Top bar Ad

27/8/18

மகா சித்தர்‌ காகபுசுண்டர்‌

மகா சித்தர்‌ காகபுசுண்டர்‌
பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. காக உருபெற்ற வரலாறு
  3. காக புசுண்டர் பிறப்பு பற்றி போகர் கூறுவது
  4. சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்
  5. இவர்‌ பிறப்பு பற்றி மற்றும்‌ ஒரு கதை
  6. புசுண்டர் பற்றிய பொதுக்‌ கருத்துக்கள்
  7. அவருடைய பிரளயகால அனுபவங்கள்‌
  8. காகபுசுண்டரின் மெய்ஞ்ஞான விளக்கம்
  9. காகபுசுண்டர்‌ சமாதி
  10. சித்தர் வரலாறு கூறுவது
  11. திருக்கோவில் அமைந்துள்ள இடம்
  12. காக புசுண்டர்‌ முக்தி அடைந்த ஆச்சாள்புரம்‌
  13. காக புசுண்டர் சித்தர் காட்சி அருள

முன்னுரை



காணாத காட்சியெல்லாம்‌ கண்ணில்‌ கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும்‌ பெற்றேன்‌
- காகபுசுண்டர்ஞானம்‌, பாடல்‌ 64

இவ்வாறு புசுண்டர்‌ காகத்தின்‌ வடிவில்‌ இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளைக்‌ கண்டுள்ளதாகக்‌ கூறியுள்ளார்‌. தான்‌ எத்தனையோ யுகங்கள்‌ காகத்தின்‌ உருவில்‌ கல்லால மரத்தில்‌ வாழ்ந்திருந்ததாக வசிஷ்டரிடம்‌ கூறியுள்ளார்‌.

(காகபுஜண்டர்‌ பெருநூல்காவியம்‌பாடல்‌ 3)

காக உருபெற்ற வரலாறு


புசுண்டர்‌ ஆரம்பத்திலிருந்தே காக உருவில்‌ இருந்ததில்லை. ஆரம்பத்தில்‌ மனிதப்‌ பிறவி எடுத்து வாழ்ந்திருக்கிறார்‌. ஒரு பிறவியில்‌ மகாகாலரின்‌ சாபத்தின்‌ விளைவாக விந்திய மலையில்‌ மலைப்பாம்பாகப்‌ பல பிறவிகள்‌ எடுத்து வாழ்ந்திருக்கிறார்‌.

காக புசுண்டர் பிறப்பு பற்றி போகர் கூறுவது


கடைசியாக ஒரு பிராமணச்‌சிறுவனாகப்‌ பிறவி எடுத்தார்‌. வர ரிஷியின்‌ சாபத்தால்‌ சந்திர குலம்‌ விளங்க பங்குனி மாதம்‌ உத்திரம்‌ நட்சத்திரம்‌ 2ஆம் பாதத்தில்‌ (கன்னி ராசியில்‌) ஒரு வெள்ளாட்டியின்‌ மகனாக (விதவையின்‌ மகனாக)ப்‌ பிறந்தார்‌ என்று போகர்‌ கூறுகிறார்‌.

- (போகர்‌ 7000/பாடல்கள்‌ 5888, 5889)

அந்தப்‌ பிறவியில்‌ இராமபக்தி மிக்கவராக இருந்திருக்கிறார்‌. இராமரை நேரில்‌ காண வேண்டும்‌ என்ற ஆசையில்‌ மேரு மலைக்குச் சென்று லோமச முனிவரை அணுகி இப்போது என்‌ உள்ளத்தில்‌ எல்லா ஆசைகளும்‌ அறவே அகன்று விட்டன. இராமனின்‌ திருவடி தரிசனம்‌ பெறும்‌ பேறு கிடைக்காதா என்ற ஆசை மட்டும்‌ என்‌ இதயத்தை விட்டு அகலவில்லை. அந்த ஆசை நிறைவேறும்‌ வழிதேடியே உங்களை நாடி வந்தேன்‌ என்றார்‌. ஆனால்‌ லோமச முனிவரோ பரம்பொருளும்‌ ஆன்மாவும்‌ வேறல்ல. நீரினின்றும்‌ பிரியாத அலைகளைப்‌ போல பரமாத்மாவாகிய பெருங்கடலின் அலைகளாகவே மனித ஆத்மாக்களாகிய நாமும் உள்ளோம் என்று உபதேசம் செய்தார். புசுண்டரோ அந்த பெறுதற்குரிய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால்‌ மிகவும்‌ கோபமடைந்த லோமச முனிவர்.

சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்


ஏ, பிராமண மூடனே! காகத்தைப்‌ போல்‌ எல்லாவற்றுக்கும்‌ அஞ்சுகிறாய்‌. கூவி அழைத்து உணவு தருபவரைக்கூட கண்டு அஞ்சி ஓடும்‌ காகத்திற்கும்‌ உனக்கும்‌ வேறுபாடில்லை. எனவே நீ காகமாக மாறக்கடவாய்‌ , என்று சாபம் கொடுத்தார்‌. சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்‌ இராமபிரானையே மனதில்‌ நினைத்தபடி விண்ணில் பறந்தார்‌. அவருடைய ஆழ்ந்த இராமபக்தியைப்‌ பாராட்டி லோமச முனிவர்‌ அவருக்கு உன்னதமான இராமமந்திரத்தை உபதேசித்தார்‌. அதுமுதல்‌ புசுண்டர்‌ காகவடிவிலேயே பலயுகங்களாக இராமமந்திர ஜபம்‌ செய்துகொண்டு காகபுஜங்டர்‌ என்ற திருநாமத்தோடு வாழ்ந்து வருகிறார்‌.

இவர்‌ பிறப்பு பற்றி மற்றும்‌ ஒரு கதை:


போகர்‌ கூற்றுக்கு மாறாக புசுண்டரின்‌ பிறப்புப்‌ பற்றி சித்தர்களிடையேவேறு ஒரு கதையும்‌ இருந்து வந்திருக்கிறது.

அதன்‌ விபரம்‌:
ஒரு யுக அந்தத்தில்‌ யானை, ஒட்டகம்‌, கரடி முதலான பல்வேறுபட்ட முகங்களை உடைய சிவ கணங்களுடன்‌ அஷ்ட சக்திகளும்‌ சிவனார்‌ கட்டளைக்கிணங்க மதுவருந்தி நடித்து விழாக்கொண்டாடினர்‌. அவர்களின்‌ வாகனங்களாகிய அன்னங்களும்‌ மது வருந்திக்களித்திருந்தன. ஆதிசக்தியான பிரம்ம சக்தியின்‌ வாகனங்களாகிய பெண்‌ அன்னங்கள்‌ சண்டன்‌ என்னும்‌ வாயசத்தைக்‌ கூடிக்‌ கருத்தரித்து மானதசரசின்‌ கரையில்‌ 2 முட்டைகள்‌ இட்டன. அப்போது பிரம்ம சக்தி தவம்‌ பூண்டு நீண்டகாலம்‌ சமாதியில்‌ இருந்தார்‌. அந்த 21 முட்டைகளிலிருந்து புசுண்டர்‌ முதலான இருபத்தொருவர்‌ வெளிப்பட்டனர்‌. சமாதி கலைந்த பிராமியிடமிருந்து ஞானம்பெற்று அந்த இருபத்து ஒருவரும்‌ தங்கள்‌ தந்தையாகிய சண்டனை அடைந்தனர்‌. சண்டன்‌ அவர்களை மரணமிலா வாழ்வு பெற்று கற்பக மரத்தில்‌ வாழ்ந்திருக்கும்படி செய்தான்‌. பல யுகங்களுக்குப்‌ பிறகு புசுண்டர்‌ நீங்கலாக மற்ற 20 ஞானிகளும்‌ உடலை நீத்து முக்தி அடைந்தனர்‌. புசுண்டர்‌ மட்டும்‌ தன்‌ தேகத்தை காத்து கற்பக நிழலில்‌ வசித்து! வந்தார்‌. அக்காலத்தில்‌ வசிஷ்டர்‌ தமது எட்டாம்‌ பிறப்பில்‌ அவரிடம்‌ வந்து உரையாடினார்‌ என்று ஞான வாசிஷ்டம்‌ கூறுகிறது.புசுண்டர்‌ அன்னத்தின்‌ மூலமாகபிறந்தார்‌ என்பதை சுகப்‌ பிரம்ம மகரிஷி தம்‌ ஞான சூத்திரம்‌ 32 ஆம்‌ பாடலில்‌ உறுதி செய்துள்ளார்‌.

புசுண்டர் பற்றிய பொதுக்‌ கருத்துக்கள்‌:


புசுண்டர்‌ தமிழ்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌. பல யுகங்கள்‌ வாழ்ந்தவர்‌. சோதிடம்‌ மருத்துவம்‌, யோகம்‌, ஞானம்‌, ஆகிய துறைகளில்‌ நற்றமிழில்‌ எட்டு நூல்கள்‌ இயற்றியுள்ளார்‌. மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்‌. பிரளயகாலத்தில்‌ அவிட்ட நட்சத்திரப்பதவியில்‌ வாழ்பவர்‌. பிரளயகாலம்‌ முடிந்தவுடன்‌ பூமிக்கு வந்து பிற சித்தர்களுடன்‌ வாழ்பவர்‌. வசிஷ்ட மகரிஷிக்கு. ஞானோபதேசம்செய்தவர்‌.”மாசிலா மனமே மகேசனின்‌ மாளிகை” என்று ஞானப்‌ பாடல்‌ பாடியவர்‌. இவர்‌ உரோமரிஷியின்‌ குருநாதர்‌. இச்செய்தி காகபுசுண்டர்‌ நாடியிலும்‌ வந்திருக்கிறது.

அவருடைய பிரளயகால அனுபவங்கள்‌:


ஒரு பிரளய காலத்தின்‌ முடிவில்‌ பிரம்ம தேவரைப்‌ பார்த்து இருபத்தோராவது பிரம்மாவே வருக! வருக! என்று வரவேற்றாராம்‌.
நான்‌ அறிய சிவன்‌ முப்புரங்களை மூன்று முறை எரித்துள்ளார்‌.
தட்சன்‌ யாகத்தை இருமுறை அழித்துள்ளார்‌.
திருமால்‌, இராமன்‌ என்னும்‌ பெயரில்‌ பதினோராவது முறையாக இப்போது பிறக்க விருக்கிறார். அவரே சிலகாலம்‌ கழித்து வாசுதேவன் இல்லத்தில்‌ கிருஷ்ணனாக பதினாறாவது முறையாக அவதரிக்க உள்ளார்
என்று தான் பார்த்து வரும் யுக மாற்றங்களைப் பற்றிக் கூறியுள்ளார்.

காகபுசுண்டரின் மெய்ஞ்ஞான விளக்கம்


காகபுசுண்டர்‌ அண்டத்தின்‌ உச்சியில்‌ மனதைச்‌ செலுத்தி கற்பகோடி காலங்கள்‌ வாழ்ந்தவர்‌. இதுவரை ஏழு லட்சம்‌ பிரளயங்கள்‌ வந்துள்ளன என்று உலகத்தோற்ற ஒடுக்கம்‌ பற்றி கேட்ட சிவனாருக்கு உண்மை நிலையைப்‌ புரிய வைத்தவர்‌. “ஆதி என்ற சித்தருக்கும்‌ ஆதியாக இருந்தமையால்‌ சிவனார்‌ கயிலையில்‌ இருக்கும்படி கூற அதன்படி காக உருவத்தில்‌ கைலையில்‌ இருந்தவர்‌.

மும்மூர்த்திகளின்‌ ஏழு பிறப்புகளையும்‌ தான்‌ வாழும்‌ காலத்திலேயே கண்டவர்‌. பிறப்பு இறப்புகளைக்‌ கடந்தவர்‌. காக வடிவுடன்‌ இருந்துகொண்டு காரண காரியங்களுக்கும்‌ உரிய மூலத்தைக்‌ கண்டவர்‌”
“(காகபுசுண்டர்‌ ஞானம்‌ - பாடல்கள்‌ 4, 8, 49, 50)
யாகோபு வைத்திய வாத சூத்திரம்‌ 400 என்ற நூலில்‌ மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை காகபுசுண்டர்‌ கூற தாமே நேரில் கேட்டதாக இராம தேவர்‌ கூறியுள்ளார்‌.
காகபுசுண்டர்‌ மேலே கண்டதம்‌ மெய்ஞ்ஞான விளக்க நூலில்‌ மெளனத்தின்‌ மேன்மை, சமாதி முறைகள்‌, பிரம்மத்தை அடைதல்‌, வாசியோகம்‌, காயகல்பமுறை ஆகியவற்றையும்‌ விளக்கிக்‌ கூறியுள்ளார்‌. அவர்‌ மெய்ஞ்ஞான விளக்கத்துடன்‌ வேறு பல நூல்களும்‌ எழுதியுள்ளார்‌. உபநிடதம்‌ தத்துவ உண்மைகளை விளக்கும்‌ நூல்‌. ஞானக்‌ குறள்‌ ஆன்மா பிரம்மத்‌துடன்‌ கலக்கும்‌ நிலையை உணர்த்துகிறது.

காகபுசுண்டர்‌ சமாதி (தென்‌ பொன்பரப்பி)


காகபுசுண்டரும்‌ அவர்‌ மனைவி பகுளாதேவியும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ தென்பொன்பரப்பி கிராமத்தில்‌ உள்ள சுவர்ணாம்பிகை உடனுறை சுவர்ணபுரீஸ்வரர்‌ ஆலயத்தின்‌ பக்கத்தில்‌, கோவிலின்‌ ஈசான்ய மூலையில்‌ சமாதி கொண்டுள்ளனர்‌.

ஸ்வர்ணபுரீஸ்வரர்‌ கோவிலின்‌ சிவலிங்கம்‌ காக புசுண்டராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கம்‌ ஐந்தரை அடி உயரத்திற்குக்‌ காந்தத்‌ தன்மை கொண்ட ஒரே அடி கல்லினால்‌ ஆனது. இந்த லிங்க அமைப்பு நவபாஷாணக்‌ கட்டமைப்புக்கு ஒப்பானது. இந்த விங்கத்தைக்‌ கைகளால்‌ தட்டிப்‌ பார்த்தால்‌ (வெண்கலச் சத்தம் வரும்) அடிபீடமான பிரம்மபாகம்‌, மத்தியபாகமான விஷ்ணு பீடம்‌, மேலே உள்ள ருத்ர பாகமான சிவலிங்கம்‌ ஆகிய மூன்று பகுதிகளுமே பதினாறு முகங்களைக்‌ கொண்டவை.

சித்தர் வரலாறு கூறுவது


சிவதரிசனம்‌ பெற காகபுசுண்டர்‌ இங்கு 16 ஆண்டுகள்‌ கடுந்தவம்‌ புரிந்தார்‌. அக்கால முடிவில்‌ ஒரு நாள்‌ பிரதோஷ காலத்தில்‌ சிவபெருமான்‌ 16 முகங்களைக்‌ கொண்ட சிவலிங்க மாகக்‌ காட்சி கொடுத்தார்‌. அதன்‌ நினைவாகவே புசுண்டர்‌ இங்கு இந்த ஷோடசலிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்‌ இப்போது கோவில்‌ அமைந்துள்ள அந்த இடத்திலேயே அவர்‌ ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும்‌ சித்தர்‌ வரலாறு கூறுகிறது. அவர்‌ சமாதி அடைந்த சிறிது காலத்திற்குப்‌ பிறகு கி. பி. ஏழாம்‌ நூற்றாண்டில்‌ பொன்பரப்பியை ஆண்ட மன்னனாகிய 'வானகோவராயம்‌ அங்கு ஆலயத்தை எழுப்பினான்‌.
இந்த ஆலயம்‌ சித்தர்‌ நெறி அடிப்படையில்‌ பல்வேறு தனிச்சிறப்புகளைக்‌ கொண்டது. இங்குள்ள சிவலிங்கம்‌ சிறிது காலம்‌ ஆழ்ந்து வழிபட்டாலே பக்தர்களை தியான நிலைக்குக்‌ 'கொண்டுசெல்லவல்லது.
சிவலிங்கம்‌ அமைந்துள்ள கருவறை எப்போதும்‌ உக்கிரமாகவே உள்ளது. கருவறையில்‌ எரிந்து கொண்டிருக்கும்‌ தீபம்‌ இடைவிடாது துடித்துக்‌ கொண்டே இருக்கும்‌. இதுபற்றிய விளக்கம்‌ காகபுசுண்டர்‌ நாடியிலும்‌ உள்ளது. இது தென்‌ தமிழ்நாட்டின்‌ பஞ்ச பூதத்‌ தலங்களில்‌ வாயுத்தலமாகும்‌.
இக்கோவிலில்‌ உள்ள நந்தி இளங்கன்றுபோலவும்‌ சிவலிங்கத்திற்கு நேர்‌ எதிரில்‌ சிவனையே பார்த்துக்‌ கொண்டிருப்பது போலவும்‌ அமைந்துள்ளது. இந்த நந்தி- லிங்க ஒருங்கிணைப்பு ஜீவ சமாதி அடைந்துள்ள சித்தர்களின்‌ வாசி ஓட்டத்தை நுட்பமாக உணர்த்தும்‌ வண்ணம்‌ உள்ளது. இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்‌ செய்யும்போது அபிஷேகப்‌ பொருட்கள்‌ யாவுமே நீல நிறமாக மாறி காட்சி அளிப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்‌.

திருக்கோவில் அமைந்துள்ள இடம்


இத்திருக்கோயில்‌ சென்னை - சேலம்‌ நெடுஞ்சாலையில்‌, ஆத்தூர்‌ - கள்ளக்குறிச்சி வழித்தடத்தில்‌ அம்மையகரம்‌ பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கி.மீ தொலைவிலுள்ளது.

காகபுசுண்டர்‌ முக்தி அடைந்த ஆச்சாள்புரம்‌


கயிலைநாதரின்‌ ஆணையின்படி காக புசுண்டர்‌ ஆச்சாள்புரம்‌ வந்து 'திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகராஜர்‌ திருக்கோவிலை அடைந்து அந்தக்கோவிலினுள்‌ நிருதி திக்கில்‌ அமர்ந்து தவமியற்றி வந்தார்‌. திருஞான சம்பந்தர்‌ திருமண நாளான வைகாசி மாதம்மூல நட்சத்திரத்தன்று வெளிப்பட்ட சிவ ஜோதியில்‌ திருமணத்திற்கு வந்திருந்த எல்லா சிவ பக்தர்களுடனும்‌ சேர்ந்த காகபுசுண்டரும்‌ முக்தி அடைந்தார்‌.

இத்திருக்கோவிலில்‌ காக புசுண்டர்‌ காகத்தின்‌ முகமும்‌ ஜடாமுடியும்‌ கொண்டு தவயோகத்தில்‌ பத்மாசனத்தில்‌ அமர்ந்த நிலையில்‌ இருந்து இன்றும்‌ காட்சியளித்தவண்ணம்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. (இந்தத்‌ திருத்தலம்‌ சீர்காழியிலிருந்து மகேந்திரப்‌ பள்ளி செல்லும்‌ வழியில் 13 கி.மீ. தூரத்திலும்‌ சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும்‌ உள்ளது)

அவர்‌ தம்‌ ஞானப்படலில்‌


மாசிலாமனமே மகேசனின்‌ மாளிகை
என்று கூறியுள்ளதற்‌கிணங்க நாமும்‌ களங்கமில்லா பளிங்கு போன்று தெளிந்த மனநிலையில்‌ அவரை பக்தியுடன்‌ அழைத்தால்‌ இந்தத்‌ தலைமை சித்தர்‌ நம்முடைய ஞானக்கண்ணிலும்‌ (ஆக்ஞைமையத்திலும்‌) காட்சி கொடுத்தருள்வார்‌ என்பது சத்தியத்திலும் சத்தியம்‌.ஓம்தத்சத்‌.
ஒம்தத்சத்‌.

3 கருத்துகள்:

  1. ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய

    ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் போற்றி
    ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் போற்றி
    ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் போற்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Om Nama shivaya. காகபுஜண்டரை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு