Top bar Ad

13/10/18

திருமாளிகைத்‌ தேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்
  3. ஐதீகக்‌ கதை

முன்னுரை


இவர்‌ வேதியர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌. போகரின்‌ மாணாக்கர்‌. திருவிசைப்பாவாகிய ஒன்பதாம்‌ திருமுறை ஓதிய ஒன்பது நாயன்மார்களில்‌ ஒருவராக விளங்கியவர்‌.

கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்


சைவம்‌ மற்றும்‌ வைணவம்‌ ஆகிய இரு சமயத்தை சார்ந்தவர்களும்‌ போகரிடம்‌ மாணாக்கர்களாக இருந்தனர்‌. இரு சமயத்‌தவர்களில்‌, சைவத்தில்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, வைணவத்தில்‌ கருவூர்த்‌ தேவரும்‌ போகரின்‌ சீடர்களுள்‌ முதன்மையானவர்களாக விளங்கினார்கள்‌. ஒருநாள்‌ சிவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவர்‌ கருவூராருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்கிப்‌ புசித்தார்‌. மற்றொரு நாள்‌, கருவூர்த்‌ தேவர்‌ தமது வைணவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்க மறுத்தார்‌ அதனால்‌, கோபம்‌ கொண்ட கருவூரார்‌, போகரிடம்‌ விஷயத்தைக்‌ கொண்டு சென்றார்‌. போகரோ, "சைவமே சிறந்த சமயம்‌. ஆச்சாரமான பூஜை சிவ பூஜையே. அதனால்‌ நீசிவ பூஜை நிவேதனம்‌ பெற்றது விசேஷம்‌. வைணவராகிய உனது நிவேதனத்தை நீ அவருக்குக்‌ (திருமாளிகைத்‌ தேவருக்குக்‌) கொடுத்தது தவறு!" என்று பதில்‌ அளித்தார்‌ போகர்‌. இதனால்‌ கருவூர்த்‌ தேவருக்கு போகர்‌ மீது அதிக வருத்தம்‌ இருந்தது. என்றாலும்‌, பின்னர்‌ தனது தவறை உணர்ந்து திருமாளிகைத்‌ தேவருடன்‌ இணைந்து திருவாடு துறையில்‌ இறைப்பணி புரிந்தார்‌. திருவாடுதுறை <>புராண சரிதம்‌" என்ற நூலிலும்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, கருவூர்த்‌ தேவரும்‌ அங்கு இறைப்பணி செய்ததாகக்‌ குறிப்புகள்‌ காணப்படுகிறது.

ஐதீகக்‌ கதை


திருவாடுதுறையில்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ பற்றிய ஒரு ஐதீகக்‌ கதையும்‌ உண்டு. திருமாளிகைத்‌ தேவர்‌ மன்மதனை வென்ற திவ்ய ஸ்வருபம்‌ கொண்டவர்‌. திருவாடுதுறையின்‌ காவிரிக்‌ கரையிலும்‌ நந்தவனத்திலும்‌ மாசிலாமணிப்‌ பெருமான்‌ சந்நிதியிலும்‌ அவர்‌ (திருமாளிகைத்‌ தேவர்‌) தியானம்‌ செய்வதற்காக சஞ்சரிப்பதுண்டு.

வேதியர்கள்

பார்க்கும்‌ பெண்களை எல்லாம்‌ வசீகரிக்கும்‌ அழகிய திருமேனி கொண்டவர்‌ என்பதால்‌, அங்குள்ள வேதியர்‌ குலப்‌ பெண்கள்‌ பலர்‌, அவரை மணக்க விருப்பம்‌ கொண்டு இருந்தனர்‌. அவர்கள்‌ வேறு ஆண்களை மணந்தாலும்‌, அவர்களுக்கு பிறந்த குழந்தை எல்லாம்‌ திருமாளிகைத்‌ தேவரின்‌ சாயலில்‌ தான்‌ இருந்தன.

நரசிங்க நரபதி

இதைக்‌ கண்டு திடுக்கிட்ட வேதியர்கள்‌, கொதிப்படைந்து அந்த நாட்டை ஆண்ட மன்னன்‌ நரசிங்க நரபதியிடம்‌ சென்று தங்கள்‌ மனைவிகளை எல்லாம்‌ ஒரு காமலோலன்‌, தாங்கள்‌ வீட்டில்‌ இல்லாத சமயத்தில்‌ மயக்கம்‌ உண்டாக்கி கற்பழித்து விட்டான்‌ என்று திருமாளிகைத்‌ தேவரைப்‌ பற்றி (அரசினடம்‌) புகார்‌ தெரிவித்தனர்‌. சினம்‌ கொண்ட அரசன்‌ அங்கிருந்த காவலர்களிடம்‌ "அந்தக்‌ கொடுங்கோலனை கயிற்றால்‌ கட்டி இழுத்து வருக!" என்று ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று, காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "கயிற்றால்‌ கட்டிக்‌ கொண்டு போங்கள்‌ !" என அவர்‌ சொல்ல, அவர்கள்‌ கொண்டு வந்திருந்த கயிறு, அவர்களையே கட்டி இழுத்துக்‌ கொண்டு அரசனின்‌ முன்‌ கொண்டு சென்றது. காவலர்களின்‌ செயலுக்குப்‌ பொருள்‌ விளங்காத அரசன்‌ கோபம்‌ தலைக்கு ஏறிய நிலையில்‌, "அவனை வெட்டிக்‌ கொண்டு வருக!" என்று வேறு சில போர்‌ வீரர்களுக்கு ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "தாரளமாக, வெட்டிக்‌ கொண்டு போகலாம்‌!" என்று அவர்‌ சொல்ல, அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ வெட்டிக்‌ கொண்டு சாய்ந்தனர்‌.

அரசனின் மன்னிப்பு

இதனைக்‌ கேள்விப்‌ பட்ட அரசனின்‌ ஆணை எல்லைத்‌ தாண்டிப்‌ போனது. சதுரங்க சேனையோடு மந்திரி, தளபதி, வீரர்கள்‌ புடை சூழ, திருமாளிகைத்‌ தேவரின்‌ இருப்பிடத்தைக்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌ மன்னன்‌. ஞான திருஷ்டியால்‌ இதனை அறிந்த திருமாளிகைத்‌ தேவர்‌, ஒப்பிலா முலையம்மை சந்நிதிக்குச்‌ சென்று முறை இட்டார்‌. அம்மையோ கோயில்‌ திருமதிலின்‌ மேல்‌ வீற்று இருக்கும்‌ விடைக் கன்றுகளை எல்லாம்‌ அழைத்து, தரும நந்தியின்‌ தேகத்தில்‌ அவைகளை ஐக்கியமாக்கி," நீ எதிர்‌ சென்று பகைவென்று வருக!" எனக்‌ கட்டளை இடுகிறார்‌. அம்மைத்‌ தம்மிடம்‌ அளித்த விடைக்‌ கன்றுகளின்‌ சேனையுடன்‌ நந்தி தேவர்‌, அரசனின்‌ சேனையை எதிர்த்துப்‌ போரிட்டு அழிக்கிறார்‌. மன்னனையும்‌ மந்திரிகளையும்‌ உயிருடன்‌ பிடித்து வந்து, தன்‌ சந்நிதியில்‌ சிறை வைக்கிறார்‌. திருமாளிகைத்‌ தேவரின்‌ மகிமையை உணரும்‌ அரசன்‌, பணிந்து அவரிடம்‌ மன்னிப்பும்‌ கேட்கின்றான்‌.

சிவஞான நிஷ்டையில்‌ எழுந்தருளும்‌ திருமாளிகைத்‌ தேவர்‌, அவர்களை மன்னித்து விடுவிக்கச்‌ செய்கிறார்‌. இதனால்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ உத்தமர்‌ என்பதை வேதியர்களும்‌ அறிந்து கொண்டனர்‌. இவ்வாறு அவரது புகழ்‌ அந்த நாடு முழுவதும்‌ பேசப்பட்டு வெகுவாகப்‌ பரவியது.

12/10/18

அகப்பேய்‌ சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. வியாசர்
  3. அகப்பைச்‌ சித்தர்
  4. குரு பகவான்
  5. ஜீவ சமாதி

முன்னுரை


அகத்தை அதாவது மனத்தைப்‌ பேயாக உருவகித்துப்‌ பாடினமையால்‌ இவர்‌ அகப்பேய்‌ சித்தர்‌ எனப்பெயர்‌ பெற்றார்‌. இவரது தத்துவப் பாடல்களின்‌ ஒவ்வொரு அடியிலும்‌ இறுதியில்‌ அகப்பேய்‌ என்று முடிவுறுமாறு அமைந்துள்ளது. திருவள்ளுவர்‌ பரம்பரையில்‌ தோன்றிய இந்த சித்தரது இயற்பெயர்‌ நாயனார்‌ என்றும்‌ கூறுவர்‌.

திருவள்ளுவரைப்‌ போலவே நெசவுத்‌ தொழிலில்‌ ஈடுபட்ட இவர்‌ துணி வியாபாரம்‌ செய்தார்‌. அவரது நேர்மை அவருக்கு வருமானத்தை மேலும்‌ வளர்த்தது. இருப்பினும்‌ நாயனார்‌ மனம்‌ பொருளில்‌ பதியவில்லை. அருளையே தேடி நின்றது. அவர்‌ பார்வையில்‌ பட்டதெல்லாம்‌ போலித் தனமும்‌ யந்திர மயமான வாழ்க்கையும்‌ தான்‌.

வியாசர்‌


அருள்‌ உள்ளம்‌ கொண்டவர்களைத்‌ தேடி அலைந்த நாயனாரின்‌ கண்களில்‌, அப்போது பெருத்த போதி மரம்‌ ஒன்று தென்பட்டது. அந்த மரத்தின்‌ அடியில்‌ பெரும்‌ பொந்து ஒன்று இருந்தது. மனதில்‌ வியாசரை குருவாக எண்ணி அங்கேயே தவம்‌ செய்ய ஆரம்பித்தார்‌ நாயனார்‌. நாயனாரின்‌ இந்தத்‌ தவப்பயனால்‌ ஈர்க்கப்பட்ட வியாசர்‌ ஒருநாள்‌ நாயனார்‌ எதிரில்‌ தோன்றினார்‌. அவருக்கு ஞான உபதேசம்‌ செய்து வைத்து உனக்கு அனுபூதி நிலை கைகூடும்‌. மக்களின்‌ மனம்‌ லயம்‌ ஆவதற்காக, உன்‌ அனுபவங்களை எழுதி  வை என்று சொல்லி நாயனாருக்கு உபதேசம்‌ செய்து விட்டு உடனே மறைந்தார்‌.

அகப்பைச்‌ சித்தர்


தவம்‌ கைகூடிய நிலையில்‌ வியாசர்‌ கட்டளைப்படி மக்களின்‌ அறிவு மாயையில்‌ மயங்கா வண்ணம்‌. மனதை பேயாக உருவகப்படுத்தி மக்கள்‌ ஆனந்த வாழ்வு வாழ்வதற்காகப்‌ பலப்பல உபதேசங்களைப்‌ பாடல்களாக ஆக்கினார்‌ நாயனார்‌. அதனால்‌ தான்‌ அவரை அகப்பேய்‌ சித்தர்‌ என்று உலகம்‌ அழைத்தது. நம்‌ காலத்தில்‌ அது அகப்பைச்‌ சித்தர்‌ என்று ஆகிவிட்டது. நெஞ்சத்தை அலையாமல்‌ நிறுத்தி விடு அது போதும்‌ இறைவனடி சேர்வதற்கு. நீ நஞ்சு உண்ணவும்‌ வேண்டாம்‌ நாதியற்றுத்‌ திரியவும்‌ வேண்டாம்‌. வேறு துன்பப்படவே வேண்டாம்‌. மனதை மட்டும்‌ அலை பாயாமல்‌ நிறுத்திவிடு. அதுவே போதும்‌. அதுவே உன்‌ முக்திக்கு வழி வகுக்கும்‌ என்று அகப்பேய்‌ சித்தர்‌ மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்‌.

குரு பகவான்


அகப்பேய்‌ சித்தர்‌ நவக்கிரகத்தில்‌ குரு பகவானை பிரதிபலிப்பவர்‌. இவரை வழிபட்டால்‌ ஜாகத்தில்‌ குரு பகவானால்‌ ஏற்படக்கூடிய தோஷங்கள்‌ அகலும்‌. பணப்பிரச்சினை, புத்திரபாக்கியம்‌ கோளாறு, அரசாங்கத்தால்‌ பிரச்சினை போன்றவை அகலும்‌. வியாபாரத்தில்‌ எதிர்பாராத நஷ்டம்‌, சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம்‌ அகன்று லட்சுமி கடாட்சம்‌ பெருகும்‌. வயிறு, குடல்‌ சம்பந்தப்பட்ட கோளாறுகள்‌ நீங்கும்‌. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்‌. கொடுக்கல்‌, வாங்கல்‌ பிரச்சினை வழக்குகள்‌ அகலும்‌. அரசாங்கத்தால்‌ பிரச்சினை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சினை நீங்கும்‌. வறுமை அகன்று வாழ்க்கை வளம்‌ பெறும்‌. இவருக்கு மஞ்சள்‌ வஸ்திரம்‌ அணிவித்து வழிபட்டால்‌ நினைத்த காரியம்‌ நிறைவேறும்‌. இவரைப்‌ பூஜிக்க சிறந்தநாள்‌ வியாழக்கிழமை ஆகும்‌. நாமும்‌ கூட இவரைத்‌ தொழுவோம்‌, நமது குறைகள்‌ நீங்க அவர்‌ திரு அருள்‌ பெறுவோம்‌.

ஜீவ சமாதி


இந்த அகப்பேய்ச்‌ சித்தர்‌ திருவையாறு என்னும்‌ தலத்தில்‌ சமாதியானதாக கூறப்படுகின்றது. ஓம்‌ அகப்பேய்‌ சித்தரே போற்றி என்று 108 முறை ஜெபித்து நிவேதனமாக, இளநீர்‌ (வடிகட்டி வைக்க வேண்டும்‌) அல்லது பால்‌, பழம்‌ வைத்து படைத்து உங்கள்‌ பிரார்த்தனையை மனமுருகக்‌ கூறி வேண்டிக்‌ கொண்டால்‌ நினைத்தது நடக்கும்‌.

6/10/18

அழுகணிச் சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணங்கள்
  3. பாடல்கள்
  4. ஜீவசமாதி

முன்னுரை


வெளியினில்‌ ஒளியாய்வந்து மிக்கதோர்‌ அமுதகண்ணர்தான்‌ அழுதபாவனையினோடு கண்ணில்‌ நீர்‌ ஆறாய்த்‌ தோன்றப்‌ பமுதிலாக்‌ கார்காத்தன்‌ பாலனாய்ப்‌ பிறந்துவந்து அழுகண்ணிச்சித்தரென்று அருளுடன்‌ பேரிட்டாரே.

என்று கருவூரார்‌ வாதகாவியம்‌ 700 என்ற நூலிலல்‌ கருவூர்த்தேவர்‌ பாடியுள்ளார்‌.
இதன்படி அழுகணிச் சித்தர்‌ கார்காத்த வேளாளர்‌ மரபில்‌ பிறந்தவர்‌.

ஊற்றைச்‌ சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுதில்லை மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுமென்றால்‌ ஊற்றைச்‌ சடலம்‌ விட்டே என்‌ கண்ணம்மா உன்‌ பாதம்‌ சேரேனோ!

மேற்கண்ட இந்தப்‌ பாடலை எழுதிய அழுகணி சித்தரைப்‌ பற்றிச்‌ சொல்ல வேண்டும்‌ எனில்‌ இவருக்கு, இப்பெயர்‌ வரப்‌ பல காரணங்கள்‌ சொல்லப்படுகிறது.

பெயர்க் காரணங்கள்


அழுத கண்ணீர்

இவர்‌ அழுத கண்ணீரோடு பாடிக் கொண்டு ஓரிடத்தில்‌ நிற்காமல்‌ நடந்து கொண்டே இருந்தவர்‌. அதனால்‌ இவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. அகஸ்தியர்‌ வைத்திய ரத்தினச்‌ சுருக்கம்‌ என்ற நூலும்‌ அவர் பெயருக்கு இதே காரணத்தைத் தான்‌ கூறுகிறது. இக்கூற்றுகளால்‌ அழுகணிச்சித்தர்‌ அகத்தியரும் கருவூராரும்‌ வாழ்ந்த காலத்திலோ அல்லது அவைகளுக்கு முற்பட்ட காலத்திலோ வாழ்ந்திருக்கக்‌ கூடும்‌ என்று தெரிகிறது.

அழுகின்ற தொனி

குரல்‌ வளையில்‌ புண்‌ ஏற்பட்டு சிதைந்த குரலால்‌, இவர்‌ பேசுவது அழுகின்ற தொனியில்‌ இருந்ததால்‌, இவருக்கு அழுகணி சித்தர்‌ என்ற பெயர்‌ உண்டானதாகக்‌ கூறப்படுகிறது.

அழும்‌ அணி

இவரது பாடல்கள்‌ எல்லாம்‌ இறங்கி வருந்திப்‌ பாடுவதாக - அழும்‌ பாவனையில்‌ அமைந்ததால்‌, அழும்‌ அணி என்பது மருவி அழுகணி என்ற பெயர்‌ ஏற்பட்டு இருக்கலாம்‌ என்றும்‌ நம்பப்படுகிறது.

கன்னிச்‌ சிந்து

இவருடைய பாடல்கள்‌ எளிமையான அழகிய கன்னிச்‌ சிந்து பா வகையில்‌ அமைந்ததால்‌, அழகிய கண்ணி சித்தர்‌ என்பதே பின்னாட்களில்‌ அழகணி யாகி இருக்கக்கூடும்‌ என்றும்‌ ஒரு கூற்று உண்டு.

அழுகண்ணிப் பூண்டு

அழுகண்ணிப் பூண்டு என்ற பெயருடைய நீர் விட்டான்‌ செடி ஒரு கல்ப மூலிகைப்‌ பூண்டு, இதைப்‌ பயன்படுத்தி அவர்‌ மருந்து தயாரித்து மருத்துவம்‌ செய்திருக்கிறார்‌. அதனால்‌ கூட அவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்ற பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.

பாடல்கள்


இவர்‌ வாழ்ந்த முறையைப்‌ பற்றி எதுவும்‌ தெரியவில்லை. அழுகணி சித்தர்‌ பாடல்கள்‌ என்ற தலைப்பில்‌ சித்தர்‌ ஞானக்‌ கோவை நூலில்‌ இவர்‌ பெயரால்‌ காணப்படும்‌ பாடல்களன்றி, வேறு நூல்‌ தகவல்களோ, இவரைப்‌ பற்றிய வாழ்க்கைக்‌ குறிப்புகளோ இதுவரையில்‌ கிடைக்கப்‌ பெறவில்லை.

அந்தப்‌ பாடல்கள்‌ யாவும்‌ மனித வாழ்கைத்‌ துன்பமயமானது. இத்துன்பத்திலிருந்து விடுபட எனக்கு வழி தெரியவில்லையே. என்று மனம்‌ வருந்திப்‌ பாடியதாகவே உள்ளன. இப்பாடல்களை அவர்‌ கண்ணம்மா என்று ஒரு பெண்ணை முன்னிலைப்‌ படுத்திப்‌ பாடியவைகளாக உள்ளன. மொத்தத்தில்‌ இப்பாடல்கள்‌ யாவும்‌ நான்‌ மனிதப்‌ பிறவி எடுத்து மாயைகளான துன்பங்களில்‌ வாடிக் கொண்டிருக்கிறேன். இந்தத்‌ துன்பங்களிலிருந்து விடுபட்டு உன் பாதக் கமலங்களை வந்தடைய நீ எனக்கு வழிகாட்ட மாட்டாயா?' என்று பராசக்தியைப்‌ பார்த்து புலம்பி வேண்டுவது போலவே உள்ளன.

எடுத்துக்‌காட்டாக சில‌ பாடல்கள்
ஊற்றைச்சடலம்விட்டே என்‌ கண்ணம்மா உன்பாதம்‌ சேரேனோ?”
8ஆம் பாடல்
உற்றாரும்பெற்றாரும்‌ ஊரைவிட்டும்‌ போகையிலே சுற்றாரும்‌ இல்லாமல்‌ என்‌ கண்ணம்மா துணையிழந்து நின்றதென்ன ?
19ஆம் பாடல்
பட்ட முந்தான்பறிபோய்‌ என்கண்ணமா படைமன்னர்‌ மாண்ட தென்ன?”
2ஆம் பாடல்
உன்னைமறக்காமல்‌ என்கண்ணம்மா ஒத்திருந்துவாழேனோ ? என்றும்‌
28ஆம் பாடல்
பிணிநிக்கி என்‌ கண்ணம்மா பனித்துவெளி காட்டாயோ?
32ஆம் பாடல்

என்றும்‌ பாடி முடிக்கிறார்‌.

ஜீவசமாதி


இவர்‌ நாகைப்பட்டினம்‌ நீலாயதாட்சி உடனுறை அருள்மிகு காயாரோகணசுவாமி திருக்கோவிலில்‌ ஜீவசமாதி பூண்டு அருவமாய்‌ இருந்து இன்றும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌.

சுந்தரானந்தர்

முன்னுரை


சுந்தரானந்தர்‌ சதுரகிரி மலையில்‌ ஆதிசித்தரான அநாதி சித்தரின் அருள் பெற்றவர்‌. சதுரகிரி மலை உச்சியில்‌ அநாதி சித்தரை சுந்தர லிங்கமாக பிரதிஷ்டை செய்து அரூப நிலையிலிருந்து இன்றும் வழிபட்டு வருபவர். அவர்‌ ரேவதி நட்சத்திரம்‌ மூன்றாம்‌ பாதத்தில்‌ பிறந்தவர்‌ என்றும்‌, கிஷ்கிந்தா மலை உச்சியில்‌ வாழ்ந்து வரும்‌ நவகண்ட ரிஷியின்‌ பேரன்‌ என்றும்‌ சப்தகாண்டம்‌ 7000ல்‌ போகர்‌ கூறியுள்ளார்‌.

பாடல்‌ 5927.

சட்டை முனியின்‌ சீடர்


அடிக்கடி சமாதி கூடி நீண்ட காலம்‌ நிஷ்டையிலிருந்து வெளி வருவதும்‌ அடிக்கடி விண்வெளிப் பயணம்‌ சென்று வருவதும்‌ அவரது வழக்கம்‌ என்றும்‌ கூறப்டுகிறது. அவரது வாக்கிய சூத்திரம்‌ முதல் பாடலில்‌ வரும்‌.

ஆதி என்ற சட்டை முனிபதத்தைப்போற்றி அறிவாகச்சூத்திரம்தான்‌ ஆறு சொன்னேன்‌

என்ற அடிகள்‌ அவர்‌ சட்டை முனியின்‌ சீடர்‌ என்பதை வெளிப்படுத்துகிறது. சுந்தரானந்தரும்‌ அவரது குருவான சட்டை முனியும்‌ நீண்ட காலம்‌ சதுரகிரிமலை மீதுள்ள சுந்தரலிங்கத்தை வழிபட்டுள்ளனர்‌ என்பது சதுரகிரி புராணச்‌ செய்தி. அவருக்கு பரமானந்தர்‌, வாலைச்சித்தர்‌ என்று இரு சீடர்கள்‌ இருந்ததாகவும்‌ தெரிகிறது. இவர்‌ சோதிடம்‌, வைத்தியம்‌ சிவயோகம்‌ என்ற முப்பெருந்துறைகளிலும்‌ பல நூல்கள்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ வைத்திய காவியம்‌, சோதிடகாவியம்‌, சிவஞானபோதம்‌ என்பவை சில.

அவர்‌ தமிழகம்‌ முழுவதும்‌ சென்று பல சித்த சாதனைகள்‌ புரிந்த வண்ணம்‌ வெற்றியுலா வந்து வல்லபர்‌ (எல்லாவற்றையும்‌ செய்ய வல்லவர்‌) என்ற சிறப்புப் பெற்றார்‌ என்ற ஒரு செவிவழிச்‌ செய்தியும்‌ இருந்து வருகிறது. இப்படி செவி வழியாக கூறப்பட்டு வரும்‌ சம்பவங்களில்‌ ஒன்று வருமாறு:

கல்‌ யானை கரும்பு தின்ற கதை


மதுரை

தமிழ்‌ விளையாடிய மதுரையம்பதிக்கு (மதுரை) செல்ல வேண்டியது அவசியம்‌. இந்த , மதுரை மாநகரம்‌ தமிழ்‌ பண்டிதர்களால்‌ நிரம்பி இருந்த காலம்‌ அது. இங்கு, மக்கள்‌ யாராவது இருவர்‌ சந்தித்து கொண்டாலும்‌, அவர்கள்‌ பேசிக்‌ கொள்வதும்‌ கவிதை நயத்தில்‌ தான்‌ இருக்கும்‌. அந்த உரையாடலில்‌ குற்றம்‌ காண்பதும்‌, பின்னர்‌ அரண்மனை முற்றம்‌ ஏறுவதும்‌ மதுரையில்‌ மிகச்‌ சாதாரணமாக நடக்கும்‌.

ஒரு புறம்‌, மதுரைக்கு முத்துக்கள்‌ குவியும்‌ நகரம்‌ எனும்‌ பெருமையும்‌ உண்டு. மதுரை என்றாலே, அதனை ஆண்ட பாண்டியர்களும்‌, அவர்களது மீன்‌ கொடியும்‌, இலக்கியத்‌ தமிழும்‌ தான்‌ நமது நினைவுக்கு வரும்‌. ஆனால்‌, இது தவிர, நாம்‌ நினைக்க மறந்த ஒன்றும்‌ உள்ளது.

அபிஷேகப்‌ பாண்டியன்

அது தான்‌, அபிஷேகப்‌ பாண்டியனின்‌ காலம்‌. "அப்படி என்ன இவன்‌ சிறந்தவன்‌?" என்று கேட்கின்றீர்களா. இவன்‌ காலத்தில்‌ தான்‌, ஈசனின்‌ திருவிளையாடல்கள்‌ நிறைய நடந்து ஏறியது. அதில்‌ முக்கியமானது, (சிவன்‌, விறகு விற்ற கதை தெரியும்‌ ஆனால்‌, விறகு விற்ற சிவன்‌ மாணிக்கத்தை விற்கவும்‌ மதுரைக்கு வந்த கதை தெரியுமா? ஆம்‌, இது அபிஷேக பாண்டியன்‌ காலத்தில்‌ நடந்த சம்பவம்‌) இவன்‌ மணி முடியில்‌, மாணிக்கம்‌ மட்டும்‌ இல்லாத குறை. இதற்காக, அந்தப்‌ பரம்‌ பொருளே இறங்கி வந்து, இவனுக்கு மாணிக்கம்‌ விற்ற கதை உண்டு (ஆதாரம்‌ : திருவிளையாடல்‌ புராணம்‌).

ஈசன்

அதே போல இவனுக்காக, வருணன்‌ வற்றாது பொழிந்து உருவாக்கிய கடலையே இவன்‌ பொருட்டு வற்ற செய்து பின்‌ மீட்டுக்‌ கொடுத்தது ஈசனின்‌ இன்னொரு திருவிளையாடல்‌, அந்த வரிசையில்‌, இவன்‌ காலத்தில்‌ தான்‌ கல்‌ யானை, கரும்பு தின்ற கதை நடந்தது. இதற்குக்‌ காரணம்‌, சுந்தரானந்தர்‌ என்னும்‌ சித்தர்‌.

மேலும்‌ சொல்லப்போனால்‌, ஒன்றான அவன்‌, உருவில்‌ சிவசக்தி எனும்‌ இரண்டாகி, நன்றான செம்மொழியில்‌ மூன்றாகி, வேதங்களில்‌ நான்காகி, பூதங்களில்‌ ஐந்தாகி, சுவைகளில்‌ ஆறாகி, சுரமாகிய மொழி அதில்‌ ஏழாகி, திசைகளில்‌ எட்டாகி, ரசங்களில்‌ ஒன்பதான அந்த ஈசன்‌.

பித்தன்‌, பேயன்‌, ருத்ரன்‌, கபாலன்‌, சடையாண்டி, பிச்சாண்டி அகோரன்‌, அனந்தன்‌, என்ற பெயர்களுடன்‌ தன்னை சித்தனாக்கி சுந்தரனார்‌ என்ற வடிவில்‌ வந்து, ஒரு அழகிய திருவிளையாடலை நடத்தியது இந்த அபிஷேக பாண்டியன்‌ காலத்தில்‌ தான்‌.

சுந்தரானந்தர் திருவிளையாடல்


சுந்தரானந்தர் வருகை

அன்று, வழக்கம்‌ போல ஒரு காலைப்‌ பொழுது. உலகத்திற்கு விடிந்தது என்பதை விட, மதுரை மாநகருக்கே அன்று ஒரு புது விடியல்‌. அதற்குக்‌ காரணம்‌ ஒரு சித்தர்‌, இவர்‌ சித்தரா? அல்லது அந்த மன்மதன்‌ தான்‌, பாண்டிய நாட்டின்‌ இளம்‌ பெண்களின்‌ கர்ப்பை சோதிக்க மரவுரி தரித்து வந்தானா? என்று எல்லோரும்‌ எண்ணத்‌ தோன்றும்‌ அளவுக்கு ஒரு அழகு. நெற்றியில்‌ விபூதிப்‌ பந்தல்‌, சக்தியும்‌, சிவமும்‌ ஒன்றுக்குள்‌, ஒன்று ஐக்கியம்‌ என்று கூறும்‌ படி மையத்தில்‌ ஒரு குங்குமத்‌ திலகம்‌. செவிப்‌ புலத்தில்‌ ஒரு கனக குண்டலம்‌, இதற்கு அழகு சேர்க்கும்‌ விதமாய்‌, கழுத்தில்‌ அழகிய ஸ்படிக மணி, பறந்து விரிந்த மார்பு, அதில்‌ பளீரென்று பூணூல்‌. நடந்து வரும்‌ தோரணையே ஒரு நளின சிங்காரம்‌. தேஜஸ்‌, என்ற பொருளின்‌ அர்த்தம்‌, இப்பொழுது முழு வடிவம்‌ பெற்றிவிட்டது என்று சொல்லும்‌ அளவுக்கு ஒரு அற்புத அழகு. அந்த, சுந்தர வடிவத்தைப்‌ பார்த்தவுடனேயே, பலர்‌ கை கூப்பியது இயல்பு தானே.

பதிலுக்கு, சுந்தரர்‌ அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார்‌. அந்த வரிசையில்‌ பெருநோய்‌ பிடித்து வாடிய பெரும்புலவர்‌ ஒருவர்‌, சுந்தரர்‌ கண்ணில்‌ படவே அந்தப்‌ புலவர்‌, அந்த சுந்தரனின்‌ பார்வை பட்டு பரிசுத்தமடைந்து மகிழ்ந்தார்‌. இந்த விஷயம்‌ மதுரை மாநகரம்‌ முழுவதும்‌ பரவியது. மேலும்‌, அவரது தமிழ்‌ புலமையால்‌, தமிழ்‌ அறிஞர்களே, அவருடன்‌ வாதத்தில்‌ தோற்றனர்‌. நகர்‌ முழுக்க அவரைப்‌ (சுந்தரானந்தர்‌) பற்றிய பேச்சாகவே இருந்தது.

கிளி ஆக்கி விடுவேன்

இது அரசர்‌ காதுக்கும்‌ போனது. விடுவாரா, அபிஷேகப்‌ பாண்டியன்‌, அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தாரானந்தரை அவைக்கு வரச்‌ சொல்லி தனது சேவகர்களை அனுப்பினார்‌. ஆனால்‌, அது எத்தனை பிழையான செயல்‌ என்பதை அவர்‌ எண்ணிப்‌ பார்க்கவில்லை. உண்மையில்‌ அரசன்‌ அல்லவா, ஞானம்‌ பொருந்திய சுந்தரானந்தரை முறைப்படி வந்து பார்த்திருக்க வேண்டும்‌. என்ன செய்ய? அரசனுக்கே, உரிய செருக்கு அவனையும்‌ விட்டு வைக்க வில்லை. அவனுக்குள்‌ இருந்த அந்த நான்‌ என்ற அகங்காரம்‌ தான்‌ இதற்குக்‌ காரணம்‌.

அதற்கு சுந்தரானந்தரும்‌ ஒரு பாடம்‌ கற்பிக்கத்‌ தயார்‌ ஆனார்‌. அந்த சித்த புருஷரை அழைக்க சேவகர்கள்‌ அவரது முன்‌ வந்தனர்‌. அவர்கள்‌, சொல்வதைக்‌ கேட்ட சுந்தரானந்தர்‌. அரச கட்டளைக்கு பணியவில்லை, மேலும்‌ வந்த சேவகர்களிடம்‌ ஆற்றில்‌ குளிக்க ஒருவன்‌ ஆசைப்பட்டால்‌, அவன்‌ அல்லவா ஆற்றுக்கு வர வேண்டும்‌ என்று வினவினார்‌. ஆனால்‌, அந்த வீரர்களோ, அவரை விடுவதாக இல்லை. அவரை வற்புறுத்தி தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சி செய்தனர்‌. சுந்தரானந்தர்‌, அவர்களின்‌ பேச்சால்‌, தனது பொறுமையை இழந்தார்‌. கோபத்தின்‌ விளிம்புக்கு வந்த அவர்‌, அந்த வீரர்களிடம்‌," இதற்கு மேல்‌ ஏதாவது பேசினால்‌, உங்களை கிளி ஆக்கி விடுவேன்‌, ஜாக்கிரதை" என்று ஒரு போடு போட்டார்‌. அதைக்‌ கேட்ட சேவகர்கள்‌, பயந்து அரண்மனைக்கு சென்று அரசனிடம்‌ நடந்ததை கூறினார்கள்‌. இதைக்‌ கேட்ட, அரசன்‌ திகைத்தான்‌.

கோபம்

அன்றில்‌ இருந்து, அவனுக்கு அந்த சித்த புருஷரின்‌ நினைப்பு மட்டும்‌ தான்‌. இந்நிலையில்‌, ஒரு நாள்‌, ஆலவாய்‌ அழகன்‌ திருக்‌ கோவிலுக்குள்‌ மன்னன்‌ சென்ற சமயம்‌. சுந்தரானந்தரும்‌, அந்தக்‌ கோவிலுக்கு சென்று இருந்தார்‌. சுந்தரானந்தர்‌, தனக்கு முன்‌ கம்பீரமாக வருவதை கவனித்த அரசன்‌ அபிஷேக பாண்டியன்‌ கோபம்‌ கொண்டான்‌. ஏனெனில்‌, அரசன்‌ கோவிலுக்குள்‌ வரும்‌ பொழுது, அரசனுக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. பொதுமக்கள்‌ யாரும்‌ அவன்‌ எதிரில்‌ தோன்றக்‌ கூடாது. அப்படித்‌ தோன்றினால்‌ அது அரசனை அவமதித்த குற்றத்துக்கு சமம்‌. இது தான்‌ அரசனுக்கு, சுந்தரானந்தர்‌ மீது வந்த கோபத்திற்குக்‌ காரணம்‌.

இப்பொழுது, அதிகார கோபமும்‌ தவஞான கோபமும்‌ முட்டிக்‌ கொண்டன.

சித்த சாகசங்கள்

நீ தான்‌ மாயங்கள்‌ நிகழ்த்தும்‌ அந்த மாயாவியோ? உனக்கு உனது மாயாஜாலங்கள்‌ மீது அவ்வளவு கர்வமா?" என்று முதலில்‌ பிரச்சனையை ஆரம்பித்து வைத்தான்‌ அரசன்‌. சுந்தரானந்தர்‌ "சித்த சாகசங்கள்‌, மாயங்கள்‌ அல்ல. ஏன்‌, என்றால்‌ மாயங்கள்‌ அற்பமானவை. இல்லாததை இருப்பது போலக்‌ காட்டுவது. அது வெறும்‌ காட்சி. ஆனால்‌ மறுபுறம்‌ சித்த சாகசங்கள்‌ என்பது பஞ்ச புதங்களை உணர்ந்து, பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்‌ படுத்தப்படுபவை. வேண்டும்‌ ,என்றால்‌ இங்கயே, அதற்கான பரிட்சை செய்து பார்‌. நானும்‌ உனக்கு புரிய வைக்கின்றேன்‌" என்று கூறினார்‌ சுந்தரானந்தர்‌.

கல்‌ யானை

சுந்தரானந்தர்‌ இவ்வாறு கூறியதைக்‌ கேட்டு அரசன்‌ வெகுண்டான்‌. சுந்தரானந்தரை சோதிக்க தயார்‌ ஆனான்‌. அபிஷேகப்‌ பாண்டியன்‌ தீர்க்கமாய்‌ சிந்தித்தான்‌. அவன்‌ நின்ற இடத்திற்கு அருகில்‌ தான்‌ இருந்தது. ஆலய விமானத்தை தாங்கி நிற்கும்‌ அந்தக்‌ கல்‌ யானை. நிதர்சனமாய்த்‌ தெரிவது... மாயபிம்பம்‌ அல்ல அது! (பொதுவாக, எல்லா ஆலயங்களிலும்‌ கற்பீடங்களே கோயில்‌ விமானத்தைப்‌ பொதுவாக தாங்கி நிற்கும்‌, ஆனால்‌ ஆலவாய்‌ அண்ணலான சொக்க நாதரின்‌ ஆலயத்தை நாற்புறமும்‌ வெள்ளை நிறத்து யானைகள்‌ தாங்கி நிற்கக்‌ காணலாம்‌) .

கல்‌ யானை உயிர்‌ பெறுதல்

அரசன்‌ உடனே சுந்தரானந்தரைப்‌ பார்த்து , தவசீலரே... நீர்‌ சொல்வது உண்மை என்றால்‌, இந்தக்‌ கல்‌ யானையை உயிர்‌ கொண்ட யானையாக மாற்றுங்கள்‌ பார்ப்போம்‌. அப்பொழுது நான்‌ நம்புகிறேன்‌” என்று கூறினான்‌. பாண்டியன்‌, பரிவாரத்தில்‌, ஒருவன்‌ கரும்‌ போடு தென்பட்டான்‌. அந்தக்‌ கரும்பு, கண நேரத்தில்‌ பாண்டியனின்‌ கைக்கு மாறியது. அதுவும்‌ கூட சுந்தரானந்தரின்‌ திருவிளையாடல்‌ தான்‌. இப்பொழுது சுந்தரானந்தர்‌, முகத்தில்‌ புன்னகை உடன்‌. அரசனை, அந்தக்‌ கல்‌ யானையின்‌ அருகே, அந்தக்‌ கரும்பை கொண்டு சென்று, சிவனின்‌ பஞ்சாட்சர மந்திரத்தை கோரும்‌ படி பணித்தார்‌. அரசனும்‌ அவ்வாறு செய்ய அந்தக்‌ கல்‌ யானை உயிர்‌ பெற்று, அந்தக்‌ கரும்பை சாப்பிட, அரசன்‌ பார்க்க, அங்கிருந்த மக்களும்‌ பார்க்க தனது தும்பிக்கையின்‌ உதவியுடன்‌ தின்று தீர்த்தது. அந்த யானை, அத்துடன்‌ நிற்கவில்லை, பாண்டியனின்‌ கழுத்தில்‌ இருந்த முத்து மாலையையும்‌ எட்டிப்‌ பறித்தது. அரசன்‌ அபிஷேகப்‌ பாண்டியன்‌ அப்படியே ஆடிப்‌ போனான்‌. சுந்தரானந்தர்‌, பாதத்தில்‌ விழுந்து தன்‌ தவறை மன்னிக்குமாறு மன்றாடினான்‌. இக்காட்சியைப்‌ பார்த்த மதுரையம்‌ பதி மக்களும்‌ மெய்‌ சிலிர்த்துப்‌ போனார்கள்‌.

இப்படியாக தவத்தின்‌ வல்லமையை நிரூபித்த சுந்தரானந்தர்‌ பூரிப்புடன்‌ அனைவர்‌ கண்‌ எதிரில்‌ ஆலவாயன்‌ சந்நிதிக்குள்‌ புகுந்து மறைந்தார்‌. இவர்‌ நடத்திய திருவிளையாடல்கள்‌, இன்னமும்‌ மதுரையில்‌ வரலாறாய்‌ பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமாதி கூடல்


அவருக்கு ஸ்ரீவல்லபர்‌ என்ற பட்டம்‌ சூட்டி, அவர்‌ மதுரையிலேயே நிலையாகத்‌ தங்கி வாழ வேண்டிய எல்லா வசதிகளையும்‌ செய்து கொடுத்தார்‌. கொஞ்சகாலம்‌ வாழ்ந்த பிறகு சுந்தரானந்தரும் கோயில்‌ வளாகத்திலேயே சமாதி பூண்டார்‌. மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவிலில்‌, சுந்தரேஸ்வரர்‌ பெருங்கோவில்‌, சுற்றுப்‌ பிரகாரத்தில்‌ துர்க்கையம்மன்‌ சன்னதிக்கு அருகில்‌ அவருக்கு உருவம்‌ அமைத்து தனி சன்னதியும்‌ அமைத்துள்ளனர்‌. அந்த சன்னதியில்‌ அவர்‌ ஸ்ரீவல்லப சித்தராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌. அவருக்கு வழிபாடுகளும்‌ நடைபெற்று வருகின்றன. யானை உயிர்பெற்றுக்‌ கரும்பைத்‌ தின்றவுடன்‌ சுந்தரானந்தர்‌ சோம சுந்தரப் பெருமான்‌ கருவறையுள்‌ சென்று இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார்‌ என்பது திருவிளையாடல்‌ புராணக்‌ கூற்று.