Top bar Ad

21/9/18

இடைக்காடர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. இடைக்‌காடரும் நவநாத சித்தரும்
  3. போகரும் இடைக்காடரும்
  4. திருமாலின் அவதாரம்
  5. வாழ்ந்த காலம்
  6. 12 ஆண்டு கடும்‌ பஞ்சம்
  7. 12 வருடங்கள்‌ கடந்த பின்
  8. தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌
  9. மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்
  10. அவர்‌ சமாதி பற்றிய கருத்து
  11. அமைந்துள்ள இடம்

முன்னுரை


பன்னெடுங்காலமாக திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வரும்‌ மகாசித்தர்‌ இடைக்காடர்‌. திருப்பதியில்‌ கொங்கணவர்‌ வேங்கடவனாய்‌ இருந்து வரையாது செல்வ வளத்தை வழங்கிக்‌ கொண்டிருப்பது போல்‌ இடைக்காடர்‌ திருவண்ணாமலையில்‌ எண்ணற்ற சித்தர்கள்‌ தோன்றி மக்களிடையே அருள்‌ நெறியை இந்த நில உலகம்‌ உள்ள வரை பரப்பிக் கொண்டிருக்க வழியமைத்து வருகிறார்‌. பதினெண்‌ சித்தர்களின்‌ சமாதிக்‌ கோவில்களில்‌ அருணாசலேஸ்வரர்‌ கோவிலிலுள்ள அண்ணாமலையார்‌ பாதம்‌ என்ற வழிபாட்டிடமே இடைக்காடர்‌ சமாதிகொண்டுள்ள இடம்‌ என்பது பெரும்பாலோர்‌ கருத்து.

இடைக்‌காடரும் நவநாத சித்தரும்


நவநாத சித்தர்கள்‌ இடைவிடாது நாதோபாசனை செய்து கொண்டு சதாசர்வ காலமும்‌ உருவமற்றவர்களாக விண்வெளியில் ‌சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்கள்‌. ஒரு சமயம்‌ அவர்களில்‌ ஒருவருடைய அருட்கடாட்சம்‌ இடைக்காடர்‌ மேல்‌ பட்டது. அப்போது இடைக்காடர்‌ ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவன்‌. தொண்டை மண்டலத்தில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்திட்டு என்ற பகுதியில்‌ வாழ்ந்து வந்தார்‌. தினமும்‌ மலைச்சாரலில்‌ உள்ள இடையன்மேடு என்ற பகுதியில்‌ ஆடுகளை மேயவிட்டு காலை முதல் மாலை வரை ஆட்டோடும் கோலைத் தரையில் பிடித்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் தவம்‌ செய்து கொண்டிருப்பது அவர்‌ வழக்கம்‌. அப்போது அவருடைய உடல்‌ பூமியில்‌ இருந்தாலும்‌ அவரது மனம்‌ மட்டும்‌ பிரம்மத்தை நாடி விண்வெளியில்‌ அலைந்து கொண்டிருக்கும்‌. இந்த நிலையில்‌ அவரைப்‌ பல நாள்‌ பார்த்துக்கொண்டு விண்வெளியில்‌ சென்று கொண்டிருந்த அந்த நவநாதசித்தர்‌ இவருடைய பிரம்மோபசனையால்‌ ஈர்க்கப்பட்டு ஒருநாள்‌ பூமியில்‌ இறங்கி இடைக்காடர்‌ முன்‌ நின்றார்‌. இடைக்காட்டு முனிவரும்‌ அந்த விண்ணக சித்தரின்‌ தெய்வீக சக்தியால்‌ உந்தப்பட்டு கண்விழித்துப்‌ பார்த்தார்‌. அப்பொழுது நவநாத சித்தருக்கு அருந்த ஆட்டுப்பால்‌ கொடுத்து உபசரித்தார்‌. அதனால்‌ அகம்‌ மகிழ்ந்த நவநாத சித்தர்‌ இவருக்கு மானசீக தீட்சையாக பிரம்மோபதேசம்‌ செய்து விட்டு மறைந்தார்‌. அது முதல்‌ இவர்‌ கவிபாடும்‌ திறம் பெற்ற மகாசித்தராக விளங்கினார்‌. இந்த செய்தி அபிதான சிந்தாமணியிலும்‌ காணப்படுகிறது.

போகரும் இடைக்காடரும்


பல சித்த இலக்கியங்களில்‌ இவர்‌ போகரின்‌ சீடர்‌ என்ற குறிப்பே காணப்படுகிறது. இவர்‌ போகரின்‌ சீடர்களில்‌ ஒருவர்‌ என்பது போகரின்‌ வாழ்க்கை வரலாற்றிலிருந்தும்‌ தெரிய வருகிறது. இந்தக்‌ கருத்தே மிகவும்‌ நம்பத்தகுந்ததாகவும்‌ உள்ளது. இக் கருத்துப்படி ஒரு நாள்‌ போகசித்தர்‌ விண்வழியே போய்க் கொண்டிருந்த போது, சிறுவனாகிய இடைக்காடனின்‌ தவத்தால்‌ ஈர்க்கப்பட்டு பூமிக்கு வந்து கொஞ்சம்‌ நாள்‌ இடைக்காடருடனிருந்து அவருக்கு சித்த வித்தைகளைக்‌ கற்றுக்கொடுத்தார்‌. போகரிடமிருந்து மருத்துவம்‌, வானியல்‌, சோதிடம்‌, முதலியவற்றையும்‌ இவர்‌ முழுமையாகக்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. அவை பற்றி பல நூல்களும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ இவர்‌ எழுதிய சாரீரம்‌ என்ற மருத்துவ நூல்‌ மிகவும்‌ சிறந்த நூலாகக்‌ கருதி போற்றப்பட்டு வருகிறது.

திருமாலின் அவதாரம்


இடைக்காடர்‌ திருமாலின்‌ அவதாரம்‌ என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. ஒரு சமயம்‌ விஷ்ணு பக்தர்கள்‌ பலர்‌ இவரிடம்‌ வந்து, திருமாலின்‌ பத்து அவதாரங்களில்‌ எந்த எந்த அவதார மூர்த்திகளை வழிபட்டால்‌ விரைவில்‌ நன்மைகள்‌ கிட்டும்‌ என்று கேட்டனர்‌. அவர்களிடம்‌ ஏழை, இடையன்‌, இளிச்ச வாயன்‌ ஆகிய மூவருக்கும் விழாக்கள் எடுத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு எல்லா வளங்களும் கிட்டும் என்று கூறினார். இவைகளில் ஏழை என்ற சொல் இராமாவதாரத்தையும் இடையன் என்ற சொல் கிருஷ்ணாவதாரத்தையும் இளிச்சவாயன் என்ற சொல் நரசிம்ம அவதாரத்தையும் குறிப்பனவாகும். மேலும் இவர் இடையர் குலத்தில் பிறந்தவர். பிறவியிலேயே கருவில் திருவுடையவராக விளங்கிய சித்தர். இவருடைய சித்தர் பாடல்களில் தாண்டவக்கோனே கோணரே என்று கோகுலே வாசனை விழித்துப் பாடும் கண்ணிகளும் உள்ளன. இவைகள்‌ யாவும்‌ இவரைத்‌ திருமாலின்‌ அவதாரமாகவே மக்கள்‌ கருதினர்‌ என்பதை உறுதி செய்கின்றன.

வாழ்ந்த காலம்


இடைக்காடர்‌ கடைச்சங்க காலத்தில்‌ வாழ்ந்தவர்‌. புறநானூற்றிலும்‌ (எ.கா. வாகைத்‌ திணையில்‌ 42 ஆம்‌ பாடல்‌), நற்றிணை முல்லைத்‌ திணையிலும்‌, குறுந்தொகையிலும்‌ அவர்‌ பாடல்கள்‌ இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவ மாலை அவரால்‌ பாடப்பட்ட சங்க காலத்‌ தனி நூல்‌.
நற்றினை 142 ஆம்‌ பாடலில்‌

ஆயன்‌ மழையில்‌நனைந்தபடியே ஊன்று கோல்மேல்கால்வைத்து நின்று கொண்டு ஆட்டை அழைக்கஒரு பாடல்‌ பாட, அதைப்பார்த்து ஆட்டைக்‌ கவரவந்த நரி பயந்தோடும்‌

என்று கூறும்‌ அடிகள்‌ கருத்துச்‌ சுவையும்‌ கவி நயமும்‌ மிக்கவை.

கடுகைத்துளைத்து எழுகடலைப்‌ புகட்டி குறுகத்தரித்த குறள்‌

என்று திருக்குறளின்‌ பெருமையை கடைச்சங்க காலப்‌ புலவர்களிடையே எடுத்துக்கூறிய பெரும்‌ புலவர்‌ இவர்‌. இவர்‌ தமிழ்ச்சங்கம்‌ (கடைச்சங்கம்‌) அழிந்து போகச்‌ சாபம்‌ கொடுத்தாரென்றும்‌, குளமுற்றத்‌ துஞ்சிய கிள்ளி வளவனைப்‌ பாடியுள்ளார்‌ என்றும்‌ கபிலரின்‌ சமகாலத்தவர்‌ என்றும்‌ தெரியவருகிறது.

வாழ்ந்த பகுதி


இவர்‌ பல சான்றோர்களை ஈன்றெடுத்த தொண்டை நாட்டில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்‌ திட்டு என்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. இடையர்‌ குலத்தில்‌ பிறந்த இவர்‌ சிறுவயதில்‌ ஆடு மேய்ப்பதையே தொழிலாகக்‌ கொண்டிருந்தார்‌. பெரிய சித்தராக மாறி இயற்கையையே கட்டுப்‌படுத்தும்‌ அளவிற்கு தவவலிமை பெற்றிருந்தவர்‌. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்‌ கோவிலில்‌ சமாதி கொண்டுள்ளார்‌.

இவர்‌ மதுரைக்குக்‌ கிழக்கிலுள்ள இடைக்காட்டில்‌ பிறந்தவராகவோ மலையாளப்‌ பகுதியில்‌ உள்ள இடைக்காடு என்னும்‌ ஊரில்‌ தோன்றியவராகவோ இருக்கக்‌கூடும்‌ என்ற கருத்தும்‌ நிலவுகிறது. இவைகளை உறுதிசெய்யப்‌ போதிய ஆதாரங்கள்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை.

12 ஆண்டு கடும்‌ பஞ்சம்‌


அவர்‌ தன்‌ சோதிட ஞானத்தைக்‌ கொண்டு விரைவில்‌ 12 ஆண்டுகள்‌ மழை பெய்யாது நாடே பசியாலும்‌ பஞ்சத்தாலும்‌ அழியப்‌ போகிறது. மனித இனம்‌ மட்டுமல்லாது ஆடு மாடுகளும்‌ மரம்‌ செடிகொடிகளும்‌ பாலை நிலமாக மாறப்‌ போகிறது' என்று கண்டுணர்ந்தார்‌. அந்தப்‌ பஞ்சத்தில்‌ தன்‌ ஆடுகளை எப்படியும்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்று முடிவுசெய்தார்‌. அதன்‌ விளைவாக பாலை வனப்பகுதிகளிலும்‌ வற்றாது காடாக வளர்ந்திருக்கும்‌ எருக்கன்‌ செடிகளின்‌ இலை தழைகளை மட்டும்‌ தன்‌ ஆடுகளுக்கு உணவாகக்‌ கொடுத்தார்‌. மற்ற எந்த மரம்‌ செடி கொடிகளையும்‌ அவற்றின்‌ கண்களுக்கே காட்டாது வளர்த்தார்‌. வறட்சியிலும்‌ வளர்ந்து பலன்தரக்கூடிய குறுவரகு என்ற தானியத்தை சேற்றில்‌ கலந்து சுவர்‌ எழுப்பித்‌ தன்‌ குடிலை அமைத்துக் கொண்டார்‌. தன்‌ குடிலைச்‌ சுற்றி குறுவரகு கலந்த மண்‌ சுவரை எழுப்பிக் கொண்டார்‌.

எருக்கிலையை மட்டுமே உணவாக உண்டு வந்த ஆடுகளுக்கு எருக்கிலையின்‌ நச்சுத்தன்மையால்‌ உடல்‌ முழுவதிலும்‌ நமைச்சல்‌ ஏற்பட்டது. அரிப்பு வரும் போதெல்லாம்‌ அந்த ஆடுகள்‌ தங்கள்‌ முதுகுகளை அந்த சுவர்களில்‌ தேய்த்துக் கொண்டன. அப்போது மண்ணுடன்‌ சேர்ந்து உதிர்ந்த குறுவரகை சுத்தம்‌ செய்து அதையே இடைக்காடர்‌ உணவாகக்‌ கொண்டார்‌. தன்‌ விருந்தினர்களுக்கும்‌ குறுவரகுப்‌ பண்டங்களையும்‌ ஆட்டுப்‌ பாலையுமே கொடுத்து உபசரித்தார்‌.

அவர்கள்‌ இந்த உணவுமுறைக்குப்‌ பழகிப் போவதற்கும்‌ பஞ்சம்‌ தொடங்குவதற்கும்‌ காலம்‌ சரியாக அமைந்துவிட்டது. அந்தப்‌ பஞ்சத்தில்‌ மனிதர்களும்‌ மாண்டழிந்தனர்‌. ஆடு, மாடுகளும்‌ மரம்‌,செடி,கொடிகளும் கூட அறவே பட்டொழிந்தன. இடைக்‌ காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ மட்டுமே உயிர்‌ வாழ்ந்து கொண்டிருந்தனர்‌.

12 வருடங்கள்‌ கடந்த பின்


12 வருடங்கள்‌ கடந்த பின்‌ ஒரு நாள்‌ பூமியைச்‌ சுற்றிப்‌ பார்த்துக்‌ கொண்டு வான்வெளியில்‌ போய்க்கொண்டிருந்த நவக்கிரக நாயகர்கள்‌ பூமியில்‌ காணும்‌ இடமெங்கும்‌ உயிரற்ற வறண்ட பாலைவனமாக உள்ள போது இடைக்காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ எப்படி உயிர் வாழ்கின்றனர்‌? என்பதைத்‌ தெரிந்துகொள்ள இடைக்காடர்‌ குடிசையின்‌ முன்‌ விண்ணிலிருந்து இறங்கினர்‌. இடைக்காடர்‌ அவர்களுக்குத்‌ தாராளமாக குறுவரகுப்‌ பண்டமும்‌ ஆட்டுப்‌ பாலும்‌ கொடுத்து உபசரித்தார்‌. எருக்கிலைகளை மட்டுமே உண்டு வளர்ந்த அந்த ஆடுகளின்‌ பாலில்‌ எருக்கன்‌ செடிக்குரிய நச்சுத் தன்மை நிறைந்திருந்ததால்‌ ஆட்டுப்‌ பாலைக் குடித்த நவக்கிரக நாயகர்கள்‌ தூக்க மயக்கம்‌ போதை மயக்கம்‌ இரண்டும்‌ சேர சாப்பிட்ட களைப்பில்‌ படுத்து மெய்மறந்து தூங்கிவிட்டனர்‌. இடைக்காடர்‌ தன்‌ சோதிட ஞானத்தையும்‌ தவ வலிமையையும்‌ கொண்டு, தூக்க மயக்கத்தில்‌ தம்மை மறந்து கிடந்த நவக்கிரக நாயகர்களை, நல்ல மழை பொழிவதற்கு ஏற்ற வகையில்‌ இடம்‌ மாற்றிப்‌ படுக்க வைத்தார்‌. நாயகர்கள்‌ இடம்‌ மாறியதற்கு ஏற்ப பூமியைச்‌ சூழ்ந்து விண்வெளியில்‌ அமைந்துள்ள துவாதச மண்டலத்தில்‌ நவக்கிரகங்களும்‌ இராசிகள்‌ மாறி அமைந்தன. சிறிது நேரத்திலேயே வானத்தில்‌ கருமேகம்‌ சூழ்ந்திட பூமியின்‌ மேல்‌ இடிமுழக்கத்துடன்‌ பெருமழை பெய்ந்தது. வறண்டிருந்த பூமி வெள்ளக்காடாக மாறியது.

திடீரென்று ஏற்பட்ட குளிரால்‌ உந்தப்‌ பட்டு விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள்‌ தாங்கள்‌ ஒன்பது பேரும்‌ இடம்‌ மாறி இருந்ததையும்‌ பாலைவனச்‌ சுற்றுச்‌ சூழல்‌ சோலைவனமாக மாறி இருந்ததையும்‌ கண்டு ஆச்சரியக்‌ களிப்பில்‌ ஆழ்ந்தனர்‌. சித்தர்களுக்குப்‌ பிறகு தான்‌ தெய்வங்கள்‌ எல்லாம்‌ என்பதை உளமாற உணர்ந்தனர்‌. அவர்கள்‌, இந்த மாமனிதர்‌ மக்கள்‌ நலத்திற்காக மாமழை பொழியவைத்த மெய்ஞ்ஞானி. இந்தப்‌ பேரருளாளர்‌ உலகம்‌ உள்ளளவும்‌ விண்ணவர்‌ போற்றுதலுக்கும்‌ மக்கள்‌ வழிபாட்டிற்கும்‌ உரிய பெருந்தெய்வமாயிருந்து தீப வடிவத்தில்‌ தரிசனம்‌ கொடுத்த வண்ணம்‌ அருளாட்சி செய்து வருவாராக என்று இடைக்காடரை வாழ்த்தி விட்டு விண்ணகம்‌ ஏகினர்‌. அவர்‌ இன்றும்‌ அருணாசலத்‌ தீபமாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌


முதலில்‌ அவர்‌ சூனியமே பரம்பொருள்‌ என்பதை உணர வேண்டும்‌. இல்லையேல்‌ ஆன்மா பிரம்ம நிலைக்கு உயர வேறு வழியே இல்லை என்கிறார்‌.

வானியல்போல வயங்கும்‌ பிரமமே சூனியம்‌ என்றறிந்து ஏத்தாக்கால்‌ ஊனியல்‌ ஆவிக்கொரு கதியில்லையென்று ஓர்ந்து கொள்வீர்‌ நீர்‌ கோனாரே.

அடுத்ததாக எல்லாமாகவும்‌ ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியாகவும்‌ உள்ள அந்தப்‌ பரம்பொருளை அல்லும்‌ பகலும்‌ மனதில்‌ இருத்தித்‌ தவம்‌ புரிந்தால்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழலாம்‌. இதற்கு மந்திரம்‌ எதுவும்‌ சொல்ல வேண்டுவதில்லை என்றிறார்‌.

சொல்லில்‌ சகல நிட்களன மானதை சொல்லினால்‌ சொல்லாமல்‌ கோனாரே அல்லும்‌ பகலும்‌ அகத்தில்‌ இருத்திடில்‌ அந்தகன்‌ கிட்டுமோ கோனாரே?

ஒரு குருவின்‌ வழிகாட்டலைக்‌ கொண்டே இந்த தவமுறையைப்‌ பயில வேண்டும்‌ என்கிறார்‌. செவிதனில்‌ கேளாத மறை தாண்டவக்கோனே - குரு செப்பில்‌ வெளியாமலவோ தாண்டவக்கோனே. அதனால்‌ தவறான பாதையில்‌ சென்று அழிந்து விடாமல்‌ குரு மூலமாக உன்‌ உள்ளே உள்ள மெய்‌ விளக்கை உணர வேண்டும்‌ என்கிறார்‌.

கை விளக்குக்‌ கொண்டு கடலில்‌ வீழ்வார்‌ போல மெய்வினக்குன்‌ உள்ளிருக்க வீழ்குவதேன்‌ புல்லறிவே

அப்படி. குருவின்‌ மூலமாக உள்‌ ஒளிபெற்று விட்டால்‌ நீயே பிரம்மத்தைக்‌ கண்ட குருவின்‌ நிலைக்கு உயர்ந்துவிடுவாய்‌. அப்படி. உயர்ந்தபிறகு நீ மற்றவருக்கு வழிகாட்டி அவர்களைக்‌ கரையேற்ற வேண்டும்‌ என்கிறார்‌.

இருட்டறைக்கு நல்விளக்காய்‌ இருக்கும்‌ உன்றன்‌ வல்லமையை அருள்‌ துறையுள்‌ நிறுத்தி விளக்காகுக நீ புல்லறிவே,

மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்


அவர்‌ வைணவ பக்தர்களுக்கு, இராமனையும்‌ கிருஷ்ணனையும்‌ நரசிம்ம மூர்த்தியையும்‌ விழா எடுத்து வழிபட்டால்‌ எல்லா நலன்களும்‌ பெருகும்‌ என்று கூறியுள்ளதை முன்னரே கண்டோம்‌. சிவனை வழிபட்டால்‌ கர்மவினைகள்‌ அகன்று நற்கதி கிடைக்கும்‌ என்றும்‌ கூறியுள்ளார்‌.

சூரியன்‌ வாள்பட்ட துய்ய பனிக்கெடும்‌ தோற்றம்போல்‌ வெவ்வினை தூள்படவே நாரி இடப்‌ பாகன்தான்‌ நெஞ்சில்‌ போற்றியே நற்கதி சேர்ந்திடும்‌ கோனாரே

அவர்‌ உருவ வழிபாட்டை மறுக்கவில்லை. கடவுளை எந்த உருவத்தில்‌ வழிபட்டாலும்‌ தெய்வ அருள்‌ கிடைக்கும்‌ என்றே கூறினார். அவர் காலத்தில் மக்கள் கோவில்கள் கட்டி பல்வேறு தெய்வங்களுக்கும் விழா எடுத்து வழிபாடுகள் செய்தனர். அவர்கள் வழிபாடுகளில் ஆடம்பரங்களும் வெளிப்பகட்டும் இருந்தனவே தவிர மனிதர்களின் உள்ளங்களில்‌ உண்மையான பக்தி இல்லை. இதனால்‌ கிரகக்கோளாறுகளும்‌ இயற்கைச்‌ சீற்றங்களும்‌ பெருகும்‌.அதனால் மக்கள்‌ துன்புறுவார்கள்‌. அவர்களுடைய விதியை அவர்கள்‌ அனுபவித்துதான்‌ தீரவேண்டும்‌ என்று கவலைப்பட்டார்‌.

அவர்‌ சமாதி பற்றிய கருத்து


அவர்‌ கார்த்திகை மாதத்தில்‌ திருக்கார்த்திகை நட்சத்திரம்‌ கூடிய பெளர்ணமி இரவில்‌, இப்போது அண்ணாமலையார்‌ பாதம்‌ உள்ள இடத்தில்‌ சமாதி கூடினார்‌ என்றும்‌ பொதுமக்கள்‌ காண அவருடைய ஆன்மா ஒளித்திரளாக விண்நோக்கி சென்றது என்றும்‌, அந்த நாளே இன்றும்‌ அண்ணாமலை தீப விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும்‌ கருதப்படுகிறது. அண்ணாமலை தீபத் திருவிழாவன்று அவர்‌ சமாதி அடைந்த திருவண்ணாமலை நகரமெங்கும்‌ நீண்டகாலமாக அன்னதானம்‌ நடைபெற்று வருகிறது. இவர் வாழ்ந்த காலத்தில்‌ தன்னை நாடிவந்தவர்களுக்கெல்லாம்‌ அன்புடன்‌ உணவளித்து விருந்து உபசாரம்‌ செய்வதை தன்‌ கடமையாகவே கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்‌. அதன்‌ பிரதிபலிப்பே இப்போதும்‌ தீபத் திருநாளன்று நடைபெற்று வரும்‌ அன்னதானங்கள்‌.

ஓம் இடைக்காடரே நமஹ ஓம் அருணாசலேஸ்வராய நமோநமஹ

இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும்‌ வீட்டில்‌ இருந்தபடியே வழிபாடு செய்தாலும்‌ போதும்‌ அருணாசலேஸ்வரரின்‌ திருவருளால்‌ இல்லத்தில்‌ எல்லா வளங்களும்‌ பொங்கும்‌. வாழ்க்கை இன்பமாக அமையும்‌

அமைந்துள்ள இடம்


சென்னையிலிருந்து புதுவை செல்லும்‌ கிழக்குக்‌ கடற்கரை சாலையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ செய்யூர்வட்டத்தில்‌ கடப்பாக்கம்‌ என்ற திருத்தலம்‌ உள்ளது. இந்த ஊர்‌ பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ சென்றால்‌ அருள்மிகு உண்ணாமுலை அம்மன்‌ உடனுறை அருணாசலேஸ்வரர்‌ ஆலயம்‌ உள்ளது. இந்த ஆலயம்‌ காசிப்பாட்டை என்ற சாலையில்‌ கடற்கரைக்கு அருகில்‌ உள்ளது. [இவ்வூர்‌ சென்னையிலிருந்து 105 கி.மீ. தெற்கே உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும்‌ உள்ளன. கோவில்‌ மாலை 4.00 மணி முதல்‌ 7.00 மணி வரை திறந்திருக்கும்‌ என்றாலும்‌ கோவில்‌ அர்ச்சகரின்‌ வீடு பக்கத்திலேயே இருப்பதால்‌ எந்த நேரத்தில்‌ சென்றாலும்‌ இவ்வாலயத்தில்‌ மனநிறைவோடு இறை தரிசனம்‌ செய்யலாம்‌.] இக்கோவிலுக்கு அருகில்‌ வங்கக்‌ கடலில்‌ காணப்படும்‌ இடையன்‌ திட்டு என்ற இடத்தில்‌ இப்போது இடைக்காடர்‌ அருவ நிலையில்‌ வாழ்ந்து வருகிறார்‌. இவர்‌ ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும்‌ இங்குள்ள அருணாசலேஸ்வரரை ஒளிவடிவில்‌ சென்று வழிபட்டு வருகிறார்‌ என்று தெரிகிறது. திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரர்‌ பாத பீடத்தில்‌ ஜீவ சமாதி கொண்ட இந்த சித்தர்‌ கடப்பாக்கம்‌ அருணாசலேஸ்வரர்‌ மூலம்‌ இப்பகுதியில்‌ வாழும்‌ எளிய மக்களுக்கு மறைமுகமாக உதவிகள்‌ செய்து கொண்டும்‌ அருள் வழிகாட்டிக் கொண்டும்‌ வரவேண்டும்‌ என்பதும்‌ அருணைமலையாளின்‌ திருவுளம்‌ போலும்‌. இக்கோவிலில்‌ சிவராத்திரிக்கு மறுநாள்‌ சூரிய உதய ஒளியும்‌ மாசி, பங்குனி மாதங்களில்‌ பெளர்ணமி உதய நிலவு ஒளியும்‌ மூலவர் மீது படுவது இத்திருத்தலத்தின்‌ தனிச்சிறப்பு.


2 கருத்துகள்: