வாதத்தின் குணமேதென்னில் மயங்குந்தியங்கும் மலர் சிவக்கும்
பாதங் குளிர்ந்து சருவாங்கம் பற்றிநடக்கு முகங்கடுக்குஞ்
சீதத்துடனே வயிறுபுண்ணாஞ் சிரிப்பித்துந் தெறி மூச்சாம்
போதத் தண்ணீர் தான்வாங்கும் புகழும்பஞ்ச குணமாமே.
- மயக்கமுண்டாகும்.
- கண்கள் சிவக்கும்.
- கால்கள் சில்லிட்டுப் பின்னர் உடலும் குளிர்ந்து விடும்.
- முகத்தில் குத்து வலியேற்படும். வயிறு புண்ணாகிச் சீதம் விழும்.
- பெருமூச்சுண்டாகும்.
- தண்ணீர்த் தாகம் ஏற்படும்.
வாத்தின் குணத்தைச் கேண்மன் வயிறூதும் பொருமிக்கொள்ளும்
தாதுற்றவுடம்புகைகால் சந்துகள் கடுப்புத் தோணும்
தீதுற்ற சிறுநீர்தானுஞ் சிவந்துடல் கடுத்து வீழும்
போதுற்ற வுப்புசமாய் போதவும் பசித்திடாதே.
- வயிறு ஊதிப் பொருமலுண்டாகும்.
- கை, கால், உடம்பு, தொடையிடுக்கு முதலான இடங்களில் கடுப்பு (வேதனை) அதிகரிக்கும்.
- சிறுநீர் சிவந்து, கடுப்புடன் வெளியாகும்.
- பசி மந்திக்கும்.
கால்கை கடுக்குந் திமிருண்டாங் கண்ணுந் தூங்கிச் சோபிக்கும்
கோலஞ்செய்யு மங்கமெல்லாங் குளிர்ந்த சந்துகனங் கொள்ளுஞ்
சீலமிருந்து சீர்காணில் சிறுநீர்வற்றி வருமிகவே
மாலத் தடங்கண் மானனையாய் மாதே வாத ரோகமிதே
- கைகால்களில் மதமதப்புடன் வேதனையுண்டாகும்.
- கண்கணைச் சுற்றிலும் வீக்கமுண்டாகும்.
- உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
- தொடையிடுக்கில் வீக்கம் காணப்படும்.
- சிறுநீர் குறையும்.
இவைகள் வாதம்
அதிகரித்ததன் குறிகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக