Top bar Ad

15/2/19

கடுவெளி சித்தர்‌

முன்னுரை


திருத்துறைப்பூண்டி வட்டத்துள் இருக்கும் கடுவெளியில் தோன்றிய இவரோ,“சித்தர் என்பவர் நம் சிந்தனையைத் தெளிவாக்கி இறைவனது அருளாற்றலைத் தந்து உண்மையான ஆத்மானந்தத்தைத் தருபவர்” என்று சொன்னார். வெட்டவெளியில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபோது பரமானந்தத்தைக் காட்டியமையால் இத்தலத்தின் சிவபெருமானைப் பரமானந்தர் என்று அழைத்தனர். சித்த புருஷர்கள் யாவரும் சிவனோடு உறைகின்ற தேவியை சக்தி கொடுப்பதற்காக வணங்கி வந்தனர். ஆனால் கடுவெளிச் சித்தர் அம்பிகையை வாலைக்குமரியாகவே வணங்கினார். இதனால் பரமானந்த ஈஸ்வரன் உறையும் தேவிக்கும் வாலாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது.

கடுவெளி சித்தர்‌ பற்றிய வாழ்க்கைக்‌ குறிப்புகள்‌ ஏதும்‌ கிடைக்கவில்லை. எனினும்கூட இந்தப்‌ பெயரின்‌ சிறப்பால்‌ இவர்‌ தனித்தன்மை பெறுகிறார்‌. மேலும் வலைப்பதிவுகளில் இருந்து தேடி பல தகவல்கள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.

வெட்டவெளி


தமிழ்நாட்டு சித்தர்களின்‌ இறைநெறி என்பது, சூன்யம்‌ என்னும்‌ வெட்டவெளியையே சுற்றிச்‌ சுற்றி வருவதை சித்தர்‌ பாடல்கள்‌ மூலம்‌ அறியலாம்‌. சூன்யம்‌, வெட்டவெளி, சும்மா என்ற சொற்கள்‌ சித்தர்களின்‌ பல பாடல்களிலும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ இடம்‌ பெறுகிறது.

இறைத்‌ தன்மையானது, ஒன்றுமில்லாமல்‌ இருக்கும்‌ ஒன்று ! என்பது இந்திய ஆன்மிக மரபில்‌, பல மெய்யுணவாளர்களால்‌ வலியுறுத்தப்படுகிறது. இந்த ஒன்றுமற்ற ஒன்று ! என்ற மெய்யியல்‌ கருத்துருவையே தமிழ்‌ சித்தர்கள்‌ சூன்யம்‌, வெட்டவெளி, சும்மா என்ற வார்த்தைகள்‌ முலம்‌ வெளிப்படுத்துகின்றனர்‌.

காலம்‌ உறைந்த தோற்றம்‌ தரும்‌ வெட்டவெளியில்‌ பெயர்கள்‌, பொருட்கள்‌, உயிர்கள்‌ எல்லாமே அர்த்தமற்றவையாக ஆகி விடுகின்றன. விரிந்துப்‌ பரந்த இந்த வெட்டவெளியில்‌ தவழும்‌ பேரின்பத்தையே பரவெளி என்று அழைப்பார்கள்‌.
எனது, உனது, நமது என்ற இருப்பு நிலைகளைக்‌ கடந்த நிலையே பாழ்‌ என்று அழைக்கப்படும்‌ வெட்டவெளி என்று, பல சித்தர்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. சித்தர்களின்‌ கோட்பாட்டுப்‌ பெயரான வெளி என்பதையே பெயராகக்‌ கொண்டு அழைக்கப்பட்டவர்‌ கடுவெளி சித்தர்‌.

போதை எதிர்ப்புப்‌ பாடல்


மேலும்‌, குடிக்கும்‌, போதைக்கும்‌ எதிராக இவர்‌ பாடல்‌ புனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சாப்‌ புகைபிடியாதே! - வெறி காட்டி மயங்கிய கட்குடியாதே! அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே
என்ற இவரது போதை எதிர்ப்புப்‌ பாடல் பாடியுள்ளார்.

நந்தவனத்திலோர்‌ ஆண்டி


போதை எதிர்ப்புப் பாடலை விட பாமரர்களிடம்‌ பிரபலமானது, இவரது நந்தவனத்தில்‌ ஓர்‌ ஆண்டி பாடல் தான்‌. நாட்டுப்புறத்தில் இது பாடப்படுவதால் இதனை நாட்டுப்புற பாடல்கள் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடலைத் தமிழகத்தில் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் இதைப் பாடியவர் பெயர் அதிகம் பெயருக்குத் தெரியாது. அவர் தான் கடுவெளிச் சித்தர். உலக வாழ்வின் நிலையாமையை அருமையான பாடலாகச் சொன்னவர் அவர். மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களைச் சிலேடை நயத்தில் பாடல்களாகப் பாடி ஒரு புது வழியைக் காட்டியவர்.

நந்தவனத்திலோர்‌ ஆண்டி - அவன்‌ நாலாறு மாதமாய்க்‌ குயவனை வேண்டி கொண்டு வந்தான்‌ ஒரு தோண்டி - மெத்தக்‌ கூத்தாடிக்‌ கூத்தாடிப்‌ போட்டுடைத்தாண்டி! நல்ல வழிதனை நாடு- எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
கடுவெளி சித்தர்‌

விளக்கம் :


இப்பாடலைப் படித்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.
மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்படுகிறது. சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு (பத்து [4+6=10]) மாதமாய் வேண்டிக் கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். சீவன் இறைவனிடம் வேண்டிப் பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் (இறைவன்) செய்து கொடுத்தான். தோண்டி (உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண், மண் தெரியாமல் கூத்தாடினான். தோண்டியை போட்டு உடைத்தான். ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை (உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான். ஆண்டி (மனிதன்) மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர் (பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.


கருத்து

சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.


பயனுள்ள தத்துவங்கள்


கலியுகத்தில் வாழ நேரும் எந்த ஜீவனும் துன்புறக் கூடாது என்பதற்காக அழகான தமிழில் ஆத்திசூடியைப் போல பயனுள்ள தத்துவங்களைக் கூறி உள்ளார். இவ்வரிகளைப் படித்தால் நமது மனமும் வாக்கும் உடலும் சில மாற்றங்களை அடையும்.

தூடணமாகச் சொல்லாதே! ஏடனை மூன்றும் பொல்லாதே! நல்லவர் தம்மைத் தள்ளாதே! பொல்லாங்கு சொல்லாதே!
என்று அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றன மறையும் மறைந்தன் தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன் மறக்கும், மறந்தன் உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம். என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார்.

  • யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள்.
  • மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள்.
  • பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள்.
  • உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள்.
  • உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள்.
  • எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள்.
  • மனைவியை பழிக்காதீரகள்.
  • தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள்.
  • அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கள்.
  • நூறு பேரின் நடுவே தன்னைப் போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள்.
இந்த செயல்களைத் தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார்.

கல் பிளந்த அதிசயம்


சிவபெருமானை மனதில் எண்ணிய படியே பொது மக்களை நல்வழிப்படுத்த போதனைகளில் ஈடுபட்டிருந்த கடுவெளியார், வாரம் ஒரு முறை வேதாரண்யம் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சன்னதி முன் அமர்ந்து சிவன் மீது மனமுருகிப் பாடுவார். அவரது பாடல் வரிகளால் மகிழ்ச்சி அடைந்த ஈஸ்வரன், தாம் கடுவெளிச் சித்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட பரமானந்தர் ஆலயக் கருவறையில் உள்ள லிங்க ஆவுடையாரை இரண்டாகப் பிளந்து ஓர் அடையாளத்தைக் காட்டினார். அவை இன்றும் கடுவெளி ஆலய வாசலில் உள்ளதென நம்பிக்கை.

ஜீவ சமாதி


கடுவெளிச் சித்தருடைய ஜீவ சமாதி பரமானந்தர் ஆலயத்திற்குள் அமைந்திருப்பதால் அவரது ஜீவசக்தியும், சிவன் சக்தியும் சேர்ந்திருக்க, இந்தச் சித்தர் பூமியை நாடி வருபவர்கள் வாழ்க்கையில் குறைகள் அனைத்தும் தீர்கின்றன. கடுவெளியில் அவதரித்து அருகில் உள்ள ஆலத்தூரில் அடக்கமானதால் இரண்டு ஊர்களுக்குமே பொதுவான புனைபெயராக சித்தராலத்தூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் எடையூர் சங்கந்தி கடைத்தெரு இறங்கி மன்னார்குடி சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் கடுவெளியை அடையலாம்.

கடுவெளியாரைத் தரிசித்தல்


ஸ்ரீபரமானந்தர் வாலாம்பிகை ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சித்தரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் அகலும். மோட்ச தீபத்தை இந்த ஆலயத்தைச் சுற்றி ஏற்ற பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் வாழ்வில் சோதனைகளும் துயரங்களும் நீங்கப் பெறலாம். கடுவெளிச் சித்தரின் ஜீவ சமாதி இங்கே அமைந்துள்ளதால் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மனதில் எண்ணிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பவுர்ணமி தோறும் இத்தலத்தில் ஆண்களும் பெண்களும் விசேசமான சித்தர் போற்றி யாகம் மற்றும் அபிசேகம் ஆகியவற்றைச் செய்து அன்னப்படையலும் இட்டு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதான சேவையும் செய்கின்றனர்.

மூலம்


2 கருத்துகள்:

  1. நீங்கள் மேற்கோள் காட்டிய இறந்தன பிறக்கும் பிறந்தன இறக்கும்...என்பது பட்டினத்தார் அவர்களது பாடல்!

    பதிலளிநீக்கு