Top bar Ad

31/8/18

கருவூர்த்தேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கருவூராரின்‌ பெற்றோரும்‌ தொழிலும்‌
  3. கருவூரார் வாழ்ந்த காலம்
  4. திருக்குகூரில் நிகழ்ந்தது
  5. கஜேந்திர மோட்சம் என்னும் தல நிகழ்ச்சி
  6. திருநெல்வேலியில்‌ நிகழ்ந்தது
  7. தஞ்சையில் நிகழ்ந்‌தது
  8. திருவரங்கத்தில் நிகழ்ந்‌தது
  9. சிலை செய்து கொடுத்து சிறையில்‌ அடைபடல்‌
  10. கருவூர் சித்தர்‌ சிவத்துடன்‌ கலந்தது
  11. ஜீவ சமாதி
  12. கருவூராரை வழிபடுவோர்‌ கவனத்திற்கு
  13. முடிவுரை


கருவூரார்‌ பிறப்பும்‌ மரபும்‌


சீரான கருவூரார்‌ பிறந்த நேர்மை செப்புகிறேன்‌ செம்பவளவாயால்‌ கேளீர்‌ கூறான சித்திரையாம்‌ மாதமப்பா குறிப்பான அஸ்தமதிரண்டாங்காலாம்‌ தேரான நாள்தனிலே பிறந்தசித்து தேற்றமுடன்‌ கருவூரார்‌ என்னலாமே
- போகர்‌ 7000 / 5890.

மேலே காணும் போகர்‌ கூற்றுப்படி கருவூரார்‌ சித்திரைமாதம்‌ அஸ்த நட்சத்திரம்‌ இரண்டாம் பாதத்தில்‌ கன்னிராசியில்‌ பிறந்தவர்‌.

ஆமேதான்‌ தேவதச்சன்‌ என்று சொல்லி அப்பனேஅவன்‌ மைந்தன்‌ மயன்‌ என்பார்கள்‌. நாமேதான்‌ சொன்னபடி மயனுக்கல்லோ நாடான கருவூராத்‌ பிறந்தாரல்லோ
- போகர்‌ 7000 / 5897

இதன்படி விஸ்வகர்மாவாகிய தேவதச்சனுடைய மகனான மயனின்மைந்தன்‌ கருவூரார்‌ என்கிறார்‌ போகர்‌. சாத்திரங்களின் படி மயன்‌ விண்ணுலகில்‌ பல யுகங்களாக வாழ்ந்து வரும்‌ தேவதச்சன்‌. கருவூரார்‌ இக்கலியுகத்திலே தமிழ்‌ மண்ணில்‌ தச்சர்‌ குலத்தில்‌ பிறந்தவராதலால்‌ அவர்‌ மயனின்‌ மரபில்‌ தோன்றியவர்‌ என்பதே பொருத்தமாகும்‌.
இதே பாடலில்‌ மேலும்‌ போகர்‌
உலோக சிற்பத்தொழிலில்‌ அந்த தேவதச்சனாகய மயன்‌ கூட கருவூராருக்கு இணையாக மாட்டார்
என்கிறார்‌.
கோனான கன்னார ஜாதியாகும்‌ கொற்றவனே நூல்தனிலே கண்டவாறு
- போகர்‌ 7000 / 5705.

என்றபடி கருவூரார்‌ விஸ்வகர்மா மரபில்‌ கன்னார குலத்தில்‌ பிறந்தவர்‌ என்பது உறுதிப்படுகிறது.

கருவூராரின்‌ பெற்றோரும்‌ தொழிலும்‌


அகத்தியர்‌ 12000 / 457 இல்‌ உள்ளபடி கருவூராரின்‌ பெற்றோர்கள்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்று ஆங்காங்குள்ள கோவில்களுக்கு செம்பு முதலான தாழ்ந்த உலோகங்களில்‌ சிலைகள்‌ செய்து கொடுத்து வாழ்ந்து வந்தனர்‌. அப்படி சம்பாதித்த பொருள்களைக்‌ கொண்டு எட்டு திசைகளிலும்‌ புகழ்‌ பரப்பி வாழும்‌ முனிவர்களுக்கும்‌, சித்தர்களுக்கும்‌ தேவையானவைகளை வாங்கிக் கொடுத்து வந்தார்கள்‌.

பெற்றோர்கள்‌ செய்த புண்ணியம்‌ பிள்ளைகளைச்‌ சேரும்‌ என்ற பழமொழிக்கிணங்க அந்த மெய்ஞ்ஞானிகள்‌ கருவூராருக்கு ஞானப்பால்‌ ஊட்‌டினர்‌. குழந்தைப்‌ பருவத்திலேயே கரூவூரார்‌ மகா சித்தர்களுக்குரிய தகுதிகளுடன்‌ உருவாகி வளர்ந்து வந்தார்‌.
அகத்தியர்‌ 12000 / 454

பெற்றோர்களைப்‌ போல்‌ கருவூராரும்‌ பாரதத்தின்‌ நான்கு திசைகளிலும்‌ உள்ள எண்ணற்ற கோவில்களுக்குச்‌ சென்று அந்தந்தத கோவில்களுக்குத் தேவையான உலோகச் சிலைகளைச் செந்தூரம் சேர்த்து செய்து கொடுத்து வந்தார்‌. அவைகள்‌ யாவும்‌ தங்கச்‌ சிலைகள் போலவே இருந்தன.
அகத்தியர்‌ 12000 / 466

கருவூரார் வாழ்ந்த காலம்


பாடுவேன்‌ பலசந்தங்கள்‌ சிந்ததுவாய்‌ நாடுவேன்‌ இனி நற்குரு பாதத்தை தேடுவேன்‌ இனி சிந்தை மகழ்வொடு கூடுவேன்‌ குரு போகர்தன்‌ பாதமே.
கருவூரார்‌ வாதகாவியம்‌ 700 / 4

இந்தப் பாடலில்‌ கருவூரார்‌ ஆரம்பகாலத்தில்‌ நான்‌ இறைவனை சந்தங்கள் நிறைந்த சிந்து பாடல்கள்‌ பாடி வழிபட்டு வந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்தில்‌ நான்‌ ஒரு நற்குரு பாதத்தைத்‌ தேடினேன்‌. எனக்கு போகசித்தரே குருவாக அமைந்துவிட்டார்‌. இனி நான்‌ அவர்‌ பாதங்களைப்‌ பணிந்து அவர்‌ வழியில்‌ செல்வேன்‌ என்று கூறுகிறார்‌. இதனால்‌ திருவிசைப்பா பாடிய கருவூராரும்‌ சுமாராக நானூறு ஆண்டுகளுக்குப்‌ பிறகு தஞ்சைப்‌ பிரகதீசுவரர்‌ ஆலயத்தில்‌ லிங்கப்‌ பிரதிஷ்டை செய்த கருவூராரும்‌ காலத்தால்‌ மாறுபட்டிருந்தாலும்‌ ஒருவரே என்பது தெளிவு. தமிழக சித்தர்கள்‌ காயகல்ப முறையைப்‌ பயன்படுத்தி நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்‌ என்பது தமிழ்‌ உலகம்‌ அறிந்த உண்மை.

காசினியில்‌ யான்‌ கொண்ட கற்பம்‌ கேளாய்‌ கடிதாக நாற்பத்தோர்‌ கற்பமாகும்‌ நேசமுடன்‌ சித்தியாம்‌ கற்பம்‌ கொண்டால்‌ நிலை பெற்றேன்‌ ஆகாச நிலைகள்‌ பெற்றேன்‌.
என்று நொண்டி என்னும்‌ வாதகாவியம்‌ 700 என்ற நூலில்‌ கருவூராரே கூறியுள்ளபடியாலும்‌ அவர்‌ நாற்பத்தொரு கற்பம்‌ வாழ்ந்திருக்கக் கூடும்‌ என்று நம்பமுடிகிறது. இவைகளையெல்லாம்‌ ஒருங்கிணைத்துப் பார்த்தால்‌ கருவூரார்‌ கி.பி.5 ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ 12 ஆம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்ப காலம்‌ வரை சுமார்‌ 700 ஆண்டுகள்‌ வாழ்ந்திருக்கிறார்‌ என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
சைவத்திருமுறைகளில்‌ 9ஆம்‌ திருமுறையில்‌ கருவூரார்‌ பாடி இருப்பதாகக்‌ காணப்படும்‌ பத்து பதிகங்களில்‌ மூன்றாவது பதிகம்‌ நீங்கலாக மற்ற ஒன்பது பதிகங்களின்‌ இறுதியிலும்‌ தன்னைக்‌ கருவூரான்‌, கருவூரானேன்‌ என்றே குறிப்பிட்டுள்ளார்‌. தான்‌ கருவூரில்‌ பிறந்ததாலோ அல்லது வாழ்ந்ததாலோ தன்னைத்‌ தன்‌ ஊரின்‌ பெயரால் வெளிப்படுத்திக் கொண்டர்‌ என்பது இதன்மூலம்‌ தெரிகிறது. இது நம்பியாண்டார்‌ நம்பியின்‌ காலத்திற்கு முற்பட்டநிலை.
சித்தர்‌ ஞானக்‌ கோவையில்‌ வரும்‌ கருவூரார்‌ பூஜாவிதி பாடல்கள்‌ பெரிதும்‌ சித்தர்களின்‌ நிலைகளையே விளக்குகின்றன.இந்த கருவூரார்‌ பூஜாவிதி'யை இயற்றிய பிற்காலத்தில்‌ தன்னை போக முனி அருளால்‌ வந்த பாலன்‌ என்று கூறிக்கொள்வதாலும்‌, தான்‌ நீண்டகாலம்‌ (41 கற்பகாலம்‌) வாழ்ந்ததாகக்‌ கூறியுள்ளதாலும்‌ அவர்‌ போகரின்‌ சீடராகி இந்த நெறியில்‌ உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்‌ என்றும்‌ சித்தராக நீண்டகாலம்‌ வாழ்ந்து இருக்கிறார்‌ என்றும்‌ தெரிகிறது.

சித்தர்களின்‌ வாழ்க்கை வரலாறுகளை ஊன்றிப்‌ பார்க்கும்‌ போது இவர்‌ கி.பி.ஐந்தாம்‌ நூற்றாண்டு முதல்‌ 12 ஆம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதி -வரை சுமாராக 700 ஆண்டுகள்‌ வாழ்ந்திருக்கிறார்‌. இவர்‌ சித்தராக மாறிய பிறகு எண்ணற்ற அற்புதங்களைச்‌ செய்து முடித்து விட்டு சிவத்துடன் கலந்து விட்டார்.
இனி வருபவை அவர் இயற்றிய அற்புதங்களும் சித்தியும் ஆகும்.

திருக்குகூரில் நிகழ்ந்தது


சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதற்கு இணங்க கருவூரார் நடந்துகொண்டே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதிக் கரையில் உள்ள வைணவத்தலமான திருக்குருகூரை சென்றடைந்தர் அவர் செல்லும்‌ முன்பே திருமால்‌ தன்‌ அடியார்களின்‌ கனவில்‌ தோன்றி சித்தரை எதிர்‌ சென்றழைத்து அவரை நன்‌ முறையில்‌ உபசரிக்கும்படி கட்டளையிட்டார்‌. அதன்படி திருக்குருகூர்‌ வைணவப் பெரியார்களின்‌ உபசரிப்புடன்‌ கருவூரார்‌ திருக்குருகூர்‌ மாலவனை தரிசித்து விட்டுத்‌ தன்‌ திருத்தல யாத்திரையைத்‌ தொடர்ந்தார்‌.

கஜேந்திர மோட்சம் என்னும் தல நிகழ்ச்சி


கஜேந்திர மோட்சத்தை அடைந்தவுடன் அத்தலப் பெருமாளான முன்றீசரை வணங்கிகள் வேண்டும் என்று கேட்டார் முன்றீசர் காளிக்குக் கட்டளையிட காளி ஒரு மது குடத்தை கொண்டு வந்து கொடுத்தாள்‌. தொடர்ந்து அங்கிருந்த கர்ம யோகிகளைப்‌ பார்த்து மீன்‌ கொண்டு வாருங்கள்‌ என்றார்‌.அவர்கள் எங்கு தேடியும்‌ மீன்‌ கிடைக்கவில்லை. உடனே வன்னி மரத்தை நோக்கி மீன்‌ மாரி பொழிக, என அம்மரத்தின்‌ மேலிருந்து ஏராளமான மீன்கள்‌ கொட்டின.அவர்கள்‌ எங்களுக்கு முக்தி அருளவேண்டும்‌ என வேண்ட அவர்களைப்‌ பொதிகை மலைக்கு வரும்படிக்‌ கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பெருமாள்‌ கோவிலுக்குச்‌ சென்று கோவிலின்‌ முன்‌ நின்று பெருமாளைக்‌ கூவி அழைத்தார்‌. பெருமாள்‌ வராததால்‌ சித்தர்‌ “பெருமாள்‌ இல்லாத இக்‌கோவிலில்‌ பூசையும்‌ இல்லாதிருக்கட்டும்‌' என்று சபித்துவிட்டு திருக்குற்றாலம் சென்று குற்றால நாதரை தரிசித்து விட்டுபொதிகை மலையை அடைந்தார்‌. அங்கு அகத்திய முனிவரை தரிசித்துவிட்டு முன்னரே அங்கு வந்து காத்திருந்த கர்ம யோகிகளுக்கு முக்தியளித்து விட்டுத்‌ திருநெல்வேலியைச்‌ சென்றடைந்தார்‌.

திருநெல்வேலியில்‌ நிகழ்ந்தது


திருநெல்வேலியில்‌ நெல்லையப்பர்‌ கோவிலின்‌ முன்நின்று நெல்லையப்பரை அழைத்தார்‌. அப்போது மூலவருக்கு நைவேத்திய தீபாராதனைகள்‌ நடந்து கொண்டிருந்ததால்‌ உடனே சுவாமி வெளிவரவில்லை. அதனால்‌ வெகுண்ட சித்தர்‌ இங்கு இறைவன்‌ இல்லையா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து அகன்றார்‌. அதற்குள்‌ கோவில்‌ முழுவதும்‌ எருக்கு முளைத்துப்‌ புதராய்‌ மண்டிவிட்டது. நெல்லையப்பர்‌ சித்தரைத்‌ துரத்திச்‌ சென்று மானூரில்‌ தரிசனம்‌ தந்து மீண்டும்‌ திருநெல்வேலிக்கு அழைத்து வந்தார்‌. கருவூரார்‌ காலடி பட்டதுமே கோயில்‌ வளாகம்‌ முழுவதும்‌ மண்டியிருந்த எருக்கன்‌ செடிகள்‌ மறைந்து கோவில்‌ வளாகமே மலர்வனமாக மாறியது. சித்தர்‌ திருநெல்வேலியிலிருந்து திருவிடை மருதூர்‌ சென்று மகாலிங்ககேஸ்வரரை தரிசித்து விட்டு மேலும்‌பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌.

தஞ்சையில் நிகழ்ந்‌தது


தஞ்சைப்‌ பெரியகோவிலில்‌ சிவ லிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்ய சிலாசிற்பிகளால்‌ முடியவில்லை. பிரதிஷ்டை செய்வதற்கான மருந்து கெட்டிப்படாமல்‌ இளகிய நிலையிலேயே இருந்தது. அதனால்‌ கோவிலுக்கு குடமுழுக்கு செய்யமுடியாமல்‌ இராஜராஜ சோழ மன்னன்‌ தவித்துக் கொண்டிருந்தான்‌. அப்போது கருவூர்‌ சித்தர்‌ ஒருவரால்தான்‌ இந்த லிங்கப்‌ பிரதிஷ்டை செய்ய முடியும்‌ என்று அசரீரி ஒலித்தது. அப்போது உருமாறி அங்குள்ள கூட்டத்தில்‌ இருந்தபோகநாதர்‌, தஞ்சைப்‌ பெரிய கோவிலுக்கு வா என்று சீட்டெழுதி அதை ஒரு காக்கையின் காலில் கட்டி அனுப்பி கருவூர்த் தேவரை வரவழைத்தார்.அங்கு வந்த கருவூரார்,போகர் முதலியோரின்‌ அனுமதி பெற்று ஆவுடையுடன்‌ சிவலிங்கத்தைச்‌ சேர்த்து நிறுத்தி பந்தனம்‌ செய்து வலிமையாகச்‌ சிவலிங்கப்‌ பிரதிஷ்டை செய்து யாவரையும்‌ மகிழ்வித்தார்‌.
அதைத்தொடர்ந்து பல்லாயிரம் பேருக்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவு முழுவதையும் தாமே உண்டு அனைவரின் வயிரையும் நிரம்புமாறு செய்தார்.

திருவரங்கத்தில் நிகழ்ந்‌தது


தஞ்சையிலிருந்து திருவானைக்கா சென்று ஜம்புலிங்‌கேஸ்வரரை வழிபட்டு திருவரங்கம்‌ சென்றார்‌. அங்கே தாசி கோமளவள்ளி என்ற பொது மடந்தை அவருடைய திவ்யமான உடலழகைக்க்கண்டு அவர் மீது அதிமோகம்‌ கொண்டாள்‌. அவள்‌ தன் விரக நிலையை அவருக்கு உணர்த்தவே அவரும்‌ அதற்கு உடன்பட்டு அவளுடன் இரண்டு நாள் தங்கி அவளை மோகன சிறையில்‌ அடைபட்டு மயங்கி இருக்கச்‌ செய்தார்‌. இரண்டாம்நாள்‌. அதிகாலையில்‌ அரங்க நாதரிடமிருந்து ஒரு இரத்தினமாலையைப்‌ பெற்று அவளுக்குப்‌ பரிசாகக்‌ கொடுத்துவிட்டு விடைபெற்றார்‌. பிரிவாற்றாமையால்‌ வருந்திய அப்பெண்ணிடம்‌ 'வருந்தாதே' நீ நினைக்கும்போதெல்லாம் நான்‌ வந்துவிடுவேன்‌ என்று கூறிவிடைபெற்றுச்‌ சென்றார்‌.
பொழுதுவிடிந்தவுடன்‌ அரங்கநாதர்‌ கழுத்தை அலங்கரித்த இரத்தினமாலையைக்‌ காணாத அர்ச்சகர்‌ அவள்‌ அதை அணிந்திருக்கக்‌ கண்டார்‌. இது உனக்கு யாரால்‌ கொடுக்கப்பட்டது என்று அவளைக்‌ கேட்க அவள்‌ கருவூராரை நினைக்க, அவள்‌ நினைத்த மாத்திரத்தில்‌ கருவூரார்‌ அங்கு பிரசன்னமாகி இதனைத்‌ திருவரங்கன்‌ எனக்குக்‌ கொடுக்க யான்‌ இதை இவளுக்குக்‌ கொடுத்தேன்‌ என்றார்‌. கோவிலார்‌ அதை நம்பாததால்‌ திருமாலே அசரீரியாக ஆகாயத்தில்‌ தோன்றி, இதை யாமே இவருக்குக்‌ கொடுத்தோம்‌ என்று கூறினார்‌. கோவிலார்‌ அனைவரும்‌ சித்தர்பாதம்‌ பணிந்து மன்னிப்பு பெற கருவூர்‌ சித்தர்‌ அவ்விடம்‌ விட்டகன்றார்‌.

சிலை செய்து கொடுத்து சிறையில்‌ அடைபடல்‌


பின்‌ ஒரு சமயம்‌ ஒரு சோழ மன்னன்‌ தன்‌ கனவில்‌ நடராஜரின்‌ திவ்ய தரிசனம்‌ பெற்றான்‌. தான்‌ கனவில்‌ கண்ட அதே சிலையை உண்மையிலேயே செய்து முடிக்க முடிவு செய்தான்‌. உலோக வேலைப்பாட்டில்‌ சிறந்த பல சிற்பிகளை அழைத்து வேண்டிய அளவு பொன்களை அவர்களிடம்‌ கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்‌ அச்சிலையைச்‌ செய்து முடிக்கவேண்டும்‌ என்று அரசாணை பிறப்பித்தான்‌.
சிற்பிகள்‌ பொன்னை உருக்கி சிலை செய்ய முயன்றார்கள்‌. பலமுறை முயன்றும்‌ வார்ப்புகள்‌ உடைந்து கொண்டே இருந்தன. மன்னன்‌ வைத்த கெடு முடியும் நாள்‌ வந்துவிட்டது. தங்களால்‌ சிலை செய்ய முடியாததால்‌ தாங்கள்‌ அனைவரும்‌ கழுவேற்றப்படுவது உறுதி என்று முடிவுசெய்து அந்த சிற்பிகள்‌ திக்கற்ற எங்களுக்கு நீயே துணை என்று முடிவு செய்து அந்த சிற்பிகள் திக்கற்ற எங்களுக்கு நீயே துணை என்று இறைவனை வேண்டி மனம்‌ உருகி நின்றனர்‌. அப்போது அங்கே வந்த கருவூரார்‌ நீங்கள்‌ யாவரும்‌ சிறிது நேரம்‌ வெளியில்‌ போய்‌ இருங்கள்‌; நான்‌ சிலையை வார்த்துத்‌ தருகிறேன்‌ என்று கூறி சிற்பிகளை வெளியேற்றிவிட்டு தங்கத்தை உருக்கி அதில்‌ ஒரு துளி செந்தூரத்தைச் சேர்த்து அச்சில் வார்த்தார். அற்புதம்‌ அற்புதம்‌ என்று யாவரும்‌ பாராட்டும்‌ வண்ணம்‌ நடராஜர் சிலை அமைந்திருந்தது.
மறுநாள்‌ காலையில்‌ வந்து சிலையைப்‌ பார்த்த மன்னன்‌ தங்கத்தின்‌ நிறம்‌ குறைந்திருந்ததைக் கண்டு சிற்பிகளைப்‌ பார்த்து தங்கத்தை திருடிக் கொண்டு செம்பால்‌ சிலை செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள்‌ என்று கூற சிற்பிகள்‌ கருவூராரைக்காண்பித்து இந்த யோகிதான்‌ இச்சிலையைச்‌ செய்தார்‌ என்றார்கள்‌. மன்னன்‌ கருவூராரைச்‌ சிறையில்‌ அடைத்தான்‌.

ஏழை சிற்பிகளைக்‌ காக்கும்‌ பொருட்டு சிலைசெய்யக்‌ கருவூராரை அனுப்பிய திருமூலர்‌ ஞானத்தால்‌ நடந்தவற்றை அறிந்து அங்கு வந்து அந்த சோழ மன்னனைப் பார்த்து உனக்கு தங்கம் தானே வேண்டும். நீ கொடுத்த தங்கத்தின் எடைக்கு சமமாக வெள்ளியைக் கொண்டுவா. அதை நீயே உருக்கு என்றார். உருகிய வெள்ளியில்‌ வீசம்‌ (16 இல்‌ ஒரு பங்கு) செந்தூரத்தைச்‌ சேர்த்தார்‌.
அந்தவெள்ளி பத்தரை மாற்றுத்‌ தங்கமாக மாறியது. திருமூலர்‌ உடனே மன்னனைப்‌ பார்த்து சோழ மன்னா! நீ உன்‌ தங்கத்தை எடுத்துக்கொண்டுபோ என்றார்‌.
(இந்தச்‌ செய்தி “கொங்கணவர்‌ வாதகாவியம்‌ 798, 799 ஆம்‌ பாடல்களில்‌ இடம்பெற்றுள்ளது. இப்போதுள்ள தில்லை நடராஜர்‌ சிலையே 11-ம்‌ நூற்றாண்டில்‌ கரூவூர்‌ சித்தர்‌ வார்த்த சிலை என்ற கருத்தும் உள்ளது)

அடுத்து திருமூலர்‌ சோழா! ஆசை என்ற மாய மலையால்‌ நீ மறைக்கப்பட்டுள்ளாய்‌. உன்னால்‌ உண்மையான பரவெளியை உணர முடியவில்லை. உன் ஆசை அகண்டுவிட்டால் உனக்குள் உண்மையான மூலப்பொருள் தெரியும் என்றார்.
இந்தசொற்களால்‌ உள்ஒளி பெற்றசோழ மன்னன்‌ திருமூலரின்‌‌பாதம்‌ பணிந்து அக்கணமே துறவு பூண்டு யோகியானான்‌.
இச்செய்தி கொங்கணவர்‌ வாத காவியம்‌ 803-ஆம்‌ பாடலில்‌ உள்ளது.

கருவூர் சித்தர்‌ சிவத்துடன்‌ கலந்தது


கருவூரார்‌ ஐந்தாம்‌ நூற்றாண்டில்‌ தொடங்கி 12 ஆம்‌ நூற்றாண்டுவரை சுமார்‌ 700 ஆண்டுகள்‌ வாழ்ந்தவர்‌. எனக் கண்டோம்‌. இவற்றில்‌ பன்னிரண்டாம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ வாழ்ந்த சைவ சமய வேத பிராமணர்‌ பலர்‌ இவரது உடலழகையும்‌ துறவு வாழ்க்கையையும்‌ பார்த்து இவர்‌ குல ஒழுக்கம்‌ தவறிய வைதீக பிராமணர்‌ என முடிவு செய்து அக்கால சோழ மன்னனிடம்‌ சென்று குல ஒழுக்கம்‌ தவறிய இந்த பிராமணரைத்‌ தண்டிக்க வேண்டும்‌ என்று முறையிட்டனர்‌.சோழ மன்னனும்‌ கருவூராரின்‌ தவக்குடிலுக்குச்‌ சென்று பார்வையிட்டான்‌. அங்கு வைதீக கருமங்களுக்குரிய பொருள்கள்‌ மட்டுமே இருக்கக்‌ கண்டு சித்தரிடம்‌ மன்னிப்பு கேட்டான்‌. கருவூரார்‌ நீங்கள்‌ அந்தப்‌ பிராமணர்களின்‌ வாழ்விடங்களையும்‌ சென்று பாருங்கள்‌ என்றார்‌. அவர்‌ கூறியபடி மன்னன்‌ அவ்விடங்களுக்குச்‌ சென்று பார்க்க அந்தப்‌ பார்ப்பனர்களின்‌ வாழ்விடங்களிலெல்லாம்‌. புலாலும்‌, மீனும்‌, மதுக்‌ குடங்களுமே நிறைந்திருந்தன. அதனால்‌ கோபமுற்ற மன்னன்‌ அந்த வைதீக பிராமணர்கள்‌ அனைவரையும்‌ நாடு கடத்திவிட்டான்‌.
கடைசியில்‌ அவர்கள்‌ தாங்களே கருவூர்‌ சித்தரை ஒழித்து கட்டுவது என்ற முடிவுக்கு வந்தனர்‌. தக்க ஆயுதங்களுடன்‌ சென்று அம்பிரா நதிக்‌ கரையிலிருந்த அவரைத்‌ துரத்தினர்‌. சித்தரும்‌, தான்‌ பூதவுடலைத்‌ துறக்கும்‌ நேரம்‌ வந்துவிட்டதை உணர்ந்தவராய்‌ அருகில்‌ இருந்த பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலுள்‌ சென்று மூலவர்‌ லிங்கத்தை கட்டித்தழுவ சோதிமயமாக மாறி சிவலிங்கத்தோடு இரண்டறக் கலந்தார்‌. இந்த வரலாறு கொங்கு மண்டல சதகத்திலும்‌ கருவூரார் பலதிரட்டிலும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

ஜீவ சமாதி


இவர்‌ கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டும்‌ தஞ்சைப்‌ பெருவுடையார் கோவில்‌ பிரகாரத்தில்‌ தனிக்கோவில்‌ கொண்டும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. வியாழக்கிழமைகளில்‌ இவரை வழிபட்டு வருபவர்கள்‌ வளங்கள்‌ எல்லாம்‌ பெற்று நிறைவுடைய நல்வாழ்வையும்‌ பேரின்பப்‌ பேற்றையும்‌ பெறுவர்‌ என்பது உறுதி.

கருவூராரை வழிபடுவோர்‌ கவனத்திற்கு


கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலில்‌ தென்புறத்தில்‌ கருவூர்‌ சித்தர்‌ சமாதி உள்ளது. சமாதி மீது கருவூரார்‌ சிலை உள்ளது. இவருக்கு பெளர்ணமிகளில்‌ சிறப்பு பூஜைகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்தப்‌ பெளர்ணமி பூஜைகளில்‌ கலந்து கொள்பவர்களின்‌ நியாயமான வேண்டுதல்கள்‌ தவறாது நிறைவேறிவருகின்றன.

முடிவுரை


அவர்‌ இயற்றிய கருவூரார்‌ பூஜா விதி என்ற நூலில்‌ அவர்‌ வாலைத் தெய்வத்தை பூசிப்பவர்‌ என்று கூறுகிறார்‌. பொறிபுலன்களைக்‌ கட்டுப்படுத்த புத்தியை ஒரு நிலைப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்‌ என்கிறார்‌. மெளனத்தின்‌ மேன்மையைப்‌ புலப்படுத்தியுள்ளார்‌. ஆதியினை அறிவதால் பெறும் சிறப்பு, போலி சித்தர்களின்‌ இயல்புகள்‌ ஆகியவற்றையும்‌ விளக்கியுள்ளார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக