Top bar Ad

25/9/18

திருமூலர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. நம்பத் தகுந்த வரலாறு
  3. சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு
  4. திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌
  5. வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை
  6. திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து

முன்னுரை


திருமூல நாயனாரும்‌ திருமூல சித்தரும்‌ ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூலநாயனாரின் புராணக்கருத்து. திருமூல நாயனாரின்‌ ஞானமும்‌ (77 பாடல்கள்‌) சித்தர்‌ திருமூலரின்‌ மந்திரமும்‌ அவர்‌ தவத்தினால்‌ சிவநிலை அடைந்தார்‌ என்பதையே வலியுறுத்‌துகின்றன. அவர்‌ தவ வாழ்க்கையை வாழ்ந்தார்‌ என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும்‌ புராணங்களும் கூறுகின்றன.

நம்பத் தகுந்த வரலாறு


நாயன்மார்களில்‌ திருமூலர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி மாதம்‌ மூல நட்சத்திரம்‌. இது சிதம்பரம்‌ முதலான அனைத்து சிவாலயங்களும்‌ கொண்டுள்ள நட்சத்திரம்‌. இந்த சித்தர்‌ மூல நட்சத்திரத்தில்‌ பிறந்ததால் திருமூலர்‌ என்று அழைக்கப்படுகிறார்‌ என்று கொள்வதே பொருத்தமானது.

அவர்‌ வேளாளர்‌ குலம்‌ ஒன்றின்‌ 21 வது தலைமுறையைச்‌ (போகர்‌ 7000/5737). ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள்‌ சமாதி கூடியே வாழ்ந்தவர்‌ (போ. 5862). அவர்‌ திருமந்திரம்‌ 3000 பாடல்களைப் பாடியுள்ளார்‌. கடைசியில்‌ (3000 ஆண்டு முடிவில்‌) திருவாவடுதுறையில்‌ உள்ள சிவாலயத்தின்‌ மேற்கேயுள்ள அரச மரத்தடியில்‌ ஜீவ சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌. இதற்குத்‌ திருவாவடுதுறை தலபுராணமே சான்றாக உள்ளது.

சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு


பாடல்கள்‌ 3564-3591

திருமூலர்‌ - பெயர்க்காரணம்

கயிலைநாதனின்‌ முதல்‌ பெரும்‌ காவலரான திருநந்தி தேவரின்‌ மாணாக்கரில்‌, எண்‌ வகை சித்திகளும்‌ கைவரப்பெற்ற சிவயோகியார்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ அகத்திய முனிவரிடம்‌ கொண்ட நட்பின்‌ காரணமாக, அவரோடு சில காலம்‌ தங்க எண்ணினார்‌. இதையடுத்து அந்த சிவயோகியார்‌, அகத்திய முனிவர்‌ தங்கி அருள்‌ புரியும்‌ பொதிகை மலையை அடையும்‌ பொருட்டு, திருக்கயிலையில்‌ இருந்து புறப்பட்டார்‌. வழியில்‌ உள்ள சிவாலயங்களை தரிசித்து விட்டு, இறுதியில்‌ திருவாவடுதுறையை அடைந்தார்‌.

மூலன்

சில காலம்‌ அங்கேயே தங்கியிருந்தார்‌. சிறிது நாட்கள்‌ கழித்து அங்கிருந்து புறப்பட திட்டமிட்டார்‌. அப்போது அவரை அந்த காட்சி தடுத்து நிறுத்தியது. காவிரிக்‌ கரையில்‌ சோலைகளாக இருந்த இடத்தில்‌ மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த பசுக்கூட்டம்‌ கதறி அழுவதைக்‌ கண்டு திகைத்துப்‌ போனார்‌ அந்த சிவயோகியார்‌. பசுக்களின்‌ இந்த பெரும்‌ துயரத்தை அறிய முற்பட்டார்‌ சிவயோகியார்‌. அதற்கு பதிலும்‌ கிடைத்தது. அந்தணர்கள்‌ வாழும்‌ சாத்தனூரிலே தொன்றுதொட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வரும்‌ இடையரான மூலன்‌ என்பவர்‌ இறந்து விட்டார்‌. அவர்‌ இறப்பை தாங்க முடியாத பசுக்கள்‌, அந்த மூலனின்‌ உடலைச்‌ சுற்றி சுழன்று வந்து நாக்கால்‌ நக்கியபடியும்‌, மோப்பம்‌ பிடித்தபடியும்‌ வருந்திக்‌ கொண்டிருந்தன. மேய்ப்பவன்‌ இறந்தமையால்‌ பசுக்கள்‌ அடைந்த துயரத்தினைக்‌ கண்ட சிவயோகியார்‌, அந்தப்‌ பசுக்களின்‌ துயர்‌ துடைக்க முன்‌ வந்தார்‌.

பரகாயப்‌ பிரவேசம்

எண்‌ வகை சித்திகளையும்‌ கற்றுத்‌ தேர்ந்திருந்த அவர்‌, அவற்றுள்‌ ஒன்றான பரகாயப்‌ பிரவேசம்‌ (கூடுவிட்டு கூடு பாய்தல்‌) என்ற சித்தியை கையாண்டார்‌. அதன்படி தன்‌ உடலை மறைவாக இருக்கும்படி செய்து விட்டு, மந்திரத்தை பிரயோகம்‌ செய்து, தன்‌ உடலில்‌ இருந்து, இறந்து கிடந்த மூலனின்‌ உடலுக்கு தன்‌ உயிரை மாற்றம்‌ செய்தார்‌. மூலன்‌ எழுந்தார்‌. மூலனின்‌ உடலில்‌ தன்‌ உயிரை செலுத்தியதன்‌ காரணமாக அவர்‌ திருமூலர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. தன்‌ மேய்ப்பாளன்‌ எழுந்த மகிழ்ச்சியில்‌, அவரைச்‌ சுற்றியிருந்த பசுக்கள்‌, நாவால்‌ நக்கியும்‌, மோந்தும்‌, கனைத்தும்‌ தங்கள்‌ மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பின்னர்‌ மகிழ்வில்‌ மேய்ச்சலை தொடர்ந்தன.

பின்னர்‌ மகிழ்ச்சிப்‌ பெருக்கில்‌ வயிறார மேய்ந்த பசுக்கள்‌, கூட்டமாகச்‌ சென்று காவிரியாற்றில்‌ நன்னீர்‌ பருகிக்‌ கரையேறின. அப்பசுக்களைக்‌ குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்‌ படி செய்து பாதுகாத்தருளினார்‌ திருமூலர்‌. மாலை பொழுது வந்ததும்‌, பசுக்கள்‌ தம்‌ தம்‌ கன்றுகளை நினைத்து, தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. பசுக்கள்‌ செல்லும்‌ வழியில்‌ தொடர்ந்து சென்ற திருமூலர்‌, பசுக்கள்‌ யாவும்‌ தம்‌ தமது வீடுகளுக்கு செல்வதை வழியில்‌ நின்று கவனித்தார்‌. இந்த நிலையில்‌ மாலைப்‌ பொழுது கடந்தும்‌ தன்‌ கணவர்‌ வராததை எண்ணி வருந்திய மூலனின்‌ மனைவி, கணவனைத்‌ தேடி சிவயோகியார்‌ நின்ற இடத்திற்கு வந்தாள்‌. அங்கு தன்‌ உணர்வற்று நின்ற தன்‌ கணவனைக்‌ கண்டு அவரைத்‌ தொட முயன்றாள்‌. அப்போது திருமூலர்‌ உருவில்‌ இருந்த சிவயோகியார்‌ சற்று பின்‌ வாங்கி, அந்தப்‌ பெண்மணியை தடுத்து நிறுத்தினார்‌. கணவர்‌ தன்னைக்‌ கண்டு அஞ்சி பின்வாங்குவதை பார்த்து அந்தப்‌ பெண்‌ கலங்கி நின்றாள்‌.

பற்றற்ற நிலை

திருமூலரோ, 'பெண்ணே! நீ எண்ணியவாறு இங்கு உனக்கு, என்னுடன்‌ எத்தகைய உறவும்‌ இல்லை' என்று கூறிவிட்டு, அந்த ஊரில்‌ இருந்த பொது மடத்தில்‌ புகுந்து சிவயோகத்தில்‌ ஆழ்ந்தார்‌. மூலனின்‌ மனைவி, ஊர்‌ பெரியவர்கள்‌ பலரையும்‌ அழைத்துச்‌ சென்று பார்த்தும்‌, சிவயோகியார்‌ அசைவற்று இருந்தார்‌.

அவரது உடல்‌ யோகத்தில்‌ ஆழ்ந்திருந்தது. ஊர்‌ பெரியவர்கள்‌, மூலனின்‌ மனைவியிடம்‌, 'அவர்‌ பற்றற்ற நிலைக்கு சென்றுவிட்டார்‌. இனி திரும்ப மாட்டார்‌ என்று கூறி அழைத்துச்‌ சென்றனர்‌. மூலனின்‌ மனைவி கதறியபடி அவ்விடம்‌ விட்டு அகன்றாள்‌. மறுநாள்‌ தன்‌ உடலை மறைத்து வைத்த இடத்திற்கு சென்ற சிவயோகியார்‌, உடலைக்‌ காணாது கலக்கமுற்றார்‌ அப்போது இது ஈசனின்‌ எண்ணம்‌ என்பதையும்‌, சிவாகமங்களின்‌ அரும்பொருளை திருமூலரது வாக்கினால்‌ தமிழிலே வகுத்துரைக்கக்‌ கருதியதால்‌ போடப்பட்ட திருவிளையாடல்‌ என்பதையும்‌ அவர்‌ தெளிந்து உணர்ந்து கொண்டார்‌.

இதையடுத்து திருவாவடுதுறை கோவிலை அடைந்த திருமூலர்‌ அங்கிருந்த, அரச மரத்தடியில்‌ அமர்ந்து, ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம்‌ பாடல்களை எழுதினார்‌. பின்னர்‌ கயிலைநாதர்‌ இருப்பிடம்‌ சென்றடைந்தார்‌.

திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌


வீரசேனத் திருமூலர் கதை

பாண்டிய நாட்டைச்‌ சேர்ந்த இராசேந்திரபுரி ஒரு சிற்றரசு. அவ்வூர்‌ மன்னனான வீரசேனன்‌ இரக்கமற்றவன்‌. தன்‌ மகிழ்ச்சிக்‌காக கொலையும் செய்யக்‌ கூடியவன்‌. பசி, பட்டினியால்‌ வாடிய அவன்‌ நாட்டு மக்களும்‌ அவனுடைய அன்பு மனைவியும் கூட அவனை வெறுத்தனர். _ ஒருநாள்‌ ஒரு கொடிய நாக விஷத்தை நுகர்ந்து அவன்‌ இறந்து விட்டான்‌. அப்போது சூக்கும உடலோடு விண்‌ வழியில்‌ சென்று கொண்டிருந்த திருமூலர்‌ அம்மன்னனின்‌ உடலைச்‌ சுற்றி அரசியாரும்‌ மந்திரிகளும்‌ அழுது புலம்பிக்கொண்டிருந்ததைக்‌ கண்டார்‌. சதுரகிரி சென்று அம்மலை இடுக்கொன்றில்‌ தன்‌ கல்பதேகத்தை மறைத்து வைத்ததுடன்‌ அதற்குத்தன்‌ முதன்மைச்‌ சீடரான குருராஜனைக்‌ காவல்‌ வைத்து விட்டு சூக்கும உடலுடன்‌ அரண்மனைக்கு வந்து இறந்த மன்னனின்‌ உடலில்‌ புகுந்து வீரசேனத்‌ திருமூலரானார்‌. திருமூலவீரசேனர்‌ ஆட்சியில்‌ இராசேந்திரபுரி செழிப்படைந்தது. மக்கள்‌ எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்‌. அரசியும்‌ பழைய வீரசேனனிடம்‌ அடைந்திராத இன்பங்களை திருமூல வீரசேனரிடம்‌ அனுபவித்தாள்‌. மன்னன்‌ உடலில்‌ இருப்பவர்‌ ஒரு மகா சித்தர்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டாள்‌. அவரிடம்‌ அன்பொழுகப்‌ பேசி, அவர்‌ தம்‌ கற்பதேகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும்‌ அத்தேகத்தையும்‌ எரித்து அழிக்கும்‌ முறைகளையும்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டாள்‌. பிறகு மலைவாழ்‌ மக்களான பளிங்கர்களுக்கு பணம் கொடுத்து சித்தரின்‌ உடலை அழிக்கச்‌ சொன்னாள்‌.

சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நாள்‌ விதி விளையாடியது. நீண்ட காலமாகத்‌ தன்‌ குரு திரும்பி வராததால்‌ குருராஜன்‌ திருமூலரைத்‌ தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தார்‌. அவர்‌ நகர்ப்புறம்‌ வந்த சமயம்‌ பார்த்து பளிங்கர்கள்‌, அரசி கூறிய படி. சித்தரின்‌ கல்ப தேகத்தை எரித்து விட்டனர்‌. அன்று வேட்டைக்குச்‌ சென்ற மன்னர்‌ வழியில்‌ தன்‌ சீடன்‌ வருவதைக்‌ கண்டு பயந்து அவரை அழைத்துக்கொண்டு மலைக்குகைக்குச்‌ சென்றார்‌. தான்‌ பயந்தபடி தன்‌ கல்ப தேகம்‌ எரிந்து கிடந்ததைக்‌ கண்ட திருமூலர்‌ நடந்தவற்றையெல்லாம்‌ ஞானத்தால்‌ உணர்ந்து! தெளிந்தார்‌. குருராஜரைத்‌ தனித்து தவம்புரிந்து கரையேற வாழ்த்தி அனுப்பிவிட்டு அரண்மனைக்கு வந்தார்‌. வந்த சில நாட்களிலேயே மீண்டும்‌ தம்‌ தவ வாழ்க்கையைத்‌ தொடர சதுரகிரிக்கே திரும்ப வந்துவிட்டார்‌.

வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை


திருவானைக்காவில்‌ சம்புகேசன்‌ என்ற பிராமணன்‌ ஞான மார்க்கக்‌ கல்வியில்‌ சிறந்து விளங்கினான்‌. குருவின்‌ துணையில்லாமலே தன்னால்‌ தவம் பயில முடியும்‌ என்ற கர்வத்தில்‌ அவன்‌ சதுரகிரி சென்று அங்கு பிராணாயாமத்தைத்‌ தொடங்கினான்‌. தவறாகக் கும்பகம்‌ செய்ததன்‌ விளைவாக மூச்சை வெளிவிட முடியாமல்‌ உயிர்நீத்தான்‌. அவனது ஆவிபிரிந்த அரைமணி நேரத்திற்குள்‌ அங்கு வந்த வீரசேனத் திருமூலர்‌, அரசன்‌ உடலிலிருந்து வெளிப்பட்டு சம்புகேசன்‌ உடலில்‌ புகுந்து சம்பு கேசத் திருமூலரானார்‌. தான்‌ குடியிருந்த அரசனின்‌ உடல்‌ பழுதுபடக் கூடாது என நினைத்து அவன்‌ உடலை ஒரு மரப்பொந்தில்‌ வைத்து மூடினார்‌. அந்த மகாசித்தரின்‌ கைப்பட்ட அந்த மரப்பொந்து தானாகவே மூடிக்கொண்டது. அந்த மரம்‌ இனி அரச மரம்‌ என்ற பெயரில்‌ தழைக்கட்டும்‌ என்று வாழ்த்திவிட்டு சதுரகிரி காட்டுப் பகுதியில்‌ மீண்டும்‌ தம் தவ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌. அந்த மலைப்பகுதியிலும்‌ அவருக்கு பல சீடர்கள்‌ வந்து சேர்ந்தனர்‌. அவர்களையெல்லாம்‌ உயர்ந்த தவயோகிகளாக உருவாக்கி சத்தி பெறச்‌ செய்தார்‌. அதோடு திருமந்திரம்‌ எண்ணாயிரம்‌ முதலான பல நூல்களையும்‌ எழுதி முடித்துவிட்டு சம்புகேசத்‌ திருமூலராக அங்கேயே சமாதி பூண்டார்‌ என்று அகத்தியரின்‌ செளமிய சாகரம்‌ கூறுகிறது.

திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து


சென்னை சித்த மருத்துவ நூல்‌ ஆய்வு மைய நூல்கள்‌ திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி அடைந்துள்ளார்‌ என்று கூறுகின்றன. இதே கருத்தை போக முனிவரும்‌ கூறியுள்ளார்‌. போகர்‌ ஜனன சாகரம்‌ 312 ஆம்‌ பாடலின்படி திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி கூடி லிங்க வடிவில்‌ உள்ளார்‌. தில்லை நடராஜர்‌ கோவிலில்‌ அவர்‌ சன்னதி ஸ்ரீமூலன்‌ சன்னதி என்றே உள்ளது. அவருடன்‌ வாழ்ந்த பதஞ்சலி முனிவரும்‌, வியாக்ர பாதரும்‌ அக்கோவிலில்‌ சிலை வடிவில்‌ உள்ளனர்‌. திருமூலர்‌ சன்னதியை மையமாகக்‌ கொண்டு தான்‌ பாண்டிய மன்னர்களின்‌ ஆதரவில்‌ கருவூர்த்தேவரால்‌ சிதம்பரம்‌ நடராஜர்‌ கோவில்‌ கட்டப்பட்டது.

(போகர்‌ ஏ. 5769).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக