Top bar Ad

4/9/18

தன்வந்திரி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. புராண கருத்து
  3. அகத்தியர் கண்ட தன்வந்திரி
  4. ஆயுர்வேதத்தின்‌ தந்தை
  5. ஜீவ சமாதி
  6. தன்வந்திரி வழிபாட்டுப்‌ பாடல்

முன்னுரை


வண்ணமாம்‌ எட்டு வகை பரீட்சை பார்த்து வகையான நாடியுட்கு குணமுங்‌ கண்டு திண்ணமாம்‌ திரேகத்தின்‌ செயலும்‌ பார்த்து தேசதேசப்‌ பேதச்‌ செயலறிந்து கண்டு கண்ணமாய்‌ காலாகாலங்கள்‌ பார்த்துக்‌ கனமான அத்தினியின்‌ கணக்கறிந்து பண்ணமாம்‌ பலகலவாம்‌ மணலை தேர்ந்து பரிகாரப்‌ பயனறிந்து பார்த்துச்‌ சொல்லே!
தன்வந்திரி.
மேற்கண்ட இந்தப்‌ பாடலை எழுதியவர்‌ தன்வந்திரி.
இவர்‌ மாகாவிஷ்ணுவின்‌ அம்சம்‌ என்றும்‌, ஒரு கையில்‌ கமண்டலமும்‌ மறு கையில்‌ கதையும்‌ கொண்டிருந்தவர்‌ என்றும்‌, காசிராஜன்‌ என்பவரின்‌ புதல்வனான இவருக்கு கேதுமான்‌ என்று ஒரு மகன்‌ இருந்ததாகவும்‌ அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது. தன்வந்திரி நிகண்டு, வைத்திய சிகாமணி 1200, கலைஞானம்‌ 500 ஆகிய நூல்களில்‌ இருந்து சுமார்‌ 2300 பாடல்கள்‌ இவர்‌ பெயரில்‌ பாடப்‌ பெற்றதாக மேற்கொண்டு குறிப்புகள்‌ உள்ளன.
ஆயுள்‌ வேதரும்‌ காலக்‌ கனிதரும்‌ என்ற சிலப்பதிகாரக்‌ காப்பியத்தின்‌ குறிப்பைக்‌ கொண்டு, தமிழ்‌நாட்டில்‌ கி.பி. 2 ஆம்‌ நூற்றாண்டுக்கு முன்னரே இந்த மருத்துவ முறை நடை முறையில்‌ இருப்பதை அறிய முடிகிறது. அதனால்‌, இவரது காலமும்‌ கி.பி. 2 ஆம்‌ நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக்‌ கருதப்படுகிறது.
மேலும்‌, தமிழ்‌ நாட்டில்‌ வாழ்ந்த இந்தத்‌ தமிழ்ச்‌ சித்தரே தனது வடமொழிப்‌ புலமையால்‌ தமிழ்‌ சித்த மருத்துவத்தை ஆயுர்வேத மருத்துவமாக வடமொழி நிகண்டுகளால்‌ "தன்வந்திரி" என்று இயற்றி இருக்கின்றார்‌ என்பதும்‌ உண்மை. இதனாலேயே, பிந்தைய காலங்களில்‌ தன்வந்திரி என்று இவர்‌ அழைக்கப்பட்டார்‌. வாகட நூலில்‌ வல்லவராக விளங்கிய தன்வந்திரி, விக்கிரமாதித்தன்‌ சபையில்‌ நவரத்தினம்‌ என்னும்‌ பட்டம்‌ பெற்ற பண்டிதர்க்‌குழுவில்‌ ஒருவர்‌ என்றும்‌; இவருடைய வடமொழி நிகண்டே தன்வந்திரி என்றும்‌ தமிழ்ப்‌ பெயர்ச்‌சொல்‌ அகராதி என்ற நூலில்‌ குறிப்பொன்று காணப்படுகிறது.

புராண கருத்து


தன்வந்திரி மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌. தேவர்களும்‌ அசுரர்களும்‌ அமுதத்திற்காக திருப்பாற்கடலைக்‌ கடைந்தபோது அமுத கலசத்துடன்‌ பாற்கடலிலிருந்து வெளிவந்தவர்‌. தேவர்களுக்கு அமுதத்தை வழங்கி அவர்களுக்கு மரணமிலாப்‌ பெருவாழ்வு அளிப்பதற்கென்றே தோன்றியவர்‌.
போகர்‌ கண்ட தன்வந்திரி.

சட்டமுடன்‌ தன்வந்திரி ஜாதிபேதம்‌ தகமையுள்ள மகாவிஷ்ணு என்னலாகும்‌ வட்டமுன்ள தலைமுறைகள்‌ முப்பதிரண்டு வளமுடன்‌ கண்டறிந்த நூலிதாமே
- போகர்‌ 7000 / 5770 ஆம்‌ பாடல்‌

சத்தியுள்ள மகாவிஷ்ணு என்றே சொல்வர்‌ தாரணியில்‌ மானிடராம்‌ சித்து வாகும்‌ முத்திபெற ஐப்பசியாம்‌ திங்களப்பா முனையான புனர்பூசம்‌ நாலாம்‌ காலே.
- போகர்‌ 7000 / 5877 ஆம்‌ பாடல்‌

போகர்‌ கூற்றுப்படி தன்வந்திரி பூமியில்‌ விஷ்ணு குலத்தில்‌ மானிடராய்‌ பிறந்தவர்‌. இவரை மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌ என்றும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ மண்ணுலக மக்கள்‌ நன்மைக்காக முப்பத்திரண்டு தலைமுறைகளில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மனிதனாகப்‌ பிறந்து ஆயுர்வேதம்‌ என்ற மருத்துவ நூலைத்‌ தொகுத்து அளித்துள்ளார்‌.
முதலில் தீர்க்கமர்‌ என்பவரின்‌ மகனாகப்‌ பிறந்து பல வைத்திய நூல்களைத்‌ தந்தருளினார்‌. பிறகு காசி ராஜனின்‌ மகனாகப்‌ பிறந்து சித்தர்கள்‌ பலரிடம்‌ மூன்றுலட்சம்‌ கிரந்தங்களைக்‌ கேட்டறிந்தார்‌. பிறகு சேதுமான்‌ என்ற பெயரோடு தீர்த்த பசு என்ற மன்னரின்‌ மகனாகப் பிறந்து ஆயுர்வேதம் என்ற தலைப்பில் மேலும் பல மருத்துவ நூல்களை எழுதினார். இந்தப் பிறப்பில் கனிஷ்க மன்னனின் அவையை அலங்கரித்த சுஸ்ருதர்‌ என்ற மருத்‌துவமேதைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையைக்‌ கற்பித்தார்‌. பிறகு அனு என்ற அரசனின்‌ மகனாகப்‌ பிறந்து பராசர முனிவரிடம்‌ பாடங்கள்‌ கற்று ஆயுர்வேதம்‌ என்ற வடமொழி நூலை முழுமையாக எழுதி முடித்தார்‌.

இவைகளையெல்லாம்‌ முழுமையாகத்‌ தொகுத்துப் பார்க்கும்‌ பொழுது தன்வந்திரி 32 தலைமுறைகளில்‌ பல பிறவிகள்‌ எடுத்து நான்கு வேதங்களுக்கும்‌ இணையான ஆயுர்வேதத்தை வடமொழியில்‌ தொகுத்தருளினார்‌ என்பது பெறப்படுகிறது. விஷ்ணு குலத்தவரான இந்த தன்வந்திரி ஸ்ரீரங்கம்‌ அரங்கநாதர்‌ ஆலயத்தில்‌ தனிச்சன்னதி கொண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌ என்பது வைணவ நெறி கண்டுள்ள தெளிவான முடிவு.

ஓம்‌ நமோ பகவதே வாசு தேவாய தன்வந்த்ரயே, அம்ருதகலஸ ஹஸ்தாய, சர்வாமய விநாச னாய, த்ரிலோக்ய நாதாய, ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.

என்ற மந்திரத்தை தினமும்‌ 1008 முறை கூறி பக்தியுடன்‌ தன்வந்திரி பகவானை வழிபட்டுவந்தால்‌ உடல்‌ நோய்களும்‌ மன நோய்களும்‌ குணமாகின்றன என்பது அனுபவ பூர்வமான உண்மை.

அகத்தியர் கண்ட தன்வந்திரி


அகத்தியர்‌12000 என்ற நூலின்படி மகாவிஷ்ணுவே தன்வந்திரி பகவான்‌ என்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ நோயற்ற நல்வாழ்வை இன்புற்று வாழ வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ தமிழகத்தில்‌ மானிடராய்ப்‌ பிறந்து ஆயுர்வேத வைத்திய சித்தாந்தங்களை யெல்லாம்‌ தமிழ்க் கவிதை வடிவில் தொகுத்துத் தந்துள்ளார்‌ என்றும்‌ தெரியவருகிறது.

மாச்ச லென்றதன்‌ வந்திரி வளப்பம்‌ கூறுவேன்‌ மன்னவனே முற்பிறப்பில்‌ விஷ்ணு என்பார்‌ பாச்சலுடன்‌ இப்பிறப்பில்‌ தன்வந்திரி தானும்‌, பலாகனே மானிடராய்ப்‌ பிறந்தார்காணே.
- அகத்தியர்‌ 12000 / 4/ 427

பூணவே அவர்தாதை தந்தை தாயும்‌ புகழ்பெறவே காயத்ரி நாமம்‌ கொண்டு வேணபடி தம்பூரு வீணை கீதம்‌ வித்தகனார்‌ கையேந்தியாசிர்மங்கள்‌ தோணவே கரபாத்திரம்‌ கையிலேந்தி தோற்றமுடன்‌ யாசகங்கள்‌ செய்தார்தானே
- அகத்தியர்‌ 12000 / 4 / 428.

தரமான சாத்திரத்தின்‌ கியானரூபம்‌ சதகோடி சூரியர்‌ போல்‌ பிரகாசிக்க கோமானாம்‌ தன்‌ வந்திரிபாலனுக்கு கூறியதோர்‌ மூன்று லட்சம்‌ கிரந்தம்‌ தன்னை சாமானிய மானதொருபதினெண்‌ பேர்கள்‌ சாற்றினார்‌ உபதேசம்‌ பலவாறாக போமேதான்‌ இதிகாசம்‌ கட்டறுத்து புகட்டினார்‌ தன்வந்திரி பாலனுக்கே.
- அகத்தியர்‌ 12000 / 4 / 431

அகத்தியர்‌ 12000 நூலின்படி தன்வந்திரி முற்பிறப்பில்‌ விஷ்ணுவாக இருந்தவர்‌. இப்பிறப்பில்‌ தன்வந்திரி என்ற பெயரில்‌ மனிதனாய்ப்‌ பிறந்துள்ளார்‌. (இக்கூற்று கடவுளாய்‌ இருந்த மகா விஷ்ணு இப்பிறப்பில்‌ தன்வந்திரி என்ற பெயருடன்‌ ஒரு தமிழ்‌ மகனாய்ப் பிறந்துள்ளார்‌ என்பதை உறுதி செய்கிறது) அவருடைய பாட்டன் முப்பாட்டன்மார்களும்‌, தாய்‌ தந்தையரும்‌ காயத்ரி மந்திரத்தையே வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு தீவிரபக்தர்களாய் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.அவருடைய தந்தை தம்பூரு வீணையைக்‌ கையில்‌ தாங்கி சிறந்த பக்திப்‌ பாடல்களைப்‌ பாடிக்கொண்டு யாசகம்‌ செய்து குடும்பம்‌ நடத்திவந்தார்‌. (இதிலிருந்து அவர்‌ தந்தை உஞ்சவிருத்தி செய்து வயிறு வளர்த்து வந்த இறைவன்‌ திருவருளுக்குப்‌ பாத்திரரான வைதீகபிராமணர்‌ என்ற உண்மை பெறப்படுகிறது! அவர்‌, சாதாரண மனிதர்களாகப்‌ பிறந்து அஷ்டமா சித்திகளையும்‌ பெற்று ஞானத்தால்‌ உயர்ந்திருந்த பதினெண்‌ சித்தர்களைக்‌ கொண்டு தன்வந்திரிக்கு உபதேசம்‌ செய்வித்து, தன்மகன்‌, உயர்ந்த சித்த சாத்திரங்களையெல்லாம்‌ கற்றுத்‌ தெளிவு பெறச்‌ செய்தார்‌. அதன்‌ விளைவாக தன்வந்திரி இதிகாசங்களில்‌ காணப்படும்‌ அற்புத சித்துக்களையெல்லாம்‌ கடந்து மூன்று லட்சம்‌ கிரந்தங்களையும்‌ கற்றுத் தெளிந்தார்‌. தன்‌ சாத்திர ஞானச்‌ சிறப்பால்‌ நூறு கோடி சூரியர்களுக்கு இணையாக ஞான ஒளி வீசிவந்தார்‌.

ஆயுர்வேதத்தின்‌ தந்தை


இயற்கை மருத்துவத்தின்‌ பிதாமகன் என்று இவர்‌ வருணிக்கப்‌ படுகின்றார்‌. எப்படித்‌ தமிழ்‌ சித்த வைத்திய முறைக்கு அகத்தியார்‌ தந்தையோ, அது போலவே, ஆயுர்வேதத்திற்கு தன்வந்திரி தந்தை ஆவார்‌.
தமிழ்மொழியில்‌ வைத்திய சிந்தாமணி, வைத்திய காவியம்‌,செயநீர்‌-50, முப்பு சூத்திரம்‌ போன்ற பல உயர்ந்த வைத்திய நூல்களை எழுதி ஆயுர்வேதத்தின்‌ தந்தை என்ற தனிச்சிறப்புடன்‌ வாழ்ந்தார்‌.

ஜீவ சமாதி


அவர்‌ நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ என்ற திருத்தலத்தில்‌ ஜீவ சமாதி பூண்டு இன்றும்‌ வைத்திய நாத சுவாமியாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌. இத்தலம்‌ நவக்கிரக தோஷப்‌ பரிகாரத் தலங்களுள்‌ செவ்வாய்‌ தோஷப்‌ பரிகாரத்‌ தலமாக விளங்கிவருகிறது.
இத்திருத்தலத்தில்மூலவராக விளங்கும்‌ தன்வந்திரி மகாசித்தரைக்‌ கீழ்க்கண்ட வழிபாட்டுப்‌ பாடலைப்பாடி வணங்கி நாம் யாவரும்‌ உடல்நலமும்‌, மன நலமும்‌ பெற்று பல்லாண்டு காலம்‌ வாழ்ந்து வருவோமாக.

தன்வந்திரி வழிபாட்டுப்‌ பாடல்


விண்ணவரைக்‌ காப்பாற்ற அமுதத்தை ஏந்திவந்தாய்‌ மண்ணவரை வாழ்விக்க ஆயுர்வேதம்‌ தந்தாய்‌ வைத்திய நாதனாக வேளூரில்‌ அருள்‌ புரிவாய்‌ கைகூப்பிதொழும்‌ எமையும்‌ காப்பாய்‌ தன்வந்திரி சித்தே

1 கருத்து: