Top bar Ad

20/8/18

வன்மீக சித்தரின்‌ வாழ்வும்‌ வாக்கும்‌

பொருளடக்கம்
  1. வாழ்க்கை
  2. திருவான்மியூர்
  3. வன்மீகரின் முற்றறிவு
  4. விஞ்ஞானப் பார்வையில் சித்தனின் பார்வையின் தொலைநோக்கு
  5. சித்தன்‌ யார்‌?
  6. நம்பாதீர்கள்
  7. சமாதிகூடிய இடம்‌

வாழ்வு


வன்மீக சித்தர்‌ பதினெண்‌ சித்தர்களில்‌ முதல்‌ சித்தர்‌. அவர்‌ கலியுகம்‌ ஆரம்பிக்கும்‌ முன்பிருந்தே தமிழகத்தில்‌ வாழ்ந்து வந்தவர்‌: கலியுகத்தில்‌ சித்தர்கள்‌ காலத்தொடக்கமான கி. பி. ஐந்தாம்‌ நுற்றாண்டுவரை, எழுநூறு ஆண்டுகளுக்கு மேல்‌ வாழ்ந்திருக்கிறார்‌.
அவர்‌ தென்னாடுடைய சிவனாகிய குருதட்சண மூர்த்தியும்‌ சுப்பிரமணிய சித்தரும்‌ வாழ்ந்த காலத்தில்‌ அவர்களின்‌ வாழ்க்கையுடன்‌ இணைந்து வாழ்ந்திருக்கிறார்‌. இந்த உண்மையை அவர்பாடியுள்ள வால்மீகர்‌ சூத்திரஞானம்‌ 16 என்றஞான நூலும்‌ பண்டைத்‌ தமிழக மூவேந்தர்கள்‌ ஆட்சிபுரிந்த பகுதிகளில்‌ சோழர்கள்‌ ஆண்ட பகுதியில்‌ அவர்‌ ஜீவசமாதி அடைந்துள்ளமையும்‌ உறுதிப்படுத்‌துகின்றன.

அவர்‌ வேடர்‌ குலத்தில்‌ புரட்டாசிமாதம்‌ அனுஷம்‌ நட்சத்திரத்தின்‌ நான்காம்‌ பாதத்தில்‌ விருச்சிக ராசியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ தூயதமிழ்ப்‌ பண்டிதராய்‌ விளங்கியவர்‌; இராமாயணத்தைத்‌ தமிழில்‌ பாடியவர்‌ என்ற உண்மைகள்‌ போகர்‌ 7000 , 5834, 5835 பாடல்களாலும்‌ போகர்‌ சத்தகாண்டம்‌ 723, 834, 835 பாடல்‌ களாலும்‌ தெரியவருகின்றன.போகர்‌ 7000/5834 ஆம்‌ பாடலில்வரும்‌
ஆற்றலுடன்‌ வால்மீக ராமாயணத்தை
அவனிதனில்‌ மாந்தருக்குச்‌ செய்திட்டாரே
என்ற அடிகளுக்கு திரேதாயுகத்தில்‌ வட நாட்டில்‌ வாழ்ந்த வால்மீகி முனிவர்‌ நாரதமுனிவரின்‌ அருளால்‌ வடமொழியில்‌ எழுதிய இராமகாதையைத்‌ தமிழ்‌ மொழியில்‌ கலியுகத்தில்‌ பாடியுள்ளார்‌ என்று பொருள்‌ கொள்வதே பொருத்தமாய்‌ உள்ளது.

வன்மீகர்‌ இராமாயணத்தைத்‌ தமிழில்‌ பாடியதற்கு ஒரு வரலாற்று அடிப்படையும்‌ உள்ளது.அவர்‌ பல சிவத்தலங்களுக்குச்‌ சென்று சித்தர்‌ நெறியைப்‌ பரப்பியதுடன்‌ சிவவழிபாடு செய்து கொண்டு பாமரமக்களின்‌ மனநோய்களையும்‌ உடற்பிணிகளையும்‌ போக்கிவந்தார்‌. இந்தத்‌ திருத்தல யாத்திரையில்‌ இப்போது திருவான்மியூர்‌ என்ற பெயரில்‌ உள்ள சிற்றூருக்குச்‌ சென்று அங்கு கோவில்‌ கொண்டுள்ள மருந்தீஸ்வரரை வழிபட்டார்‌. அப்போது சிவப்பரம்பொருள்‌ அவர்முன்‌ தோன்றி வன்மீகரே! நீவிர்‌ வடமொழியில்‌ உள்ள வால்மீகி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ பாடும்‌ என்று ஆணையிட வன்மீக சித்தர்‌ இராமாயணத்தை அழகு தமிழில்‌ பாடி முடித்தார்‌. இதுவே தமிழில்‌ எழுதப்பட்ட முதல்‌ இராமாயணமாகும்‌.

திருவான்மியூர் -பெயர்க் காரணம்


அதனால்‌ பெருமகிழ்ச்சி அடைந்த மருந்தீஸ்வரர்‌ இனி இவ்வூர்‌ உன்பெயராலேயே அழைக்கப்படும்‌. இங்கு என்னை வழிபட வரும்‌ மக்கள்‌ உன்னையும்‌ தெய்வமாக வழிபடுவார்கள்‌ என்று கூறி அருளினார்‌. அதைத்‌ தொடர்ந்து மருந்தீஸ்வரர்‌ கோவிலுக்கு அருகிலேயே வன்மீக சித்தருக்கும்‌ ஒரு தனிக்கோவில்‌. எழுந்தது. மருந்தீஸ்வரர்‌ எழுந்தருளியுள்ள திருத்தலம்‌ திருவன்மீகியூர்‌ என்ற திருப்பெயரையும்‌ பெற்றது. அந்தத்‌ திருவன்மீகியூரே காலப்போக்கில்‌ மருவி இப்போதுள்ள திருவான்மியூராக விளங்கி வருகிறது.

இந்த சித்தர்‌ கோவில்‌ மருந்தீஸ்வரர்‌ கோவிலுக்கு மிகவும்‌ அருகிலேயே உள்ளது. இங்கு எழுந்தருளீயுள்ள சித்தர்‌ பெருமான்‌ தெற்கு நோக்கி நின்று மருந்தீஸ்வரரை வணங்கியபடி அருளாட்சி செய்து வருகிறார்.

இந்த மகாசித்தர்‌ ஆதிகால சித்தர்களுக்கே வழிகாட்டியாய்‌ இருந்திருக்கிறார் என்பதை இவரது சூத்திர ஞானப்பாடல்கள்‌ மூலம்‌ அறிந்து கொள்கிறோம்‌. 16 பாடல்களைக்‌ கொண்ட அந்த சூத்திரப்‌ பாமாலை வன்மீக குத்திரம்‌ பதினாறு என்ற பெயரில்‌ விளங்கி வருகிறது. இந்த சூத்திரப்பாடல்கள்தான்‌ பதினெண்‌ சித்தர்கள்‌ பாடல்களுக்கெல்லாம்‌ திறவுகோலாய்‌ உள்ளது. இந்த நூல்‌ ஆதிசிவன்‌ விருப்பத்திற்கு இணங்க பாடப்பட்டது. இந்நூல்‌ உண்மையான ஞான மார்க்கம்‌ எது என்பதை எல்லோரும்‌ எளிதில்‌ புரிந்துகொள்ளும்‌ வண்ணம்‌ மிக எளிமையாக விளக்கிக்‌ கூறியுள்ளது. இப்படி விளக்கமாகக்‌ கூறியுள்ளதைப்‌ பொறுத்துக்கொள்ள முடியாத அக்கால மகாசித்தர்கள்‌ பலர்‌ னிடம்‌ நேரில்‌ சென்று இவரைப்‌ பற்றி கோள்‌ சொன்னார்கள்‌. அவர்களது பொறாமைப்‌ பண்பைக்‌ கண்டு சிவனாரே கோபப்‌பட்டார்‌. இனிவருபவை மற்ற பாடல்களின்‌ முக்கிய கருத்துக்களின்‌ விளக்கமாகும்.

வன்மீகரின் முற்றறிவு


அவர்தன்‌ ஞானசூத்திரத்தின்‌ முதல்பாடலின் முதல்வரியையே செய்யுளாக அமைத்துள்ளார்‌. அந்த ஒரு வரியே அவர்‌ முக்காலமும்‌ உணர்ந்தவர்‌; முற்றறிவுபெற்றவர்‌ என்பதை முழுமையாக வெளிப்படுத்துகிறது. அப்பாடல்‌ வரியும்‌ அதன்‌ விளக்கமும் வருமாறு
இருள்‌ வெளியாய்‌ நின்ற சிவபாதம்‌ போற்றி
இதுவே அந்த முதல்வரி.அதன் முதல் சொல்லாய் வரும் இருள் வெளியே அவர்கண்ட சிவம்‌. அவர்‌ கண்ட ஆதிமூலப்‌ பரம்பொருள்‌. பரமாணு முதலாகப்‌ பேரண்டம்‌ வரையுள்ள அனைத்துள்ளும்‌ ஊடுருவி நீக்கமற நிறைந்துள்ள ஆதிசிவம்‌. இந்த ஆதிசிவத்தைப்‌ போற்றுவதையே தன்‌ சூத்திர நூலின்‌ முதல்‌, அடியாக அதாவது காப்பரணாக அமைத்துள்ளார்‌. நாம் காணும் படைப்புலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இடம்‌ - காலம்‌ - இயக்கம்‌, ஆகிய மூன்றையும்‌ தன்னகத்தே கொண்டு எல்லாவற்றையும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌, மறைத்தல்‌, அருளல்‌ என்ற ஐம்பெரும்‌ தொழில்கள்‌ மூலம்‌ இயக்கி வரும்‌ பேரியக்க மண்டலமான இருள்‌ வெளியே அவர்கண்ட ஆதிசிவம்‌. இந்த சிவத்தையே ஞானிகள்‌ பரப்ரம்மம்‌. பரம்பொருள்‌ என்றெல்லாம்‌ கூறி வருகிறார்கள்‌.

விஞ்ஞானப் பார்வையில் சித்தரின் தொலைநோக்கு


20ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பாதியில்‌ நாசா விண்ணியல்‌ விஞ்ஞானிகள்‌ “ஆதியில்‌ பிரபஞ்சம்‌ முழுவதுமே இருண்ட ஆற்றலாகத்தான்‌ (DARK ENERGY) இருந்தது. அந்த இருண்ட ஆற்றலில்‌ இருந்துதான்‌ எல்லா நட்சத்திர மண்டலங்களும்‌ (Galaxies) கிரகங்களும்‌ (planets) தோன்றின என்பதைக்‌ கண்டுபிடித்துள்ளனர்‌. அவர்களின்‌ ஆய்வுகளின்படி இப்பொழுதுள்ள ஒளிமண்டலம்‌ முழுவதுமே அந்த இருண்ட ஆற்றல்‌ பகுதியின்‌ 27 விழுக்காடுகள்‌' தான்‌. இப்பொழுதுகூட பிரபஞ்சத்தின்‌ 73 விழுக்காட்டுப்பகுதி இருண்ட ஆற்றலாகத்தான்‌ இருந்து வருகிறது. அந்த இருண்ட ஆற்றல்தான்‌ இருள்வெளி, ஒளி மண்டலம்‌ ஆகிய எல்லா பகுதிகளிலும்‌ நீக்கமற நிறைந்திருந்து எல்லாவற்றையுமே இயக்கி வருகிறது என்று ஆய்வுகள்‌ நடத்தித்‌ தெளிவு படுத்தியுள்ளனர்‌.

இவைகளுக்கெல்லாம்‌ நீண்டகாலம்‌ முன்பாகவே கருவெளியே சிவம்‌ என்று கண்டுணர்ந்த வன்மீகர்‌ தன்‌ காப்புச்‌ செய்யுள்‌ பகுதியில்‌ இருள்வெளியாய்‌ நின்ற சிவபாதம்‌ போற்றி என்று எங்கும்‌ நிறைந்த இறை ஆற்றலை வழிபட்டுள்ளார்‌. இவரைப்‌ போன்ற மெய்ஞ்ஞானிகளின்‌ தொலைநோக்குப்‌ பார்வை இன்றும்‌ விஞ்ஞான உலகிற்கு வழிகாட்டியாக இருந்து வருவதுதான்‌ மெய்ஞ்ஞானிகளுக்கே உரிய தனிச்சிறப்பு.

சித்தன்‌ யார்‌? என்பதன்‌ விளக்கம்‌


தங்கள்‌ தவமுயற்சியால்‌ அஷ்டமாசித்திகளைப்‌ பெற்றவர்கள்‌ யாவருமே சித்தர்கள்‌ என்று கருதப்படுகிறார்கள்‌. அவர்களில்‌ சில மகாசித்தர்களும்‌ கூட தன்‌ முனைப்பால்‌ தவறுகள்‌ செய்து சில சமயங்களில்‌ தாங்கள்‌ முயன்று பெற்ற தவ வலிமையையும்கூட இழந்து விடுகிறார்கள்‌. தம்மையே மறந்து பித்தர்களைப்போல்‌ தனித்து வாழும்‌ அவதூத மகான்களுக்கோ மனமும்‌ ஐம்புல நுகர்வுகளும்‌ இருப்பதாகவே தெரியவில்லை. இத்தகையோர்கள்‌ சிந்தை தெளிந்த சித்தர்கள்‌ என்பது தான்‌ பொதுவான கருத்து.

சித்தன்‌ யார்‌? என்பதற்கு வன்மீகர்‌ தன்‌ சூத்திரப்‌ பாடல்களில்‌ வரும் 2,3 ஆம்‌ பாடல்களில்‌ தெளிவான ஒரு விளக்கத்தைக்‌ கொடுத்திருக்கிறார்‌. அந்த விளக்கமே பிற்கால சித்தர்களுக்கு வழிகாட்டியாய்‌ இருந்திருக்கிறது என்பது இவ்விரண்டு பாடல்களின்‌ மூலம்‌ தெரியவருகிறது.
2-ம்‌ பாடலில்‌ வரும்‌ 3-ம்‌ 4-ம்‌ வரிகளும்‌ அவைகளின் விளக்கமும் வருமாறு :
சிந்தை தெளிந்திருப்பவனார்‌? அவனே சித்தன்‌
செகமெல்லாம்‌ சிவமென்றே அறிந்தோன்சித்தன்‌

விளக்கம்‌:
சிந்தை தெளிந்திருப்பவன்‌ யார்‌? மனிதமனம்‌ எண்ணற்ற எண்ணக்‌ குவியல்களாலானது. இவ்வெண்ணக்‌ குவியல்களால்‌ உலகியல்‌ இன்பங்களையே நாடிநாடி மறுபடியும்‌ மறுபடியும்‌ பிறவிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறான்‌ மனிதன்‌. நிலையற்ற இந்தப்‌ பிறவிக்கடலிலிருந்து கரை ஏற அவனுடைய சிந்தை தெளிவடைய வேண்டும்‌ என்றால்‌ அவனது மனதை அடைத்துள்ள எண்ணக் குப்பைகளெல்லாம் வெளியேற்றப்பட வேண்டும்‌. அதற்கு ஐம்புலன்கள்‌ சம்பந்தப்பட்ட புறமனச்‌ செயல்கள்‌ அனைத்தும்‌ அழிக்கப்பட வேண்டும்‌. ஆழ்ந்து ஊடுருவிப்‌ பார்த்தால்‌ உலகியலோடு சம்பந்தப்பட்ட புறமன நினைவுகள்‌ யாவும்‌ அகற்றப்பட வேண்டும்‌. ஐம்புலன்‌ நுகர்வுகளையெல்லாம்‌. முழுவதுமாக விட்டுவிலகியுள்ள சுத்த சூன்யமான ஆழ்மனம்‌, தன்னை அகத்தே கொண்ட மனிதனை தூய்மையான ஆன்மாவே நான்‌; ஆன்மாவைச்‌ சார்ந்த உடலும்‌ மனமும்‌ எனக்குப்‌ பயன்படும்‌ கருவிகளே என்று உணரச்‌ செய்யும்‌ 'அந்த சுத்த ஆன்ம உணர்விலேயே நிலைத்திருப்பவனே சிந்தை தெளிந்தவன்‌.அப்படி சிந்தை தெளிந்தவன்‌ தான்‌ சித்தன்‌' என்கிறார்‌.

செகமெல்லாம்‌ சிவம்‌ என்றே தெளிந்தோன்‌ சித்தன்‌ என்ற அடுத்த வரியில்‌ சிந்தை தெளிந்திருக்கும்‌ நிறைநிலையைப்‌ பரவலாக்கி ஆன்மாவின்‌ உண்மை நிலையைத்‌ தெளிவுபடுத்துகிறார்‌. இந்தவரியில்‌ 'செகமெல்லாம்‌' என்று அவர்‌ குறிப்பிடுவது அண்ட சராசரங்கள்‌ அனைத்தையும்‌ தன்னுள்‌ வைத்துக்‌ காத்துவரும்‌. பேரண்டப்‌ பெருவெளியையே ஆகும்‌. இந்தப்‌ பெருவெளியே கருவெளியாகிய ஏகப்பரம்பொருள்‌. இந்தக்‌ கருவெளியின்‌ இடைவிடாத இயல்பான அணுக்கூட்டுச்சிதைவுகளின்‌ மாற்றங்களே நாம்‌ அறிந்தும்‌ அறியாமலும்‌ தொன்று தொட்டு இருந்துவரும்‌ மாறாத நிகழ்வுகள்‌. இந்த இயற்கை நிகழ்வுகளே ஒலியும்‌, ஒளியும்‌ தோன்றியதில்‌ தொடங்கி புதிது புதிதாகத்‌ தோன்றியும்‌ பெருகியும்‌ வரும்‌ உயிரின வகைகளும்‌, உயிரற்ற பொருள்களும்‌, மின்னாற்றல்‌, ஈர்ப்பு விலக்கு சக்திகள்‌ போன்ற பல்வேறு ஆற்றல்களும்‌ ஆகும்‌. ஆதி ஆற்றலாகிய அந்தப்‌ பரம்பொருளின்‌ வெளிப்பாடுகளே இவைகள்‌ எல்லாம்‌ நாமும்‌ அந்தப்‌ பேராற்றலின்‌ சிறு சிறு துகள்கள்‌ தானே? அந்த ஆதிப்பரம்பொருள்தான்‌ மனிதமனம்‌ முதலான அத்தனை அண்டவெளி நுண்‌ துகள்களிலும்‌ ஊடுருவி நின்று பிரபஞ்சம்‌ முழுவதையும்‌ இயக்கி வருகிறது. அந்தப்‌ பரம்பொருளே இடம்‌ - - பொருள்‌ மாற்றம்‌ - தொடர்‌ இயக்கம்‌ ஆகிய இயற்கை நிகழ்வுகளுக்கு ஏற்ப ஒவ்வொன்றையும்‌ அவை அவைகளின்‌ தண்மைக்கும்‌ குணவேறுபாடுகளுக்கும்‌ ஏற்றபடி மாற்றம் அடையும்‌ வண்ணம்‌ அவை அவைகளின்‌ உள்ளிருந்தே எல்லாவற்றையும்‌ இயக்கிவரும்‌ சிவசக்தியாகும்‌ என்ற தெளிவைப்‌ பெற்றிருப்பவனே சித்தன்‌ என்கிறார்‌. அதனால்‌ சமாதி கூடியிருந்து வெளியில்‌ தெரியாமல்‌ அருளாட்சி செய்து வரும்‌ சித்தர்கள்‌. ஆதிப்பரம்பொருளுக்கு சமமானவர்கள்‌ என்றே மதிக்கப்‌படுகிறார்கள்‌
(சமம்‌ * ஆதி=சமாதி)
3ஆம் பாடலின்‌ 5,6,7,8 ஆம்வரிகளும்‌ அவற்றின்‌ விளக்கமும்‌.
மறிந்துடலில் புகுகின்ற பிராணவாயு
மகத்தான சிவசக்தி அடங்கும்வீடு
இறந்து மனத்தெளிவாகி சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென்று உரைக்கலாமே

விளக்கம்‌
உடல்‌ முழுவதும்‌ நடைபெற்றுவரும்‌ உயிரியக்கத்துக்குக்‌ காரணமான பிராணன்‌ ஜீவ சமாதி அடைந்துள்ள சித்தர்களின்‌ உடலுக்குள்ளேயே அடங்கி இருந்து அவர்களை உணவு, நீர்‌ முதலான எதுவுமின்றி அழிவற்ற நித்யானந்த நிலையில்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகள்‌ வாழவைத்துக் கொண்டிருக்கும்‌ சிவசக்தியே ஆகும்‌ என்ற உண்மைத்‌ தெளிவைப்‌ பெற்ற சித்தன்‌ சிவமாகவே மாறி விடுகிறான்‌ என்னும்‌ மறைபொருள்‌ உண்மையை இவ்வரிகளில்‌ விளக்கியுள்ளார்‌.

மற்ற பாடல்களில்‌ வரும்‌ சில முக்கிய கருத்துக்கள்‌:

அவரவர்கள்‌ செய்ய வேண்டிய நித்தியகருமங்களைத்‌ தவறாமல்‌ செய்துகொண்டு உண்மையான குருமார்கள்‌ காட்டும்‌ வழியில்‌ சென்றால்‌ வாசி கூடி வரும்‌. அதன்‌ விளைவாக அந்த சடன்‌ பதினாறு பேறுகளும்‌ பெறுவான்‌. போலி குருமார்கள்‌ பலவகையினராக இருப்பார்கள்‌. காய்கனிகளைத்‌ தின்று கொண்டு வாய்பேசா ஊமைகள்‌ போல்‌: திரிந்து கொண்டிருப்பவர்கள்‌ எல்லாம் யோகிகள்‌ அல்ல.நான்தான்‌ குரு. திருமூர்த்திகளும்‌ நானே என்று கூறுவார்கள்‌ சிலர்‌. இவர்களைப்‌ போன்றவர்கள்‌ பிழைப்புக்காக பல்வேறு வேடம்‌ அணிந்து திரிவார்கள்‌. சிலர்‌, சடை, புலித்தோல்‌, காவியாடை யெல்லாம்‌ தரித்துக்கொண்டு உடல்‌ முழுவதும்‌ சாம்பலைப்‌ பூசிக்‌ கொண்டு உலகத்தில்‌ நாங்கள்‌ தான்‌ யோகிகள்‌; நாங்கள்தான்‌ ஞானிகள்‌ என்றெல்லாம்‌ கூறுவார்கள்‌. இவர்களில்‌ எவரும்‌ யோகிகளும்‌ அல்லர்‌; ஞானிகளும்‌ அல்லர்‌. இத்தகையோர்களை' யெல்லாம்‌ நம்பி ஏமாற வேண்டாம்‌.

சமாதிகூடிய இடம்‌


வன்மீகர்‌ கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு நாகைப்‌ பட்டினத்திற்குத்‌ தென்மேற்கில்‌ சுமார்‌ 20 கி.மீ.தொலைவில்‌ உள்ள எட்டுக்குடி என்ற சிற்றூரில்‌ சமாதி பூண்டுள்ளார்‌. பிற்காலத்தில்‌ முத்தரசு சோழன்‌ என்ற சோழ மன்னன்‌ இப்பகுதியை ஆண்டுவந்த காலத்தில்‌ சில்ப முனிவர்‌ என்ற மகாசில்பி மூன்று தலங்களில்‌ ஒரே மாதிரி வடிவுடைய மூன்று முருகன்‌ சிலைகளைச்‌ செதுக்கினார்‌. சிக்கல்‌ (பொருள்‌ வைத்த சேரி), எட்டுக்குடி, என்கண்‌ என்பவை அந்தத்‌ தலங்களாகும்‌. அவைகளில்‌ எட்டுக்குடி முருகன்‌ திருக்கோவிலின்‌ சுற்றுப்பிரகாரத்தில்‌ மகாசித்தர்‌ வன்மீக முனிவரின்‌. ஜீவ சமாதி உள்ளது. இத்திருக்‌ கோவிலுக்குச்‌ சென்றுவர திருவாரூரிலிருந்தும்‌, நாகையிலிருந்தும்‌ பேருந்து வசதிகள்‌ உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக