Top bar Ad

12/10/18

அகப்பேய்‌ சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. வியாசர்
  3. அகப்பைச்‌ சித்தர்
  4. குரு பகவான்
  5. ஜீவ சமாதி

முன்னுரை


அகத்தை அதாவது மனத்தைப்‌ பேயாக உருவகித்துப்‌ பாடினமையால்‌ இவர்‌ அகப்பேய்‌ சித்தர்‌ எனப்பெயர்‌ பெற்றார்‌. இவரது தத்துவப் பாடல்களின்‌ ஒவ்வொரு அடியிலும்‌ இறுதியில்‌ அகப்பேய்‌ என்று முடிவுறுமாறு அமைந்துள்ளது. திருவள்ளுவர்‌ பரம்பரையில்‌ தோன்றிய இந்த சித்தரது இயற்பெயர்‌ நாயனார்‌ என்றும்‌ கூறுவர்‌.

திருவள்ளுவரைப்‌ போலவே நெசவுத்‌ தொழிலில்‌ ஈடுபட்ட இவர்‌ துணி வியாபாரம்‌ செய்தார்‌. அவரது நேர்மை அவருக்கு வருமானத்தை மேலும்‌ வளர்த்தது. இருப்பினும்‌ நாயனார்‌ மனம்‌ பொருளில்‌ பதியவில்லை. அருளையே தேடி நின்றது. அவர்‌ பார்வையில்‌ பட்டதெல்லாம்‌ போலித் தனமும்‌ யந்திர மயமான வாழ்க்கையும்‌ தான்‌.

வியாசர்‌


அருள்‌ உள்ளம்‌ கொண்டவர்களைத்‌ தேடி அலைந்த நாயனாரின்‌ கண்களில்‌, அப்போது பெருத்த போதி மரம்‌ ஒன்று தென்பட்டது. அந்த மரத்தின்‌ அடியில்‌ பெரும்‌ பொந்து ஒன்று இருந்தது. மனதில்‌ வியாசரை குருவாக எண்ணி அங்கேயே தவம்‌ செய்ய ஆரம்பித்தார்‌ நாயனார்‌. நாயனாரின்‌ இந்தத்‌ தவப்பயனால்‌ ஈர்க்கப்பட்ட வியாசர்‌ ஒருநாள்‌ நாயனார்‌ எதிரில்‌ தோன்றினார்‌. அவருக்கு ஞான உபதேசம்‌ செய்து வைத்து உனக்கு அனுபூதி நிலை கைகூடும்‌. மக்களின்‌ மனம்‌ லயம்‌ ஆவதற்காக, உன்‌ அனுபவங்களை எழுதி  வை என்று சொல்லி நாயனாருக்கு உபதேசம்‌ செய்து விட்டு உடனே மறைந்தார்‌.

அகப்பைச்‌ சித்தர்


தவம்‌ கைகூடிய நிலையில்‌ வியாசர்‌ கட்டளைப்படி மக்களின்‌ அறிவு மாயையில்‌ மயங்கா வண்ணம்‌. மனதை பேயாக உருவகப்படுத்தி மக்கள்‌ ஆனந்த வாழ்வு வாழ்வதற்காகப்‌ பலப்பல உபதேசங்களைப்‌ பாடல்களாக ஆக்கினார்‌ நாயனார்‌. அதனால்‌ தான்‌ அவரை அகப்பேய்‌ சித்தர்‌ என்று உலகம்‌ அழைத்தது. நம்‌ காலத்தில்‌ அது அகப்பைச்‌ சித்தர்‌ என்று ஆகிவிட்டது. நெஞ்சத்தை அலையாமல்‌ நிறுத்தி விடு அது போதும்‌ இறைவனடி சேர்வதற்கு. நீ நஞ்சு உண்ணவும்‌ வேண்டாம்‌ நாதியற்றுத்‌ திரியவும்‌ வேண்டாம்‌. வேறு துன்பப்படவே வேண்டாம்‌. மனதை மட்டும்‌ அலை பாயாமல்‌ நிறுத்திவிடு. அதுவே போதும்‌. அதுவே உன்‌ முக்திக்கு வழி வகுக்கும்‌ என்று அகப்பேய்‌ சித்தர்‌ மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்‌.

குரு பகவான்


அகப்பேய்‌ சித்தர்‌ நவக்கிரகத்தில்‌ குரு பகவானை பிரதிபலிப்பவர்‌. இவரை வழிபட்டால்‌ ஜாகத்தில்‌ குரு பகவானால்‌ ஏற்படக்கூடிய தோஷங்கள்‌ அகலும்‌. பணப்பிரச்சினை, புத்திரபாக்கியம்‌ கோளாறு, அரசாங்கத்தால்‌ பிரச்சினை போன்றவை அகலும்‌. வியாபாரத்தில்‌ எதிர்பாராத நஷ்டம்‌, சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம்‌ அகன்று லட்சுமி கடாட்சம்‌ பெருகும்‌. வயிறு, குடல்‌ சம்பந்தப்பட்ட கோளாறுகள்‌ நீங்கும்‌. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்‌. கொடுக்கல்‌, வாங்கல்‌ பிரச்சினை வழக்குகள்‌ அகலும்‌. அரசாங்கத்தால்‌ பிரச்சினை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சினை நீங்கும்‌. வறுமை அகன்று வாழ்க்கை வளம்‌ பெறும்‌. இவருக்கு மஞ்சள்‌ வஸ்திரம்‌ அணிவித்து வழிபட்டால்‌ நினைத்த காரியம்‌ நிறைவேறும்‌. இவரைப்‌ பூஜிக்க சிறந்தநாள்‌ வியாழக்கிழமை ஆகும்‌. நாமும்‌ கூட இவரைத்‌ தொழுவோம்‌, நமது குறைகள்‌ நீங்க அவர்‌ திரு அருள்‌ பெறுவோம்‌.

ஜீவ சமாதி


இந்த அகப்பேய்ச்‌ சித்தர்‌ திருவையாறு என்னும்‌ தலத்தில்‌ சமாதியானதாக கூறப்படுகின்றது. ஓம்‌ அகப்பேய்‌ சித்தரே போற்றி என்று 108 முறை ஜெபித்து நிவேதனமாக, இளநீர்‌ (வடிகட்டி வைக்க வேண்டும்‌) அல்லது பால்‌, பழம்‌ வைத்து படைத்து உங்கள்‌ பிரார்த்தனையை மனமுருகக்‌ கூறி வேண்டிக்‌ கொண்டால்‌ நினைத்தது நடக்கும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக