Top bar Ad

3/10/18

உரோம ரிஷி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. தோற்றமும்‌ வாழ்ந்த காலமும்‌
  3. உரோமரிஷியின்‌ குருநாதர்‌
  4. உரோம ரிஷியின் நூல்களும் சட்டை முனியுடன் மோதலும்
  5. உரோமரிஷி சமாதி கூடல்‌

முன்னுரை


பெயர்க்காரணம்‌

உரோமரிஷி ஞானம்‌ முதல்‌ பாடலில்‌ மதி அமுதப்‌ பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன்‌ உலகில்‌ சித்து புரிகின்ற பெரியோர்களின்‌ பாதங்களை நம்பியதால்‌ உரோமன்‌ என்றபெயர்‌ பெற்றேன்‌ என்று உரோமரிஷியே கூறுகிறார்‌. இவரது உடல்‌ முழுவதும்‌ உரோமம்‌ அடர்ந்திருக்கும்‌. அதனால்‌ இவர்‌ உரோம ரிஷி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்‌.

தோற்றமும்‌ வாழ்ந்த காலமும்‌


போகர்‌ சப்தகாண்டம்‌ 7000/5699, 5877, 3872 பாடல்களின் படி அவர்‌ செம்படவனுக்கும்‌ குறத்திக்கும் மகனாகப்‌ பிறந்தவர்‌. ஆனி மாதம்‌ கார்த்திகை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ ரிஷப ராசியில்‌ பிறந்தவர்‌.

தமிழறிஞர்களிடையே இவரது காலம்‌ 6, 7, 8 ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஒன்றாய்‌ இருக்கலாம்‌ என்றும்‌, இவர்‌ 15ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்தவராய்‌ இருக்கலாம்‌ என்றும்‌ இருவேறு கருத்துகள்‌ உள்ளன. இவர்‌ 12 தலைமுறைகள்‌ மண்ணில்‌ வாழ்ந்து 14 கோத்திரங்களைக்‌ கண்டவர்‌ என்று போகர்‌ கூறுகிறார்‌. கருவூரார்‌ 71 கற்பங்கள்‌ வாழ்ந்தவர்‌ என்று கூறுகிறார்‌. இவர்‌ பல யுகங்களில்‌ பல்வேறு பிரம்மதேவர்கள்‌ வாழ்ந்த காலங்களில்‌ வாழ்ந்திருக்கிறார்‌ என்ற புராணக்‌ கருத்தும்‌ உள்ளது. இவை தவிர இவரது சமாதிகள்‌ பல்வேறு திருக்கோவில்களில்‌ இன்றும்‌ உள்ளன. இவற்றை யெல்லாம் ஓப்பு நோக்கும் போது இவர்‌ பல்வேறு திருத்தலங்களில்‌ பல முறை சமாதி கூடி பல நூற்றாண்டுகள்‌ வாழ்ந்திருக்கலாம்‌ என்று தான்‌ கொள்ள வேண்டியுள்ளது.

உரோமரிஷியின்‌ குருநாதர்‌


உரோமரிஷி பரிபாஷை காப்புச் செய்யுளில்‌ அவர்‌ புசுண்டரது திருவடிகளுக்கு விடாமல்‌ தினமும்‌ பூசைசெய்து தாசனாகினேன்‌ என்று பாடியுள்ளதால்‌ அவர்‌ புசுண்டரது சீடன்‌ என்பது தெளிவாகிறது. சித்தர்களின்‌ பரம்பரையில்‌ குருமார்கள்‌ சீடர்களை மகன்களாகவே நடத்தியுள்ளார்கள்‌. அந்த முறையில்‌ உரோமரிஷி 500 என்ற நூலில்‌ அவர்‌ தன்னைப்‌ பற்றி கூறுகையில்‌ புகண்டரின்‌ பிள்ளை ரோமன்‌ என்று கூறியுள்ளது. அவர்‌ புசுண்டரின்‌ சீடன்‌ என்பதையே குறிக்கிறது.

உரோம ரிஷியின் நூல்களும் சட்டை முனியுடன் மோதலும்


உரோமரிஷி 100, உரோமரிஷி 500, தீட்சை 200, உரோம முனி வைத்தியம்‌ 500, பரிபாஷை 370, பஞ்சபட்சி சாத்திரம்‌ இவற்றோடு வேறு பல நூல்களும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌.

ஒரு சமயம்‌ சட்டைமுனி இவருடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்ற பயம்‌ இவருக்கு வந்துவிட்டது. அதனால்‌ இவர்‌ தம்‌ நூல்கள்‌ அனைத்தையும்‌ தமது குருநாதர்‌ புசுண்டரிடம்‌ கொடுக்க, காக்கை வடிவில்‌ இருந்த புசுண்டர்‌ அவற்றைத்‌ தம்‌ இறக்கைக்குள்‌ மறைத்து வைத்து எடுத்துச்‌ சென்று அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. அகத்தியர்‌ அவற்றைப்‌ பொதிகை மலையில்‌ உள்ள குகைக்குள்‌ நீண்டகாலம்‌ ஒளித்து வைத்திருந்து இவரிடம்‌ திருப்பிக்‌ கொடுத்தார்‌ என்று உரோம ரிஷி 500 என்ற நூலில்‌ அவர் கூறியுள்ளார்‌. சட்டை முனியுடன்‌ ஏற்பட்ட மோதல்‌ பற்றிய முழு விபரம்‌ சட்டை முனி வரலாற்றில்‌ இடம்‌ பெற்றுள்ளது. உரோமரிஷி தவமியற்றிய இரு முக்கிய திருத்தலங்கள்‌. உரோம ரிஷி பல சிவத்தலங்களில்‌ நீண்ட காலம்‌ தங்கி தவமியற்றியுள்ளார்‌. அவைகளில்‌ சீர்காழியும்‌, சேரன்மகாதேவியும்‌ குறிப்பிடத்‌ தக்க இருத்தலங்கள்‌.

சீர்காழி - காலவத்து

மன்னன்‌ நீண்டகாலம்‌ தனக்குக்‌ குழந்தை இல்லாதிருந்த குறையை உரோம ரிஷியிடம்‌ கூறினான்‌. உரோமரிஷி சீர்காழியில்‌ கைலாயநாதரை நோக்கித்‌ தவமிருந்தார்‌. அவர்‌ மூலம் கைலாச நாதர்‌ ஆதி சேடனுக்கும்‌ வாயுதேவனுக்கும்‌ இடையே போர்‌ நடந்த பிறகு உன்‌ எண்ணம்‌ ஈடேறும்‌! என்று காலவத்து மன்னனுக்குக்‌ கூறினார்‌. ஆதிசேடன்‌ - வாயுபகவான்‌ போர்‌ முடிந்தவுடன்‌ கடல்‌ கொந்தளித்து பெருகி வந்தது. அப்போது கயிலாய நாதர்‌ தோணியப்‌ பராக சீர்காழியில் தோன்றி காலவத்து மன்னனுக்குக்‌ காட்சியளித்து மகப்பேறு பெற வரமளித்தார்‌. சீர்காழியில்‌ உரோமரிஷி தவமியற்றியதும்‌ கயிலாய நாதர்‌ தோணியப்‌ ராகத்‌ தோன்றியதும்‌ சீர்காழி தோணியப்பர்‌ திருக்கோவிலில்‌ இன்றும்‌ புடைப்புச்‌ சிற்பங்களாக உள்ளன.

சேரன்‌ மகாதேவி

இத்திருத்தலம்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ தாமிரபரணி ஆற்றங்கரையில்‌ உள்ளது. இத்தலம்‌ நவகைலாயங்களில்‌ ஒன்றாகும்‌. இங்கு எழுந்தருளியுள்ள ஆவுடை நாயகி உடனுறை அம்மநாத சுவாமி சுயம்புலிங்கம்‌. இங்கு வந்த உரோமரிசி முனிவர்‌ ஒரு ஆலமரத்தடியில்‌ லிங்க வடிவில்‌ இருந்து இறைவனை வழிபட்டு மறு பிறப்பில்லாத உயர்நிலையை அடைந்தார்‌. அவர்‌ காலத்திலேயே அம்மநாத சுவாமி திருக்‌ கோவிலும்‌ எழுப்பப்பட்டது. இவ்வாறே பல தலங்களும்‌ சென்று தவ வாழ்க்கையுடன்‌ சிவத்தொண்டும்‌ செய்து வந்தார்‌.

உரோமரிஷி ஞானம்


உரோமரிஷி ஞானம்‌ என்னும்‌ 13 பாடல்களில்‌ அவர்‌ நமக்கு பல நல்வழிகளைக்‌ காண்பிக்கிறார்‌.

  1. பெண்ணாசையை விட்டு மெளன யோகத்தைக்‌ கடை பிடித்தால் தான்‌ முக்தி கிட்டும்‌.
  2. அதற்கு முதற்‌படியாக பிராணாயாமம்‌ செய்ய வேண்டும்‌.
  3. புருவமையத்தில்‌ கருத்தை வைத்து ஆறாதாரத்தவம்‌ புரிய வேண்டும்‌.
  4. காய்‌, சருகு கிழங்குகளைத் தின்று கொண்டு நதிகளிலே குளித்து காடுமலைகளில்‌ சுற்றித்‌ திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.
இவற்றால்‌ நாம்‌ அறிந்து கொள்ள வேண்டுவன
  1. ஒருகுருவின்‌ மூலமாகத்தான்‌ தவயோகம்‌ பயில வேண்டும்‌.
  2. ஏதாவது ஒரு மந்திரத்தைச்‌ சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு காடு மலைகளில்‌ அலைந்து திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.
  3. உத்தமமான ஒரு குருவைப்‌ பெற்று அவரையே தெய்வமாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ கொண்டு அவர்‌ வழியில்‌ தவ வாழ்வு வாழ வேண்டும்‌.

உரோமரிஷி சமாதி கூடல்‌


பல்வேறு தலங்களிலும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்ததுடன்‌ மக்கள்‌ தொண்டும்‌ செய்து முடித்த பிறகு தாம்‌ சமாதி கூடும்‌ காலம்‌ நெருங்கிவிட்டதை உணர்ந்து உரோமரிஷி சதுரகிரிக்கு சென்றார்‌. அங்கு ஆறு மலைகளுக்கும்‌ மூன்று குகைகளுக்கும்‌ நடுவில்‌ உள்ள குகையில்‌ தவக்குடில்‌ அழைத்துக்கொண்டார்‌. அவரது தவக்குடிலுக்கு கரடி, சிங்கம்‌, செந்நாய்‌, கருவாய்‌, புலி, அரக்கர்‌, காளி, குறலி, குட்டிச்சாத்தான்‌, சுடலை மாடன்‌, இருளன்‌, வீரபத்திரன்‌, முனி, கருப்பன்‌ ஆகியோர்‌ காவல்‌ புரிகின்றனர்‌. நாட்டில்‌ உள்ளவர்கள்‌ அவரை நினைத்து தியானம்‌ செய்தால்‌ சயம்‌ வந்து அவர்‌ திருவருள்‌ புரிவார்‌.இந்த செய்திகள்‌ யாக்கோபு வைத்திய வாத சூத்திரம்‌ 400 என்ற நுலில்‌ இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக