கலை ஞானம்‌ என்ற நூலில்‌ அகத்தியர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. இவர்‌ சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நெசவுத்‌ தொழில்‌ செய்து வந்தார்‌. மெய்ஞ்ஞானம்‌ பெற்று சதுரகிரி சென்று ஒரு பிராமணர்‌ உடலில்‌ புகுந்து ஒரு கற்ப காலம்‌ வாழ்ந்தார்‌ என்று நொண்டிச்சிந்து என்னும்‌ வாதகாவியத்தில்‌ கருவூரார்‌ கூறியுள்ளார்‌.

(பாடல்கள்‌ 586,587)

போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 என்ற நூலின்படி சட்டைமுனி ஆவணி மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரம்‌ 3 ஆம்‌ பாதத்தில்‌ மிதுன ராசியில்‌ சிங்களவர்‌ தேசத்தில்‌ ஒரு தேவதாசியின்‌ மகனாகப்‌ பிறந்தார்‌. பிழைப்பு தேடி தாய்‌ தந்தையருடன்‌ தமிழகம்‌ வந்தார்‌.

(பாடல்கள்‌ 5874 3875)

அகத்தியர்‌ பெருநூல்‌ காவியம்‌ 433, 434,435 ஆம் பாடல்களின்‌ படி. சட்டைமுனி கோயில்‌ வாயில்களில்‌ நின்று தாம்பாளம்‌ ஏந்திப்‌ பிச்சை எடுத்துப்‌ பெற்றோரைக்‌ காப்பாற்றினார் ‌. திருமணம்‌ செய்து கொண்டு பிள்ளைகளும் பெற்றார். இவற்றிற்கு பிறகு ஒரு நாள் இந்தியாவின் வடகோடியிலிருந்து வந்த சங்கு பூண்ட சன்யாசி ஒருவரை சந்தித்தார்‌. அவரால்‌ கவரப்பட்டு அவருடனேயே வடநாடு சென்று அந்தத் தவ யோகியின்‌ தவக்குடிலிலேயே கொஞ்ச காலம்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்த சன்யாசியோடு கயிலாயம்‌ முதல்‌ கன்யாகுமரி வரை கால்‌நடையாகவே சுற்றி வந்திருக்கிறார்‌. அந்த ஞான குருவே சட்டை முனியின்‌ முதல்‌ வழிகாட்டி எனலாம்‌.

சித்தரான சட்டைமுனி


பிறகு போகரிடம்‌ தீட்சை பெற்று சித்தநெறியில்‌ ஈடுபட்டார்‌. சித்தரான பிறகு கருவூரார்‌ தொடர்பும்‌ கொங்கணவர்‌ தொடர்பும்‌ பெற்றார்‌. சட்டை முனியும்‌ கொங்கணவரும்‌ ஒருவரை ஒருவர்‌ மிகவும்‌ அதிகமாக நேசித்திருக்கிறார்கள்‌. ஞானம்‌, மருத்துவம்‌ போன்றவற்றை ஒருவருக்கொருவர்‌ பகிர்ந்து கொண்டுள்ளனர்‌. கயிலாயக்‌ கம்பளிச்சட்டை முனி பின்‌ நூறு' என்ற நூலின்‌ 40, 80, 87,88,95, 97 ஆகிய பாடல்களில்‌ அவர்‌ கொங்கண வரை மிகவும்‌ புகழ்ந்துள்ளார்‌. குறிப்பாக 40 ஆம்‌ பாடலில்‌ கொங்கணவர்‌ வான்‌ என்ற அந்தரானந்தர்‌ பெற்ற பூரணம்‌ என்றும்‌ கூறுகிறார்‌. கடைசியாக அகத்தியரிடம் தீட்சை பெற்று நிறைநிலை சித்தரானார்.

சட்டை முனி தன் ஞான நூல்களில் மனித குரு யாரையுமே குருவென்று குறிப்பிடவில்லை. சின்மயமேதன்‌ குரு என்று கூறியுள்ளார்‌. இருப்பினும்‌ அகத்தியரின்‌ பெருநூல்காவியம்‌ 12000ல்‌ சட்டைமுனி அஸ்வினி தேவர்களிடம்‌ நான்‌ யாரோவென்று எண்ண வேண்டாம்‌. நான்‌ போகருடைய சீடன்‌ என்று கூறியதாக ஒரு குறிப்பு உள்ளது.

சமாதி கூடல்‌


சட்டை முனி நீண்ட காலம்‌ வாழ்ந்து சீர்காழியில்‌ சமாதி கூடியுள்ளார்‌ என்று ஜனன சாகரத்தில்‌ போகர்‌ கூறியுள்ளார்‌. திருவரங்கத்தில்‌ அரங்கனுடன்‌ கலந்துவிட்டார்‌ என்று சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர்‌ அரங்கனுடன்‌ இணைந்துவிட்டார்‌ என்பதற்கு ஒரு புராணக்கதையும்‌ உள்ளது


அதுவருமாறு:

அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை


சட்டைமுனி சஞ்சாரகதியில்‌ கால்நடையாகவே பல ஊர்களையும்‌ சுற்றிக் கொண்டு வரும்‌ வழியில்‌ ஓரிடத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கோவிலின்‌ கோபுர கலசங்கள்‌ தெரியக்‌ கண்டார்‌. இரவு வருவதற்குள்‌ எப்படியும்‌ அரங்கனை தரிசித்துவிடவேண்டும்‌ என்ற ஆர்வத்தில்‌ அதிவேகமாக நடந்தார்‌. அவர்‌ கோவில்‌ வாயிலை அடைந்த போது நள்ளிரவு வழிபாடும்‌ முடிந்து கோவில் கதவுகள்‌ மூடப்பட்டிருந்தன.

மிகுந்த தாபத்துடன்‌ கோயில்‌ வாயிலில்‌ நின்று கொண்டு அரங்கா, அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கூவினார்‌. அவர்‌ அழைத்த மாத்திரத்தில்‌ கோவில்‌ மணிகள்‌ அடித்தன. மேளதாளங்களும்‌ முரசுகளும்‌ முழங்கின. கோவில்‌ கதவுகள்‌ எழுப்பப்பட்டு ஊர்‌ மக்களும்‌ அர்ச்சகர்களும்‌ திரண்டு கோவிலுக்கு வந்தனர்‌. கோவில்‌ கதவுகள்‌ திறந்திருந்தன. அரங்கன்‌ அருகில்‌ சட்டை முனி அமர்ந்திருந்தார்‌. அரங்கனின்‌ ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ சட்டை முனிமேல்‌ இருக்கக் கண்டனர்‌. அர்ச்சகர்கள்‌ சட்டை முனிமேலிருந்த அணிகலன்களையெல்லாம்‌ கழற்றி அரங்கனுக்கு அணிவித்து விட்டு அவரைத்‌ திருடன்‌ என்று அரசன்‌ முன்‌ கொண்டுபோய்‌ நிறுத்தினர்‌. அவரை அரசன்‌ விசாரித்த போது அவர்‌, எனக்கு எதுவும்‌ தெரியாது, அரங்கனுக்குத் தான்‌ தெரியும்‌ என்றார்‌. அரசன்‌ ஆணைப்படி அவரை கோவிலுக்கு இழுத்துச்‌ சென்று அரங்கன்‌ முன்‌ நிறுத்தினர்‌. சட்டை முனி தம்மை மறந்து அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கத்தினார்‌.

உடனே கோவில்‌ மணிகள்‌ ஒலித்தன. மேளதாங்களும்‌ முழங்கின. அரங்கன்‌ சிலை மேலிருந்த ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ தாமாகவே கழன்று வந்து சித்தரை அலங்கரித்தன. அடுத்தநொடியில்‌ சட்டை முனி ஒளி மயமாக மாறி அரங்கனுடன் கலந்தார்.

இந்த அதிசயத்தை கண்ட அனைவரும் அரங்கனும் சட்டை முனியும் வேறு வேறல்லர்‌. தானே சட்டை முனி என்பதை அனைவருக்கும்‌ நிரூபித்துக் காண்பிக்க அரங்கன்‌ நடத்திய திருவிளையாடலே இது' என்று உணர்ந்தனர்‌. இன்றும்‌ திருவரங்கத்தில்‌ சட்டை முனியே அரங்கனாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ என்று பல வைணவப்‌ பெரியார்கள் கருதுகின்றனர்‌. சைவப்‌ பெரியார்களும்‌ சட்டை முனி சீர்காழியில்‌ சிவப்பரம்பொருளாயிருந்து அருள்புரிந்து வருகிறார்‌ என்று கருகின்றனர்.

சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்


முதல் கதை

சித்தர்களின்‌ ரகசியங்களை எல்லோரும்‌ புரிந்து கொள்ளும்‌ படி வெளிப்படையாக சட்டை முனி தீட்சாவிதி என்ற நூலை எழுதினார்‌. அதைப் பற்றி உரோமரிஷி கோபமாக விமர்சனம் செய்ய தலைமை சித்தரான திருமூலர்‌ அந்த நூலையே கிழித்தெறிந்து விட்டார்‌. தம்மைப்‌ பழிவாங்க சட்டைமுனி தம்முடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்று எண்ணிய உரோம ரிஷி தம்‌ நூல்களை எல்லாம்‌ தம்முடைய குருவான காகபுஜண்டரிடம்‌ கொடுத்தார்‌. காகபுஜண்டரும்‌ அவற்றைத்‌ தம்‌ காக்கைச் சிறகுகளில்‌ பத்திரமாக மறைத்து வைத்திருந்து அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. இது ஒரு கதை.

மற்றொரு கதை

கயிலாய கம்பளிச்‌ சட்டை முனியும்‌ உரோம ரிஷியும்‌ ஒருவரே. இவர்‌ உடம்பில்‌ 3.5 கோடி உரோமங்கள்‌ உள்ளன. இவர் பல யுகங்களாக வாழ்ந்து வருகிறார்‌. இவர் உடம்பிலிருந்து ஒரு உரோமம்‌ உதிர்ந்தால்‌ படைப்புத்‌ தொழில்‌ புரியும்‌ ஒரு பிராமன்‌ இறப்பான்‌. இந்த உரோம ரிஷியாகிய கம்பளிச்‌ சட்டை முனி தம்‌ வாழ்நாளில்‌ பல பிரம்மன்களைக்‌ கண்டவர்‌. இன்னும்‌ கோடிக்கணக்கான பிரம்ம தேவர்களை காண இருப்பவர்‌. இப்போதும்‌ வாழ்ந்து கொண்டிருப்பவர்‌. இன்னும்‌ பல யுகங்கள்‌ வாழ இருப்பவர்‌.

இந்த இருவேறு கதைகளும்‌ சித்தர்‌ இலக்கியங்களிலும்‌, சித்த மருத்துவ நூல்களிலும்‌ இடம்‌ பெற்றுள்ள கதைகள்தான்‌. எந்த கதை உண்மைக்கதை என்பது தான்‌ தெரியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக