Top bar Ad

6/10/18

அழுகணிச் சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணங்கள்
  3. பாடல்கள்
  4. ஜீவசமாதி

முன்னுரை


வெளியினில்‌ ஒளியாய்வந்து மிக்கதோர்‌ அமுதகண்ணர்தான்‌ அழுதபாவனையினோடு கண்ணில்‌ நீர்‌ ஆறாய்த்‌ தோன்றப்‌ பமுதிலாக்‌ கார்காத்தன்‌ பாலனாய்ப்‌ பிறந்துவந்து அழுகண்ணிச்சித்தரென்று அருளுடன்‌ பேரிட்டாரே.

என்று கருவூரார்‌ வாதகாவியம்‌ 700 என்ற நூலிலல்‌ கருவூர்த்தேவர்‌ பாடியுள்ளார்‌.
இதன்படி அழுகணிச் சித்தர்‌ கார்காத்த வேளாளர்‌ மரபில்‌ பிறந்தவர்‌.

ஊற்றைச்‌ சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுதில்லை மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுமென்றால்‌ ஊற்றைச்‌ சடலம்‌ விட்டே என்‌ கண்ணம்மா உன்‌ பாதம்‌ சேரேனோ!

மேற்கண்ட இந்தப்‌ பாடலை எழுதிய அழுகணி சித்தரைப்‌ பற்றிச்‌ சொல்ல வேண்டும்‌ எனில்‌ இவருக்கு, இப்பெயர்‌ வரப்‌ பல காரணங்கள்‌ சொல்லப்படுகிறது.

பெயர்க் காரணங்கள்


அழுத கண்ணீர்

இவர்‌ அழுத கண்ணீரோடு பாடிக் கொண்டு ஓரிடத்தில்‌ நிற்காமல்‌ நடந்து கொண்டே இருந்தவர்‌. அதனால்‌ இவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. அகஸ்தியர்‌ வைத்திய ரத்தினச்‌ சுருக்கம்‌ என்ற நூலும்‌ அவர் பெயருக்கு இதே காரணத்தைத் தான்‌ கூறுகிறது. இக்கூற்றுகளால்‌ அழுகணிச்சித்தர்‌ அகத்தியரும் கருவூராரும்‌ வாழ்ந்த காலத்திலோ அல்லது அவைகளுக்கு முற்பட்ட காலத்திலோ வாழ்ந்திருக்கக்‌ கூடும்‌ என்று தெரிகிறது.

அழுகின்ற தொனி

குரல்‌ வளையில்‌ புண்‌ ஏற்பட்டு சிதைந்த குரலால்‌, இவர்‌ பேசுவது அழுகின்ற தொனியில்‌ இருந்ததால்‌, இவருக்கு அழுகணி சித்தர்‌ என்ற பெயர்‌ உண்டானதாகக்‌ கூறப்படுகிறது.

அழும்‌ அணி

இவரது பாடல்கள்‌ எல்லாம்‌ இறங்கி வருந்திப்‌ பாடுவதாக - அழும்‌ பாவனையில்‌ அமைந்ததால்‌, அழும்‌ அணி என்பது மருவி அழுகணி என்ற பெயர்‌ ஏற்பட்டு இருக்கலாம்‌ என்றும்‌ நம்பப்படுகிறது.

கன்னிச்‌ சிந்து

இவருடைய பாடல்கள்‌ எளிமையான அழகிய கன்னிச்‌ சிந்து பா வகையில்‌ அமைந்ததால்‌, அழகிய கண்ணி சித்தர்‌ என்பதே பின்னாட்களில்‌ அழகணி யாகி இருக்கக்கூடும்‌ என்றும்‌ ஒரு கூற்று உண்டு.

அழுகண்ணிப் பூண்டு

அழுகண்ணிப் பூண்டு என்ற பெயருடைய நீர் விட்டான்‌ செடி ஒரு கல்ப மூலிகைப்‌ பூண்டு, இதைப்‌ பயன்படுத்தி அவர்‌ மருந்து தயாரித்து மருத்துவம்‌ செய்திருக்கிறார்‌. அதனால்‌ கூட அவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்ற பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.

பாடல்கள்


இவர்‌ வாழ்ந்த முறையைப்‌ பற்றி எதுவும்‌ தெரியவில்லை. அழுகணி சித்தர்‌ பாடல்கள்‌ என்ற தலைப்பில்‌ சித்தர்‌ ஞானக்‌ கோவை நூலில்‌ இவர்‌ பெயரால்‌ காணப்படும்‌ பாடல்களன்றி, வேறு நூல்‌ தகவல்களோ, இவரைப்‌ பற்றிய வாழ்க்கைக்‌ குறிப்புகளோ இதுவரையில்‌ கிடைக்கப்‌ பெறவில்லை.

அந்தப்‌ பாடல்கள்‌ யாவும்‌ மனித வாழ்கைத்‌ துன்பமயமானது. இத்துன்பத்திலிருந்து விடுபட எனக்கு வழி தெரியவில்லையே. என்று மனம்‌ வருந்திப்‌ பாடியதாகவே உள்ளன. இப்பாடல்களை அவர்‌ கண்ணம்மா என்று ஒரு பெண்ணை முன்னிலைப்‌ படுத்திப்‌ பாடியவைகளாக உள்ளன. மொத்தத்தில்‌ இப்பாடல்கள்‌ யாவும்‌ நான்‌ மனிதப்‌ பிறவி எடுத்து மாயைகளான துன்பங்களில்‌ வாடிக் கொண்டிருக்கிறேன். இந்தத்‌ துன்பங்களிலிருந்து விடுபட்டு உன் பாதக் கமலங்களை வந்தடைய நீ எனக்கு வழிகாட்ட மாட்டாயா?' என்று பராசக்தியைப்‌ பார்த்து புலம்பி வேண்டுவது போலவே உள்ளன.

எடுத்துக்‌காட்டாக சில‌ பாடல்கள்
ஊற்றைச்சடலம்விட்டே என்‌ கண்ணம்மா உன்பாதம்‌ சேரேனோ?”
8ஆம் பாடல்
உற்றாரும்பெற்றாரும்‌ ஊரைவிட்டும்‌ போகையிலே சுற்றாரும்‌ இல்லாமல்‌ என்‌ கண்ணம்மா துணையிழந்து நின்றதென்ன ?
19ஆம் பாடல்
பட்ட முந்தான்பறிபோய்‌ என்கண்ணமா படைமன்னர்‌ மாண்ட தென்ன?”
2ஆம் பாடல்
உன்னைமறக்காமல்‌ என்கண்ணம்மா ஒத்திருந்துவாழேனோ ? என்றும்‌
28ஆம் பாடல்
பிணிநிக்கி என்‌ கண்ணம்மா பனித்துவெளி காட்டாயோ?
32ஆம் பாடல்

என்றும்‌ பாடி முடிக்கிறார்‌.

ஜீவசமாதி


இவர்‌ நாகைப்பட்டினம்‌ நீலாயதாட்சி உடனுறை அருள்மிகு காயாரோகணசுவாமி திருக்கோவிலில்‌ ஜீவசமாதி பூண்டு அருவமாய்‌ இருந்து இன்றும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌.

2 கருத்துகள்:

  1. அழுகண்ண / அழுகன்னி / அழகு அணிச் சித்தரின் சமாதி, நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாளின் கோவில் தீர்த்தத் தொட்டியின் கீழ் இருக்கின்றது. - மாசில்லா கண்ணப்பன்.

    பதிலளிநீக்கு
  2. அவர் 'கண்ணம்மா' என்று பாடியிருப்பது, இங்கிருக்கும் கண்ணாத்தாளின் மேல் தான்.

    -மாசில்லா கண்ணப்பன்.

    பதிலளிநீக்கு