Top bar Ad

30/9/18

பாம்பாட்டி சித்தர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சட்டை முனியின்‌ போதனை
  4. பாம்பாட்டியார் சித்தராதல்
  5. பாம்பாட்டியார் அரசராதல்
  6. சித்தரை வழிபடும் முறை
  7. ஜீவ சமாதி

முன்னுரை


பாம்பாட்டிச் சித்தர்‌ திருக்கோகர்ணத்தைச்‌ சேர்ந்தவர்‌.
[ மத்திய அரசு வெளியிட்டுள்ள நா. கதிரைவேல்‌ பிள்ளையின்‌ தமிழ்‌ மொழி அகராதிச்‌ செய்தி ]
இவர்‌ கோவை, அருகில்‌ உள்ள மருதமலையில்‌ தான்‌ பல காலம்‌ வசித்து வந்ததாகவும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஜோகி இனத்தில்‌ கார்த்திகை மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. சித்தாரூடம்‌ என்னும் நூலையும்‌ இவர்‌ எழுதி உள்ளார்‌.

முற்பகுதி வாழ்க்கை


இவர்‌ சிறுவனாய்‌ இருந்த போதே மலைப்‌ பகுதியிலிருந்த கொடிய நச்சுப்‌ பாம்புகளையெல்லாம் பிடித்தவர்‌. இவரது ஆற்றலை அறிந்த சித்த மருத்துவர்கள்‌ நால்வர்‌ இவரிடம்‌ வந்து, மருந்து தயாரிக்க நவரத்தின பாம்பு ஒன்றைப்‌ பிடித்துத் தர வேண்டும்‌ என்று கேட்டனர்‌. மருத மலை மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும்‌, அதன்‌ தலையில்‌ விலை மிகுந்த மாணிக்கம்‌ இருப்பதாகவும்‌, அதனைப்‌ பிடிப்பவன்‌ பெரிய பாக்யசாலி என்றும்‌ சிலர்‌ பேசிச்‌ சென்றனர்‌. இதனைக்‌ கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர்‌ அதனைப்‌ பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று பாம்பைத்‌ தீவிரமாகத்‌ தேடினார்‌.

நவரத்தின பாம்பு

நவரத்தின பாம்பு என்பது ஒரு முறை கூட நஞ்சை வெளிப்படுத்தாது நீண்ட காலம்‌ வாழ்ந்து முடித்த நாகம்‌. கடைசி காலத்தில்‌ அதன்‌ உடலே குறுகி மிகவும்‌ குட்டையாகி இருக்கும்‌. அதன்‌ நஞ்சு முழுவதும்‌ அதன்‌ தலைபாகத்தில்‌ கட்டுப்பட்டு ஒளி மிக்க மாணிக்கமாக மாறியிருக்கும்‌. அந்த நாகம்‌ இரைதேட நடு இரவில்தான்‌ வெளிவரும்‌. தன்‌ தலையில்‌ உள்ள மாணிக்கத்தைக்‌ கக்கி அதன்‌ ஒளியில்‌ தான்‌ இரைதேடும்‌

ஜீவசமாதியில்‌ ஆழ்ந்திருக்கும்‌ மகாசித்தர்களை ஒத்தது இந்த நவரத்தினப்‌ பாம்பு. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ நவரத்தினப்‌ பாம்பைப் பிடிக்க மலைக் காடுகளிலெல்லாம்‌ அலைந்து திரிந்து அன்று நடு இரவில்‌ அதன்‌ புற்றையும்‌ கண்டுபிடித்துவிட்டார்‌.

புற்றருகில்‌ சென்று மல்லோ சித்தர்தாமும்‌ புனித முள்ள நவரத்தின பாம்புதன்னை வெற்றியுடன்‌ தான்பிடக்கப்‌ போகும்போது வேதாந்தச்‌ சட்டைமுனி அங்கிருந்தார்‌.
போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 பாடல்‌ 3577

அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர்‌ தோன்றினார்‌. இங்கு எதைத்‌ தேடுகிறீர்கள்‌ என்று கேட்டார்‌. அதற்கு பாம்பாட்டி சித்தர்‌ நான்‌ நவரத்ன பாம்பைப்‌ பிடிக்க வந்தேன்‌ அதைக்‌ காணவில்லை என்றார்‌. இதைக்‌ கேட்ட சட்டைமுனி சிரித்தார்‌. நவரத்தினப்‌ பாம்பை நீயே உனக்குள்‌ வைத்துக்‌ கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா! என்று மீண்டும்‌ வினவினார்‌. மிகுந்த உல்லாசத்தைத்‌ தரக்‌ கூடிய ஒரு பாம்பு எல்லோர்‌ உடலிலும்‌ உண்டு; ஆனால்‌ யாரும்‌ அதை அறிவதில்லை. அதனால்‌ வெளியில்‌ திரியும்‌ இந்தப்‌ பாம்பை விட்டுவிடு. உன்‌ உடலில்‌ இருக்கும்‌ அந்தப்‌ பாம்பை அறியும்‌ வழியைத்‌ தேடு. இல்லாத பாம்பைத்‌ தேடி ஓடாதே என்று சொன்னார்‌. எல்லாவற்றையும்‌ கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார்‌ சித்தரின்‌ காலில்‌ விழுந்து வணங்கினார்‌.

குண்டலினிப் ‌பாம்பு

சட்டை முனியின்‌ ஒளிவீசும்‌ ஞானதேகத்தைப்‌ பார்த்த மாத்திரத்தில்‌ பாம்பாட்டியின்‌ மன இருள்‌ அகன்றது. சட்டை முனி அவரைப்பார்த்து, மகனே! புறவுலகில்‌ உலவும்‌ பாம்புகளை அடக்கவல்ல நீ உன்னுள்‌ மூலாதாரத்தில்‌ சுருண்டு கிடக்கும்‌ வாலைப்‌ பாம்பைத்‌ தட்டி எழுப்பப்‌ பிறந்தவன்‌. இந்தப்‌ புற்றில்‌ உள்ள நவரத்தினப்‌ பாம்பைவிட உன்னுள்‌ உள்ள குண்டலினிப் ‌பாம்பு ஆயிரம்‌ மடங்கு ஒளிமிக்கது. உன்‌ ஞானக்‌ கண்ணைத்‌ திறந்து! உனக்கு ஆன்ம வழிகாட்டக்‌ கூடியது, என்று கூறி அவனுக்குக்‌ குண்டலினி தீட்சையும்‌ அளித்தார்‌. அந்த நொடியே தவத்தில்‌ இறங்கிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ கொஞ்ச காலத்திலேயே அஷ்டமாசித்திகளையும்‌ பெற்று மகாசித்தரானார்‌. பிறகு ஊர்‌ ஊராகச்‌ சுற்றித்‌ திரிந்து கொண்டு சித்துக்கள்‌ புரிந்து மக்களை மகிழ்வித்ததோடு மக்களின்‌ பிணிகளையும்‌ போக்கி வந்தார்‌.

சட்டை முனியின்‌ போதனை

சித்தர்‌ கனிவோடு அவரைப்‌ பார்த்து விளக்கமளிக்கத்‌ தொடங்கினார்‌. அற்புதமான இந்த மனித சரீரத்தினுள்‌ ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்‌ கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன்‌ பெயர்‌. தூங்கிக்‌ கொண்டிருக்கும்‌ அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன்‌ நுட்பத்தை அறிவது அரிது. மக்களின்‌ துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப்‌ பாம்பின்‌ உறக்கம்‌ தான்‌.

பாம்பாட்டியார் சித்தராதல்


இறைவனை உணரப்‌ பாடுபடுபவர்களுக்கு சுவாசம்‌ ஒடுங்கும்‌. அப்பொழுது குண்டலினி என்ற அந்தப்‌ பாம்பு விழித்து எழும்‌, அதனால்‌ தியானம்‌ சித்தியாகும்‌ இறைவன்‌ நம்முள்‌ வீற்றிருப்பார்‌. மனிதனுள்‌ இறைவனைக்‌ காணும்‌ ரகசியம்‌ இதுவே என்று சொல்லி முடித்தார்‌ சட்டைமுனி.

குருதேவா! அரும்பெரும்‌ இரகசியத்தை இன்று உங்களால்‌ அறிந்தேன் ‌. மேலான இந்த வழியை விட்டு இனி நான்‌ விலக மாட்டேன்‌ ! என்று சொன்ன பாம்பாட்டியார்‌, சித்தரை வணங்கி எழுந்தார்‌. சித்தர்‌ அருள்புரிந்து விட்டு மறைந்தார்‌. பாம்பாட்டியார்‌ செய்த தொடர்‌ யோக சாதனையால்‌ குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும்‌ சித்தியானது.

பாம்பாட்டியார் அரசராதல்


ஒரு நாள்‌ வான்‌ வழியே உலா வந்து கொண்டிருந்தார் பாம்பாட்டி சித்தர்‌. செல்லும்‌ வழியில்‌ ஒரு குறு நாட்டு மன்னன்‌ இறந்து கிடந்ததைக்‌ கண்டார்‌. அவனைச்சுற்றி அரசியும்‌ மற்றவர்களும்‌ அழுது கொண்டிருந்தனர்‌. அருள்‌ உள்ளம்‌ கொண்ட அந்த இளம்‌ சித்தர்‌ அவர்களுக்கு ஆறுதல்‌ அளிப்பதற்காக தன்‌ கல்பதேகத்தை ஓரிடத்தில்‌ பத்திரமாக ஒளித்துவைத்துவிட்டு சூக்கும சரீரத்துடன்‌ கூடுவிட்டு கூடுபாயும்‌ வித்தையின்‌ வாயிலாக பாம்பாட்டி சித்தர்‌ இறந்து போன அரசனின்‌ உடலில்‌ புகுந்தார்‌. அரசன்‌ எழுந்தான்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சி ஆனால்‌ அரசன்‌ பிழைத்துக்‌ கொண்டாரே தவிர அவர்‌ செய்கைகள்‌ ஏதும்‌ திருப்திகரமாக இல்லை. மக்களின்‌ விமர்சனம்‌ காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள்‌. அவள்‌ மனதில்‌ சந்தேகப்‌ புயல்‌ மெல்ல விஸ்வரூபம்‌ எடுத்தது. அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள்‌ கேட்கத்‌ தொடங்கினாள்‌ ராணி.

"ஐயா! தாங்கள்‌ யார்‌ உண்மையில்‌ எங்கள்‌ அரசரா அல்லது சித்து வித்தைகள்‌ புரியும்‌ சித்தரா?" என்று. "அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப்‌ போக்குவதற்காகவே நான்‌ மன்‌னனது உடலில்‌ புகுந்திருக்கிறேன்‌. என்னுடைய பெயர்‌ பாம்பாட்டிச்‌ சித்தன்‌ என்றார்‌. அரசி உண்மையை உணர்ந்தாள்‌ கைகளைக்‌ கூப்பி எங்களுக்குத்‌ தெய்வமாக வந்து உதவி செய்தீர்‌ நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌ கடைத்தேறும்‌ வழியை உபதேசியுங்கள்‌ என்று வேண்டினாள்‌. அடுத்த கணம்‌, அரசரிடமிருந்து பலப்‌பல தத்துவப்‌ பாடல்கள்‌ உபதேசமாக வந்தன. அவைகளைக்‌ கவனமாக அனைவரும்‌ கேட்டனர்‌.

அதே சமயத்தில்‌ இறந்த அரசனுடைய ஆன்மா பரகாயப் பிரவேச முறையில்‌ இறந்துகிடந்த பாம்பின்‌ உடலில்‌ புகுந்து வெளியே ஓடத்தொடங்கியது. அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறை தவறிய சிற்றின்பத்தில்‌ அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல்‌ கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. அப்போது மன்னன்‌ உடலிலிருந்த சித்தர்‌ அந்த பாம்பைப் பார்த்து 'மன்னா! இன்னும்‌ உன்‌ ஆசைகள்‌ அடங்கவில்லையா?' என்று கேட்க அந்தப்பாம்பும்‌ சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர்‌ அந்தப்‌ பாமபைப் பார்த்து ஆடு பாம்பே என்று முடியும்‌ 129 பாடல்கள்‌ அடங்கிய ஒரு சதகத்தைப்‌ பாடி முடித்தார்‌.


அந்த சதகம்‌.
  1. கடவுள்‌ வணக்கம்‌,
  2. குருவணக்கம்‌,
  3. பாம்பின்‌ சிறப்பு,
  4. சித்தர்‌ வல்லபம்‌,
  5. சித்தர்‌ சம்வாதம்‌,
  6. பொருளாசை விலக்கல்‌
  7. பெண்ணாசை விலக்கல்‌,
  8. அகப்பற்று நீங்குதல்‌

என்னும்‌ எட்டு தலைப்புகளில்‌ எளிய தமிழில்‌ பாமரரும்‌ புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில்‌ சென்று சித்தி அடையும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ இந்த ஞான நூலைப்‌ பாடி முடித்துவிட்டு அரசன்‌ உடலை விட்டு வெளியேறியவுடன்‌ கல்ப உடலில்‌ புகுந்து தம் ‌சித்தர்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அரசர்‌ உடலிலிருந்து சித்தர்‌ வெளியேறினார்‌. அரசர்‌ உடம்பு கீழே விழுந்தது. சித்தர்‌ உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்‌ தொடங்கினாள்‌. அரசர்‌ உடலில்‌ இருந்து வெளியேறிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ தான்‌ பத்திரப்படுத்தி வைத்திருந்த தன்‌ பாம்பாட்டி உடலில்‌ புகுந்தார்‌.

சித்தரை வழிபடும் முறை


பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமிகளின்‌ படத்தை வைத்து, அதன்முன்‌ மஞ்சள்‌, குங்குமம்‌ இட்டு, அலங்கரிக்கப்‌ பட்ட குத்து விளக்கில்‌ தீபம்‌ ஏற்றி வைக்க வேண்டும்‌. ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக்‌ கூறி அர்ச்சித்த பிறகு, மூலமந்திரமான ''ஓம்‌ வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும்‌. பின்னர்‌ நிவேதனமாக சர்க்கரை போடாத பச்சைப்‌ பாலையும்‌, வாழைப்பழங்களையும்‌ வைக்க வேண்டும்‌. பின்‌ உங்கள்‌ பிரார்த்தனையை மனமுருகக்‌ கூறி வேண்டவும்‌.

ராகு பகவான்

பாம்பாட்டி சித்தர்‌ நவக்கிரகங்களில்‌ ராகு பகவானை பிரதிபலிப்பவர்‌. இவரை முறைப்படி வழிபட்டால்‌ நாகதோஷம்‌ அகலும்‌. மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்‌.

நிழல்‌ நிஜமாகவும்‌, நிஜம்‌ நிழலாகவும்‌ தோன்றும்‌ நிலை மாறும்‌. கணவன்‌, மனைவி இடையே உள்ள தாம்பத்யப்‌ பிரச்சினைகள்‌ அகலும்‌. போதைப்‌ பொருட்கள்‌, புகைப்பிடித்தல்‌, குடிப்பழக்கம்‌ போன்ற தீய பழக்கங்கள்‌ அகலும்‌. வெளிநாட்டில்‌ வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள்‌ உண்டாகும்‌.

ஜாதகத்தில்‌ ராகுபகவானால்‌ ஏற்படக்கூடிய களத்திர தோஷம்‌ நீங்கி, நல்ல இடத்தில்‌ திருமணம்‌ நடக்கும்‌. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம்‌ பெருகும்‌. வீண்பயம்‌ அகன்று தன்‌ பலம்‌ கூடும்‌. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள்‌ அகலும்‌. இவருக்கு கருப்பு வஸ்திரம்‌ அணிவித்து வழிபடுதல்‌ விசேஷம்‌. இவருக்கு பூஜை செய்ய சிறந்த நாள்‌ சனிக்கிழமை.

ஜீவ சமாதி


தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல்‌ மக்கள்‌ பிணி தீர்த்துக் கொண்டும்‌ அவர்களுக்கு அறநெறிகளைப்‌ புரிய வைத்துக்கொண்டும்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்றார்‌. விருத்தாச்சலம்‌ சென்றவுடன்‌ தான்‌ பூதவுடலை பிரியும்‌ நேரம்‌ வந்ததை உணர்ந்து அங்கு கோவில் கொண்டுள்ள பழமலை நாதருடன்‌ ஐக்கியமானார்‌ என்று பண்டைய சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. இவர்‌ திருஞானம்‌ என்ற இடத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ மருதமலையில்‌ ஜீவசமாதி அடைந்துள்ளார்‌ என்றும்‌ பல நூல்கள்‌ கூறுகின்றன. மருத மலையில்‌ முருகன்‌ சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்‌ சித்தர்‌ குகை என்று ஒரு குகைக்‌ கோவில்‌ உள்ளது. இவர்‌ தவம்‌ செய்த குகை மருதமலையில்‌ இன்னமும்‌ இருக்கிறது. இவர்‌ மருதமலையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, துவாரகையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, விருத்தாசலத்தில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌ கூறுகின்றனர்‌. மூன்று தலங்களிலும்‌ இவரது நினைவிடம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது.


4 கருத்துகள்:

  1. மெய் சிலிர்த்து விட்டது....
    ஓம் கிளிம் ஐம்
    சௌம் ஸ்ரீம் ரீம்
    ஹரீம் ஸ்ரீ பாம்பாட்டி
    சித்தரே நம:

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு
    பாம்பாட்டி சித்தர் பெருமானே போற்றி
    மருதமலையாண்டவனே போற்றி போற்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி மிகவும் அவசியமானா தகவல்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா27 மே, 2023 அன்று 9:12 PM

    நன்றி நற்பவி

    பதிலளிநீக்கு