Top bar Ad

6/10/18

அழுகணிச் சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணங்கள்
  3. பாடல்கள்
  4. ஜீவசமாதி

முன்னுரை


வெளியினில்‌ ஒளியாய்வந்து மிக்கதோர்‌ அமுதகண்ணர்தான்‌ அழுதபாவனையினோடு கண்ணில்‌ நீர்‌ ஆறாய்த்‌ தோன்றப்‌ பமுதிலாக்‌ கார்காத்தன்‌ பாலனாய்ப்‌ பிறந்துவந்து அழுகண்ணிச்சித்தரென்று அருளுடன்‌ பேரிட்டாரே.

என்று கருவூரார்‌ வாதகாவியம்‌ 700 என்ற நூலிலல்‌ கருவூர்த்தேவர்‌ பாடியுள்ளார்‌.
இதன்படி அழுகணிச் சித்தர்‌ கார்காத்த வேளாளர்‌ மரபில்‌ பிறந்தவர்‌.

ஊற்றைச்‌ சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுதில்லை மாற்றிப்‌ பிறக்க மருந்தெனக்குக்‌ கிட்டுமென்றால்‌ ஊற்றைச்‌ சடலம்‌ விட்டே என்‌ கண்ணம்மா உன்‌ பாதம்‌ சேரேனோ!

மேற்கண்ட இந்தப்‌ பாடலை எழுதிய அழுகணி சித்தரைப்‌ பற்றிச்‌ சொல்ல வேண்டும்‌ எனில்‌ இவருக்கு, இப்பெயர்‌ வரப்‌ பல காரணங்கள்‌ சொல்லப்படுகிறது.

பெயர்க் காரணங்கள்


அழுத கண்ணீர்

இவர்‌ அழுத கண்ணீரோடு பாடிக் கொண்டு ஓரிடத்தில்‌ நிற்காமல்‌ நடந்து கொண்டே இருந்தவர்‌. அதனால்‌ இவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. அகஸ்தியர்‌ வைத்திய ரத்தினச்‌ சுருக்கம்‌ என்ற நூலும்‌ அவர் பெயருக்கு இதே காரணத்தைத் தான்‌ கூறுகிறது. இக்கூற்றுகளால்‌ அழுகணிச்சித்தர்‌ அகத்தியரும் கருவூராரும்‌ வாழ்ந்த காலத்திலோ அல்லது அவைகளுக்கு முற்பட்ட காலத்திலோ வாழ்ந்திருக்கக்‌ கூடும்‌ என்று தெரிகிறது.

அழுகின்ற தொனி

குரல்‌ வளையில்‌ புண்‌ ஏற்பட்டு சிதைந்த குரலால்‌, இவர்‌ பேசுவது அழுகின்ற தொனியில்‌ இருந்ததால்‌, இவருக்கு அழுகணி சித்தர்‌ என்ற பெயர்‌ உண்டானதாகக்‌ கூறப்படுகிறது.

அழும்‌ அணி

இவரது பாடல்கள்‌ எல்லாம்‌ இறங்கி வருந்திப்‌ பாடுவதாக - அழும்‌ பாவனையில்‌ அமைந்ததால்‌, அழும்‌ அணி என்பது மருவி அழுகணி என்ற பெயர்‌ ஏற்பட்டு இருக்கலாம்‌ என்றும்‌ நம்பப்படுகிறது.

கன்னிச்‌ சிந்து

இவருடைய பாடல்கள்‌ எளிமையான அழகிய கன்னிச்‌ சிந்து பா வகையில்‌ அமைந்ததால்‌, அழகிய கண்ணி சித்தர்‌ என்பதே பின்னாட்களில்‌ அழகணி யாகி இருக்கக்கூடும்‌ என்றும்‌ ஒரு கூற்று உண்டு.

அழுகண்ணிப் பூண்டு

அழுகண்ணிப் பூண்டு என்ற பெயருடைய நீர் விட்டான்‌ செடி ஒரு கல்ப மூலிகைப்‌ பூண்டு, இதைப்‌ பயன்படுத்தி அவர்‌ மருந்து தயாரித்து மருத்துவம்‌ செய்திருக்கிறார்‌. அதனால்‌ கூட அவர்‌ அழுகணிச் சித்தர்‌ என்ற பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.

பாடல்கள்


இவர்‌ வாழ்ந்த முறையைப்‌ பற்றி எதுவும்‌ தெரியவில்லை. அழுகணி சித்தர்‌ பாடல்கள்‌ என்ற தலைப்பில்‌ சித்தர்‌ ஞானக்‌ கோவை நூலில்‌ இவர்‌ பெயரால்‌ காணப்படும்‌ பாடல்களன்றி, வேறு நூல்‌ தகவல்களோ, இவரைப்‌ பற்றிய வாழ்க்கைக்‌ குறிப்புகளோ இதுவரையில்‌ கிடைக்கப்‌ பெறவில்லை.

அந்தப்‌ பாடல்கள்‌ யாவும்‌ மனித வாழ்கைத்‌ துன்பமயமானது. இத்துன்பத்திலிருந்து விடுபட எனக்கு வழி தெரியவில்லையே. என்று மனம்‌ வருந்திப்‌ பாடியதாகவே உள்ளன. இப்பாடல்களை அவர்‌ கண்ணம்மா என்று ஒரு பெண்ணை முன்னிலைப்‌ படுத்திப்‌ பாடியவைகளாக உள்ளன. மொத்தத்தில்‌ இப்பாடல்கள்‌ யாவும்‌ நான்‌ மனிதப்‌ பிறவி எடுத்து மாயைகளான துன்பங்களில்‌ வாடிக் கொண்டிருக்கிறேன். இந்தத்‌ துன்பங்களிலிருந்து விடுபட்டு உன் பாதக் கமலங்களை வந்தடைய நீ எனக்கு வழிகாட்ட மாட்டாயா?' என்று பராசக்தியைப்‌ பார்த்து புலம்பி வேண்டுவது போலவே உள்ளன.

எடுத்துக்‌காட்டாக சில‌ பாடல்கள்
ஊற்றைச்சடலம்விட்டே என்‌ கண்ணம்மா உன்பாதம்‌ சேரேனோ?”
8ஆம் பாடல்
உற்றாரும்பெற்றாரும்‌ ஊரைவிட்டும்‌ போகையிலே சுற்றாரும்‌ இல்லாமல்‌ என்‌ கண்ணம்மா துணையிழந்து நின்றதென்ன ?
19ஆம் பாடல்
பட்ட முந்தான்பறிபோய்‌ என்கண்ணமா படைமன்னர்‌ மாண்ட தென்ன?”
2ஆம் பாடல்
உன்னைமறக்காமல்‌ என்கண்ணம்மா ஒத்திருந்துவாழேனோ ? என்றும்‌
28ஆம் பாடல்
பிணிநிக்கி என்‌ கண்ணம்மா பனித்துவெளி காட்டாயோ?
32ஆம் பாடல்

என்றும்‌ பாடி முடிக்கிறார்‌.

ஜீவசமாதி


இவர்‌ நாகைப்பட்டினம்‌ நீலாயதாட்சி உடனுறை அருள்மிகு காயாரோகணசுவாமி திருக்கோவிலில்‌ ஜீவசமாதி பூண்டு அருவமாய்‌ இருந்து இன்றும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌.

சுந்தரானந்தர்

முன்னுரை


சுந்தரானந்தர்‌ சதுரகிரி மலையில்‌ ஆதிசித்தரான அநாதி சித்தரின் அருள் பெற்றவர்‌. சதுரகிரி மலை உச்சியில்‌ அநாதி சித்தரை சுந்தர லிங்கமாக பிரதிஷ்டை செய்து அரூப நிலையிலிருந்து இன்றும் வழிபட்டு வருபவர். அவர்‌ ரேவதி நட்சத்திரம்‌ மூன்றாம்‌ பாதத்தில்‌ பிறந்தவர்‌ என்றும்‌, கிஷ்கிந்தா மலை உச்சியில்‌ வாழ்ந்து வரும்‌ நவகண்ட ரிஷியின்‌ பேரன்‌ என்றும்‌ சப்தகாண்டம்‌ 7000ல்‌ போகர்‌ கூறியுள்ளார்‌.

பாடல்‌ 5927.

சட்டை முனியின்‌ சீடர்


அடிக்கடி சமாதி கூடி நீண்ட காலம்‌ நிஷ்டையிலிருந்து வெளி வருவதும்‌ அடிக்கடி விண்வெளிப் பயணம்‌ சென்று வருவதும்‌ அவரது வழக்கம்‌ என்றும்‌ கூறப்டுகிறது. அவரது வாக்கிய சூத்திரம்‌ முதல் பாடலில்‌ வரும்‌.

ஆதி என்ற சட்டை முனிபதத்தைப்போற்றி அறிவாகச்சூத்திரம்தான்‌ ஆறு சொன்னேன்‌

என்ற அடிகள்‌ அவர்‌ சட்டை முனியின்‌ சீடர்‌ என்பதை வெளிப்படுத்துகிறது. சுந்தரானந்தரும்‌ அவரது குருவான சட்டை முனியும்‌ நீண்ட காலம்‌ சதுரகிரிமலை மீதுள்ள சுந்தரலிங்கத்தை வழிபட்டுள்ளனர்‌ என்பது சதுரகிரி புராணச்‌ செய்தி. அவருக்கு பரமானந்தர்‌, வாலைச்சித்தர்‌ என்று இரு சீடர்கள்‌ இருந்ததாகவும்‌ தெரிகிறது. இவர்‌ சோதிடம்‌, வைத்தியம்‌ சிவயோகம்‌ என்ற முப்பெருந்துறைகளிலும்‌ பல நூல்கள்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ வைத்திய காவியம்‌, சோதிடகாவியம்‌, சிவஞானபோதம்‌ என்பவை சில.

அவர்‌ தமிழகம்‌ முழுவதும்‌ சென்று பல சித்த சாதனைகள்‌ புரிந்த வண்ணம்‌ வெற்றியுலா வந்து வல்லபர்‌ (எல்லாவற்றையும்‌ செய்ய வல்லவர்‌) என்ற சிறப்புப் பெற்றார்‌ என்ற ஒரு செவிவழிச்‌ செய்தியும்‌ இருந்து வருகிறது. இப்படி செவி வழியாக கூறப்பட்டு வரும்‌ சம்பவங்களில்‌ ஒன்று வருமாறு:

கல்‌ யானை கரும்பு தின்ற கதை


மதுரை

தமிழ்‌ விளையாடிய மதுரையம்பதிக்கு (மதுரை) செல்ல வேண்டியது அவசியம்‌. இந்த , மதுரை மாநகரம்‌ தமிழ்‌ பண்டிதர்களால்‌ நிரம்பி இருந்த காலம்‌ அது. இங்கு, மக்கள்‌ யாராவது இருவர்‌ சந்தித்து கொண்டாலும்‌, அவர்கள்‌ பேசிக்‌ கொள்வதும்‌ கவிதை நயத்தில்‌ தான்‌ இருக்கும்‌. அந்த உரையாடலில்‌ குற்றம்‌ காண்பதும்‌, பின்னர்‌ அரண்மனை முற்றம்‌ ஏறுவதும்‌ மதுரையில்‌ மிகச்‌ சாதாரணமாக நடக்கும்‌.

ஒரு புறம்‌, மதுரைக்கு முத்துக்கள்‌ குவியும்‌ நகரம்‌ எனும்‌ பெருமையும்‌ உண்டு. மதுரை என்றாலே, அதனை ஆண்ட பாண்டியர்களும்‌, அவர்களது மீன்‌ கொடியும்‌, இலக்கியத்‌ தமிழும்‌ தான்‌ நமது நினைவுக்கு வரும்‌. ஆனால்‌, இது தவிர, நாம்‌ நினைக்க மறந்த ஒன்றும்‌ உள்ளது.

அபிஷேகப்‌ பாண்டியன்

அது தான்‌, அபிஷேகப்‌ பாண்டியனின்‌ காலம்‌. "அப்படி என்ன இவன்‌ சிறந்தவன்‌?" என்று கேட்கின்றீர்களா. இவன்‌ காலத்தில்‌ தான்‌, ஈசனின்‌ திருவிளையாடல்கள்‌ நிறைய நடந்து ஏறியது. அதில்‌ முக்கியமானது, (சிவன்‌, விறகு விற்ற கதை தெரியும்‌ ஆனால்‌, விறகு விற்ற சிவன்‌ மாணிக்கத்தை விற்கவும்‌ மதுரைக்கு வந்த கதை தெரியுமா? ஆம்‌, இது அபிஷேக பாண்டியன்‌ காலத்தில்‌ நடந்த சம்பவம்‌) இவன்‌ மணி முடியில்‌, மாணிக்கம்‌ மட்டும்‌ இல்லாத குறை. இதற்காக, அந்தப்‌ பரம்‌ பொருளே இறங்கி வந்து, இவனுக்கு மாணிக்கம்‌ விற்ற கதை உண்டு (ஆதாரம்‌ : திருவிளையாடல்‌ புராணம்‌).

ஈசன்

அதே போல இவனுக்காக, வருணன்‌ வற்றாது பொழிந்து உருவாக்கிய கடலையே இவன்‌ பொருட்டு வற்ற செய்து பின்‌ மீட்டுக்‌ கொடுத்தது ஈசனின்‌ இன்னொரு திருவிளையாடல்‌, அந்த வரிசையில்‌, இவன்‌ காலத்தில்‌ தான்‌ கல்‌ யானை, கரும்பு தின்ற கதை நடந்தது. இதற்குக்‌ காரணம்‌, சுந்தரானந்தர்‌ என்னும்‌ சித்தர்‌.

மேலும்‌ சொல்லப்போனால்‌, ஒன்றான அவன்‌, உருவில்‌ சிவசக்தி எனும்‌ இரண்டாகி, நன்றான செம்மொழியில்‌ மூன்றாகி, வேதங்களில்‌ நான்காகி, பூதங்களில்‌ ஐந்தாகி, சுவைகளில்‌ ஆறாகி, சுரமாகிய மொழி அதில்‌ ஏழாகி, திசைகளில்‌ எட்டாகி, ரசங்களில்‌ ஒன்பதான அந்த ஈசன்‌.

பித்தன்‌, பேயன்‌, ருத்ரன்‌, கபாலன்‌, சடையாண்டி, பிச்சாண்டி அகோரன்‌, அனந்தன்‌, என்ற பெயர்களுடன்‌ தன்னை சித்தனாக்கி சுந்தரனார்‌ என்ற வடிவில்‌ வந்து, ஒரு அழகிய திருவிளையாடலை நடத்தியது இந்த அபிஷேக பாண்டியன்‌ காலத்தில்‌ தான்‌.

சுந்தரானந்தர் திருவிளையாடல்


சுந்தரானந்தர் வருகை

அன்று, வழக்கம்‌ போல ஒரு காலைப்‌ பொழுது. உலகத்திற்கு விடிந்தது என்பதை விட, மதுரை மாநகருக்கே அன்று ஒரு புது விடியல்‌. அதற்குக்‌ காரணம்‌ ஒரு சித்தர்‌, இவர்‌ சித்தரா? அல்லது அந்த மன்மதன்‌ தான்‌, பாண்டிய நாட்டின்‌ இளம்‌ பெண்களின்‌ கர்ப்பை சோதிக்க மரவுரி தரித்து வந்தானா? என்று எல்லோரும்‌ எண்ணத்‌ தோன்றும்‌ அளவுக்கு ஒரு அழகு. நெற்றியில்‌ விபூதிப்‌ பந்தல்‌, சக்தியும்‌, சிவமும்‌ ஒன்றுக்குள்‌, ஒன்று ஐக்கியம்‌ என்று கூறும்‌ படி மையத்தில்‌ ஒரு குங்குமத்‌ திலகம்‌. செவிப்‌ புலத்தில்‌ ஒரு கனக குண்டலம்‌, இதற்கு அழகு சேர்க்கும்‌ விதமாய்‌, கழுத்தில்‌ அழகிய ஸ்படிக மணி, பறந்து விரிந்த மார்பு, அதில்‌ பளீரென்று பூணூல்‌. நடந்து வரும்‌ தோரணையே ஒரு நளின சிங்காரம்‌. தேஜஸ்‌, என்ற பொருளின்‌ அர்த்தம்‌, இப்பொழுது முழு வடிவம்‌ பெற்றிவிட்டது என்று சொல்லும்‌ அளவுக்கு ஒரு அற்புத அழகு. அந்த, சுந்தர வடிவத்தைப்‌ பார்த்தவுடனேயே, பலர்‌ கை கூப்பியது இயல்பு தானே.

பதிலுக்கு, சுந்தரர்‌ அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார்‌. அந்த வரிசையில்‌ பெருநோய்‌ பிடித்து வாடிய பெரும்புலவர்‌ ஒருவர்‌, சுந்தரர்‌ கண்ணில்‌ படவே அந்தப்‌ புலவர்‌, அந்த சுந்தரனின்‌ பார்வை பட்டு பரிசுத்தமடைந்து மகிழ்ந்தார்‌. இந்த விஷயம்‌ மதுரை மாநகரம்‌ முழுவதும்‌ பரவியது. மேலும்‌, அவரது தமிழ்‌ புலமையால்‌, தமிழ்‌ அறிஞர்களே, அவருடன்‌ வாதத்தில்‌ தோற்றனர்‌. நகர்‌ முழுக்க அவரைப்‌ (சுந்தரானந்தர்‌) பற்றிய பேச்சாகவே இருந்தது.

கிளி ஆக்கி விடுவேன்

இது அரசர்‌ காதுக்கும்‌ போனது. விடுவாரா, அபிஷேகப்‌ பாண்டியன்‌, அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தாரானந்தரை அவைக்கு வரச்‌ சொல்லி தனது சேவகர்களை அனுப்பினார்‌. ஆனால்‌, அது எத்தனை பிழையான செயல்‌ என்பதை அவர்‌ எண்ணிப்‌ பார்க்கவில்லை. உண்மையில்‌ அரசன்‌ அல்லவா, ஞானம்‌ பொருந்திய சுந்தரானந்தரை முறைப்படி வந்து பார்த்திருக்க வேண்டும்‌. என்ன செய்ய? அரசனுக்கே, உரிய செருக்கு அவனையும்‌ விட்டு வைக்க வில்லை. அவனுக்குள்‌ இருந்த அந்த நான்‌ என்ற அகங்காரம்‌ தான்‌ இதற்குக்‌ காரணம்‌.

அதற்கு சுந்தரானந்தரும்‌ ஒரு பாடம்‌ கற்பிக்கத்‌ தயார்‌ ஆனார்‌. அந்த சித்த புருஷரை அழைக்க சேவகர்கள்‌ அவரது முன்‌ வந்தனர்‌. அவர்கள்‌, சொல்வதைக்‌ கேட்ட சுந்தரானந்தர்‌. அரச கட்டளைக்கு பணியவில்லை, மேலும்‌ வந்த சேவகர்களிடம்‌ ஆற்றில்‌ குளிக்க ஒருவன்‌ ஆசைப்பட்டால்‌, அவன்‌ அல்லவா ஆற்றுக்கு வர வேண்டும்‌ என்று வினவினார்‌. ஆனால்‌, அந்த வீரர்களோ, அவரை விடுவதாக இல்லை. அவரை வற்புறுத்தி தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சி செய்தனர்‌. சுந்தரானந்தர்‌, அவர்களின்‌ பேச்சால்‌, தனது பொறுமையை இழந்தார்‌. கோபத்தின்‌ விளிம்புக்கு வந்த அவர்‌, அந்த வீரர்களிடம்‌," இதற்கு மேல்‌ ஏதாவது பேசினால்‌, உங்களை கிளி ஆக்கி விடுவேன்‌, ஜாக்கிரதை" என்று ஒரு போடு போட்டார்‌. அதைக்‌ கேட்ட சேவகர்கள்‌, பயந்து அரண்மனைக்கு சென்று அரசனிடம்‌ நடந்ததை கூறினார்கள்‌. இதைக்‌ கேட்ட, அரசன்‌ திகைத்தான்‌.

கோபம்

அன்றில்‌ இருந்து, அவனுக்கு அந்த சித்த புருஷரின்‌ நினைப்பு மட்டும்‌ தான்‌. இந்நிலையில்‌, ஒரு நாள்‌, ஆலவாய்‌ அழகன்‌ திருக்‌ கோவிலுக்குள்‌ மன்னன்‌ சென்ற சமயம்‌. சுந்தரானந்தரும்‌, அந்தக்‌ கோவிலுக்கு சென்று இருந்தார்‌. சுந்தரானந்தர்‌, தனக்கு முன்‌ கம்பீரமாக வருவதை கவனித்த அரசன்‌ அபிஷேக பாண்டியன்‌ கோபம்‌ கொண்டான்‌. ஏனெனில்‌, அரசன்‌ கோவிலுக்குள்‌ வரும்‌ பொழுது, அரசனுக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. பொதுமக்கள்‌ யாரும்‌ அவன்‌ எதிரில்‌ தோன்றக்‌ கூடாது. அப்படித்‌ தோன்றினால்‌ அது அரசனை அவமதித்த குற்றத்துக்கு சமம்‌. இது தான்‌ அரசனுக்கு, சுந்தரானந்தர்‌ மீது வந்த கோபத்திற்குக்‌ காரணம்‌.

இப்பொழுது, அதிகார கோபமும்‌ தவஞான கோபமும்‌ முட்டிக்‌ கொண்டன.

சித்த சாகசங்கள்

நீ தான்‌ மாயங்கள்‌ நிகழ்த்தும்‌ அந்த மாயாவியோ? உனக்கு உனது மாயாஜாலங்கள்‌ மீது அவ்வளவு கர்வமா?" என்று முதலில்‌ பிரச்சனையை ஆரம்பித்து வைத்தான்‌ அரசன்‌. சுந்தரானந்தர்‌ "சித்த சாகசங்கள்‌, மாயங்கள்‌ அல்ல. ஏன்‌, என்றால்‌ மாயங்கள்‌ அற்பமானவை. இல்லாததை இருப்பது போலக்‌ காட்டுவது. அது வெறும்‌ காட்சி. ஆனால்‌ மறுபுறம்‌ சித்த சாகசங்கள்‌ என்பது பஞ்ச புதங்களை உணர்ந்து, பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்‌ படுத்தப்படுபவை. வேண்டும்‌ ,என்றால்‌ இங்கயே, அதற்கான பரிட்சை செய்து பார்‌. நானும்‌ உனக்கு புரிய வைக்கின்றேன்‌" என்று கூறினார்‌ சுந்தரானந்தர்‌.

கல்‌ யானை

சுந்தரானந்தர்‌ இவ்வாறு கூறியதைக்‌ கேட்டு அரசன்‌ வெகுண்டான்‌. சுந்தரானந்தரை சோதிக்க தயார்‌ ஆனான்‌. அபிஷேகப்‌ பாண்டியன்‌ தீர்க்கமாய்‌ சிந்தித்தான்‌. அவன்‌ நின்ற இடத்திற்கு அருகில்‌ தான்‌ இருந்தது. ஆலய விமானத்தை தாங்கி நிற்கும்‌ அந்தக்‌ கல்‌ யானை. நிதர்சனமாய்த்‌ தெரிவது... மாயபிம்பம்‌ அல்ல அது! (பொதுவாக, எல்லா ஆலயங்களிலும்‌ கற்பீடங்களே கோயில்‌ விமானத்தைப்‌ பொதுவாக தாங்கி நிற்கும்‌, ஆனால்‌ ஆலவாய்‌ அண்ணலான சொக்க நாதரின்‌ ஆலயத்தை நாற்புறமும்‌ வெள்ளை நிறத்து யானைகள்‌ தாங்கி நிற்கக்‌ காணலாம்‌) .

கல்‌ யானை உயிர்‌ பெறுதல்

அரசன்‌ உடனே சுந்தரானந்தரைப்‌ பார்த்து , தவசீலரே... நீர்‌ சொல்வது உண்மை என்றால்‌, இந்தக்‌ கல்‌ யானையை உயிர்‌ கொண்ட யானையாக மாற்றுங்கள்‌ பார்ப்போம்‌. அப்பொழுது நான்‌ நம்புகிறேன்‌” என்று கூறினான்‌. பாண்டியன்‌, பரிவாரத்தில்‌, ஒருவன்‌ கரும்‌ போடு தென்பட்டான்‌. அந்தக்‌ கரும்பு, கண நேரத்தில்‌ பாண்டியனின்‌ கைக்கு மாறியது. அதுவும்‌ கூட சுந்தரானந்தரின்‌ திருவிளையாடல்‌ தான்‌. இப்பொழுது சுந்தரானந்தர்‌, முகத்தில்‌ புன்னகை உடன்‌. அரசனை, அந்தக்‌ கல்‌ யானையின்‌ அருகே, அந்தக்‌ கரும்பை கொண்டு சென்று, சிவனின்‌ பஞ்சாட்சர மந்திரத்தை கோரும்‌ படி பணித்தார்‌. அரசனும்‌ அவ்வாறு செய்ய அந்தக்‌ கல்‌ யானை உயிர்‌ பெற்று, அந்தக்‌ கரும்பை சாப்பிட, அரசன்‌ பார்க்க, அங்கிருந்த மக்களும்‌ பார்க்க தனது தும்பிக்கையின்‌ உதவியுடன்‌ தின்று தீர்த்தது. அந்த யானை, அத்துடன்‌ நிற்கவில்லை, பாண்டியனின்‌ கழுத்தில்‌ இருந்த முத்து மாலையையும்‌ எட்டிப்‌ பறித்தது. அரசன்‌ அபிஷேகப்‌ பாண்டியன்‌ அப்படியே ஆடிப்‌ போனான்‌. சுந்தரானந்தர்‌, பாதத்தில்‌ விழுந்து தன்‌ தவறை மன்னிக்குமாறு மன்றாடினான்‌. இக்காட்சியைப்‌ பார்த்த மதுரையம்‌ பதி மக்களும்‌ மெய்‌ சிலிர்த்துப்‌ போனார்கள்‌.

இப்படியாக தவத்தின்‌ வல்லமையை நிரூபித்த சுந்தரானந்தர்‌ பூரிப்புடன்‌ அனைவர்‌ கண்‌ எதிரில்‌ ஆலவாயன்‌ சந்நிதிக்குள்‌ புகுந்து மறைந்தார்‌. இவர்‌ நடத்திய திருவிளையாடல்கள்‌, இன்னமும்‌ மதுரையில்‌ வரலாறாய்‌ பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமாதி கூடல்


அவருக்கு ஸ்ரீவல்லபர்‌ என்ற பட்டம்‌ சூட்டி, அவர்‌ மதுரையிலேயே நிலையாகத்‌ தங்கி வாழ வேண்டிய எல்லா வசதிகளையும்‌ செய்து கொடுத்தார்‌. கொஞ்சகாலம்‌ வாழ்ந்த பிறகு சுந்தரானந்தரும் கோயில்‌ வளாகத்திலேயே சமாதி பூண்டார்‌. மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவிலில்‌, சுந்தரேஸ்வரர்‌ பெருங்கோவில்‌, சுற்றுப்‌ பிரகாரத்தில்‌ துர்க்கையம்மன்‌ சன்னதிக்கு அருகில்‌ அவருக்கு உருவம்‌ அமைத்து தனி சன்னதியும்‌ அமைத்துள்ளனர்‌. அந்த சன்னதியில்‌ அவர்‌ ஸ்ரீவல்லப சித்தராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌. அவருக்கு வழிபாடுகளும்‌ நடைபெற்று வருகின்றன. யானை உயிர்பெற்றுக்‌ கரும்பைத்‌ தின்றவுடன்‌ சுந்தரானந்தர்‌ சோம சுந்தரப் பெருமான்‌ கருவறையுள்‌ சென்று இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார்‌ என்பது திருவிளையாடல்‌ புராணக்‌ கூற்று.

5/10/18

அநாதி சித்தர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. அநாதி சித்தர்‌ பரிவார தெய்வங்களுடன்‌ எழுந்தருளல்‌

முன்னுரை


சுந்தரலிங்கம்

சிவப்பரம் பொருளே ஒரு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அநாதி சித்தர்‌ என்ற மூல சித்தராக இருந்து ஒரு சித்தர் பரம்பரையையே உருவாக்கியுள்ளார்‌ இந்த அநாதி சித்தர்‌. முதன்முதலில்‌ சதுரகிரிமலை உச்சியில்‌ ஒரு சுயம்பு சிவலிங்கமாக வெளிப்பட்டார்‌. முதன்முதலில்‌ அகத்தியர்தான்‌ இந்த லிங்கத்தை வழிபட்டார்‌.பின்னர்‌ சட்டை முனியின்‌ சீடரான சுந்தரானந்தரிடம்‌ அந்தலிங்கத்தைக் கொடுத்தார்‌. சுந்தரானந்ர்‌ அந்தலிங்கத்தை மலை உச்சியில்‌ பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்‌. அதனால்‌ அந்த லிங்கத் திருமேனி இன்றும்‌ சுந்தரலிங்கம்‌ என்றே அழைக்கப்ட்டு வருகிறது. சட்டை முனியும்‌ கொஞ்ச காலம்‌ சுந்தரானந்தருடன்‌ சேர்ந்து அந்த லிங்கத்தை வழிபட்டு வந்தார்‌. சுந்தரானந்தர்‌ தான்‌ இன்றும்தொடாந்து வழிபட்டுவருநிறார்‌. இந்த லிங்கம்‌ தோன்றிய பல காலத்திற்குப்‌ பிறகு இந்த லிங்கத்திற்கு கொஞ்சம்‌ உயரத்தில்‌ சந்தரமகாலிங்கம்‌ சந்தனமகாலிங்கம்‌ என இரண்டு மகாலிங்கங்கள்‌ தோன்றி கோயில்‌ கொண்டுள்ளன.

அநாதி சித்தர்‌ பரிவார தெய்வங்களுடன்‌ எழுந்தருளல்‌


சதுரகிரிக்கு அருகில்‌ உள்ள கோட்டையூரில்‌ பச்சைமால்‌ என்ற மாட்டிடையன்‌ பசுக்களின்‌ பாலைகறந்து தன்‌ மனைவி சடை நங்கை மூலம்‌ விற்று வாழ்க்கை நடத்தி வந்தான்‌. ஒரு நாள்‌ சடை நங்கை மலைச் சரிவிலிருந்து கறந்த பாலை வீட்டுக்குக்‌ கொண்டுவரும்போது ஒரு முனிவர்‌ “எனக்கு நாக்கு வறண்டு போகிறது. கொஞ்சம்பால்‌ தருவாயா?” என்று கேட்டார்‌. அவளும்‌! பால்குடத்தை அவரிடம்‌ கொடுத்தாள்‌. கொஞ்சம்‌ பாலை அவர்‌ குடித்தார்‌. இந்த நிகழ்ச்சி கொஞ்ச நாள்‌ தொடர்ந்து நடந்தது. கொஞ்ச நாளாய்‌ பால்‌ குறைந்து வருவதைக் கண்டுபிடித்த பச்சைமால்‌ மனைவியை அடித்தான்‌. அதனால்‌ வருத்தமுற்ற சடைநங்கை சுந்தர மகாலிங்கத்திடம்‌ போய்‌ நான்‌ குடும்ப நன்மைக்காக இந்த தர்மம்‌ கூட செய்யக் கூடாதா? என்று முறையிட்டாள்‌. பால்‌ குடித்த சித்தர்‌ லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு சடை நங்கை! நான்‌ அநாதி சித்தன்‌. சித்தர்‌ பரம்பரை ஒன்றை உருவாக்கி நான்‌ இந்த லிங்கத்தில்‌ குடிகொண்டுள்ளேன்‌. நீ இன்று முதல்‌ என்‌ நவசக்திகளில்‌ ஒன்றாக இரு. உன்‌ அண்ணன்மார்கள்‌ எழுவரும்‌ ஐயன்‌ மார்கள்‌ என்றபெயரில்‌ எட்டுத் திசைகளிலும்‌ இருந்து வழி தவறிச் செல்பவர்களுக்கு நேர் வழி காட்டுவார்கள்‌” என்று கூறி லிங்கத்தினுள்‌ மறைந்தார்‌ சடை நங்கையும்‌ ஒளிமிக்க தெய்வீக நங்கையானாள்‌. அவள்‌

அண்ணன்மார்கள்‌ ஐயன்மார்களாக மாறி சதுரகிரிமலைப்‌ பகுதியில்‌ வழி தவறிச்‌ செல்பவர்களுக்கு இன்றும்‌ வழிகாட்டி வருகிறார்கள்‌. தன்‌ மனைவி தெய்வமாக மாறியதைக்‌ கண்ட பச்சைமால்‌ தன்‌ தவறை உணர்ந்து திருந்தி நல்வழியில்‌ நடக்கத்‌ தொடங்கினான்‌. அன்று முதல்‌ ஒரு மாட்டின்பாலை சுந்தரலிங்கத்தின்‌ அபிஷேகத்திற்காக சுந்தரானந்தரிடம்‌ கொடுத்து வந்தான்‌. ஒருநாள்‌ அவன்‌ மந்தையில்‌ அந்த ஒரு பசுவை மட்டும்‌ காணவில்லை. தேடிப்‌ பார்த்ததில்‌ அந்தப்‌ பசு சதுரகிரி மலைச்சாரலில்‌ ஒரு மூலையில்‌ நின்று கொண்டிருந்தது. ஒரு வேடன்‌ அதன்‌ பால்‌ காம்புகளில்‌ வாயை வைத்து பசுங்கன்றுபோல்‌ அதன்‌ பாலைக்குடித்துக்‌ கொண்டிருந்தான்‌. சுந்தர லிங்கத்திற்கு அபிஷேகம்‌ செய்ய இருந்த பாலை ஒரு வேடன்‌ குடிப்பதா? என்று ஆத்திரப்பட்டு மாடு மேய்க்கும்‌ கோலால்‌ அந்த வேடனை அடித்தான்‌. அந்த அடிபட்ட வேடனின்‌ அலறல்‌ ஒலி சதுரகிரிப்‌ பகுதி முழுவதும்‌ எதிரொலித்தது. உடனே சுந்தரானந்தரும்‌ சட்டைமுனியும்‌ அங்கே வந்தார்கள்‌. அங்கே வேடன்‌ அநாதி சித்தராக உருமாறி நின்றார்‌.

பச்சைமால்‌ உண்மை அறியாமலே முன்பு தன் மனைவியை அடித்ததையும்‌ இப்போது சித்தரையே அடித்ததையும்‌ சொல்லிக்‌ கதறினான்‌. அப்போது அநாதி சித்தர்‌ பெரிய சிவலிங்கமாக மாறினார்‌. பச்சைமால்‌ ஒளியாக மாறி அந்த லிங்கத்தில்‌ கலந்தான்‌. கோட்டையூர்‌ மூவரையத்தேவர்‌ என்ற குறுநில மன்னன்‌ அங்கே ஒரு கோவிலும்‌ கட்டினான்‌. அக்கோவிலில்‌ மூலவர்‌ மகாலிங்கேஸ்வரர்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. சதுரகிரி சித்தர்கள்‌ இன்றும்‌ சுந்தரலிங்கத்தையும்‌ மகாலிங்கேஸ்வரரையும்‌ வழிபட்டு வருகிறார்கள்‌.

3/10/18

உரோம ரிஷி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. தோற்றமும்‌ வாழ்ந்த காலமும்‌
  3. உரோமரிஷியின்‌ குருநாதர்‌
  4. உரோம ரிஷியின் நூல்களும் சட்டை முனியுடன் மோதலும்
  5. உரோமரிஷி சமாதி கூடல்‌

முன்னுரை


பெயர்க்காரணம்‌

உரோமரிஷி ஞானம்‌ முதல்‌ பாடலில்‌ மதி அமுதப்‌ பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன்‌ உலகில்‌ சித்து புரிகின்ற பெரியோர்களின்‌ பாதங்களை நம்பியதால்‌ உரோமன்‌ என்றபெயர்‌ பெற்றேன்‌ என்று உரோமரிஷியே கூறுகிறார்‌. இவரது உடல்‌ முழுவதும்‌ உரோமம்‌ அடர்ந்திருக்கும்‌. அதனால்‌ இவர்‌ உரோம ரிஷி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்‌.

தோற்றமும்‌ வாழ்ந்த காலமும்‌


போகர்‌ சப்தகாண்டம்‌ 7000/5699, 5877, 3872 பாடல்களின் படி அவர்‌ செம்படவனுக்கும்‌ குறத்திக்கும் மகனாகப்‌ பிறந்தவர்‌. ஆனி மாதம்‌ கார்த்திகை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ ரிஷப ராசியில்‌ பிறந்தவர்‌.

தமிழறிஞர்களிடையே இவரது காலம்‌ 6, 7, 8 ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஒன்றாய்‌ இருக்கலாம்‌ என்றும்‌, இவர்‌ 15ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்தவராய்‌ இருக்கலாம்‌ என்றும்‌ இருவேறு கருத்துகள்‌ உள்ளன. இவர்‌ 12 தலைமுறைகள்‌ மண்ணில்‌ வாழ்ந்து 14 கோத்திரங்களைக்‌ கண்டவர்‌ என்று போகர்‌ கூறுகிறார்‌. கருவூரார்‌ 71 கற்பங்கள்‌ வாழ்ந்தவர்‌ என்று கூறுகிறார்‌. இவர்‌ பல யுகங்களில்‌ பல்வேறு பிரம்மதேவர்கள்‌ வாழ்ந்த காலங்களில்‌ வாழ்ந்திருக்கிறார்‌ என்ற புராணக்‌ கருத்தும்‌ உள்ளது. இவை தவிர இவரது சமாதிகள்‌ பல்வேறு திருக்கோவில்களில்‌ இன்றும்‌ உள்ளன. இவற்றை யெல்லாம் ஓப்பு நோக்கும் போது இவர்‌ பல்வேறு திருத்தலங்களில்‌ பல முறை சமாதி கூடி பல நூற்றாண்டுகள்‌ வாழ்ந்திருக்கலாம்‌ என்று தான்‌ கொள்ள வேண்டியுள்ளது.

உரோமரிஷியின்‌ குருநாதர்‌


உரோமரிஷி பரிபாஷை காப்புச் செய்யுளில்‌ அவர்‌ புசுண்டரது திருவடிகளுக்கு விடாமல்‌ தினமும்‌ பூசைசெய்து தாசனாகினேன்‌ என்று பாடியுள்ளதால்‌ அவர்‌ புசுண்டரது சீடன்‌ என்பது தெளிவாகிறது. சித்தர்களின்‌ பரம்பரையில்‌ குருமார்கள்‌ சீடர்களை மகன்களாகவே நடத்தியுள்ளார்கள்‌. அந்த முறையில்‌ உரோமரிஷி 500 என்ற நூலில்‌ அவர்‌ தன்னைப்‌ பற்றி கூறுகையில்‌ புகண்டரின்‌ பிள்ளை ரோமன்‌ என்று கூறியுள்ளது. அவர்‌ புசுண்டரின்‌ சீடன்‌ என்பதையே குறிக்கிறது.

உரோம ரிஷியின் நூல்களும் சட்டை முனியுடன் மோதலும்


உரோமரிஷி 100, உரோமரிஷி 500, தீட்சை 200, உரோம முனி வைத்தியம்‌ 500, பரிபாஷை 370, பஞ்சபட்சி சாத்திரம்‌ இவற்றோடு வேறு பல நூல்களும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌.

ஒரு சமயம்‌ சட்டைமுனி இவருடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்ற பயம்‌ இவருக்கு வந்துவிட்டது. அதனால்‌ இவர்‌ தம்‌ நூல்கள்‌ அனைத்தையும்‌ தமது குருநாதர்‌ புசுண்டரிடம்‌ கொடுக்க, காக்கை வடிவில்‌ இருந்த புசுண்டர்‌ அவற்றைத்‌ தம்‌ இறக்கைக்குள்‌ மறைத்து வைத்து எடுத்துச்‌ சென்று அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. அகத்தியர்‌ அவற்றைப்‌ பொதிகை மலையில்‌ உள்ள குகைக்குள்‌ நீண்டகாலம்‌ ஒளித்து வைத்திருந்து இவரிடம்‌ திருப்பிக்‌ கொடுத்தார்‌ என்று உரோம ரிஷி 500 என்ற நூலில்‌ அவர் கூறியுள்ளார்‌. சட்டை முனியுடன்‌ ஏற்பட்ட மோதல்‌ பற்றிய முழு விபரம்‌ சட்டை முனி வரலாற்றில்‌ இடம்‌ பெற்றுள்ளது. உரோமரிஷி தவமியற்றிய இரு முக்கிய திருத்தலங்கள்‌. உரோம ரிஷி பல சிவத்தலங்களில்‌ நீண்ட காலம்‌ தங்கி தவமியற்றியுள்ளார்‌. அவைகளில்‌ சீர்காழியும்‌, சேரன்மகாதேவியும்‌ குறிப்பிடத்‌ தக்க இருத்தலங்கள்‌.

சீர்காழி - காலவத்து

மன்னன்‌ நீண்டகாலம்‌ தனக்குக்‌ குழந்தை இல்லாதிருந்த குறையை உரோம ரிஷியிடம்‌ கூறினான்‌. உரோமரிஷி சீர்காழியில்‌ கைலாயநாதரை நோக்கித்‌ தவமிருந்தார்‌. அவர்‌ மூலம் கைலாச நாதர்‌ ஆதி சேடனுக்கும்‌ வாயுதேவனுக்கும்‌ இடையே போர்‌ நடந்த பிறகு உன்‌ எண்ணம்‌ ஈடேறும்‌! என்று காலவத்து மன்னனுக்குக்‌ கூறினார்‌. ஆதிசேடன்‌ - வாயுபகவான்‌ போர்‌ முடிந்தவுடன்‌ கடல்‌ கொந்தளித்து பெருகி வந்தது. அப்போது கயிலாய நாதர்‌ தோணியப்‌ பராக சீர்காழியில் தோன்றி காலவத்து மன்னனுக்குக்‌ காட்சியளித்து மகப்பேறு பெற வரமளித்தார்‌. சீர்காழியில்‌ உரோமரிஷி தவமியற்றியதும்‌ கயிலாய நாதர்‌ தோணியப்‌ ராகத்‌ தோன்றியதும்‌ சீர்காழி தோணியப்பர்‌ திருக்கோவிலில்‌ இன்றும்‌ புடைப்புச்‌ சிற்பங்களாக உள்ளன.

சேரன்‌ மகாதேவி

இத்திருத்தலம்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ தாமிரபரணி ஆற்றங்கரையில்‌ உள்ளது. இத்தலம்‌ நவகைலாயங்களில்‌ ஒன்றாகும்‌. இங்கு எழுந்தருளியுள்ள ஆவுடை நாயகி உடனுறை அம்மநாத சுவாமி சுயம்புலிங்கம்‌. இங்கு வந்த உரோமரிசி முனிவர்‌ ஒரு ஆலமரத்தடியில்‌ லிங்க வடிவில்‌ இருந்து இறைவனை வழிபட்டு மறு பிறப்பில்லாத உயர்நிலையை அடைந்தார்‌. அவர்‌ காலத்திலேயே அம்மநாத சுவாமி திருக்‌ கோவிலும்‌ எழுப்பப்பட்டது. இவ்வாறே பல தலங்களும்‌ சென்று தவ வாழ்க்கையுடன்‌ சிவத்தொண்டும்‌ செய்து வந்தார்‌.

உரோமரிஷி ஞானம்


உரோமரிஷி ஞானம்‌ என்னும்‌ 13 பாடல்களில்‌ அவர்‌ நமக்கு பல நல்வழிகளைக்‌ காண்பிக்கிறார்‌.

  1. பெண்ணாசையை விட்டு மெளன யோகத்தைக்‌ கடை பிடித்தால் தான்‌ முக்தி கிட்டும்‌.
  2. அதற்கு முதற்‌படியாக பிராணாயாமம்‌ செய்ய வேண்டும்‌.
  3. புருவமையத்தில்‌ கருத்தை வைத்து ஆறாதாரத்தவம்‌ புரிய வேண்டும்‌.
  4. காய்‌, சருகு கிழங்குகளைத் தின்று கொண்டு நதிகளிலே குளித்து காடுமலைகளில்‌ சுற்றித்‌ திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.
இவற்றால்‌ நாம்‌ அறிந்து கொள்ள வேண்டுவன
  1. ஒருகுருவின்‌ மூலமாகத்தான்‌ தவயோகம்‌ பயில வேண்டும்‌.
  2. ஏதாவது ஒரு மந்திரத்தைச்‌ சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு காடு மலைகளில்‌ அலைந்து திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.
  3. உத்தமமான ஒரு குருவைப்‌ பெற்று அவரையே தெய்வமாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ கொண்டு அவர்‌ வழியில்‌ தவ வாழ்வு வாழ வேண்டும்‌.

உரோமரிஷி சமாதி கூடல்‌


பல்வேறு தலங்களிலும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்ததுடன்‌ மக்கள்‌ தொண்டும்‌ செய்து முடித்த பிறகு தாம்‌ சமாதி கூடும்‌ காலம்‌ நெருங்கிவிட்டதை உணர்ந்து உரோமரிஷி சதுரகிரிக்கு சென்றார்‌. அங்கு ஆறு மலைகளுக்கும்‌ மூன்று குகைகளுக்கும்‌ நடுவில்‌ உள்ள குகையில்‌ தவக்குடில்‌ அழைத்துக்கொண்டார்‌. அவரது தவக்குடிலுக்கு கரடி, சிங்கம்‌, செந்நாய்‌, கருவாய்‌, புலி, அரக்கர்‌, காளி, குறலி, குட்டிச்சாத்தான்‌, சுடலை மாடன்‌, இருளன்‌, வீரபத்திரன்‌, முனி, கருப்பன்‌ ஆகியோர்‌ காவல்‌ புரிகின்றனர்‌. நாட்டில்‌ உள்ளவர்கள்‌ அவரை நினைத்து தியானம்‌ செய்தால்‌ சயம்‌ வந்து அவர்‌ திருவருள்‌ புரிவார்‌.இந்த செய்திகள்‌ யாக்கோபு வைத்திய வாத சூத்திரம்‌ 400 என்ற நுலில்‌ இடம் பெற்றுள்ளன.