Top bar Ad

17/8/18

சுப்பிரமணிய சித்தர்


முன்னுரை


சுப்பிரமணிய சித்தர்‌ அகத்தியருக்கு உபதேசம்‌ செய்த சுப்பிரமணிய ஞானம்‌ என்ற உபதேச நூலில்‌ எண்சீர்‌ விருத்தப்‌ பாக்களாக ஒரு காப்புச்‌ செய்யுளும்‌ 32 நூற்பாக்களும்‌ உள்ளன. அதில்‌ வள்ளி, தெய்வானை புராணக்கதைகள்‌ இடம்‌ பெறவில்லை. காப்புச்‌ செய்யுளில்‌ 'ஓங்காரவடிவேல்‌' என்று ஒரு அடி வருகிறது. அந்த வடிவேல்‌ நாம்‌ அறிந்துள்ள முருகன்‌ கைவேலே அல்ல. உண்மையில்‌ அது சிவயோக மோனநிலையின்‌ உச்சம்‌. செய்யுளின்‌ உட்கருத்துப்படி 'தான்யார்‌? என்பதைத்‌ தன்‌ ஞானத்தால்‌ ஓர்ந்துணர்ந்து பரவெளியோடு மனம்‌ ஒன்றிய நிலையில்‌ ஆதி சித்தசிவநிலயை ஒருயோகி எய்துதலே வேல்‌ தத்துவமாகும்‌.
இந்த ஓங்கார வடிவேல்‌ தத்துவ விளக்கமாவது:
ஆழ்ந்த அகன்ற, அதிகூர்மையான ஆன்மீக சிகரத்தை எட்டிய ஞானமே அந்த ஓங்காரவடிவேல்‌. அந்த உண்மை ஞானத்தின்‌ புற வெளிப்பாடே பழனிமலைமீது இளந்துறவிக் கோலத்தில்‌ காட்சியளிக்கும்‌ தண்டாயுதபாணி.
ஞானப்பழமான இந்த இளம்சித்தன்‌ முற்றும்‌ துறந்த முக்காலத்தையும்‌ உணர்ந்த மகாஞானி.
இந்த சித்த புருஷனை பிற்கால ஞானிகள்‌ இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய முப்பெரும்‌ சக்திகளின்‌ மயமான வள்ளி, தெய்வவானை உடனுறை வேலாயுதன்‌ வடிவில்‌ ஞானக்‌ கண்ணால்‌ கண்டு, கண்டதை அப்படியே புறவுலகில்‌ பாமரரும்‌ எளிதில்‌ வழிபட்டு உய்யும்‌ வண்ணம்‌ சிலை உருவங்களாக வடித்து பல்வேறு தலங்களிலும்‌ கோவில்‌ கொண்டு எழுந்தருளி அருளாட்சி புரியச்‌ செய்துள்ளனர்‌. இந்த சில்பமுனிவர்களை ஒத்த ஞானமுடைய நக்கீரர்‌, குமரகுருபரர்‌, அருணகிரிநாதர்‌ போன்ற தமிழ்முனிவர்கள் பலர்‌ திருமுருகன்‌ அருளாட்சிக்கு எளிய விளக்கங்கள்‌ அளித்து எல்லா மக்களும்‌ உள்ளத்‌ தெளிவும்‌ பக்தி உணர்வும்‌ நிரம்பப்பெற்‌று பரம்பொருளை முருகன்‌ வடிவிலேயே கண்டு வழிபாடு செய்து இப்போது வாழும்‌ பிறவியில்‌ நல்வாழ்வு வாழ்ந்து மரணத்திற்குப்‌ பின்‌ முக்திப்‌ பேறு அடையவும்‌ உதவியுள்ளனர்‌.

முதல்‌ சித்தரான சிவனாரே சுப்பிரமணிய சித்தர்‌


நம்‌ புலனறிவால்‌ அறிய முடியாவண்ணம்‌ ஒளி உடலோடு மட்டும்‌ எண்ணற்ற மகான்கள்‌ நம்முடன்‌ வாழ்ந்துவருகிறார்கள்‌. அவர்கள்‌ அருவமாக (இடம்‌, காலம்‌, இயக்கம்‌ ஆகிய முப்பெரும்‌ மூலங்களுக்குமே ஆதாரமாக) பிரபஞ்சம்‌ முழுவதும்‌ நிறைந்துள்ள ஆதிமூலப்‌ பரம்பொருளுடன்‌ நேரடியாக மானசீகத்‌ தொடர்பு கொண்டு அந்தப்‌ பரம்பொருளின்‌ திருவருளால்‌ மக்களினம்‌ நல்வாழ்வு வாழ்ந்து முக்திப்‌ பேரடைய உதவிபுரிந்து வருபவர்கள்‌; மும்மலத்தையும்‌ கடந்தவர்கள்‌; நமக்குமட்டுமல்ல, முக்காலமும்‌ உணர்ந்த ஞானிகளுக்கும்கூட காணக்கிடைக்காதவர்கள்‌. பிறப்பு, இறப்பு அற்றவர்கள்‌; இருவினை பாதிப்புகள்‌ இல்லாதவர்கள்‌.
தீயசக்திகள்‌ தலையெடுத்து சத்தியத்தையே அழிக்க முற்படும்போது சத்தியத்தை நிலைபெறச்செய்து நல்லோர்களை உய்விப்பதற்காக, தாமேவிரும்பி மனிதப்‌ பிறவி எடுத்‌துவருபவர்கள்‌. இவ்வாறு உலக நன்மைக்காக உலகில்‌ அவதரித்தவர்களில்‌ முதன்மையானவர்‌ சிவன்‌. அந்த சிவனாரின்‌ மறு அவதாரமே சுப்பிரமணிய சித்தர்‌.

சிவனே முருகன்‌ என்பதற்கான ஆதாரங்கள்‌:


பத்தாயிரம்‌ ஆண்டுகளுக்குமுன்‌ (அதாவது முதல்‌ கடல்‌ கோளுக்கு முன்‌) தென்தமிழ்நாட்டில்‌ முதன்முதலில்‌ சங்கம்‌ வைத்து தமிழ்‌ வளர்த்த இறையனார்‌ சிவனே அல்லாது வேறொருவர்‌ அல்லர்‌. மாணிக்க வாசகரும்‌ சிவ புராணத்தில்‌ “தென்னாடுடைய சிவன்‌ எந்நாட்டவர்ககும்‌ இறைவன்‌' என்று பாடியுள்ளார்‌. அதே நேரத்தில்‌ சுப்பிரமணியர்‌ 'அறுமுகச்‌ சிவன்‌! என்றே அழைக்கப்‌ படுகிறார்‌. “ஆறுமுகன்‌ அவனும்‌ யானும்‌ பேதமன்றாய்‌' என்று சிவனே கூறும்‌ கந்தபுராண அடிகள்‌ அதை உறுதி செய்கின்றன.
முதல்‌ சித்தராகிய சிவபெருமான்‌ ஈசானம்‌ (கிழக்கு), வாமதேவம்‌ (மேற்கு), அகோரம்‌ (வடக்கு), தத்‌துபுருஷம்‌ (தெற்கு), சத்தியஜோதம்‌ (வான்பகுதி) ஆகிய ஐந்து திசைகளையும்‌, பஞ்ச பூதங்களையும்‌ தன்‌ ஞானத்தால்‌ வென்றடக்கியதால்‌ அவர்‌ பஞ்சமுக ஈஸ்வரன்‌ என்ற பெயரைப்பெற்றார்‌. பிற்காலப்‌ புராணங்கள்‌ அவரை ஐந்து முகங்களை உடைய கடவுள்‌ என்று சித்தரித்துவிட்டன. ஆறாயிரம்‌ ஆண்டுகளுக்கு (இரண்டாம்‌ கடல்‌ கோளுக்கு முன்‌) நடந்த இரண்டாம்‌ தமிழ்ச்சங்கத் தலைவரான அகத்தியருக்கு தமிழ்‌ இலக்கணத்தைக்‌ கற்பித்தவரும்‌ ஞானோபதேசம்‌ செய்தவரும்‌ சுப்பிரமணிய சித்தர்‌ என்று சுப்பிரமணிய ஞானம்‌ கூறுகிறது. அகத்தியர்‌ சுப்பிரமணிய சித்தரிடம்‌ சீடராயிருந்து கலைஞானங்களையெல்லாம்‌ கற்றபோது எப்போதும்‌ சிவனுடனே இருந்துவரும்‌ நந்தீசரும்‌ உடன்‌ இருந்திருக்கிறார்‌.

சிவம்‌ சுப்பிரமணியராய்‌ அவதரித்திருந்ததால்‌ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம்‌, ஆகிய ஐந்து திசைகளுடன்‌ ஆறாவது திசையான பூமியின்‌ கீழ்பாகத்தையும்‌ வெற்றிகண்ட அதோமுக ஞானத்தையும்‌ வெளிப்‌படுத்தினார்‌. அதனாலேயே அவர்‌ அறுமுகச்சிவன்‌ என்று சிறப்பிக்கப்பட்டார்‌. இதை மையமாகக்‌ கொண்டு முருகனை ஆறுமுகன்‌ என்று அழைப்பதும்‌ ஆறு முகங்களை உடைய கடவுளாக சிலைவடிவில்‌ அமைத்து வழிபட்டு வருவதும்‌ வழக்கத்தில்‌ வந்து விட்டன. இவை அனைத்தையும்‌ ஒப்பிட்டுப்பார்க்கும்போது சிவசித்தனும்‌. சுப்பிரமணியசித்தனும்‌ வேறுவேறு அல்ல என்ற உண்மை தெளிவாக விளங்குகிறது.
(முதல்சித்தனாகிய சிவனும்‌ இரண்டாம்‌ கடல்கோளுக்கு முன்‌ வளர்ந்திருந்த இரண்டாம்‌ தமிழ்ச்சங்ககாலத்தில்‌ அகத்தியருக்கு உபதேசித்த சுப்பிரமணிய சித்தரும்‌, அவருடைய சீடரான அகத்தியரும்‌, அகத்தியருடைய சீடரான தொல்காப்பியரும்‌ சித்தர்கள் என்றே அழைக்கப்படவில்லை. ஏனெனில்‌ சித்தன்‌ என்ற சொல் பழந்தமிழ்‌ இலக்கியெங்களில்‌ இடம்‌ பெறவில்லை. இவர்கள்‌ காலத்தில்‌ இருந்த நூல்களான இறையனார்‌ அகப்பொருள்‌, அகத்தியம்‌, தொல்காப்பியம்‌ போன்ற பல பழந்தமிழ்‌ நூல்களில்‌ நமக்குக்‌ கிடைத்துள்ள ஒரே தமிழ்‌ நூல்‌ தொல்காப்பியம்‌, இந்த நூலில்‌ “எத்தன்‌” என்ற சொல்‌ இடம்பெறவே இல்லை. நிறைமொழிமாந்தர்‌ என்ற சொல்‌ தான்‌ இடம்பெற்றுள்ளது.

நிறைமொழிமாந்தர்‌


சிவனார்‌, சுப்பிரமணியர்‌, பொதிகை மலைச்சாரலில்‌ சமாதிபூண்டு அருளாட்சி செய்துவரும்‌ அகத்தியர்‌ ஆகியோர்‌ சித்தர்களுக்கெல்லாம்‌ மேலான “நிறைமொழிமாந்தர்களே'' ஆவர்‌. இவர்களில்‌ அகத்தியர்‌ பற்றிய கருத்துக்கள்‌ பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிற்சேர்கை சுப்பிரமணிய சித்தரைப்‌ பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும்‌ என்று தோன்றுகிறது! இவர்கள்‌ நிறைமொழிமாந்தர்‌ என்றே அழைக்கப்பட்டனர்‌ என்ற உண்மையை
“நிறைமொழி மாந்தர்‌ ஆணையிற்‌கிளந்த
மறைமொழிதானே மந்திரம்‌ என்ப
என்ற தொல்காப்பியர்‌ கூற்றும்‌
நிறைமொழிமாந்தர்‌ பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்‌
என்ற திருவள்ளுவர்‌ கூற்றும்‌ உறுதிசெய்கின்றன.
சுப்பிரமணிய ஞானம்‌ 32 ஐத்தவிர சுப்பிரமணிய ஞானம்‌ என்ற பெயரிலேயே மேலும்‌ ஏழெட்டு நூலகள்‌ உள்ளன. அவற்றோடு சுப்பிரமணிய சுத்த ஞானம்‌, சுப்பிரமணியர்‌ ஞானக்கோவை போன்ற வேறுபல நூல்களும்‌ உள்ளன. எல்லா நூல்களும்‌ சுப்பிரமணியர்‌ அகத்தியருக்கு உபதேசித்தவைகளாகவே உள்ளன.

சுப்பிரமணிய ஞானம்‌500இல்‌ 428ஆம்‌ பாடல்‌
 அடாதே நீ படித்த வித்தையெல்லாம்‌
அப்பனே பணம்பறிக்கப்‌ படித்தாப்  போலே 
நாடாதே செகத்தோரை மயக்கிடாதே
ஞானியென்று செகந்தனிலே அலைந்திடாதே
சித்தர்கள்‌ சித்துவிளையாடக் கூடாது என்று கண்டிக்கிறது. சுப்பிரமணிய ஞானம்‌ 32இல்‌ வரும்‌ 32 பாடல்களுமே தவயோக நெறிகளையும்‌ பல்வேறு சித்திகளையும்‌ மறைபொருளாக விளக்குகின்றன.
அவைகளில்‌: பாடல்‌ 1: பராபரமாகிய வெட்டவெளியில்‌ அரூப நிலையிலேயே சிவசக்தி ஐக்கியம்‌ ஏற்பட அக்கணத்திலேயே மிகப்பேரளவில்‌ ஒலியும்‌, ஒளியும்‌ வெளிப்பட்டன. அவற்றைத்‌ நீது பிரபஞ்சப்‌ படைப்புகளும்‌ அவைகளில்‌ ஏழுவகை தோன்றின. நீதி என்ற அறிவால்‌ தானாய்‌ நின்று, நிறைந்த நிஷ்களங்க நிலை அடைந்து சத்தி சிவ அருளாலே சண்முகமும்‌ (நாம முருகனாய்‌ வழிபடும்‌ பரம்பொருளாற்றலும்‌), கணபதியும்‌ (ஓங்காரப்பெருவெளியும்‌) உண்டாயின.
இங்கே சண்முகன்‌ என்பது சூக்கும சரீரத்தில்‌ உள்‌ ஆறு ஆதாரஞான மையங்களையும்‌, கணபதி என்பது முக்குணங்‌களையும்‌ கடந்த மனோ விகாரமற்ற நிலையில்‌ சகஸ்ர தளத்தில்‌ உள்ளொளி காணும்‌ நிலயையுமே உணர்த்துகின்றன. (இதையே வேறுவகையில்‌ கூறினால்‌ பிரபஞ்சம்‌ முழுவதிலும்‌ வெளிமுகமாக மனதைச்‌ செலுத்தி ஒருமுகப்பட்ட மோன நிலையிலிருந்து வெட்டவெளித்தவம்‌ செய்வது சண்முகத்தவம்‌ என்னும்‌ அண்டவெளித்தவம்‌. புறத்தே செல்லும்‌ மனதை உள்‌ முகமாகத்‌ திருப்பி தனக்குள்ளேயே பிரம்மத்தைக்‌ கண்டு அதிலேயே லயமாகியிருத்தல்‌ பிண்டத்தினுள்ளேயே பிரம்மத்தைக்‌ காணும்‌ கணபதித்‌ தவம்‌.
2, 3ஆம்‌ பாடல்கள்‌: சத்தி சிவம்‌ ஏகமாகி பூரணமாய்‌ நிற்கும்போது வந்துதித்த மாங்கனியை (அதாவது சக்தி சிவ ஐக்கியத்தால்‌ சகஸ்ர தளத்தில்‌ உற்பத்தியாகி சுரக்கும்‌ அமுதத்தை! மேருமலையை நன்றாக சுற்றி வருபவர்‌ பெறுவர்‌ என்று அண்ட சாராசர பரிபூரண அறிவு உணர்த்தியது. தான்‌ இருக்கும்‌ இடத்திலேயே அசையாமலிருந்து சிவசக்தியை இதய கமலத்தில்‌ இருத்தி ஒருமுகமாக மோன நிலையில்‌ வழிபட்டு வந்தால்‌ சகஸ்ரதளத்தில்‌ பிரம்ம ஞானஒளி தோன்றும்‌. ஒளிரும்‌ அந்த ஞானாமிர்த வெள்ளத்திலேயே தன்னையே மறந்த நிலையில்‌ சும்மாயிருந்து சுகம்‌ காண்பதையே மறைபொருளாக கணபதி மாங்கனி உண்ட கதை உணர்த்துகிறது. இந்த மூலப்பிரணவ தவத்தில்‌ சகஸ்ரதளமே மேரு மலையாகும்‌. நமக்குள்ளேயே இருக்கும்‌ இந்த மேருமலையையே மாங்கனி உண்ட கணபதி கதை சூக்குமமாகத்‌ தெரிவிக்கிறது.
5ஆம்பாடல்‌: ஏகாந்த மயில்‌ வீரன்‌ என்று குறிப்பிடப்படுபவர்‌ வாசியோகி. இவர்‌ மூலாதாரம்‌ முதல்‌ ஆக்ஞைவரை பறந்தோடிக்‌ கொண்டிருக்கும்‌ வாசியாகிய மயில்‌ மீதேறி ஆறாதாரங்களையும்‌ கடந்து மேலே சென்று சகஸ்ரதளமாகிய மகா மேருவை அடைந்த ஞானக்கந்தன்‌. பரம்பொருள்‌ ஞானத்தின்‌ உச்சியை எட்டிய இந்த மயில்வாகனனுக்கும்‌ ஞானாமிர்தமாகிய மாங்கனியை அளித்து “மகத்தான அண்ட ரண்ட வரைகள்‌ சுற்றி திருந்தியே தீர்க்காயுள்‌ பெற்று வாழ்ந்து தீர்க்க முடன்‌ மலைக்கரசாய்‌ இருந்து வாழே” என்று வாழ்த்தி பிரம்ம ஞான நிலையிலேயே நிலைபெற்றிருக்கச்‌ செய்தது.
மேலே கண்ட பாடல்கள்‌ 3ம்‌, 5ம் நிலையாக ஒரே இடத்தில்‌ தவமிருந்தும்‌, அருணகிரி நாதரைப்போல்‌ பல தலங்களையும்‌ பக்தியுடன்‌ சுற்றிவந்தும்‌ பிரம்ம நிலையை அடையலாம்‌ என்பதை உணர்த்துகின்றன.மாங்காய்ப்‌ பாலுண்டு மலைமேல்‌ இருப்பார்க்கு தேங்காய்ப்பால்‌ ஏதுக்கடி என்ற குதம்பைச்‌ சித்தர்‌ அனுபவம்‌ “இருந்த இடத்திலிருந்தே மோனத்‌ தவத்தின்‌ மூலம்‌ அமுதத்தைப்‌ பெற்றுண்டுமரணமிலாப்‌ பெருவாழ்வுவாழலாம்‌ என்று கூறுகிறது. இது தான்‌ கணபதித்‌ தவமாகும்‌. வானத்தின்‌ மீது ஆடியமயில்‌ (ஒளி) குயில்‌ (ஒலி) ஆனதை வள்ளலார்‌ இராமலிங்க அடிகள்‌ கண்டுணர்ந்ததைப்‌ போல்‌ முழுநிலை அடைந்த பிரம்ம ஞானி புருவமையத்தில்‌ முதலில்‌ ஒளி அனுபவமும்‌ அதைத்தொடர்ந்து கடல்‌ அலை, சங்கு, மணி முதலான ஒலி அனுபவங்களும்‌ பெற்று அவற்றையும்‌ கடந்து சுத்தாகாசபரமோன நிலைக்கே சென்று விடுகிறார்‌. என்பதை முருகன்‌ மேருமலையைச்‌ சுற்றிவந்து மாங்கனி பெற்றான். என்ற மறைபொருள் கூற்று தெளிவுபடுத்துகிறது.
15-ம்‌ பாடல்‌ முதல்‌ 32-ம்‌ பாடல்‌ வரை சுப்பிரமணிய சித்தர்‌ கும்பமுனியாகிய அகத்தியருக்கு ஞானோபதேசம்‌ செய்வதாகவே அமைந்துள்ளது.
17ஆம்பாடல்‌: சுழு முனையில்‌ மனதை நிறுத்தி ஓங்‌ -ரீங்‌- அங்‌ - உங்‌ என்ற மூல ஒலிகளை பதினாறு முறை உறுத்செய்தால்‌ கணபதி தோன்றுவார்‌. அவரைக்கண்டவுடன்‌ ஓம்‌ நமசிவாய என்ற மந்திரத்தை உருச்செய்தால்‌ பிரமரந்திர தரிசனம்‌ கிடைக்கும்‌.
18-ம்‌ பாடல்‌: பஞ்சாட்சரமந்திரத்தை தலைகாலாகவும்‌ கால்தலையாகவும்‌ மாற்றி மாற்றி நமசிவாய நம - வயநமசிவாயநம - சிவாயநம சிவநம ஓம்‌ நமசிவாய என்று மாற்றி மாற்றி ஜபித்தால்‌ உண்மை என்ற ஆதாரம்‌ சித்தியாகும்‌.
19-ம்‌ பாடல்‌: விபூதி தரித்து இந்தமந்திரத்தை இடைவிடாது சொல்லிவந்தால்‌ நிலையில்லாத தூலவுடல்‌ நிலைக்கும்‌.
20-ம்‌ பாடல்‌ முதல்‌ 28-ம்‌ பாடல்வரை மேற்கண்ட மந்திரங்களுடன்‌ கூடிய வாசியோகப்‌ பிராணாயாமமும்‌ செய்துவர வேண்டும்‌.
29-ம்‌ பாடல்‌: சக்தியை தியானம்‌ பண்ணிப்‌ பிராணாயாமப்‌ பதிவு செய்து பொதிகைமேவி சுகசீவ பிராணகலை வாசியேறி சுழுமுனையில்‌ மனதை நிறுத்தி அமுதபானம்‌ பருக வேண்டும்‌.
30-ம்‌ பாடல்‌:
ஞானமென்ற நிலைகாட்டி மூலங்காட்டி
நாதாந்த ஆறுமுக நிலையும்‌ காட்டி
மோனமென்ற வடிவேலின்‌ முனையும்‌ காட்டி 
முனையறிந்து கலைநிறுத்தி முடிமேல்‌ நில்லே.

31-ம்‌ பாடல்‌: சதுரகிரிமுடியில்‌ சென்று பொதிகை வசமாகி தானே விண்வெளியென்று உறுதிசெய்து மனதை சூன்யத்தில்‌ நிலைகொள்ள செய்தால்‌,
சத்தமுடன்‌ சித்திக்கும்‌ சும்மாநின்று
செல்லப்பா அட்டாங்ககயோகத்‌ தேகிச்‌
சிவாய குருபாதத்தில்‌ தெனிவாய்‌ நில்லே
என்றவாறு உபதேசத்தை நிறைவுசெய்துவிட்டு மயில்‌ வீரன்‌ வடிவேல்‌ கொண்டு.
அழியாத அண்டவரை முடிமேல்சென்றே
அட்டகிரி பர்வதத்திற்‌ கரகமாகி
ஒழுவாகி அண்டவெளியெங்கும்தானாய்‌
ஓங்கார வடிவேலை உவந்தான்‌ முற்றே.
இவ்வாறாக சுப்பிரமணிய ஞானம்‌ 32 முற்றுப்பெறுகிறது. சுப்பிரமணிய சித்தரான ஓங்கார வடிவேலன்‌ அருளாட்சியில்‌ நிறைமொழிமாந்தரான தமிழக அகத்தியர்‌ வழியைப்‌ பின்பற்றிச்‌ சென்று நாமும்‌ பேரின்பவாழ்வுபெற எந்நாளும்‌
அட்கிரி பர்வதத்தின்‌ அரசனான ஓங்கார
வடிவேலன்‌ துணைநிற்பானாக.
           சுபம்.



சுப்பிரமணிய சித்தர்‌ - பிற்சேர்க்கை (அகத்தியர்‌ பற்றிய உண்மை)


சுப்பிரமணிய சித்தர்‌ நூல்கள்‌ எல்லாம்‌ அகத்தியரை விளித்துக் கூறியவைகளாகவே உள்ளன. அவர்‌ அகத்தியருக்கு நீண்டகாலம்‌ தமிழ்‌ இலக்கணம்‌, வாழ்க்கைக்கல்வி, பிரம்ம ஞானம்‌ முதலாக எல்லா கலைகளையும்‌ கற்றுக்‌ கொடுத்திருக்கிறார்‌. இந்த உபதேச காலம்‌ முழுவதும்‌ நந்தீசரும்‌ அவர்களுடன்‌ றார்‌.

இவர்கள்‌ யாவருமே பிரம்ம ஞானிகள்‌. மரணமிலாதவர்கள்‌. எல்லா யுகங்களிலும்‌ வாழ்ந்துவரும்‌ நிறைமொழிமாந்தர்கள்‌. 5000 ஆண்டுகளுக்கு முன்‌ இரண்டாம்‌ கடல்‌ கோள்‌ ஏற்பட்டதில்‌ இறையனார்‌ அகப்பொருள்‌ அகத்தியர்‌ இயற்றிய தமிழ்‌ இலக்கணம்‌ போன்ற எண்ணற்ற நூல்கள்‌ கடலால்‌ கொள்ளப்பட்டு விட்டன. கரைஓரம்‌ ஒதுங்கியதில்‌ கிடைத்த நூல்களில்‌ தொல்காப்பியத்தின்‌ பகுதிகள்‌ தான்‌ குறிப்பிடத்தக்கவை. அந்த இலக்கண நூலில்‌ எங்கும்‌ சித்தர்‌ என்ற சொல்‌ இடம்பெறவே இல்லை. தொல்காப்பியர்‌ அகத்தியர்‌ முதலாக அக்காலத்தில்‌ வாழ்ந்த பிரம்ம ஞானிகள்‌ யாவரும்‌ நிறைமொழி மாந்தர்‌ என்றே குறிப்பிடப்‌ படுகின்றனர்‌. கி.பி. 5ஆம்‌ நூற்றாண்டுக்கும்‌ 14ஆம்‌ நூற்றாண்டுக்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌ வாழ்ந்த பிரம்ம ஞானிகளே சித்தர்கள்‌ என்று அழைக்கப்படுகின்றனர்‌.
இக்கால கட்டத்தில்‌ சுமார்‌ 37 அகத்தியர்கள்‌ வாழ்ந்திருக்கிறார்கள்‌ என்று அகத்தியர்‌ வரலாறு என்ற நூல்‌ கூறுகிறது. இக்காலத்தில்‌ மூன்றுக்கும்‌ மேற்பட்ட அகத்தியர்கள்‌ இருந்திருக்கக்கூடும்‌ என்று தமிழ்நாட்டு சித்தர்களைப்‌ பற்றிய ஆய்வுகள்‌ கூறுகின்றன.
அகத்தியர்‌ பிரமன்செய்த கும்பத்தில்‌ தோன்றியவர்‌. மித்திரன்‌ ஊர்வசிமேல்‌ மோகம்‌ கொண்டு வீரியத்தைக்கும்பத்தில்‌ இட அதில்‌ இருந்து தோன்றியவர்‌; புலத்திய முனிவரின்‌ சகோதரியான லோபமுத்திரையை மணந்தவர்‌.
கயிலையில்‌ சிவன் - பார்வதி திருமணத்தின்‌ போது தென்‌ திசைக்கு அனுப்பப்பட்டவர்‌, விந்தியனை (விந்திய மலையை) வென்றவர்‌, வாதாபியை விழுங்கி வில்வவனை அடக்கியவர்‌ போன்ற கதைகள்‌ (legends) பிற்காலத்தில்‌ எழுந்த புராணக்கதைகள்‌. இவையல்லாது ஆயுர்வேதபாஷ்யம்‌, சிவஜாலம்‌, சக்தி ஜாலம்‌, சண்முக ஜாலம்‌, அகத்தியர்‌ கர்ம காண்டம்‌ போன்ற பிற்காலத்தில்‌ எழுந்த 96 நூல்கள்‌ அகத்தியர்‌ நூல்களாகவே கருதப்படுகின்றன. அவைகளில்‌ சில ஒன்றுக்கொன்று மாறுப்பட்டக்‌ கருத்துக்களைக்‌ கொண்டவைகளாகவும்‌ உள்ளன. இவர்கள்‌ காலத்தில்தான்‌ சித்தர்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ளது. சித்தர்கள்‌ பற்றிய வெவ்வேறு ஆய்வாளர்கள்‌ பதினெண்‌ சித்தர்கள்‌ என்று கிட்டத்தட்ட பத்து தொகுப்புகள்‌ கொடுத்துள்ளனர்‌. அவைகள்‌ அனைத்திலும்‌ அகத்தியர்‌ என்ற பெயரிலோ அல்லது கும்பமுனி என்ற பெயரிலோ அகத்தியர்‌ இடம்பெறுகிறார்‌ அவைகளில்‌ சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்‌ நடத்திய மருத்துவ மாநாடு ஒன்றில்‌ வெளியிடப்பட்ட ஆய்வு நூலில்‌ மட்டும்‌ 18 சித்தர்களின்‌ பெயர்களும்‌ அவர்களின்‌ சமாதிகள்‌ உள்ள கோவில்களும் கூறப்படுகின்றன.
அவைகளாவன:
  1. வன்மீகர்‌ (எட்டுக்குடி)
  2. கோரக்கர்‌ (பொய்கை நல்லூர்‌)
  3. கமல முனி (திருவாரூர்‌)
  4. குதம்பைச்‌ சித்தர்‌ (மயிலாடுதுறை)
  5. தன்வந்திரி (வைத்தீஸ்வரன்‌ கோயில்‌)
  6. சட்டைமுனி (ஸ்ரீரங்கம்‌)
  7. காங்கேயர்‌ (கரூர்‌)
  8. திருமூலர்‌. (சிதம்பரம்‌)
  9. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ (விருத்தாச்சலம்‌)
  10. இடைக்காடர்‌ (திருவண்ணாமலை)
  11. பதஞ்சலி (இராமேஸ்வரம்‌)
  12. சுத்தரானந்தர்‌ (மதுரை)
  13. மச்சமுனி (திருப்பரங்குன்றம்‌)
  14. இராமதேவர்‌ (அழகர்‌ மலை-பழமுதிர்ச்சோலை)
  15. போகர்‌ (பழநி)
  16. கும்பமுனி:அகத்தியர்‌ (திருவனந்தபுரம்‌)
  17. கொங்கணவர்‌ திருப்பதி (திருமலை)
  18. நந்திதேவர்‌ (வாரணாசி (காசி))

வேறு சித்தர்‌ சமாதிக்‌ கோவில்‌ தொகுப்புகளில்‌ ஒன்று கும்பமுனி கும்பகோணத்தில்‌ சமாதி கொண்டுள்ளார்‌ என்றும்‌, சட்டைமுனி சீர்காழியிலும்‌, பாம்பாட்டிச் சித்தர்‌ திருஞாலம்‌ என்ற தலத்திலும்‌ சமாதி கொண்டுள்ளனர்‌ என்றும்‌ கூறுகிறது. வேறு சில பதினெண்‌ சித்தர்‌ தொகுப்புகள்‌ கரூரில்‌ கருவூராரும்‌, திருக்கடவூரில்‌ காலங்கிநாதரும்‌, திருவாவடுதுறையில்‌ வெகுளிநாதரும்‌ சமாதி கொண்டுள்ளனர்‌ என்றும்‌ கூறுகின்றன. இவர்களோடு சத்தியநாதர்‌ சகோதநாதர்‌ முதலான நவநாத சித்தர்களும்‌ கூட சித்தர்கள்‌ என்பதில்‌ ஐயமில்லை.
ஆனால்‌ இந்த பதிணென்‌ சித்தர்கள்‌ தொகுப்பில்‌ வரும்‌ எந்த அகத்தியரும்‌ சுப்பிரமணிய சித்தரின்‌ உடனிருந்து குரு-சீடன்‌ முறையில்‌ ஞானம்‌ பெற்ற அகத்தியர்‌ அல்ல என்பதுதான்‌ உண்மை. காரணம்‌ சுப்பிரமணிய சித்தரும்‌ அந்த அகத்தியரும்‌ வாழ்ந்த காலம்‌ இரண்டாம்‌ கடல்கோளுக்கு முற்பட்ட காலம்‌. தெற்கே குமரிமலையும்‌. பஃருளி யாரும்‌ இருந்த காலம்‌. இப்போது இமயம்‌ உள்ள பகுதி தெதியன்‌ கடல்‌ என்ற பெருங்கடல்‌ பகுதியாக இருந்தகாலம்‌. அந்த அகத்தியர்‌ எழுதிய அகத்தியம்‌ என்ற நூலும்‌ கடலால்‌ கொள்ளப்பட்டுவிட்டது. இப்போதும்‌ அவர்‌ பொதிகை மலைப்பகுதியிலிருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ என்ற உண்மைதான்‌ நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது.

4 கருத்துகள்:

  1. எனக்கு ஜோதி முனி என்ற சித்தரைப் பற்றியும் அவரது சமாதிக் கோவிலைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா, தயை கூர்ந்து உதவுங்கள்

    பதிலளிநீக்கு
  2. சுப்ரமணியர் ஞானம் 500 புத்தகம் வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. அகத்தியரை பற்றி தெளிவுரையை உணர்ந்தேன். நன்றி

    பதிலளிநீக்கு