Top bar Ad

27/9/18

கோரக்கர்‌

பொருளடக்கம்
  1. பிறப்பு
  2. உண்மை வாழ்க்கை
  3. பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன
  4. கண்ணை இழந்து பெற்ற கதை
  5. குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌
  6. அல்லமாத்தேவர்‌ ஆசிபெறுதல்‌
  7. பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி
  8. கடைசி கால தவ வாழ்க்கை
  9. கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை
  10. கோரக்கர்‌ சமாதி கூடல்‌

பிறப்பு


கோரக்கர்‌ கொல்லி மலைச்சாரலில்‌ உள்ள சம்பல்‌ பட்டியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ கார்த்திகை மாதம்‌ ஆயில்யம்‌ நட்சத்திரம்‌ 2ஆம்‌ பாதத்தில்‌ வசிஷ்ட மகரிஷிக்கும்‌ ஒரு குறவர் குடிப்‌ பெண்ணிற்கும்‌ மகனாகப்‌ பிறந்தார்‌.

(போகர்‌ 7000/5912, 5973)

உண்மை வாழ்க்கை


இவர்‌ பிராமணனாகப் பிறந்து கற்ப தேகத்துடன்‌ சேணியத்‌ தொழிலாளியாக வாழ்ந்து வந்தார்‌. ஒரு நாள்‌ ஒரு இடையன்‌ பாம்பு கடித்து இறந்தான்‌. இவர்‌ அவன்‌ உடலில்‌ புகுந்து இடையனாக மாறினார்‌. திரும்பி வந்து தன்‌ கல்ப தேகத்தைத்‌ தேடக்‌ கிடைக்காததால்‌ இடையனாகவே வாழ்ந்தார்‌. சதுரகிரி சென்று பல முனிவர்களுடன்‌ சேர்ந்து கற்ப மூலிகைகளை உண்டு இடையன்‌ உடலையும்‌ கல்ப தேகமாக மாற்றிக் கொண்டார்‌.

(கருவூரார்‌ வாத காவியம்‌ பாடல்கள்‌ 3563 முதல்‌ 577 வரை)

பிறப்பு பற்றி அபிதான சிந்தாமணி கூறுவன


மச்சேந்திரர்‌ சிவனிடமே ஞானம்‌ பெற்ற மாமுனிவர்‌. தேச சஞ்சாரியான அம்முனிவரிடம்‌ ஒரு நாள்‌ பிச்சையிட்ட ஒரு பெண்‌, தனக்கு மகன்‌ பிறக்க வரமளிக்க வேண்டினாள்‌.அவளுக்கு முனிவர்‌ விபூதி அளித்து! உட்கொள்ளச் சொன்னார்‌. அவள்‌ அதை அடுத்த வீட்டுக்காரியிடம்‌ கூற அவள்‌ அவன்‌ ஒரு வேஷக்‌ காரன்‌. உன்னை மயக்கவே விபூதி கொடுத்திருக்கிறான்‌. அதை அடுப்பில்‌ போட்டு எரித்துவிடு என்றாள்‌. அப்பெண்ணும்‌ அந்த விபூதியை எரியும்‌ அடுப்பில்‌ கொட்டி விட்டாள்‌. சில ஆண்டுகள்‌ கழித்து அவள்‌ வீட்டுக்கு வந்த மச்ச முனி, உன்‌ மகன்‌ எங்கே? என்று கேட்டார்‌. அவள்‌ நடந்ததைக்‌ கூற அவர்‌ அடுப்பெரித்த சாம்பலை எங்கே கொட்டினாய்‌? என்று கேட்டார்‌. அவள்‌ குப்பை மேட்டைக்‌ காட்ட மச்சேந்திரர்‌ கோரக்கா, எழுந்து வா! என்று அழைக்க குப்பைக்‌குள்ளிருந்து அத்தனை ஆண்டுகள்‌ வளர்ந்த பிள்ளையாக கோரக்கர்‌ வெளிப்பட்டார்‌. வெளிப்பட்ட அச்சிறுவன்‌ மச்சமுனியைத்‌ தன்‌ குருவாகக்‌ கொண்டு அவருடன்‌ சென்று விட்டான்‌.

கண்ணை இழந்து பெற்ற கதை


ஒரு நாள்‌ கோரக்கர்‌ பிச்சைக்கு சென்ற போது ஒரு பார்ப்பனி ஒரு வடையைக்‌ கொடுக்க அதைக்‌ கொண்டு போய்‌ குருவுக்குக் கொடுத்தார்‌. அந்த வடையைத்‌ தின்ற மச்சமுனி மீண்டும்‌ ஒரு வடை கேட்க கோரக்கர்‌ அந்த பிராமனியிடம்‌ சென்று என்‌ குருவுக்கு இன்னும்‌ ஒரு வடை வேண்டும்‌ என்றார்‌. உம் குருவுக்காக உமது கண்ணைக்‌ கேட்டால்‌ கொடுப்பீரா? என்று அவள்‌ கேட்க கோரக்கர்‌ உடனே தன்‌ கண்ணைப்‌ பிடுங்கிக் கொடுத்து அவளிடம்‌ வடையை வாங்கிச்சென்று குருவிடம்‌ கொடுத்தார்‌. நடந்ததை அறிந்த குரு தவ வலிமையால்‌ தன்‌ சீடனுக்கு இழந்த கண்ணை வழங்கினார்‌.

குடும்ப பந்தத்திலிருந்‌து குருவை மீட்டல்‌


தவயாத்திரையில்‌ மலையாள நாட்டை அடைந்த மச்சமுனி பிரேமளா என்ற பெண்ணிடம்‌ மயங்கி மீனநாதன்‌ என்ற மகனுக்கும்‌ தந்தையாகி விட்டார்‌. குடும்ப வலையிலிருந்து தன்‌ குருவை மீட்க கோரக்கர்‌ கூத்தாடிகளுடன்‌ மத்தளம்‌ வாசிப்பவராகச்‌ சேர்ந்து அவர்கள்‌ வீட்டை அடைந்து குருவைத்‌ தன்னுடன்‌ வருமாறு அழைத்தார்‌. குரு மறுத்தாலும்‌ சீடர்‌ விடவில்லை. ஒரு நாள்‌ குழந்தை மீனநாதன்‌ படுக்கையில்‌ மல உபாதை செய்ய மச்சமுனி கோரக்கரை அழைத்து குழந்தையை நீரில்‌ கழுவி வரச் சொன்னார்‌. கோரக்கர்‌ மீனநாதனைத்‌ துணியுடன்‌ சேர்த்து ஆற்றுக்குக்‌ கொண்டு போய்த்‌ துவைத்து வெயிலில்‌ காயவைத்தார்‌. நடந்ததைக்‌ கேட்ட முனிவர்‌, 'என்மகனை அழைத்து வா' என, சிதைந்த உடல்‌ துகள்கள் யாவும்‌ சேர்ந்து 108 மீனநாதர்களாய்‌ வந்து சேர்ந்தனர்‌. கோரக்கர்‌ அவர்களையெல்லாம்‌ இணைத்து ஒரே மீனநாதனாக்கிக்‌ கொடுத்து விட்டு, குருவைத்‌ தன்னுடன்‌ வரும்படி அழைத்தார்‌. வேறு வழியின்றி மச்ச முனியும்‌ அவருடன்‌ புறப்பட்டு விட்டார்‌. பிரேமளா ஒரு தங்கப் பாளத்தை ஒரு துணியில்‌ சுற்றி மச்சமுனியிடம்‌ வழிச் செலவுக்கு கொடுத்தனுப்பினாள்‌. வழியில்‌ அதைக் கண்ட கோரக்கர்‌ குருவுக்குத்‌ தெரியாமல்‌ அந்த மூட்டையைப்‌ பிரித்து தங்கப்‌ பாளத்தை எடுத்து ஒரு குளத்தில்‌ எறிந்துவிட்டு துணியில்‌ கற்களை வைத்துக்‌ கட்டிவிட்டார்‌.

அதைக்‌ கண்டுபிடித்த குரு நாதர்‌ கோரக்கா! முதலில்‌ நீ என்‌ மகனைக்‌ கொன்றாய்‌. இப்போது என்‌ தங்கத்தைத்‌ திருடினாய் ‌. இனி நீ என்‌ சீடனல்ல என்று கூற கோரக்கர்‌ அங்கிருந்த ஒரு குன்றின்‌ மேல்‌ ஏறி சிறுநீர் கழிக்க அது ஒரு தங்கமலை ஆகிவிட்டது. பிறகு கோரக்கர்‌ முனிவரிடம்‌ குருவே! உங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ‌ என்று கூறி குருவிடம்‌ நல்விடை பெற்றுப்‌ பிரிந்து சென்று விட்டார்‌. மச்சமுனியும்‌ மாயை தெளிந்து நிறைநிலை சித்தராகி பல தலங்களுக்குச்‌ சென்று மக்களுக்கு உதவிகள்‌ புரிந்து விட்டுக்‌ கடைசியில்‌ திருப்பரங்குன்றம்‌ சென்று சமாதி பூண்டார்‌. இவர்‌ சமாதி பூண்ட இடத்தைத் தான்‌ முருகன்‌ தன்‌ ஆறுபடை வீடுகளில்‌ ஒன்றாகக்‌ கொண்டு அருளாட்சி செய்து வருகிறான்‌.

அல்லமாத் தேவர்‌ ஆசிபெறுதல்‌


அல்லமாத்தேவர்‌ மகா ஞானி. நாடி சாஸ்திரத்தை முழுமையாகக்‌ கற்றுணர்ந்தவர்‌. காற்றையே உடலாகக் கொண்ட சித்தர்‌. ஒரு முறை கோரக்கர்‌ அவரிடம்‌ ஒரு வாளைக்‌ கொடுத்து இந்த வாளால்‌ என்னை வெட்டுங்கள்‌ என்றார்‌. அந்த வாளால்‌ அல்லமர்‌ வெட்ட வாள்‌ மழுங்கியதே தவிர கோரக்கர்‌ உடலில்‌ எந்த பாதிப்பும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ அந்த வாளைக்‌ கோரக்கரிடம்‌ கொடுத்து அதே வாளால்‌ தம்மை வெட்டும்படி கூறினார்‌. தேவரை கோரக்கர்‌ வெட்டிய போது வாள்‌ காற்றுக்குள்‌ புகுந்து வெளி வருவதைப் போல்‌ வெளியில்‌ வந்ததே தவிர அல்லமர்‌ உடலில்‌ எந்தச்‌ சலனமும்‌ ஏற்படவில்லை. அல்லமர்‌ பெருமையை உணர்ந்த கோரக்கர்‌ அவரைப்‌ பணிந்து அவரிடம்‌ அருளாசி பெற்றுத்‌ தன்‌ தவயாத்திரையைத்‌ தொடர்ந்தார்‌.

பிரம்மரிஷியுடன்‌ சேர்ந்து நடத்திய வேள்வி


பிரம்ம ரிஷி குருக்ஷேத்திரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்‌ கற்று சித்தர் கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ முனியாக வாழ்ந்து வந்தார்‌. கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தாங்கள்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழில்களையும்‌ செய்யும்‌ ஆற்றலைப் பெற ஒரு உக்கிரமான வேள்வி நடத்தினர்‌. எதிர்பாரா வண்ணம்‌ யாக குண்டத்திலிருந்து மருள்மாயை, இருள்மாயை என்ற இரு பேரழகிகள்‌ வெளிப்பட்டனர்‌. அதனால்‌ கோபமுற்ற முனிவர்கள்‌ அந்த அழகிகளை சபித்தனர்‌. பிரம்ம முனியால்‌ சபிக்கப்பட்ட இருள்மாயை புகையிலைச் செடியானாள்‌.(ஹோமப் புகையிலிருந்து வெளிப்பட்டதால்‌ அச்செடிக்கு புகையிலைச் செடி என்ற பெயர்‌ வந்தது.) கோரக்கரால்‌ சபிக்கப்பட்ட மருள்‌ மாயை கஞ்சா செடியானாள்‌ (தவ சித்திகளுக்கு அமுதமாக அமைந்ததால்‌ அது கஞ்சா செடி என்ற பெயர்‌ பெற்றது.

கடைசி கால தவ வாழ்க்கை


கோரக்கரின்‌ சிவயோகத்‌ தலயாத்திரையில்‌ ஒரு முறை சதுரகிரி அடி வாரத்தில்‌ உள்ள மகாலிங்க மலைக்‌ குகையில்‌ தவம்‌ மேற்கொண்டார்‌. (அந்தக்‌ குகை, மலை அடிவாரத்திலுள்ள தாணிப் பாறையிலிருந்து 3 கி. மீ உயரே உள்ளது! அந்தக்‌ குகைக்கு அருகில்‌ அவர்‌ வழிபட்ட லிங்கமும்‌ ஒரு நீரோடையும்‌ உள்ளன. அந்த நீரோடை இன்றும்‌ கோரக்கர்‌ தீர்த்தம்‌ என்றே அழைக்கப்‌படுகிறது. கோரக்கர்‌ குகைக்கு மேலே 4 கி. மீ. உயரத்தில்‌ மகா லிங்கேஸ்வரர்‌ லிங்க வடிவில்‌ இருந்து அருளாட்சி செய்துவருகிறார்‌.

இந்த சித்தர்‌ சீனா சென்று அங்கு 500 ஆண்டுகள்‌ சித்து விளையாடியுள்ளார்‌. பின்னர்‌ தமிழகம்‌ வந்து 400 வருட கால தவ வாழ்க்கைக்குப்‌ பின்‌ தில்லைவனம்‌ சென்று சிதம்பர ரகசியத்தை உருவாக்கியதில்‌ போகருடன்‌ இருந்திருக்கிறார்‌. இந்த செய்திகளையும்‌ போகரின்‌ மறுவருகை பற்றியும்‌ தமிழகத்தின்‌ எதிர்காலம்‌ பற்றியும்‌ அவர்‌ சந்திரசேகை 200 என்று நூலில்‌ எழுதியுள்ளார்‌.

அவர்‌ எழுதிய சதுரகிரி மகாத்மியம்‌ என்ற நூலில்‌ திருப்பழனி மல்லூர்‌ தன்னில்‌ போகரோடு தெண்டபாணி உருவம்‌ செய்தோம்‌ என்றும்‌ போகருக்குத்‌ தாமே ஜீவசமாதி எழுப்பியதாகவும்‌ கூறியுள்ளார்‌.

கோரக்கரின் முன் ஜென்ம வாழ்க்கை


அத்திரி தபோவனம்‌ திருநெல்வேலி மாவட்டம்‌ அம்பாசமுத்திரம்‌ வட்டத்தில்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலை அடிவாரத்தில்‌ கடல்‌ மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில்‌ உள்ளது. இந்தத்‌ தபோவனத்தில்‌ தான்‌ அத்திரி முனிவரும்‌ அனுசுயா தேவியும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்‌. அவருக்கு எட்டு சீடர்கள்‌ இருந்தனர்‌. அவர்களில்‌ கோரக்கரும்‌ ஒருவர்‌.

ஒரு சமயம்‌ அத்திரி மகரிஷி ஆழ்ந்த தவத்தில்‌ இருந்தார்‌. அவர்‌ தவம் கலைந்து கண் திறந்த போது அவர்‌ சீடர்களில்‌ ஏழு பேர்‌ நீராடச்‌ சென்றிருந்தனர்‌. கோரக்கர்‌ மட்டும்‌ போகாதிருந்ததைக்‌ கண்ட முனிவர்‌ அவர்‌ மட்டும்‌ ஏன்‌ நீராடச்‌ செல்லவில்லை என்று கேட்டார்‌. தானும்‌ சென்றுவிட்டால்‌ குருவிற்கு செய்ய வேண்டிய பனிவிடைகள்‌ தடைபடும்‌ என நினைத்துத் தான்‌ போகாது இருந்து விட்டதாகக்‌ கோரக்கர்‌ கூறினார்‌. கோரக்கரின்‌ குரு பக்தியைப்‌ பாராட்டிய மகரிஷி தாம்‌ தவம்‌ செய்த அத்தி மரத்தடியில்‌ தண்டத்தால்‌ தட்டி, தம்‌ மண்டலத்திலுள்ள நீரைத்‌ தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில்‌ கோரக்கரை நீராடச் செய்தார்‌. இன்றும்‌ அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும்‌ நீர் வற்றும்‌ கோடையிலும்‌ இந்த அத்திரி கங்கையில்‌ மட்டும்‌ ஒரே நிலையில்‌ நீர் பெருகி குடிக் கொண்டே உள்ளது. இந்த கங்கையில்‌ நீராடுவோர்‌ நலம்‌ பல பெற்று நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்‌.

இப்போது அம்பாசமுத்திரத்திற்கு அருகில்‌ உள்ள ஆழ்வார்‌ குறிச்சிக்கு மேற்கே சுமார்‌ 5 கி.மீ. தொலைவில்‌ ஆதிசிவசைலம்‌ எனப்படும்‌ அத்திரி மலைக்கோயில்‌ உள்ளது. இங்குள்ள ஆதி சிவசைல நாதர்‌ அத்திரி முனிவரால்‌ வழிபட்டதால்‌ அத்திரி பரமேஸ்வரர்‌ என்றும்‌ கோரக்கரால்‌ வழிபடப்பட்டதால்‌ கோரக்கநாதர்‌ என்றும் திருப்பெயர்கள்‌ கொண்டுள்ளார்‌. இங்குள்ள ஆறுபடை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின்‌ திருநாமமும்‌ அத்திரிபரமேஸ்வரி என்பதே ஆகும்‌.

திரேதா யுகத்தில்‌ நிகழ்ந்தது


இந்த வரலாறு நமக்குப்‌ புலப்படுத்தும்‌ உண்மைகள்‌:

  • மகரிஷிகளும்‌ சித்தர்களும்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்கள்‌.
  • மக்களுக்கு நன்மை செய்வதற்காகவும்‌ மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும்‌ அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ தாங்களே விரும்பி மறு பிறப்பெடுக்கின்றனர்‌.
  • அவர்கள்‌ ஒவ்வொரு யுகத்திலும்‌ பிறந்து கொஞ்ச காலம்‌ மக்களிடை வாழ்ந்து ஜீவ சமாதி அடைகின்றனர்‌.
  • ஜீவ சமாதி அடைந்தபிறகும்‌ அருவமாய்‌ இருந்து மக்களுக்கு அருள்‌ புரிந்து வருகின்றனர்‌.
  • அரூபியாக வாழ்ந்து வரும்‌ கோரக்க சித்தரையோ அல்லது அகத்தியர்‌, திருமூலர்‌ போன்ற வேறு ஒரு சித்தரையோ குருவாகக்‌ கொண்டு அவரையே தான்‌ வழிபடும்‌ கடவுளாகவும்‌, வழிகாட்டியாகவும்‌ கொண்டு முழு நம்பிக்கையுடன்‌ அவரை வழிப்பட்டு வந்தால்‌ இப்பிறப்பிலேயே இன்பமான வாழ்வும்‌, மறுபிறப்பில்லா பெருவாழ்வும்‌ அமையும்‌ என்பது திண்ணம்‌.

கோரக்கர்‌ சமாதி கூடல்‌


கடைசி காலத்தில்‌ கோரக்கர்‌ நாகைக்குத்‌ தெற்கேயுள்ள வேளாங்கண்ணியில் 1008 ஆண்டுகள் சிவராஜ யோக நிஷ்டையிலிருந்து அன்னை இராஜராஜேஸ்வரியின் திருக்காட்சி பெற்றார். அங்கிருந்து வடக்கே ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பொய்கை நல்லூரை அடைந்தார். பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வெளியில் வன்னி மரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌.
பொய்கை நல்லூர் திருத்துறைப்பூண்டி பேருந்து வழித்தடத்தில் நாகையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


26/9/18

பிரம்ம முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கோரக்கருடன் நட்பு
  3. ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு
  4. பிரம்ம முனி சமாதி கூடல்‌

முன்னுரை


முற்பகுதி வாழ்க்கை

குஜராத்‌ மாநிலத்தில்‌ துவாரகைக்கு அருகில்‌ உள்ள ஒரு கிராமத்தில்‌ பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16 வயதாகும்‌ முன்பே தான்‌ ஒரு பிரம்ம ஞானி என்று நிரூபித்து வந்தான்‌. தெய்வீக ஆற்றலைக்‌ கொண்டு அவன்‌ மக்களின்‌ நோய்களையும்‌ குறைகளையும்‌ போக்கி வந்தான்‌. மக்கள்‌ அவனை தெய்வமாகவே மதித்து ஞானேஸ்வரர்‌ என்று அழைத்துவந்தனர்‌.

கோரக்கருடன் நட்பு


கோரக்க மகாசித்தர்‌ வட நாட்டு யாத்திரை சென்ற போது தன்‌ தவ வலிமையால்‌ ஞானேஸ்வரரை வெற்றி கொள்ள வேண்டும்‌ என்று அந்த கிராமத்திற்குச்‌ சென்றார்‌. தன்னைக்‌ கண்டு அந்த சிறுவன்‌ அஞ்‌சி ஓட வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ ஒரு புலி மேலேறி அவனை நோக்கிச்‌ சென்றார்‌. அப்போது ஞானேஸ்வரர்‌ ஒரு குட்டிச்சுவரின்‌ அருகில்‌ தன்‌ நண்பர்களுடன்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தார்‌. ஒரு முனிவர்‌ தன்னை காண வருவதைக்‌ கண்ட ஞானேஸ்வரர்‌ நண்பர்களுடன்‌ குட்டிச்‌ சுவரின்மேல்‌ உட்கார்ந்து கொண்டு முனிவரை வரவேற்க விண்ணில்‌ பறந்து சென்றார்‌. அவர்‌ தன்னை நெருங்கி வருவதைத்‌ தடுக்க, கோரக்கர்‌ தன்‌ தவ வலிமையால்‌ பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டார்‌. ஞானேஸ்வரர்‌ அருகில்‌ வந்த அந்த அஸ்திரம்‌ பூமாலையாக மாறி அவர்கழுத்தில்‌ விழுந்தது: அதனால்‌ கோபமுற்ற கோரக்கர்‌ நாகாஸ்திரத்தை ஏவினார்‌. ஞானேஸ்வரர்‌ அந்த நாகத்தைப்பற்றி எய்தவரிடமே திருப்பி விட அது பாம்பாக வந்து கோரக்கர்‌ கழுத்தில்‌ விழுந்தது, அதன் மூலம்‌ ஞானேஸ்வரரின்‌ தெய்வீக ஆற்றல்‌ தம்‌ தவ வலிமையை விட மிகவும்‌ உயர்ந்தது என்பதை உணர்ந்த கோரக்கர்‌ ஆணவம்‌ அடங்கியவராய்‌ ஞானேஸ்வரரை வணங்க இருவரும்‌ நண்பர்களாயினர்‌. பிறகு கோரக்கரும்‌ ஞானேஸ்வரரும்‌ ஒன்று சேர்ந்து வட மதுரை வழியாகக்‌ குருக்ஷேத்திரத்தைச்‌ சென்றடைந்தனர்‌. அங்கு சில காலம்‌ தவவாழ்க்கைக்குப் பின்‌ நேரிடையாக தமிழ்நாடு வந்தனர்‌.

ஞானேஸ்வரர்‌ பிரம்ம முனியான பிறகு


கோரக்கருடன்‌ தமிழகம்‌ வந்த ஞானேஸ்வரர்‌ சதுரகிரி சித்தர்‌ கூட்டத்தில்‌ சேர்ந்து தமிழ்‌ மொழியைக்‌ கற்றார்‌. தமிழக சித்தர்கள்‌ அவரது தவ வலிமையைக் கண்டு வியந்து அவரை பிரம்மமுனி என்றே அழைத்தனர்‌. பிறகு கோரக்கரும்‌ பிரம்ம முனியும்‌ தங்களாலும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய முத்தொழிலையும்‌ செய்ய முடியும்‌ என்று நிரூபிக்க வேண்டி ஒரு யாகம்‌ வளர்த்ததன் மூலம்‌ கஞ்சாச் செடியும்‌, புகையிலைச்‌ செடியும்‌ தோன்றுவதற்குக்‌ காரணமாயினர் ‌.
[ விபரம் கோரக்கர்‌ வரலாற்றில்‌ காணலாம். ]

பிரம்ம முனி சமாதி கூடல்‌


தாம்‌ இயற்கை விதிகளைக்‌ கடந்து யாகம்‌ வளர்த்தது தவறு என்பதை உணர்ந்த பிரம்மமுனி கோரக்கரைப்‌ பிரிந்து தெற்கே சென்று இலங்கையை அடைந்தார்‌. அங்குள்ள திரிகோண மலையில்‌ ஜீவசமாதி கூடியிருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ . பிரம்மமுனி ஜீவ சமாதி அடைந்த போது கோரக்கரும்‌ அவர்‌ அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


25/9/18

திருமூலர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. நம்பத் தகுந்த வரலாறு
  3. சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு
  4. திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌
  5. வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை
  6. திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து

முன்னுரை


திருமூல நாயனாரும்‌ திருமூல சித்தரும்‌ ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூலநாயனாரின் புராணக்கருத்து. திருமூல நாயனாரின்‌ ஞானமும்‌ (77 பாடல்கள்‌) சித்தர்‌ திருமூலரின்‌ மந்திரமும்‌ அவர்‌ தவத்தினால்‌ சிவநிலை அடைந்தார்‌ என்பதையே வலியுறுத்‌துகின்றன. அவர்‌ தவ வாழ்க்கையை வாழ்ந்தார்‌ என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும்‌ புராணங்களும் கூறுகின்றன.

நம்பத் தகுந்த வரலாறு


நாயன்மார்களில்‌ திருமூலர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி மாதம்‌ மூல நட்சத்திரம்‌. இது சிதம்பரம்‌ முதலான அனைத்து சிவாலயங்களும்‌ கொண்டுள்ள நட்சத்திரம்‌. இந்த சித்தர்‌ மூல நட்சத்திரத்தில்‌ பிறந்ததால் திருமூலர்‌ என்று அழைக்கப்படுகிறார்‌ என்று கொள்வதே பொருத்தமானது.

அவர்‌ வேளாளர்‌ குலம்‌ ஒன்றின்‌ 21 வது தலைமுறையைச்‌ (போகர்‌ 7000/5737). ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள்‌ சமாதி கூடியே வாழ்ந்தவர்‌ (போ. 5862). அவர்‌ திருமந்திரம்‌ 3000 பாடல்களைப் பாடியுள்ளார்‌. கடைசியில்‌ (3000 ஆண்டு முடிவில்‌) திருவாவடுதுறையில்‌ உள்ள சிவாலயத்தின்‌ மேற்கேயுள்ள அரச மரத்தடியில்‌ ஜீவ சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌. இதற்குத்‌ திருவாவடுதுறை தலபுராணமே சான்றாக உள்ளது.

சேக்கிழாரின்‌ பெரிய புராண வரலாறு


பாடல்கள்‌ 3564-3591

திருமூலர்‌ - பெயர்க்காரணம்

கயிலைநாதனின்‌ முதல்‌ பெரும்‌ காவலரான திருநந்தி தேவரின்‌ மாணாக்கரில்‌, எண்‌ வகை சித்திகளும்‌ கைவரப்பெற்ற சிவயோகியார்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ அகத்திய முனிவரிடம்‌ கொண்ட நட்பின்‌ காரணமாக, அவரோடு சில காலம்‌ தங்க எண்ணினார்‌. இதையடுத்து அந்த சிவயோகியார்‌, அகத்திய முனிவர்‌ தங்கி அருள்‌ புரியும்‌ பொதிகை மலையை அடையும்‌ பொருட்டு, திருக்கயிலையில்‌ இருந்து புறப்பட்டார்‌. வழியில்‌ உள்ள சிவாலயங்களை தரிசித்து விட்டு, இறுதியில்‌ திருவாவடுதுறையை அடைந்தார்‌.

மூலன்

சில காலம்‌ அங்கேயே தங்கியிருந்தார்‌. சிறிது நாட்கள்‌ கழித்து அங்கிருந்து புறப்பட திட்டமிட்டார்‌. அப்போது அவரை அந்த காட்சி தடுத்து நிறுத்தியது. காவிரிக்‌ கரையில்‌ சோலைகளாக இருந்த இடத்தில்‌ மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த பசுக்கூட்டம்‌ கதறி அழுவதைக்‌ கண்டு திகைத்துப்‌ போனார்‌ அந்த சிவயோகியார்‌. பசுக்களின்‌ இந்த பெரும்‌ துயரத்தை அறிய முற்பட்டார்‌ சிவயோகியார்‌. அதற்கு பதிலும்‌ கிடைத்தது. அந்தணர்கள்‌ வாழும்‌ சாத்தனூரிலே தொன்றுதொட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வரும்‌ இடையரான மூலன்‌ என்பவர்‌ இறந்து விட்டார்‌. அவர்‌ இறப்பை தாங்க முடியாத பசுக்கள்‌, அந்த மூலனின்‌ உடலைச்‌ சுற்றி சுழன்று வந்து நாக்கால்‌ நக்கியபடியும்‌, மோப்பம்‌ பிடித்தபடியும்‌ வருந்திக்‌ கொண்டிருந்தன. மேய்ப்பவன்‌ இறந்தமையால்‌ பசுக்கள்‌ அடைந்த துயரத்தினைக்‌ கண்ட சிவயோகியார்‌, அந்தப்‌ பசுக்களின்‌ துயர்‌ துடைக்க முன்‌ வந்தார்‌.

பரகாயப்‌ பிரவேசம்

எண்‌ வகை சித்திகளையும்‌ கற்றுத்‌ தேர்ந்திருந்த அவர்‌, அவற்றுள்‌ ஒன்றான பரகாயப்‌ பிரவேசம்‌ (கூடுவிட்டு கூடு பாய்தல்‌) என்ற சித்தியை கையாண்டார்‌. அதன்படி தன்‌ உடலை மறைவாக இருக்கும்படி செய்து விட்டு, மந்திரத்தை பிரயோகம்‌ செய்து, தன்‌ உடலில்‌ இருந்து, இறந்து கிடந்த மூலனின்‌ உடலுக்கு தன்‌ உயிரை மாற்றம்‌ செய்தார்‌. மூலன்‌ எழுந்தார்‌. மூலனின்‌ உடலில்‌ தன்‌ உயிரை செலுத்தியதன்‌ காரணமாக அவர்‌ திருமூலர்‌ என்று அழைக்கப்பட்டார்‌. தன்‌ மேய்ப்பாளன்‌ எழுந்த மகிழ்ச்சியில்‌, அவரைச்‌ சுற்றியிருந்த பசுக்கள்‌, நாவால்‌ நக்கியும்‌, மோந்தும்‌, கனைத்தும்‌ தங்கள்‌ மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பின்னர்‌ மகிழ்வில்‌ மேய்ச்சலை தொடர்ந்தன.

பின்னர்‌ மகிழ்ச்சிப்‌ பெருக்கில்‌ வயிறார மேய்ந்த பசுக்கள்‌, கூட்டமாகச்‌ சென்று காவிரியாற்றில்‌ நன்னீர்‌ பருகிக்‌ கரையேறின. அப்பசுக்களைக்‌ குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்‌ படி செய்து பாதுகாத்தருளினார்‌ திருமூலர்‌. மாலை பொழுது வந்ததும்‌, பசுக்கள்‌ தம்‌ தம்‌ கன்றுகளை நினைத்து, தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. பசுக்கள்‌ செல்லும்‌ வழியில்‌ தொடர்ந்து சென்ற திருமூலர்‌, பசுக்கள்‌ யாவும்‌ தம்‌ தமது வீடுகளுக்கு செல்வதை வழியில்‌ நின்று கவனித்தார்‌. இந்த நிலையில்‌ மாலைப்‌ பொழுது கடந்தும்‌ தன்‌ கணவர்‌ வராததை எண்ணி வருந்திய மூலனின்‌ மனைவி, கணவனைத்‌ தேடி சிவயோகியார்‌ நின்ற இடத்திற்கு வந்தாள்‌. அங்கு தன்‌ உணர்வற்று நின்ற தன்‌ கணவனைக்‌ கண்டு அவரைத்‌ தொட முயன்றாள்‌. அப்போது திருமூலர்‌ உருவில்‌ இருந்த சிவயோகியார்‌ சற்று பின்‌ வாங்கி, அந்தப்‌ பெண்மணியை தடுத்து நிறுத்தினார்‌. கணவர்‌ தன்னைக்‌ கண்டு அஞ்சி பின்வாங்குவதை பார்த்து அந்தப்‌ பெண்‌ கலங்கி நின்றாள்‌.

பற்றற்ற நிலை

திருமூலரோ, 'பெண்ணே! நீ எண்ணியவாறு இங்கு உனக்கு, என்னுடன்‌ எத்தகைய உறவும்‌ இல்லை' என்று கூறிவிட்டு, அந்த ஊரில்‌ இருந்த பொது மடத்தில்‌ புகுந்து சிவயோகத்தில்‌ ஆழ்ந்தார்‌. மூலனின்‌ மனைவி, ஊர்‌ பெரியவர்கள்‌ பலரையும்‌ அழைத்துச்‌ சென்று பார்த்தும்‌, சிவயோகியார்‌ அசைவற்று இருந்தார்‌.

அவரது உடல்‌ யோகத்தில்‌ ஆழ்ந்திருந்தது. ஊர்‌ பெரியவர்கள்‌, மூலனின்‌ மனைவியிடம்‌, 'அவர்‌ பற்றற்ற நிலைக்கு சென்றுவிட்டார்‌. இனி திரும்ப மாட்டார்‌ என்று கூறி அழைத்துச்‌ சென்றனர்‌. மூலனின்‌ மனைவி கதறியபடி அவ்விடம்‌ விட்டு அகன்றாள்‌. மறுநாள்‌ தன்‌ உடலை மறைத்து வைத்த இடத்திற்கு சென்ற சிவயோகியார்‌, உடலைக்‌ காணாது கலக்கமுற்றார்‌ அப்போது இது ஈசனின்‌ எண்ணம்‌ என்பதையும்‌, சிவாகமங்களின்‌ அரும்பொருளை திருமூலரது வாக்கினால்‌ தமிழிலே வகுத்துரைக்கக்‌ கருதியதால்‌ போடப்பட்ட திருவிளையாடல்‌ என்பதையும்‌ அவர்‌ தெளிந்து உணர்ந்து கொண்டார்‌.

இதையடுத்து திருவாவடுதுறை கோவிலை அடைந்த திருமூலர்‌ அங்கிருந்த, அரச மரத்தடியில்‌ அமர்ந்து, ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம்‌ பாடல்களை எழுதினார்‌. பின்னர்‌ கயிலைநாதர்‌ இருப்பிடம்‌ சென்றடைந்தார்‌.

திருமூலர்‌ பற்றிய சதுரகிரி தல புராணக்‌ கதைகள்‌


வீரசேனத் திருமூலர் கதை

பாண்டிய நாட்டைச்‌ சேர்ந்த இராசேந்திரபுரி ஒரு சிற்றரசு. அவ்வூர்‌ மன்னனான வீரசேனன்‌ இரக்கமற்றவன்‌. தன்‌ மகிழ்ச்சிக்‌காக கொலையும் செய்யக்‌ கூடியவன்‌. பசி, பட்டினியால்‌ வாடிய அவன்‌ நாட்டு மக்களும்‌ அவனுடைய அன்பு மனைவியும் கூட அவனை வெறுத்தனர். _ ஒருநாள்‌ ஒரு கொடிய நாக விஷத்தை நுகர்ந்து அவன்‌ இறந்து விட்டான்‌. அப்போது சூக்கும உடலோடு விண்‌ வழியில்‌ சென்று கொண்டிருந்த திருமூலர்‌ அம்மன்னனின்‌ உடலைச்‌ சுற்றி அரசியாரும்‌ மந்திரிகளும்‌ அழுது புலம்பிக்கொண்டிருந்ததைக்‌ கண்டார்‌. சதுரகிரி சென்று அம்மலை இடுக்கொன்றில்‌ தன்‌ கல்பதேகத்தை மறைத்து வைத்ததுடன்‌ அதற்குத்தன்‌ முதன்மைச்‌ சீடரான குருராஜனைக்‌ காவல்‌ வைத்து விட்டு சூக்கும உடலுடன்‌ அரண்மனைக்கு வந்து இறந்த மன்னனின்‌ உடலில்‌ புகுந்து வீரசேனத்‌ திருமூலரானார்‌. திருமூலவீரசேனர்‌ ஆட்சியில்‌ இராசேந்திரபுரி செழிப்படைந்தது. மக்கள்‌ எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்‌. அரசியும்‌ பழைய வீரசேனனிடம்‌ அடைந்திராத இன்பங்களை திருமூல வீரசேனரிடம்‌ அனுபவித்தாள்‌. மன்னன்‌ உடலில்‌ இருப்பவர்‌ ஒரு மகா சித்தர்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டாள்‌. அவரிடம்‌ அன்பொழுகப்‌ பேசி, அவர்‌ தம்‌ கற்பதேகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும்‌ அத்தேகத்தையும்‌ எரித்து அழிக்கும்‌ முறைகளையும்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டாள்‌. பிறகு மலைவாழ்‌ மக்களான பளிங்கர்களுக்கு பணம் கொடுத்து சித்தரின்‌ உடலை அழிக்கச்‌ சொன்னாள்‌.

சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நாள்‌ விதி விளையாடியது. நீண்ட காலமாகத்‌ தன்‌ குரு திரும்பி வராததால்‌ குருராஜன்‌ திருமூலரைத்‌ தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தார்‌. அவர்‌ நகர்ப்புறம்‌ வந்த சமயம்‌ பார்த்து பளிங்கர்கள்‌, அரசி கூறிய படி. சித்தரின்‌ கல்ப தேகத்தை எரித்து விட்டனர்‌. அன்று வேட்டைக்குச்‌ சென்ற மன்னர்‌ வழியில்‌ தன்‌ சீடன்‌ வருவதைக்‌ கண்டு பயந்து அவரை அழைத்துக்கொண்டு மலைக்குகைக்குச்‌ சென்றார்‌. தான்‌ பயந்தபடி தன்‌ கல்ப தேகம்‌ எரிந்து கிடந்ததைக்‌ கண்ட திருமூலர்‌ நடந்தவற்றையெல்லாம்‌ ஞானத்தால்‌ உணர்ந்து! தெளிந்தார்‌. குருராஜரைத்‌ தனித்து தவம்புரிந்து கரையேற வாழ்த்தி அனுப்பிவிட்டு அரண்மனைக்கு வந்தார்‌. வந்த சில நாட்களிலேயே மீண்டும்‌ தம்‌ தவ வாழ்க்கையைத்‌ தொடர சதுரகிரிக்கே திரும்ப வந்துவிட்டார்‌.

வீரசேனத்‌ திருமூலர்‌ சம்புகேசத் திருமூலராய்‌ மாறிய கதை


திருவானைக்காவில்‌ சம்புகேசன்‌ என்ற பிராமணன்‌ ஞான மார்க்கக்‌ கல்வியில்‌ சிறந்து விளங்கினான்‌. குருவின்‌ துணையில்லாமலே தன்னால்‌ தவம் பயில முடியும்‌ என்ற கர்வத்தில்‌ அவன்‌ சதுரகிரி சென்று அங்கு பிராணாயாமத்தைத்‌ தொடங்கினான்‌. தவறாகக் கும்பகம்‌ செய்ததன்‌ விளைவாக மூச்சை வெளிவிட முடியாமல்‌ உயிர்நீத்தான்‌. அவனது ஆவிபிரிந்த அரைமணி நேரத்திற்குள்‌ அங்கு வந்த வீரசேனத் திருமூலர்‌, அரசன்‌ உடலிலிருந்து வெளிப்பட்டு சம்புகேசன்‌ உடலில்‌ புகுந்து சம்பு கேசத் திருமூலரானார்‌. தான்‌ குடியிருந்த அரசனின்‌ உடல்‌ பழுதுபடக் கூடாது என நினைத்து அவன்‌ உடலை ஒரு மரப்பொந்தில்‌ வைத்து மூடினார்‌. அந்த மகாசித்தரின்‌ கைப்பட்ட அந்த மரப்பொந்து தானாகவே மூடிக்கொண்டது. அந்த மரம்‌ இனி அரச மரம்‌ என்ற பெயரில்‌ தழைக்கட்டும்‌ என்று வாழ்த்திவிட்டு சதுரகிரி காட்டுப் பகுதியில்‌ மீண்டும்‌ தம் தவ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌. அந்த மலைப்பகுதியிலும்‌ அவருக்கு பல சீடர்கள்‌ வந்து சேர்ந்தனர்‌. அவர்களையெல்லாம்‌ உயர்ந்த தவயோகிகளாக உருவாக்கி சத்தி பெறச்‌ செய்தார்‌. அதோடு திருமந்திரம்‌ எண்ணாயிரம்‌ முதலான பல நூல்களையும்‌ எழுதி முடித்துவிட்டு சம்புகேசத்‌ திருமூலராக அங்கேயே சமாதி பூண்டார்‌ என்று அகத்தியரின்‌ செளமிய சாகரம்‌ கூறுகிறது.

திருமூலர்‌ சமாதி பற்றிய சித்தர்கள்‌ கருத்து


சென்னை சித்த மருத்துவ நூல்‌ ஆய்வு மைய நூல்கள்‌ திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி அடைந்துள்ளார்‌ என்று கூறுகின்றன. இதே கருத்தை போக முனிவரும்‌ கூறியுள்ளார்‌. போகர்‌ ஜனன சாகரம்‌ 312 ஆம்‌ பாடலின்படி திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி கூடி லிங்க வடிவில்‌ உள்ளார்‌. தில்லை நடராஜர்‌ கோவிலில்‌ அவர்‌ சன்னதி ஸ்ரீமூலன்‌ சன்னதி என்றே உள்ளது. அவருடன்‌ வாழ்ந்த பதஞ்சலி முனிவரும்‌, வியாக்ர பாதரும்‌ அக்கோவிலில்‌ சிலை வடிவில்‌ உள்ளனர்‌. திருமூலர்‌ சன்னதியை மையமாகக்‌ கொண்டு தான்‌ பாண்டிய மன்னர்களின்‌ ஆதரவில்‌ கருவூர்த்தேவரால்‌ சிதம்பரம்‌ நடராஜர்‌ கோவில்‌ கட்டப்பட்டது.

(போகர்‌ ஏ. 5769).

24/9/18

கொங்கணவர்‌

பொருளடக்கம்
  1. பிறப்பு‌
  2. குடும்ப வாழ்க்கை
  3. பளிங்கரான வரலாறு
  4. போகரின்‌ சிஷ்யர்
  5. போகரின்‌ உபதேசம்
  6. திருமழிசை ஆழ்வார்‌ சந்திப்பு
  7. கெளதமர்‌ தொடர்பும்‌ நிறைநிலை அடைவும்‌
  8. கொக்கை எரித்த கதை
  9. கர்வம்‌ அகன்றது
  10. மாயை
  11. குளிகைகள்‌ எரிந்து சாம்பலாதல்
  12. சமாதி கூடல்‌

பிறப்பு‌


கொங்கு நாட்டில்‌ இவர்‌ பிறந்தமையால்‌ இவரைக்‌ கொங்கணவர்‌ என்றே அழைத்தனர்‌. இவர்‌ கோவைக்கு அருகேயுள்ள பகுதியில்‌ வசித்தார்‌ எனச்‌ சிலரும்‌, கோவை மாவட்டம்‌ தாராபுரத்துக்கு அடுத்து இருக்கும்‌ ஒதிய மலையில்‌ வாழ்ந்தவர்‌ என்று சிலரும்‌ கூறுவர்‌. கொங்கணவர்‌ கொங்கு நாட்டில்‌ சங்கர குலத்தில்‌ உத்திராடம்‌ நட்சத்திரம்‌ முதல்‌ பாதத்தில்‌ (தனுசுராசியில்‌) பிறந்தவர்.

‌ (போகர்‌ 7000/5908,5909)
கொங்கு நாட்டில்‌ ஊதியூர்‌ மலைப்பகுதியில்‌ அவர்‌ பிறந்து வாழ்ந்ததால்‌ அம்மலை கொங்கணகிரி என்றும்‌ அழைக்கப்படுகிறது. ‌

குடும்ப வாழ்க்கை


அகத்தியர்‌ பெருநூல்‌ காவியம்‌ மட்டுமே கொங்கணவரது பிறப்பு வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. கொங்கணவரின்‌ பெற்றோர்‌ இரும்பை உருக்கிக்‌ கலங்கள்‌ (பாத்திரங்கள்‌) செய்து கோயில்‌ வாசலில்‌ வைத்து விற்றுத்‌ தம்‌ பிழைப்பை நடத்தி வந்தார்கள்‌. ஏழ்மையான நிலையில்‌ வாழ்ந்தாலும்‌ யோகியர்‌, சாதுக்கள்‌ போன்றோரைக்‌ கண்டால்‌ அவர்களுக்கு வேண்டியவற்றைக்‌ கொடுத்தும்‌, உபசாரங்கள்‌ பலவற்றைச்‌ செய்தும்‌ ஏவல்‌ கேட்டும்‌ பண்போடு வாழ்ந்து வந்தனர்‌. ‌

கொங்கணவர்‌ பதினாறு வயதிலேயே இரும்புப்‌ பாத்திரங்கள்‌ செய்வதில்‌ நிபுணராகி விரைவில்‌ பாத்திர வியாபாரத்தில்‌ பெரும்‌ வணிகரானார்‌. கொங்கணவர்‌ தம்‌ பெற்றோர்‌ போலவே இரும்புக்‌ கலங்களைச்‌ செய்து விற்றுப்‌ பிழைத்து வந்தார்‌. பணம்‌ தேடிச்‌ சேர்த்தார்‌. திருமணமும்‌ செய்து கொண்டார்‌. மாடமாளிகைகள்‌ கட்டி வாழ்ந்தார்‌. அதோடு முனிவர்களைப்‌ பெரிதும்‌ உபசரித்து வந்தார்‌. அம்முனிவர்களும்‌ அகமகிழ்ந்து இவருக்கு மெய்ஞ்ஞானத்தை ஊட்டி வந்தனர்‌. அதனால்‌ அவர்‌ குடும்ப வாழ்க்கையைத்‌ துறந்து துறவியானார்.

‌ (அகத்தியர்‌ 12000/ 4வது காண்டம்‌ 414 ஆம்‌ பாடல்‌).
தம்மை நாடி வரும்‌ அதிதிகள்‌, சாதுக்கள்‌, ரிஷிகள்‌ முதலானோர்க்கு பால்‌, பழம்‌ ஆகியவற்றுடன்‌ அன்னமும்‌ படைத்து உபசரித்தார்‌. இதனால்‌ மனம்‌ மகிழ்ந்த ரிஷிகள்‌,

தெள்ளமிர்தம்‌ ஆனதொரு பால்‌ பழத்தால்‌ தேற்றமுடன்‌ கொங்கணற்கு மனதுவந்து உள்ளபடி மெய்ஞ்ஞானப்‌ பாலை ஐயா உந்தமற்கு உபதேசம்‌ செய்ததாலே கள்ளமிலாக்‌ கொங்கணரும்‌ மனதுவந்து காசினியில்‌ சமுசாரம்‌ துறந்திட்டாரே
என்றனர்‌.

பொருள்‌ : தம்மை நாடி வந்த ரிஷிகளுக்கு கொங்கணவர்‌ பசும்பாலினை அருந்தக்‌ கொடுத்தார்‌. அவர்கள்‌ கொங்கணருக்கு மெய்ஞ்ஞானம்‌ என்னும்‌ பாலை ஊட்டினர்‌ அதனால்‌ அவருள்‌ இருந்த அஞ்ஞானம்‌ அழிந்து, மெய்ஞ்ஞானம்‌ கைவரப்‌ பெற்றார்‌. இல்லற வாழ்க்கையைத்‌ துறந்து துறவியானார்‌....

பளிங்கரான வரலாறு


அவர்‌ கூடுவிட்டுக்‌ கூடு பாய்தல்‌ முதலான அஷ்ட மாசித்திகளையும்‌ பெற்று மகாசித்தரானார்‌. ஒரு சமயம்‌ அவர்‌ மலைச்சாரல்களிலுள்ள காடுகள்‌ வழியே சென்று கொண்டிருந்த போது மலைவாழ்‌ பளிங்கர்‌ இனத்தைச்‌ சேர்ந்த ஒருவன்‌ இறந்து கிடந்ததைக்‌ கண்டார்‌. அவன்‌ இனத்தவர்கள்‌ கதறி அழுததைக்‌ கண்டு அவர்கள்‌ மீது இரக்கமுற்றுத்‌ தன்‌ சரீரத்தைவிட்டு அந்தப்‌ பளிங்கனின்‌ சரீரத்தில்‌ புகுந்து ஒரு பளிங்கனாகவே மாறிவிட்டார்‌. அவர்‌ மறைத்துவைத்திருந்த அவரது உடலைக்கண்ட பளிங்கர்கள்‌ அதை எரித்து சாம்பலாக்கிவிட்டனர்‌. அது முதல்‌ அவர்‌ ஒரு பளிங்கனாகவே கடைசி வரை வாழ்ந்து வந்தார்‌.

(கருவூரார்‌ வாதகாவியம்‌ 700/ பாடல்கள்‌ 277, 218)

அதன்பிறகு போகர்‌ அவருக்கு குருவாக அமைந்தார்‌. போகரிடம்‌ ஞானம்பெற்ற பின்‌ அகத்தியரிடமும்‌ சிடராயிருந்து தவ யோகத்தில்‌ ஈடுபட்டு சித்தராக வாழத் தொடங்கினார்‌.

போகரின்‌ சிஷ்யர்


போகரின்‌ சிஷ்யர்களுள்‌ சற்று வித்தியாசமானவர்‌ கொங்கணர்‌. இவரின்‌ மனைவி அதிக பேராசை மிக்கவள்‌. கோடி, கோடியாய்‌ பொற்காசுகளும்‌, நவரத்தின மணிகளும்‌, தனது வீட்டில்‌ கொட்டி செழிக்க வேண்டும்‌ என்று விரும்பினாள்‌. அப்படி சம்பாதிக்க துப்பு இல்லாதவர்கள்‌, ஆணாக இருந்தாலும்‌ அவர்கள்‌ பேடிகள்‌ தான்‌ என்னும்‌ கூற்றில்‌ வலுவாக இருந்தாள்‌. இது கொங்கணரின்‌, வாழ்வை மிகவும்‌ பாதித்தது. அந்த நிலையில்‌ தான்‌, ஒரு சித்தர்‌ கொங்கணவர்‌ பார்க்க, தங்கக்‌ காசுகளை வரவழைத்தும்‌, கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும்‌ அற்புதம்‌ செய்தார்‌. இந்த இடத்தில்‌ தான்‌ கொங்கணரும்‌ விழுந்து போனார்‌. தாமும்‌ இந்த வித்தைகளைக்‌ கற்றுத்‌ தேற வேண்டும்‌, என்ற ஆவல்‌ அவரது மனதில்‌ எழுந்தது.

போகரின்‌ உபதேசம்


ஒரு நாள்‌, போகரின்‌ தரிசனம்‌ கொங்கணருக்கு கிடைத்தது. அவரிடம்‌ கொங்கணர்‌, தான்‌ கைதேர்ந்த சித்தன்‌ ஆகிட மந்திர உபதேசம்‌ அளிக்குமாறு கேட்டார்‌. அதற்கு போகர்‌, உபதேசம்‌ செய்வது எளிது என்றும்‌, அதனைப்‌ பின்‌ பற்றித்‌ தவம்‌ செய்வதில்‌ தான்‌ எல்லாம்‌ உள்ளது என்னும்‌ உண்மையை கொங்கணருக்கு எடுத்து உரைத்தார்‌. மேலும்‌ அவர்‌ கூறும்‌ பொழுது தவம்‌ செய்வது என்பது உயிரை வளர்க்கும்‌ செயல்‌ போன்றது இல்லை, என்றும்‌. அதற்கு நேர்‌ மாறானது என்றும்‌ கூறினார்‌. எனினும்‌, கொங்கணர்‌ விடுவதாக இல்லை, தன்னால்‌, தன்னையே மறந்து தவம்‌ செய்ய முடியும்‌ என்றும்‌. தவம்‌ கலையாமல்‌ அதனைத்‌ தொடர இயலும்‌ என்றும்‌ வாதாடினார்‌. இதற்கு மேல்‌, கொங்கணரின்‌ தலை எழுத்து என்று மந்திர உபதேசம்‌ செய்து விட்டு போகர்‌ அந்த இடத்தை விட்டுச்‌ சென்றார்‌.

போகரின்‌ உபதேசம்‌, கொங்கணரை கடும்‌ தவத்தில்‌ மூழ்கடித்தது. போகர்‌ அழுத்தமாக கூறிய அந்த வார்த்தைகள்‌ யாவும்‌, தவத்திற்கு இடையூறு வரும்‌ பொழுது எல்லாம்‌ கொங்கணரை எச்சரிக்கை செய்து, தவத்தை தொடர வைத்தது. ஆனால்‌ கொங்கணர்‌ வகையில்‌, அவருடன்‌ மோத இயலாமல்‌ பஞ்சபூதங்கள்‌ செயல்‌ இழந்தாலும்‌, மாயை அவரை விட வில்லை. மாயையின்‌ காரணத்தால்‌ தவத்திற்கு பதில்‌, ஏன்‌ யாகம்‌ செய்து நாம்‌ சித்தனாகக்‌ கூடாது? என்ற எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ மெல்லத்‌ தோன்றியது.
( தவம்‌ என்பது உலகம்‌ நல்வழிப்‌ பட செய்யும்‌ சுயனலமற்ற தர்மம்‌, ஆனால்‌ யாகம்‌ அல்லது ஹோமம்‌ என்பது தன்னலம்‌ கருதி ஒருவர்‌ சுயநலத்துடன்‌ செய்வது )

திருமழிசை ஆழ்வார்‌ சந்திப்பு


அவர்‌ வழிப்பயணத்தில்‌ திருமழிசை ஆழ்வாரை சந்தித்தார்‌. தான்‌ வைத்திருந்த ரசக்‌ குளிகையைக்‌ காண்பித்து, இது காணி கோடியை பேதிக்கும்‌ என்றார்‌.ஆனால்‌ ஆழ்வாரோ தன்‌ உடம்பின்‌ அழுக்கைத்‌ திரட்டிக் கொடுத்து இது காணிகோடா கோடியைப்‌ பேதிக்கும்‌ என்றார்‌. கொங்கணவர்‌ ஆழ்வாரின்‌ பெருமையை உணர்ந்து அவரை வணங்கி விடைபெற்றுத்‌ தன்‌ பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌.

கெளதமர்‌ தொடர்பும்‌ நிறைநிலை அடைவும்‌


ஆனால்‌, கொங்கணர்‌ இது வரை செய்த தவப்‌ பயனின்‌ விளைவாக கெளதமர்‌ என்னும்‌ மகரிஷி அவர்‌ முன்‌ தோன்றி. உண்மை நிலையை அவருக்கு விளக்கிக்‌ கூறவே. கொங்கணர்‌, உண்மையை அறிந்து மீண்டும்‌ தவத்தில்‌ மூழ்கிப்‌ பெரிய தவ சீலராக மாறினார்‌. அவர்‌ ஒரு மலை அடிவாரத்தை அடைந்த போது அங்கே தம்‌ உள்ளுணர்வில்‌ இன்பமயமான தெய்வீகத் தோற்றங்கள்‌ பலவற்றைக்‌ கண்டார்‌. அதோடு இனிமையான பல வாத்திய ஒலிகளையும்‌ கேட்டார்‌. அதைத்‌ தொடர்ந்து அங்கே கெளதம ரிஷி ஒரு சமாதியிலிருந்து வெளிப்பட்டார்‌. அவர்‌ உபதேசம்‌ பெற்ற கொங்கணவர்‌ தம்‌ தவவலிமையை மேலும்‌ பெருக்கிக் கொள்ள பனிரண்டு ஆண்டுகள்‌ கடுந்தவம்‌ புரிந்தார்‌. மிக்க தவ வலிமையுடன்‌ வெளிப்பட்ட கொங்கணவர்‌ தான்‌ ஒரு சர்வசக்தி வாய்ந்த ரிஷியாக உயரவேண்டும்‌ என்ற ஆசையில்‌ ஒரு யாகம்‌ செய்யத்‌ தொடங்கினார்‌. அப்போது ஒளி உடலுடன்‌ அவர்‌ முன்‌ தோன்றிய கெளதமர்‌, தகுதிக்குமேல்‌ ஆசைப்ட்ட கொங்கணவரை சபித்துவிட்டார்‌. கொங்கணவர்‌ கெளதமரை வணங்கி சாபவிமோசனம்‌ கேட்க, முனிவர்‌ “சாபவிமோசனம்‌ பெற தில்லை வனத்திற்குப்‌ போ என்று கூறிவிட்டு மறைந்தார்‌.

தில்லைவனம்‌ சென்ற கொங்கணவர்‌ முன்‌ பராசர முனிவர்‌ தோன்றி சாபவிமோசனம்‌ அளித்தார்‌. அதன்பிறகு கெளதமர்‌ அங்கு தோன்றி யாகம்‌ செய்ய வரமளித்தார்‌. இவ்வளவு நல்வரங்கள்‌ பெற்ற நிலையிலும்‌, கொங்கணவர்‌ தம்‌ மனதில்‌ ஏதோ குறை இருந்து வருவதை உணர்ந்து தன்‌ குருநாதரான போகரிடம்‌ சென்று சரணடைந்தார்‌. குருவின்‌ ஆணைப்படி திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று நிர்வாணத்‌ தீட்சை முதலான பல அரிய தீட்சைகளைப்‌ பெற்று உயர்ந்த சித்தராக ஓரிடத்தில்‌ தங்கி வாழ்ந்தார்‌. அங்கு அவரிடம்‌ 500க்கும்‌ அதிகமான சீடர்கள்‌ சேர்ந்தார்கள்‌. அவர்கள்‌ அனைவரும்‌ ஞானமார்க்கத்திலும், குளிகை மார்க்கத்திலும்‌ தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள்‌.

கொங்கணர்‌ யாகம்‌ வளர்த்து, குறுக்கு வழியில்‌ தவ சீலராக மாற முற்படும்‌ பொழுது நடந்த சம்பவம்‌ ஒன்று உள்ளது.

கொக்கை எரித்த கதை


அந்த நாளில்‌, கொங்கணர்‌ தனது யாகத்தின்‌ பயனாக, எதை கோபத்துடன்‌ பார்த்தாலும்‌ (ஒரு மரத்தைப்‌ பார்த்தாலும்‌ கூட) பற்றி எறியும்‌. அப்பொழுது ஒரு நாள்‌, ஒரு கொக்கு, கொங்கணர்‌ நடத்திய வேள்வியின்‌ பொழுது, அவர்‌ மேல்‌, எச்சம்‌ இட்டது. கொங்கணர்‌ விடுவாரா? அவர்‌ தான்‌ தற்பொழுது மாயையின்‌ பிடியில்‌ உள்ளாரே! உடனே, அவர்‌ அந்தக்‌ கொக்கை கோபத்துடன்‌ பார்க்க, அந்தக்‌ கொக்கு பற்றி எரிந்தது. தனது இந்த தபோ பலத்தால்‌ கொங்கணர்‌, பெரும்‌ கர்வத்தில்‌ இருந்தார்‌.

இவரும்‌, திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும்‌ சமகாலத்தவர்களே. இப்படி இருக்கும்‌ பொழுது தான்‌, கொங்கணர்‌, கொக்கை எரித்த கோபத்துடன்‌ அவர்‌ அடுத்து யாசகம்‌ கேட்டு சென்ற இடம்‌ வள்ளுவரின்‌ குடிசைக்கு. பலகாலம்‌ உணவின்றி இருந்ததால்‌ பசி வயிற்றைக்‌ கிள்ள அவர்‌ அருகில்‌ இருந்த திருவள்ளுவர்‌ வீட்டிற்குப்‌ பிச்சைக்குச்‌ சென்றார்‌. வள்ளுவரின்‌, மனைவி வாசுகி, வள்ளுவருக்கு பணிவிடைகள்‌ செய்வதில்‌ மும்முரமாக இருந்தாள்‌. காரணம்‌, அவள்‌ பெரும்‌ பதி விரதை. கொங்கணர்‌, யாசகம்‌ கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்கு பிச்சை இடும்‌ படி ஆனது. இந்த காரணத்தை அறியாத கொங்கணர்‌, உனக்குத்‌ தான்‌ என்ன ஒரு அலட்சியம்‌ ... என்று வாசுகியை எரிப்பது போலப்‌ பார்த்தார்‌. வாசுகிக்கு, அந்தப்‌ பார்வையின்‌ பொருள்‌ புரிந்தது கொக்கென்று, நினைத்தாயோ கொங்கணவா? என்று திருப்பிக்‌ கேட்க கொங்கணர்‌ ஆடிப்‌ போனார்‌.
இச்சம்பவம் கொங்கணவர் வாத காவியத்தில் இடம் பெற்றுள்ளது.

கர்வம்‌ அகன்றது


இப்பொழுது அவர்‌ மனதில்‌ இரண்டு கேள்விகள்‌. எப்படி வாசுகியால்‌ தன்னை அறிய முடிந்தது? இது முதல்‌ கேள்வி. அடுத்த கேள்வி, எல்லாவற்றையும்‌ எரிக்கும்‌ தன்மை கொண்ட தனது கோபப்‌ பார்வை, எப்படி, வாசுகியை மட்டும்‌ விட்டு வைத்தது? என்பது. அதற்கான விடை பிறகு தான்‌ அவருக்கு புரிந்தது. ஹோமம்‌ வளர்ப்பது, யாகம்‌ புரிவது, தவம்‌ செய்வது அனைத்தையும்‌ விட மேலான செயல்‌, “தான்‌” என்ற அகந்தை இல்லாமல்‌ பணிவிடை புரிவது, தனக்கென வாழ்வது. அந்த நொடி, கொங்கணருக்கு தனது தவச்‌ செயலால்‌ உருவான கர்வம்‌ பொடிப்‌ பொடி ஆனது. இப்படி கொங்கணவர்‌ தனது அனுபவத்தால்‌ அறிந்தது ஏராளம்‌. இது போல இன்னொரு சம்பவமும்‌, கொங்கணர்‌ வாழ்வில்‌ நடந்தது.

மாயை


இவரது குருவான போகர்‌ அவர்களுக்கு, ஒரு பெண்ணின்‌ மீது மோகம்‌ என்னும்‌ பிரமை ஆட்கொண்டது. ஆனால்‌, அவளோ அவருக்கு வசப்படாமல்‌ போனால்‌, இதனால்‌ போகர்‌, சோகத்தில்‌ மூழ்கினார்‌. இதனை அறிந்த கொங்கணர்‌, குருவின்‌ வருத்தத்தை போக்க, ஒரு கற்‌சிலையை, உயிருள்ள பெண்ணாக மாற்றி போகரிடம்‌ அளித்து பெருமைப்பட்டார்‌. இதனைப்‌ பார்த்த போகர்‌, கொங்கணரை பார்த்து சிரித்தார்‌. அவ்வாறு போகர்‌, சிரிப்பதன்‌ காரணத்தை கேட்ட கொங்கணரிடம்‌, போகர்‌ சொன்னாராம்‌ "கொங்கணவா, இது போல கல்லுக்கு, உயிர்‌ கொடுக்கும்‌ வித்தை எனக்கு தெரியாது என்று நினைக்கின்றாயா? மாயையில்‌ வந்தது, மாயையில்‌ தான்‌ செல்லும்‌. என்‌ மனதைக்‌ கவர்ந்த அந்தப்‌ பெண்ணிடம்‌, அழகைத்‌ தவிர்த்து பல சிறப்பம்சங்கள்‌ உள்ளது. அதனை, உன்னால்‌ இந்த கற்சிலையில்‌ இருந்து தோன்றிய இந்த பெண்ணுக்கு அளிக்க முடியுமா? என்று வினவினார்‌. அப்போதே கொங்கணர்‌, உண்மை நிலையை அறிந்து கொண்டார்‌.

இவ்வாறு கொங்கணரை மாயை பல இடங்களில்‌ கொள்ளை கொண்டது, இது போன்று இன்னொரு சம்பவமும்‌ கொங்கணர்‌ வாழ்வில்‌ நடந்தது.

குளிகைகள்‌ எரிந்து சாம்பலாதல்


அது என்னவெனில்‌. சில குளிகைகள்‌ வைக்கப்பட்ட இடத்தில்‌ கல்லோ, மண்ணோ இருந்தால்‌, அதை சாம்பலாக்கி விடும்‌. இப்படிப்‌ பட்ட குளிகைகளில்‌ ஒன்றை சிவலிங்கத்தின்‌ மீது வைத்தார்‌. ஆனால்‌, சிவலிங்கத்தின்‌ மீது பட்ட சில நொடிகளில்‌, அந்தக்‌ குளிகைகளே சாம்பல்‌ ஆனது. சிலர்‌, இதனை இப்படியும்‌ கூறுவர்‌, கொங்கணர்‌ மருத்துவ குணம்‌ கொண்ட குளிகையை மலரிலும்‌ ,மேலாகக்‌ கருதி சிவனின்‌ மீது வைத்தார்‌. ஆனால்‌, சிவனோ பக்தர்கள்‌ அன்போடு அளிக்கும்‌ மலர்கள்‌ அந்த மருத்துவ குணம்‌ கொண்ட குளிகைகளை விட மேல்‌ ஆனது என்பதை காட்டவே, அந்தக்‌ குளிகைகளை எரித்துக்‌ காட்டியதாகவும்‌ சொல்வர்‌.

சமாதி கூடல்‌


தமக்கு சமாதி கூடும்‌ காலம்‌ கூடிவந்து விட்டதை உணர்ந்த கொங்கணவர்‌ திருத்தணிகை சென்று வீரட்டகாசமூர்த்தியின்‌ தலைமேல்‌ தம்‌ குளிகையை வைத்தார்‌. லிங்க வடிவில்‌ இருந்த அந்த சிவமூர்த்தி அக்குளிகையை நீராக்கி அழித்து விடாமல்‌ தம்முள்‌ ஈர்த்து மறைத்துக்‌ கொண்டார்‌. தன்‌ தவறை உணர்ந்த சித்தர்‌ சிவபெருமானைப்‌ பணிந்து வழிபட்டு தம்‌ குளிகையைத்‌ திரும்பப்பெற்றார்‌. அதன்‌ பிறகு நேரே திருப்பதி சென்று திருவேங்கட மலைமீது தங்கி தவத்தைத்‌ தொடங்கினார்‌.அப்போது வனேந்திரன்‌ என்ற சிற்றரசன்‌ அவரிடம்‌ வந்து சடனானான்‌. அவனுக்கு ஏற்ற எளிய முறையில்‌ தவ வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டு அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்‌. இப்போது அவர்‌ திருப்பதி மலைமீது அருள்மிகு வெங்கடேசப்‌ பெருமாளாக இருந்து கோடிக்கணக்கான பக்தர்களின்‌ குறைகளைத்‌ தீர்த்து வருவதுடன்‌ நாடி வருபவர்களுக்கெல்லாம்‌ வளமான வாழ்வளித்தும்‌ வருகிறார்‌.