Top bar Ad

3/10/18

பிண்ணாக்கீசர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. ஆத்திமரம்
  4. ஜீவ சமாதி

முன்னுரை


இவர்‌ பாம்பாட்டி சித்தரின்‌ சீடர்‌. இவர்‌ நாக்கு இரண்டாகப்‌ பிளவுபட்டிருந்ததால்‌ பிண்ணாக்கீசர்‌ என்று அழைக்கப்ட்டார்‌. சிவகிரி என்று சிறப்பிக்கப்படும்‌ சென்னிமலை மீது ஒரு குகையில்‌ வாழ்ந்திருக்கிறார்‌. சென்னிமலை மீது நீண்ட காலம்‌ தவமியற்றி அங்கேயே ஜீவ சமாதியும்‌ கூடியிருக்கிறார்‌. அதனால்‌ சென்னிமலை சித்தர்‌ என்ற பெயரையும்‌ கொண்டிருக்கிறார்‌.

முற்பகுதி வாழ்க்கை


இவர்‌ வைகாசி மாதம்‌ சித்திரை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ கன்னி ராசியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ பிராமண குலத்தவர்‌ என்று கருவூரார்‌, வாதாகாவியத்தில்‌ கூறியுள்ளார்‌. (பாடல்‌ 590)

ஆத்திமரம்


இவர்‌ வாழ்ந்த குகை ஒரு ஆத்திமரப்பொந்து என்றும்‌ கூறப்படுகிறது. அடிக்கடி மலையடிவாரத்தில்‌ உள்ள ஊருக்குள்‌ வந்து நடுத்தெருவில்‌ படுத்துக்கொண்டு பைத்தியக்‌காரனைப் போல்‌ பிதற்றிக் கொண்டிருப்பார்‌. பசி எடுக்கும்போது அவர் வீறிட்டு அழும்‌ சப்தம்‌ ஊர்‌ முழுவதும்‌ கேட்கும்‌. அவர்‌ அழுகை ஒலி கேட்டு யாராவது வந்து உணவு கொடுப்பார்‌. உடனே சித்தர்‌ அழுகையை நிறுத்தி சிரித்துக்‌ கொண்டு உணவு கொடுத்தவரை வாழ்த்துவார்‌. இதனால்‌ சென்னி மலை ஊர் மக்களும்‌ மகிழ்ச்சி அடைந்தனர்‌.

அந்த ஊரில்‌ யாருக்காவது எதாவது நோய்வந்தால்‌ அவர்‌ அந்த ஆத்திமரத்தடிக்கு செல்வார்‌. அவருக்கு பிண்ணாக்கீசர்‌ ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுப்பார்‌. நோயாளிக்கு அந்தந்த மண்‌ சர்க்கரையாகவே இனிக்கும்‌. அதை சாப்பிட்டவுடன்‌ நோயும்‌ குணமாகி விடும்‌. அவர் சமாதி அடைந்த பிறகு அந்த ஊர் மக்கள்‌ அந்த ஆத்தி மரத்தையே சென்னி மலை சித்தராகக்‌ கருதி வழிபட்டு வந்தார்கள்‌. பட்டுப்‌ போயிருந்த அந்த மரம்‌ காலப்போக்கில்‌ மீண்டும்‌ துளிர்த்து செழிப்பாக வளர்ந்து விட்டது.

இப்போதெல்லாம்‌ அந்த ஊர்‌ மக்கள்‌ யாருக்காவது நோய்‌ வந்து விட்டால்‌ அந்த மரத்தடிக்கு வந்து சித்தரை வேண்டி அம்மரத்தின்‌ இலைகளைப்‌ பறித்துக் கொண்டு போய்‌ கஷாயம்‌ வைத்து நோயாளிக்கு கொடுப்பதாகவும் உடனே நோய் நீங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது.

ஜீவ சமாதி


இந்த சித்தர் சென்னிமலை உச்சியில் சமாதி பூண்டு கோயில் கொண்டுள்ளார். அந்தக் கோவில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த வேல் கோட்டத்தின் அருகே மிகப் பழமையான குகை ஒன்றும்‌ உள்ளது. அதன்‌ அருகில்‌ சரவணமாமுனிவர்‌ என்ற வேறு ஒரு சித்தர்‌ சமாதியும்‌ உள்ளது.

எட்டுக்குடி முருகன்‌ கோவில்‌, வைத்தீஸ்வரன்‌ கோயில்‌, மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவில் போன்ற பழங்கால சித்தர்களின்‌ சமாதிக்‌ கோவில்களாகவே உள்ளன. அவைகளில்‌ ஒன்றான பிண்ணாக்கீசர்‌ ஜீவசமாதியும்‌ சென்னிமலை முருகன்‌ கோவிலாக வளர்ந்துள்ளது. இந்த முருகன்‌ சன்னதியிலிருந்து தான்‌ பின்னர்‌ தேவராயசுவாமிகள்‌ முருகனின்‌ ஆறுபடை வீடுகளுக்கான கந்தர்‌ ஷஷ்டிக்‌ கவசங்களைப்‌ பாடியருளியுள்ளார்‌.

இந்த முருகன்‌ கோவில்‌ தரை மட்டத்திவிருந்து 1743 அடி உயரத்தில்‌ உள்ளது. இந்த சென்னிமலை திருப்பெருந்‌துறையிலிருந்து 13 கி. மீ. தூரத்திலும்‌ ஈரோட்டிலிருந்து 26 கி. மீ தூரத்திலும்‌ உள்ளது.

2/10/18

தேரையர்‌

77
பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. இளமை வாழ்க்கை
  3. திரணாக்கியரின்‌ தலைநோயை நீக்கியது
  4. கூன்‌ பாண்டியனின்‌ கூனை நிமிர்த்திய கதை
  5. தேரையர்‌ செத்துப்‌ பிழைத்த கதை
  6. குருவுக்கு பார்வை கொடுத்த வரலாறு
  7. தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்
  8. ஜீவ சமாதி

முன்னுரை


தேரையர்‌ என்ற இவரது பெயர்‌, வெறும்‌ காரணப்‌ பெயர்‌ தான்‌. இவரது உண்மையான பெயர்‌ ராமதேவன்‌. இந்த விவரம்‌, அபிதான சிந்தாமணி என்ற நூலில்‌ காணப்படுகிறது. இவர்‌ அகத்தியரின்‌ தலைமை மாணவர்‌, தேரையர்‌ தம்‌ பெயரைத்‌ தேரன்‌ என்றே பல இடங்களிலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. போகரும்‌ கருவூராரும்‌ அவர்‌ பிராமண குலத்தவர்‌ என்று கூறியுள்ளனர்‌

பாடல்‌: போகர்‌ ஏழாயிரம்‌ 3942; கருவூரார்‌ வாதகாவியம்‌621.

இளமை வாழ்க்கை


அவர்‌ பாலாற்றின்‌ வடக்கரையில்‌ உள்ள திருமலைச்சேரியில்‌ பிறந்தவர்‌. தந்தை பெயர்‌ நம்பூபதி. இவர்‌ கூரத்தில்‌ வாழ்ந்த தரும செளமியர்‌ என்ற புத்த மதத்துறவியிடம்‌ மருத்துவம்‌ பயின்றார்‌. அத்‌துறவியின்‌ வழிகாட்டுதலின்படி அகத்தியரின்‌ சீடரானார்‌ என்று பல மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன.

அகத்தியர்‌ தகுந்த சீடன்‌ ஒருவனைப்‌ பெற வேண்டி பொதிகை மலையிலிருந்து இறங்கி ஊருக்குள்‌ வந்தார்‌. வழியில்‌ ஒளவையாரை சந்தித்தார்‌. முனிவரிடம்‌ ஒளைவையார்‌ ஒரு சிறுவனைக்‌ காண்பித்து இவன்‌ முற்பிறப்பில்‌ இராமதேவர்‌ என்ற சித்தராக இருந்தவன்‌. இப்போது இவன்‌ ஒரு வாய் பேசாத ஊமையாக என்னிடம்‌ வந்துள்ளான்‌. இவன்‌ உங்களுக்கு ஏற்ற சீடனாக இருப்பான்‌ என்று கூறினார்‌. தேரன்‌ அகத்தியரின்‌ சீடனானான்‌. ராமதேவரின்‌ வாழ்க்கையில்‌ நடந்த ஒரு சம்பவம்‌ தான்‌, இவரை தேரையர்‌ ஆக மாற்றியது. அது என்னவெனில்‌

திரணாக்கியரின்‌ தலைநோயை நீக்கியது


காசிவர்மன்‌

காசியை ஆண்ட, அரசன்‌ காசிவர்மன்‌ ஒரு முறை வேட்டைக்குச்‌ சென்றான்‌. வேட்டை ஆடிய களைப்பில்‌ ஒரு குளத்தின்‌ அருகே அயர்ந்து தூங்கி விட்டான்‌, அப்போது ஒரு தேரைக்‌ குஞ்சு, காத்து வழியாக அவனது மூளைக்குள்‌ சென்று மெல்ல, மெல்ல வளர்ந்து வந்தது. அதன்‌ காரணமாக அரசன்‌, மிகுந்த தலை வலியால்‌ அவதிப்பட்டான்‌. தேரை வளர, வளர அவனது தலை வலியும்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்தது.

அகத்தியர் வருகை

என்ன செய்வது? ஏது செய்வது? என்று அரண்மனை வைத்தியர்கள்‌, செய்வதறியாது தங்கள்‌ கைகளைப்‌ பிசைந்தனர்‌. அவர்கள்‌, யாராலும்‌ என்ன நடந்தது என்பதை உணர இயலவில்லை. அப்பொழுது தான்‌, எல்லோருக்கும்‌ அகத்தியரின்‌ ஞாபகம்‌ வந்தது. உடனே, அவரை அரண்மனைக்குள்‌ சகல மரியாதைகளுடன்‌ அழைத்தனர்‌. அந்த, காசி அரசனும்‌ அகத்தியரிடம்‌, தனது தலைவலியைத்‌ தீர்க்க மன்றாடினான்‌. அகத்தியர்‌, தனது ஞானத்தால்‌ நடந்ததை உணர்ந்தார்‌.

கபால வெட்டு சிகிச்சை

உடனே, அதற்கான தீர்வையும்‌ கண்டு அறிந்தார்‌. அரசனுக்கு, கபால வெட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டார்‌. [ அதாவது கபாலத்தை, சில சிறப்பு வாய்ந்த மூலிகை மூலமாகத்‌ திறந்து, தேரையை எடுப்பது தான்‌ கபால வெட்டு சிகிச்சை [இன்றைய காலத்தில்‌ open heart surgery என்று கேள்விப்பட்டு இருப்போம்‌. அந்த வகையில்‌ இது அக்காலத்தில்‌ செய்யப்பட்ட open brain surgery ]. அவ்வாறே, அரசனுக்கு மொட்டை அடித்து, மண்டை ஓட்டை மூலிகை மூலமாக இலகுவாக்கி, அதனைத்‌ (மண்டை ஓட்டை) திறந்து பார்த்தால்‌, மூளையின்‌, பிசு பிசுப்பில்‌ ஒட்டி இருந்தது தேரை. ஆனால்‌, இப்பொழுது அகத்தியர்‌ மனதில்‌ ஒரு கேள்வி, அது கேள்வி என்பதை விட குழப்பம்‌ என்று தான்‌ சொல்ல வேண்டும்‌, அதாவது எப்படி, இந்தத்‌ தேரையை, அரசனின்‌ மூலையில்‌ உள்ள நரம்பு மண்டலம்‌ பாதிக்காமல்‌ எடுப்பது என்பது தான்‌.

தேரையர்

ஆனால்‌, ராமதேவனுக்கு தேரையை எடுக்கும்‌ அந்த சூட்சுமம்‌ புரிந்தது. ஒரு அகண்ட பாத்திரத்தில்‌ நீர்‌ கொண்டு வந்து தேரையின்‌ கண்ணில்‌ படும்‌ படியாக அதன்‌ அருகில்‌ கொண்டு சென்று, ஒரு சிறு குச்சியால்‌ அந்த நீரில்‌ சல சலப்பை ஏற்படுத்தினார்‌. நீரின்‌ சத்தம்‌ கேட்ட தேரை. அந்த நீரை நோக்கிப்‌ பாய்ந்து, குதித்தது. பின்‌ சந்தான கரணி என்னும்‌ மூலிகையைக்‌ கொண்டு அரசனின்‌ கபாலத்தை அகத்தியர்‌ உட்பட அவரது சீடர்கள்‌ அனைவரும்‌ பக்குவமாய்‌ மூடினார்கள்‌. அன்று முதல்‌ அந்த அரசனின்‌ தலைவலி முற்றிலும்‌ நீங்கியது. அவன்‌ அகத்தியருக்கு நன்றி தெரிவித்தான்‌. தனது சீடன்‌ ராமதேவனின்‌, அறிவு பூர்வமான செயலைப்‌ பார்த்த அகத்தியர்‌ அன்று முதல்‌ அவரைத்‌ தேரையர்‌ என்றே அழைத்தார்‌. தேரன்‌ இப்படி எளிமையாகத்‌ தேரையைத்‌ தலையிலிருந்து எடுத்ததைக்‌ கண்டு மகிழ்ந்த குருநாதர்‌ தன்‌ சீடனுக்குத்‌ தேரையன்‌ என்று பெயர்‌ சூட்டியதுடன்‌ அவனது ஊளமைத்‌ தன்மையைப்‌ போக்கி அவனை நன்றாகப்‌ பேசவும்‌ வைத்தார்‌. இந்த வரலாறும்‌ அகத்தியர்‌ 12000 என்ற நூலில்‌ உள்ளது.

தொல்காப்பியன்‌

சங்கப்‌ புலவரான இந்தத்‌ திரணாக்கியர் தான்‌ அகத்தியத்தின்‌ வழி நூலான தொல்காப்பியத்தை இயற்றிய குருவான அகத்தியரால்‌ தொல்காப்பியன்‌ என்று சிறப்பிக்கப் பெற்றார்‌. இத்தொல்காப்பியர் தான்‌ அகத்தியரால்‌ தலைநோய்‌ நீங்கப்பெற்றவர்‌ என்பது அகத்தியரே தம்‌ நூலில்‌ கூறியிருக்கும்‌ உண்மை.

நக்கீரருக்குப்‌ பத்தாண்டு காலம்‌ தீராத தலைவலி இருந்ததென்றும்‌ நச்சினார்க்கினியரின்‌ அழைப்பிற்கிணங்க அகத்தியரும்‌ தேரையரும்‌ வந்து அவரது நீண்டகாலத்‌ தலைவலியை நீக்கினார்கள்‌ என்றும்‌ சில மருத்துவ ஆய்வு நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன.

கூன்‌ பாண்டியனின்‌ கூனை நிமிர்த்திய கதை


ஒரு பாண்டிய மன்னனின்‌ முதுகு கூனலாய்‌ இருந்தது. அவன்‌ கூனலை நிமிர்க்க தேரனை அழைத்துக்கொண்டு அகத்தியர்‌ சென்றார்‌. மன்னருக்குத்‌ தேய்க்க ஒரு பெரிய கொப்பறையில்‌ தைலம்‌ காய்ச்சப்பட்டது. அவசரமாக மன்னன்‌ அழைக்க அகத்தியர்‌ சீடனிடம்‌ 'கவனமாய்‌ பார்த்துக்கொள்‌! என்று கூறிவிட்டு மன்னனிடம்‌ சென்றார்‌. அப்போது எண்ணெய்க்‌ கொப்பறைக்கு மேலே இருந்த தளத்தில்‌ மூங்கிலால்‌ வில்‌ போல்‌ வளைத்து செய்யப்பட்டிருந்த பல்லக்குக்‌ கொம்பு ஒன்று போடப்‌பட்டிருந்தது. தைலம்‌ கொதித்துக் கொண்டிருந்த போது பல வளைவுகளோடிருந்த பல்லக்குக் கொம்பு கொஞ்சம்‌ கொஞ்சமாக நிமிர்ந்து நேராகி வந்தது. அதைக்கண்ட தேரன்‌ தைலம்‌ பதத்திற்கு வந்து விட்டதை யூகித்தறிந்து அடுப்பை அணைத்து விட்டான்‌. திரும்பி வந்த அகத்தியர்‌ திடுக்கிட்டு “ஏன்‌ நெருப்பை அணைத்தாய்‌ என்று கேட்க சீடன்‌ மேல்‌ தளத்தில்‌ நிமிர்ந்து கிடந்த பல்லக்குக்கொம்பை குருவிடம்‌ காட்டினான்‌. அதைக்கண்ட அகத்தியர்‌ என்‌ சீடனான ஊமைப்‌ பிள்ளைக்கு பேச்சுதான்‌ வரவில்யை தவிர மற்ற எல்லா வகையிலும்‌ அவன்‌ கெட்டிக்‌காரனாய்‌ இருப்பதைக்‌ கண்டு நான்‌ பெருமைப்படுகிறேன்‌' என்று கூறினார்‌. அதுமுதல்‌ அவர்‌ வைத்தியம்‌ பார்க்க எங்கு சென்றாலும்‌ அவனையும்‌ அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது.

தேரையர்‌ செத்துப்‌ பிழைத்த கதை


தேரையர்‌ நிறைநிலை சித்தராகவும்‌ மருத்துவராகவும்‌ வளர்ந்து விட்டதால்‌ அவரது குருநாதரே அவரைத்‌ தனித்திருந்து செயல்படும் படி கூறி ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்‌. தேரையரும்‌ அகத்தியரை விட்டகன்று நாகலா மலைப்பகுதியில்‌ தவக்குடில்‌ அமைத்துக் கொண்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டும்‌, சீடர்களை சித்த நெறியில்‌ வளர்ச்சி பெற வழி காட்டிக் கொண்டும்‌ வாழ்ந்து வந்தார்‌. அப்போது நாட்டில்‌ ஒரு பெரும்‌ பஞ்சம்‌ ஏற்பட்டது. சிறிது தங்கம்‌ தயாரித்துக்‌ கொடுத்தால்‌ அதை விற்று நாங்கள்‌ பஞ்சம்‌ போக்கிக் கொள்வோம்‌ என்று மக்கள்‌ வேண்ட தேரையர்‌ மிகப்பெரிய நாக மலையையே தங்கமாக்க முற்பட்டார்‌. அவரது சீடர்கள்‌ அம் மலையைச்‌ சுற்றி துருத்திகளை வைத்துத்‌ தீ மூட்டி ஊதினார்கள்‌. மலையைச்‌ சுற்றி உண்டான அதிக வெப்பத்தையும்‌ புகையையும்‌ தாங்க முடியாமல்‌ அம் மலையில்‌ வாழ்ந்த மிருகங்கள்‌ நான்கு பக்கமும்‌ சிதறி ஓடின; பறவைகள்‌ பறந்தோடின. அந்த மலை மீது தவம்‌ செய்து கொண்டிருந்த ரிஷிகள்‌ அகத்தியரிடம்‌ வந்து உங்கள்‌ சீடனால்‌ நாங்கள்‌ தவம் புரிய இடமின்றி தவிக்கிறோம்‌ என்று முறையிட்டனர்‌. அதனால்‌ கோபங்கொண்ட அகத்தியர்‌ தேரையரை அழைத்து வரச்செய்து அவரது கால்களைப் பிடித்து அவர்‌ உடலை இரண்டாகக்‌ கிழித்தெறிந்துவிட்டார்‌.

தனக்கு இப்படி ஒரு ஆபத்து வரக்கூடும்‌ என்பதை முன்னரே யூகித்து அறிந்திருந்த தேரையர்‌ தன்‌ முக்கிய சீடர்கள்‌ இருவருக்கு பிரிந்த உடல்‌ சேரவும்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்று எழவும்‌ செய்யும்‌ மூலிகை மருத்துவத்தைக்‌ கற்றுக்கொடுத்திருந்தார்‌. அந்தச்‌ சீடர்களும்‌ அவர்‌ கூறியிருந்தபடி மூலிகை மருத்துவம்‌ செய்து தங்கள்‌ குருவை உயிர்‌ பெற்று எழச்‌ செய்துவிட்டார்கள்‌.

குருவுக்கு பார்வை கொடுத்த வரலாறு


பார்வைக்‌ குறை

பிழைத்தெழுந்த தேரையர்‌ மீண்டும்‌ குருவின்‌ கண்களில்‌ படாதவாறு தொலைவில்‌ உள்ள ஒரு இருண்ட காட்டில்‌ காட்டு மனிதனைப்போல்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்தக்‌ காலகட்டத்தில்‌ அகத்தியருக்குப்‌ பார்வைக்‌ குறை ஏற்பட்டது. அவரது சீடர்கள்‌ அருகில் உள்ள காட்டில்‌ ஒரு காட்டுவாசி மூலிகைகளைக்‌ கொண்டு எல்லா வியாதிகளையும்‌ தீர்த்து வருகிறான்‌. அவனை அழைத்து வரலாமா' என்று கேட்க அகத்தியரும்‌ அனுமதித்தார்‌. அவன்‌ தேரையன் தானா என்று சோதித்தறிய குருநாதர்‌ நீங்கள்‌ போகும்‌ போது இரவில்‌ புளிய மரத்தடியில் தான்‌ உறங்கவேண்டும்‌ என்று கட்டளையிட்டார்‌.

காட்டுவாசி


காட்டு வழியில்‌ பல நாள்‌ நடந்து சென்று சீடர்கள்‌ காட்டுவாசியைக்‌ கண்டுபிடித்தனர்‌. அந்தக்‌ காட்டுவாசி உடல்‌ எல்லாம்‌ உரோமம்‌ வளர்ந்து கரடி போலக்‌ காட்சியளித்தான்‌. சீடர்கள்‌ இருமி இருமி இரத்தவாந்தி எடுத்ததைக்‌ கண்ணுற்ற காட்டுவாசி ஏன்‌ இப்படி? என்று கேட்க சீடர்கள்‌ “எங்கள்‌ குருவின்‌ஆணைப்படி நாங்கள்‌ நடந்து வந்த நாளெல்லாம்‌ புளிய மரத்தடியிலேயே உறங்கி வந்தோம்‌' என்றனர்‌. காட்டுவாசி நீங்கள்‌ திரும்பிச் செல்லும் போது வேப்ப மரத்தின்‌ நிழலில்‌ மட்டுமே உறங்குங்கள்‌. குருவிடம்‌ போய்ச்‌ சேர்வதற்குள்‌ குணமாகி விடுவீர்கள்‌. உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை என்று கூறி நீங்கள்‌ எதற்காக என்னை நாடி வந்தீர்கள்‌? என்று கேட்டான்‌.

எங்கள்‌ குருநாதர்‌ பார்வைக்‌ கோளாறால்‌ அவதிப்படுகிறார்‌. உங்களால்தான்‌ அவரைக்‌ குணப்படுத்த முடியும்‌ என்று கருதியே வந்தோம்‌'. என்றார்கள்‌: தன்னை யாரென்று தெரிந்துகொள்ளவே குருநாதர்‌ அழைத்திருக்கிறார்‌ என்பதைப்‌ புரிந்து கொண்ட தேரையர்‌. நான்‌ இரண்டு நாளில்‌ வருகிறேன்‌. நீங்கள்‌ போய் வாருங்கள்‌ என்று கூறி சீடர்களை அனுப்பிவைத்தார்‌. அவர்கள்‌ திரும்பும்‌ வழியில்‌ வேப்பமர நிழலிலேயே கண்ணுறங்கி நலமாகப்‌ போய்ச்‌ சேர்ந்து குருநாதரிடம்‌ நடந்தவைகளை ஒன்று விடாமல்‌ கூறினர்‌. அகத்தியரும்‌ அந்தக் காட்டுவாசி தேரையர்‌ என்று தெரிந்து கொண்டார்‌.

கண்வெடிச்சான்‌ மூலிகை

காட்டுவாசி தான்‌ கூறியபடி இரண்டுநாள்‌ கழித்துப்‌ புறப்பட்டு அகத்தியரிடம் வந்து அவர்‌ கால்களைத்‌ தொட்டு வணங்கினான்‌. அவர்‌ கண்களில்‌ மருந்து பிழிந்து பார்வை பெறவும்‌ செய்தான்‌. தன்னிடம்‌ வந்துள்ள கரடி மனிதன்‌ தேரையர் தான்‌ என்பதை மேலும்‌ உறுதி செய்து கொள்ள அகத்தியர்‌ அவனிடம்‌, 'யாராலும்‌ கண்டுபிடிக்கக் கூட முடியாத கண்வெடிச்சான்‌ மூலிகை எனக்கு வேண்டும்‌. அதை உன்னால்‌ கொண்டு வர முடியுமா' என்று கேட்டார்‌. நான்‌ நிச்சயம்‌ கொண்டு வந்து தருகிறேன்‌ என்று கூறி குருநாதரிடம்‌ அவன் விடை பெற்றுச்‌ சென்றான்‌.

மூலிகை மருத்துவத்தின்‌ தந்தை

வெளிச்சென்ற காட்டுவாசி பொதிகை மலைப்‌ பகுதிகள்‌ முழுவதையும்‌ தேடி பல்வேறு வகையான அரிய மூலிகைளையும்‌ அவற்றின்‌ பயன்களையும்‌ கண்டுபிடித்தான்‌. இந்த முயற்சியில்‌ காட்டுவாசியாக உள்ள தேரையர்‌ மூலிகை மருத்துவத்தின்‌ தந்தையாகி விட்டார்‌ என்றே கூறலாம்‌. கடைசியில்‌ பொதிகை மலையின்‌ உச்சிப்பகுதியில்‌ ஒரு மலையில்‌ கண்வெடிச்சான்‌ மூலிகைச்‌ செடி இருப்பதையும்‌ கண்டுபிடித்தார்‌. அந்த மூலிகையைப்‌ பறித்தால்‌ அதிலிருநது வெளிப்படும்‌ நச்சுப்புகையால்‌ பறித்தவனுடைய கண்களே அவிந்துவிடும்‌ என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்‌. அதனால்‌ அவர்‌ அங்கேயே ஆழ்ந்த தியானத்தில்‌ அமர்ந்து அன்னை பராசக்தியை வேண்டி 'அன்னையே' என்‌ குருநாதர்‌ எனக்கு வைத்துள்ள தேர்வில்‌ நான்‌ வெற்றி பெற நீயே எனக்கு அருள்‌ புரிய வேண்டும்‌' என்று வேண்டினார்‌:சிறிது நேரத்தில்‌ “தேரையா! இதோ நீ கேட்ட மூலிகை' என்று அசரீரி ஒலித்தது. கண்‌ விழித்துப்‌ பார்த்த தேரையர்‌ முன்‌ அந்த மூலிகைக்‌ கொத்து ஒன்று அதன்‌ நச்சுத்தன்மை வெளிப்படா வண்ணம்‌ பத்திரமாக ஒரு இலையில்‌ சுற்றி வைக்கப்‌பட்டிருந்தது. நன்றியுடன்‌ அன்னை பராசக்தியை வழிபட்டுவிட்டுத்‌ தேரையர் அந்த மூலிகைச் சுருளை அகத்தியர் முன் கொண்டு போய் வைத்தார்.

தேரையர்‌ மருத்துவம்

இந்த குரு- சீடர்களிடையே இருந்த ஒளிவு மறைவு இதற்கு மேலும் நீடிக்கவில்லை. அகத்தியர் தேரையரை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டு அன்புத் தேரையனே நான் வைத்த எல்லா சோதனைகளிலும்‌ நீ தேறி விட்டாய்‌. நீ இப்போது பொதிகை மலையில்‌ நடத்திய ஆராய்ச்சிகள்‌ அனைத்தையும்‌ தொகுத்து ஒரு மூலிகை மருத்துவ ஆய்வு நூல்‌ எழுது. அது வருங்கால மருத்துவ உலகிற்கு முன்னோடியாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வரும்‌. சித்த மருத்துவத்தில்‌ தேரையர்‌ மருத்துவம்‌ என்ற பெயரால்‌ தனிச் சிறப்புடன்‌ நிலைத்து நிற்கும்‌.” என்று மனமாற வாழ்த்தி அனுப்பினார்‌. குருவின்‌ ஆணைப்படி தேரையர்‌ பல மருத்துவ நூல்கள்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ குணபாடகம்‌, வைத்திய யமக வெண்பா, பதார்த்த குண சிந்தாமணி போன்ற பல மருத்துவ ஆய்வு நூல்கள்‌ இன்றும்‌ சித்த மருத்துவ ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றன. இருபதாம்‌ நூற்றாண்டின்‌ சித்தர்‌ மருத்துவ மேதைகளில்‌ ஒருவரான சென்னை டாக்டர்‌ ஆர். தியாகராஜன்‌ அவர்களின்‌ தேரையர் பற்றிய தனி ஆய்வு நூல்கள்‌ இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்‌.

இது போல, இன்னொரு முறை வயிற்று வலி வந்த ஒரு அரசனுக்கு, அகத்தியர்‌ மருந்து கொடுத்தும்‌ குணமாகவில்லை. ஆனால்‌ அதே மருந்தை தேரையர்‌ கொடுத்ததும்‌, குணம்‌ கிட்டியது. இது அகத்தியருக்கே, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தேரையர்‌ இடமே, அகத்தியர்‌ இது பற்றி கேட்க. அந்த மருந்தை வாயில்‌ உள்ள பற்கள்‌ மற்றும்‌ எச்சில்‌ படாமல்‌ வயிற்றுக்குள்‌ செலுத்தினால்‌ குணம்‌ கிட்டும்‌ என்னும்‌ ரகசியத்தை தேரையர்‌, அகத்தியருக்கு விளக்கினார்‌.

இப்படியாக சிறப்புடன்‌ வாழ்ந்த தேரையர்‌ பிற்காலத்தில்‌ எழுதிய படைப்புகள்‌ பல. அவற்றில்‌ சில, பதார்த்த குண சிந்தாமணி, நீற்குறிநூல்‌, நெய்குறிநூல்‌, காமணி வெண்பா, மணிவெண்பா, நோயின்‌ கரிசல்‌, நோயின்‌ சாரம்‌, போன்றவை.

தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்‌


(பழைய ஓலைச்‌ சுவடிகளில்‌ இருந்து)
தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்‌ சிலவற்றை காணலாம்.

உப்பு இலவண மொன்றுமே யிளவெநீ ரிற்றின மலவலி வலியெலா மாண்டு நீறுகும்‌ மதுப்பூசிப்‌ புகளிலே யதிகமாய்க்‌ கொண்டே

பொருள்‌ : உப்பை இளவெந்நீரில்‌ கரைத்துப்‌ பருகினால்‌ மலசிக்கலைப்‌ போக்குவதுடன்‌ உடல்‌ வலியையும்‌ நீக்கும்‌ என்கிறார்‌ தேரையர்‌.

கர்ப்பூரவள்ளி

கர்ப்பூர வள்ளியின்‌ கழறிலை யைத்தின நற்பாலர்‌ நோயெலா நாசமா யாகலுமே.

பொருள்‌ : கர்ப்பூரவள்ளி இலையை முறைப்படி கொடுத்துவர, குழந்தைகளுக்கு வருகின்ற இருமல்‌, நெஞ்சில்‌ கபம்‌, உள்நாக்கு அழற்சி. (டான்சில்‌) நீர்கோவை, மாந்தம்‌ ஆகிய அனைத்தும்‌ ஓடிவிடும்‌.

பொன்னானங்கன்னி

சீதையை நாடொறுஞ்‌ சீரண வுண்டிடக்‌ காதைசேர்‌ நோயெலாங்‌ காதமோ டிடுமே.

பொருள்‌ :

சீதை எனும்‌ மறு பெயர்‌ கொண்ட பொன்னானங்கன்னிக்‌ கீரையை நாள்தோறும்‌ முறைப்படி உண்டு வர நோய்கள்‌ பல நீங்கும்‌ (கண்நோய்‌, உட்சூடு), மேனி நிறம்‌ பெறும்‌. பொன்‌ ஆம்‌ காண்‌ நீ- நீ இதை உண்டால்‌ உடல்‌ பொன்‌ மேனியாகக்‌ காண்பாய்‌ என்பதே இதன்‌ பெயரினால்‌ விளங்கும்‌ பொருள்‌.

ஜீவ சமாதி


தேரையர்‌ நீண்டகாலம்‌ மக்கள்‌ தொண்டும்‌ மருத்துவப்‌ பணியும்‌ செய்து முடித்து பொதிகை மலையைச்‌ சார்ந்துள்ள தோரண மலைப்பகுதியில்‌ சமாதி பூண்டுள்ளதாகக்‌ கூறப்படுகிறது.


30/9/18

பாம்பாட்டி சித்தர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சட்டை முனியின்‌ போதனை
  4. பாம்பாட்டியார் சித்தராதல்
  5. பாம்பாட்டியார் அரசராதல்
  6. சித்தரை வழிபடும் முறை
  7. ஜீவ சமாதி

முன்னுரை


பாம்பாட்டிச் சித்தர்‌ திருக்கோகர்ணத்தைச்‌ சேர்ந்தவர்‌.
[ மத்திய அரசு வெளியிட்டுள்ள நா. கதிரைவேல்‌ பிள்ளையின்‌ தமிழ்‌ மொழி அகராதிச்‌ செய்தி ]
இவர்‌ கோவை, அருகில்‌ உள்ள மருதமலையில்‌ தான்‌ பல காலம்‌ வசித்து வந்ததாகவும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஜோகி இனத்தில்‌ கார்த்திகை மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. சித்தாரூடம்‌ என்னும் நூலையும்‌ இவர்‌ எழுதி உள்ளார்‌.

முற்பகுதி வாழ்க்கை


இவர்‌ சிறுவனாய்‌ இருந்த போதே மலைப்‌ பகுதியிலிருந்த கொடிய நச்சுப்‌ பாம்புகளையெல்லாம் பிடித்தவர்‌. இவரது ஆற்றலை அறிந்த சித்த மருத்துவர்கள்‌ நால்வர்‌ இவரிடம்‌ வந்து, மருந்து தயாரிக்க நவரத்தின பாம்பு ஒன்றைப்‌ பிடித்துத் தர வேண்டும்‌ என்று கேட்டனர்‌. மருத மலை மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும்‌, அதன்‌ தலையில்‌ விலை மிகுந்த மாணிக்கம்‌ இருப்பதாகவும்‌, அதனைப்‌ பிடிப்பவன்‌ பெரிய பாக்யசாலி என்றும்‌ சிலர்‌ பேசிச்‌ சென்றனர்‌. இதனைக்‌ கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர்‌ அதனைப்‌ பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று பாம்பைத்‌ தீவிரமாகத்‌ தேடினார்‌.

நவரத்தின பாம்பு

நவரத்தின பாம்பு என்பது ஒரு முறை கூட நஞ்சை வெளிப்படுத்தாது நீண்ட காலம்‌ வாழ்ந்து முடித்த நாகம்‌. கடைசி காலத்தில்‌ அதன்‌ உடலே குறுகி மிகவும்‌ குட்டையாகி இருக்கும்‌. அதன்‌ நஞ்சு முழுவதும்‌ அதன்‌ தலைபாகத்தில்‌ கட்டுப்பட்டு ஒளி மிக்க மாணிக்கமாக மாறியிருக்கும்‌. அந்த நாகம்‌ இரைதேட நடு இரவில்தான்‌ வெளிவரும்‌. தன்‌ தலையில்‌ உள்ள மாணிக்கத்தைக்‌ கக்கி அதன்‌ ஒளியில்‌ தான்‌ இரைதேடும்‌

ஜீவசமாதியில்‌ ஆழ்ந்திருக்கும்‌ மகாசித்தர்களை ஒத்தது இந்த நவரத்தினப்‌ பாம்பு. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ நவரத்தினப்‌ பாம்பைப் பிடிக்க மலைக் காடுகளிலெல்லாம்‌ அலைந்து திரிந்து அன்று நடு இரவில்‌ அதன்‌ புற்றையும்‌ கண்டுபிடித்துவிட்டார்‌.

புற்றருகில்‌ சென்று மல்லோ சித்தர்தாமும்‌ புனித முள்ள நவரத்தின பாம்புதன்னை வெற்றியுடன்‌ தான்பிடக்கப்‌ போகும்போது வேதாந்தச்‌ சட்டைமுனி அங்கிருந்தார்‌.
போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 பாடல்‌ 3577

அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர்‌ தோன்றினார்‌. இங்கு எதைத்‌ தேடுகிறீர்கள்‌ என்று கேட்டார்‌. அதற்கு பாம்பாட்டி சித்தர்‌ நான்‌ நவரத்ன பாம்பைப்‌ பிடிக்க வந்தேன்‌ அதைக்‌ காணவில்லை என்றார்‌. இதைக்‌ கேட்ட சட்டைமுனி சிரித்தார்‌. நவரத்தினப்‌ பாம்பை நீயே உனக்குள்‌ வைத்துக்‌ கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா! என்று மீண்டும்‌ வினவினார்‌. மிகுந்த உல்லாசத்தைத்‌ தரக்‌ கூடிய ஒரு பாம்பு எல்லோர்‌ உடலிலும்‌ உண்டு; ஆனால்‌ யாரும்‌ அதை அறிவதில்லை. அதனால்‌ வெளியில்‌ திரியும்‌ இந்தப்‌ பாம்பை விட்டுவிடு. உன்‌ உடலில்‌ இருக்கும்‌ அந்தப்‌ பாம்பை அறியும்‌ வழியைத்‌ தேடு. இல்லாத பாம்பைத்‌ தேடி ஓடாதே என்று சொன்னார்‌. எல்லாவற்றையும்‌ கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார்‌ சித்தரின்‌ காலில்‌ விழுந்து வணங்கினார்‌.

குண்டலினிப் ‌பாம்பு

சட்டை முனியின்‌ ஒளிவீசும்‌ ஞானதேகத்தைப்‌ பார்த்த மாத்திரத்தில்‌ பாம்பாட்டியின்‌ மன இருள்‌ அகன்றது. சட்டை முனி அவரைப்பார்த்து, மகனே! புறவுலகில்‌ உலவும்‌ பாம்புகளை அடக்கவல்ல நீ உன்னுள்‌ மூலாதாரத்தில்‌ சுருண்டு கிடக்கும்‌ வாலைப்‌ பாம்பைத்‌ தட்டி எழுப்பப்‌ பிறந்தவன்‌. இந்தப்‌ புற்றில்‌ உள்ள நவரத்தினப்‌ பாம்பைவிட உன்னுள்‌ உள்ள குண்டலினிப் ‌பாம்பு ஆயிரம்‌ மடங்கு ஒளிமிக்கது. உன்‌ ஞானக்‌ கண்ணைத்‌ திறந்து! உனக்கு ஆன்ம வழிகாட்டக்‌ கூடியது, என்று கூறி அவனுக்குக்‌ குண்டலினி தீட்சையும்‌ அளித்தார்‌. அந்த நொடியே தவத்தில்‌ இறங்கிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ கொஞ்ச காலத்திலேயே அஷ்டமாசித்திகளையும்‌ பெற்று மகாசித்தரானார்‌. பிறகு ஊர்‌ ஊராகச்‌ சுற்றித்‌ திரிந்து கொண்டு சித்துக்கள்‌ புரிந்து மக்களை மகிழ்வித்ததோடு மக்களின்‌ பிணிகளையும்‌ போக்கி வந்தார்‌.

சட்டை முனியின்‌ போதனை

சித்தர்‌ கனிவோடு அவரைப்‌ பார்த்து விளக்கமளிக்கத்‌ தொடங்கினார்‌. அற்புதமான இந்த மனித சரீரத்தினுள்‌ ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்‌ கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன்‌ பெயர்‌. தூங்கிக்‌ கொண்டிருக்கும்‌ அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன்‌ நுட்பத்தை அறிவது அரிது. மக்களின்‌ துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப்‌ பாம்பின்‌ உறக்கம்‌ தான்‌.

பாம்பாட்டியார் சித்தராதல்


இறைவனை உணரப்‌ பாடுபடுபவர்களுக்கு சுவாசம்‌ ஒடுங்கும்‌. அப்பொழுது குண்டலினி என்ற அந்தப்‌ பாம்பு விழித்து எழும்‌, அதனால்‌ தியானம்‌ சித்தியாகும்‌ இறைவன்‌ நம்முள்‌ வீற்றிருப்பார்‌. மனிதனுள்‌ இறைவனைக்‌ காணும்‌ ரகசியம்‌ இதுவே என்று சொல்லி முடித்தார்‌ சட்டைமுனி.

குருதேவா! அரும்பெரும்‌ இரகசியத்தை இன்று உங்களால்‌ அறிந்தேன் ‌. மேலான இந்த வழியை விட்டு இனி நான்‌ விலக மாட்டேன்‌ ! என்று சொன்ன பாம்பாட்டியார்‌, சித்தரை வணங்கி எழுந்தார்‌. சித்தர்‌ அருள்புரிந்து விட்டு மறைந்தார்‌. பாம்பாட்டியார்‌ செய்த தொடர்‌ யோக சாதனையால்‌ குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும்‌ சித்தியானது.

பாம்பாட்டியார் அரசராதல்


ஒரு நாள்‌ வான்‌ வழியே உலா வந்து கொண்டிருந்தார் பாம்பாட்டி சித்தர்‌. செல்லும்‌ வழியில்‌ ஒரு குறு நாட்டு மன்னன்‌ இறந்து கிடந்ததைக்‌ கண்டார்‌. அவனைச்சுற்றி அரசியும்‌ மற்றவர்களும்‌ அழுது கொண்டிருந்தனர்‌. அருள்‌ உள்ளம்‌ கொண்ட அந்த இளம்‌ சித்தர்‌ அவர்களுக்கு ஆறுதல்‌ அளிப்பதற்காக தன்‌ கல்பதேகத்தை ஓரிடத்தில்‌ பத்திரமாக ஒளித்துவைத்துவிட்டு சூக்கும சரீரத்துடன்‌ கூடுவிட்டு கூடுபாயும்‌ வித்தையின்‌ வாயிலாக பாம்பாட்டி சித்தர்‌ இறந்து போன அரசனின்‌ உடலில்‌ புகுந்தார்‌. அரசன்‌ எழுந்தான்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சி ஆனால்‌ அரசன்‌ பிழைத்துக்‌ கொண்டாரே தவிர அவர்‌ செய்கைகள்‌ ஏதும்‌ திருப்திகரமாக இல்லை. மக்களின்‌ விமர்சனம்‌ காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள்‌. அவள்‌ மனதில்‌ சந்தேகப்‌ புயல்‌ மெல்ல விஸ்வரூபம்‌ எடுத்தது. அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள்‌ கேட்கத்‌ தொடங்கினாள்‌ ராணி.

"ஐயா! தாங்கள்‌ யார்‌ உண்மையில்‌ எங்கள்‌ அரசரா அல்லது சித்து வித்தைகள்‌ புரியும்‌ சித்தரா?" என்று. "அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப்‌ போக்குவதற்காகவே நான்‌ மன்‌னனது உடலில்‌ புகுந்திருக்கிறேன்‌. என்னுடைய பெயர்‌ பாம்பாட்டிச்‌ சித்தன்‌ என்றார்‌. அரசி உண்மையை உணர்ந்தாள்‌ கைகளைக்‌ கூப்பி எங்களுக்குத்‌ தெய்வமாக வந்து உதவி செய்தீர்‌ நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌ கடைத்தேறும்‌ வழியை உபதேசியுங்கள்‌ என்று வேண்டினாள்‌. அடுத்த கணம்‌, அரசரிடமிருந்து பலப்‌பல தத்துவப்‌ பாடல்கள்‌ உபதேசமாக வந்தன. அவைகளைக்‌ கவனமாக அனைவரும்‌ கேட்டனர்‌.

அதே சமயத்தில்‌ இறந்த அரசனுடைய ஆன்மா பரகாயப் பிரவேச முறையில்‌ இறந்துகிடந்த பாம்பின்‌ உடலில்‌ புகுந்து வெளியே ஓடத்தொடங்கியது. அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறை தவறிய சிற்றின்பத்தில்‌ அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல்‌ கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. அப்போது மன்னன்‌ உடலிலிருந்த சித்தர்‌ அந்த பாம்பைப் பார்த்து 'மன்னா! இன்னும்‌ உன்‌ ஆசைகள்‌ அடங்கவில்லையா?' என்று கேட்க அந்தப்பாம்பும்‌ சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர்‌ அந்தப்‌ பாமபைப் பார்த்து ஆடு பாம்பே என்று முடியும்‌ 129 பாடல்கள்‌ அடங்கிய ஒரு சதகத்தைப்‌ பாடி முடித்தார்‌.


அந்த சதகம்‌.
  1. கடவுள்‌ வணக்கம்‌,
  2. குருவணக்கம்‌,
  3. பாம்பின்‌ சிறப்பு,
  4. சித்தர்‌ வல்லபம்‌,
  5. சித்தர்‌ சம்வாதம்‌,
  6. பொருளாசை விலக்கல்‌
  7. பெண்ணாசை விலக்கல்‌,
  8. அகப்பற்று நீங்குதல்‌

என்னும்‌ எட்டு தலைப்புகளில்‌ எளிய தமிழில்‌ பாமரரும்‌ புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில்‌ சென்று சித்தி அடையும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ இந்த ஞான நூலைப்‌ பாடி முடித்துவிட்டு அரசன்‌ உடலை விட்டு வெளியேறியவுடன்‌ கல்ப உடலில்‌ புகுந்து தம் ‌சித்தர்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அரசர்‌ உடலிலிருந்து சித்தர்‌ வெளியேறினார்‌. அரசர்‌ உடம்பு கீழே விழுந்தது. சித்தர்‌ உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்‌ தொடங்கினாள்‌. அரசர்‌ உடலில்‌ இருந்து வெளியேறிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ தான்‌ பத்திரப்படுத்தி வைத்திருந்த தன்‌ பாம்பாட்டி உடலில்‌ புகுந்தார்‌.

சித்தரை வழிபடும் முறை


பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமிகளின்‌ படத்தை வைத்து, அதன்முன்‌ மஞ்சள்‌, குங்குமம்‌ இட்டு, அலங்கரிக்கப்‌ பட்ட குத்து விளக்கில்‌ தீபம்‌ ஏற்றி வைக்க வேண்டும்‌. ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக்‌ கூறி அர்ச்சித்த பிறகு, மூலமந்திரமான ''ஓம்‌ வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்‌ ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும்‌. பின்னர்‌ நிவேதனமாக சர்க்கரை போடாத பச்சைப்‌ பாலையும்‌, வாழைப்பழங்களையும்‌ வைக்க வேண்டும்‌. பின்‌ உங்கள்‌ பிரார்த்தனையை மனமுருகக்‌ கூறி வேண்டவும்‌.

ராகு பகவான்

பாம்பாட்டி சித்தர்‌ நவக்கிரகங்களில்‌ ராகு பகவானை பிரதிபலிப்பவர்‌. இவரை முறைப்படி வழிபட்டால்‌ நாகதோஷம்‌ அகலும்‌. மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்‌.

நிழல்‌ நிஜமாகவும்‌, நிஜம்‌ நிழலாகவும்‌ தோன்றும்‌ நிலை மாறும்‌. கணவன்‌, மனைவி இடையே உள்ள தாம்பத்யப்‌ பிரச்சினைகள்‌ அகலும்‌. போதைப்‌ பொருட்கள்‌, புகைப்பிடித்தல்‌, குடிப்பழக்கம்‌ போன்ற தீய பழக்கங்கள்‌ அகலும்‌. வெளிநாட்டில்‌ வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள்‌ உண்டாகும்‌.

ஜாதகத்தில்‌ ராகுபகவானால்‌ ஏற்படக்கூடிய களத்திர தோஷம்‌ நீங்கி, நல்ல இடத்தில்‌ திருமணம்‌ நடக்கும்‌. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம்‌ பெருகும்‌. வீண்பயம்‌ அகன்று தன்‌ பலம்‌ கூடும்‌. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள்‌ அகலும்‌. இவருக்கு கருப்பு வஸ்திரம்‌ அணிவித்து வழிபடுதல்‌ விசேஷம்‌. இவருக்கு பூஜை செய்ய சிறந்த நாள்‌ சனிக்கிழமை.

ஜீவ சமாதி


தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல்‌ மக்கள்‌ பிணி தீர்த்துக் கொண்டும்‌ அவர்களுக்கு அறநெறிகளைப்‌ புரிய வைத்துக்கொண்டும்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்றார்‌. விருத்தாச்சலம்‌ சென்றவுடன்‌ தான்‌ பூதவுடலை பிரியும்‌ நேரம்‌ வந்ததை உணர்ந்து அங்கு கோவில் கொண்டுள்ள பழமலை நாதருடன்‌ ஐக்கியமானார்‌ என்று பண்டைய சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. இவர்‌ திருஞானம்‌ என்ற இடத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ மருதமலையில்‌ ஜீவசமாதி அடைந்துள்ளார்‌ என்றும்‌ பல நூல்கள்‌ கூறுகின்றன. மருத மலையில்‌ முருகன்‌ சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்‌ சித்தர்‌ குகை என்று ஒரு குகைக்‌ கோவில்‌ உள்ளது. இவர்‌ தவம்‌ செய்த குகை மருதமலையில்‌ இன்னமும்‌ இருக்கிறது. இவர்‌ மருதமலையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, துவாரகையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, விருத்தாசலத்தில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌ கூறுகின்றனர்‌. மூன்று தலங்களிலும்‌ இவரது நினைவிடம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது.


28/9/18

சட்டை முனி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. சித்தரான சட்டைமுனி
  4. சமாதி கூடல்‌
  5. அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை
  6. சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்

முன்னுரை


சட்டை முனி திருமூலர்‌, கொங்கணவர்‌ கருவூரார்‌ ஆகிய சித்தர்களுடன்‌ வாழ்ந்திருக்கிறார்‌. கயிலாயம்‌ சென்று கம்பளிச்சட்டை அணிந்தவராகத்‌ தமிழகம்‌ திரும்பி வந்ததால்‌ கயிலாயக்‌ கம்பளிச் சட்டை முனி நாயனார்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறார்‌.

முற்பகுதி வாழ்க்கை


சட்டை முனி சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நீண்டகாலம்‌ வாழ்ந்தார்‌ என்று அமுத கலை ஞானம்‌ என்ற நூலில்‌ அகத்தியர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. இவர்‌ சேணியர்‌ குலத்தில்‌ பிறந்து நெசவுத்‌ தொழில்‌ செய்து வந்தார்‌. மெய்ஞ்ஞானம்‌ பெற்று சதுரகிரி சென்று ஒரு பிராமணர்‌ உடலில்‌ புகுந்து ஒரு கற்ப காலம்‌ வாழ்ந்தார்‌ என்று நொண்டிச்சிந்து என்னும்‌ வாதகாவியத்தில்‌ கருவூரார்‌ கூறியுள்ளார்‌.

(பாடல்கள்‌ 586,587)

போகர்‌ சப்தகாண்டம்‌ 7000 என்ற நூலின்படி சட்டைமுனி ஆவணி மாதம்‌ மிருகசீரிடம்‌ நட்சத்திரம்‌ 3 ஆம்‌ பாதத்தில்‌ மிதுன ராசியில்‌ சிங்களவர்‌ தேசத்தில்‌ ஒரு தேவதாசியின்‌ மகனாகப்‌ பிறந்தார்‌. பிழைப்பு தேடி தாய்‌ தந்தையருடன்‌ தமிழகம்‌ வந்தார்‌.

(பாடல்கள்‌ 5874 3875)

அகத்தியர்‌ பெருநூல்‌ காவியம்‌ 433, 434,435 ஆம் பாடல்களின்‌ படி. சட்டைமுனி கோயில்‌ வாயில்களில்‌ நின்று தாம்பாளம்‌ ஏந்திப்‌ பிச்சை எடுத்துப்‌ பெற்றோரைக்‌ காப்பாற்றினார் ‌. திருமணம்‌ செய்து கொண்டு பிள்ளைகளும் பெற்றார். இவற்றிற்கு பிறகு ஒரு நாள் இந்தியாவின் வடகோடியிலிருந்து வந்த சங்கு பூண்ட சன்யாசி ஒருவரை சந்தித்தார்‌. அவரால்‌ கவரப்பட்டு அவருடனேயே வடநாடு சென்று அந்தத் தவ யோகியின்‌ தவக்குடிலிலேயே கொஞ்ச காலம்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்த சன்யாசியோடு கயிலாயம்‌ முதல்‌ கன்யாகுமரி வரை கால்‌நடையாகவே சுற்றி வந்திருக்கிறார்‌. அந்த ஞான குருவே சட்டை முனியின்‌ முதல்‌ வழிகாட்டி எனலாம்‌.

சித்தரான சட்டைமுனி


பிறகு போகரிடம்‌ தீட்சை பெற்று சித்தநெறியில்‌ ஈடுபட்டார்‌. சித்தரான பிறகு கருவூரார்‌ தொடர்பும்‌ கொங்கணவர்‌ தொடர்பும்‌ பெற்றார்‌. சட்டை முனியும்‌ கொங்கணவரும்‌ ஒருவரை ஒருவர்‌ மிகவும்‌ அதிகமாக நேசித்திருக்கிறார்கள்‌. ஞானம்‌, மருத்துவம்‌ போன்றவற்றை ஒருவருக்கொருவர்‌ பகிர்ந்து கொண்டுள்ளனர்‌. கயிலாயக்‌ கம்பளிச்சட்டை முனி பின்‌ நூறு' என்ற நூலின்‌ 40, 80, 87,88,95, 97 ஆகிய பாடல்களில்‌ அவர்‌ கொங்கண வரை மிகவும்‌ புகழ்ந்துள்ளார்‌. குறிப்பாக 40 ஆம்‌ பாடலில்‌ கொங்கணவர்‌ வான்‌ என்ற அந்தரானந்தர்‌ பெற்ற பூரணம்‌ என்றும்‌ கூறுகிறார்‌. கடைசியாக அகத்தியரிடம் தீட்சை பெற்று நிறைநிலை சித்தரானார்.

சட்டை முனி தன் ஞான நூல்களில் மனித குரு யாரையுமே குருவென்று குறிப்பிடவில்லை. சின்மயமேதன்‌ குரு என்று கூறியுள்ளார்‌. இருப்பினும்‌ அகத்தியரின்‌ பெருநூல்காவியம்‌ 12000ல்‌ சட்டைமுனி அஸ்வினி தேவர்களிடம்‌ நான்‌ யாரோவென்று எண்ண வேண்டாம்‌. நான்‌ போகருடைய சீடன்‌ என்று கூறியதாக ஒரு குறிப்பு உள்ளது.

சமாதி கூடல்‌


சட்டை முனி நீண்ட காலம்‌ வாழ்ந்து சீர்காழியில்‌ சமாதி கூடியுள்ளார்‌ என்று ஜனன சாகரத்தில்‌ போகர்‌ கூறியுள்ளார்‌. திருவரங்கத்தில்‌ அரங்கனுடன்‌ கலந்துவிட்டார்‌ என்று சித்த மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர்‌ அரங்கனுடன்‌ இணைந்துவிட்டார்‌ என்பதற்கு ஒரு புராணக்கதையும்‌ உள்ளது


அதுவருமாறு:

அரங்கனுடன்‌ ஐக்கியமான கதை


சட்டைமுனி சஞ்சாரகதியில்‌ கால்நடையாகவே பல ஊர்களையும்‌ சுற்றிக் கொண்டு வரும்‌ வழியில்‌ ஓரிடத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கோவிலின்‌ கோபுர கலசங்கள்‌ தெரியக்‌ கண்டார்‌. இரவு வருவதற்குள்‌ எப்படியும்‌ அரங்கனை தரிசித்துவிடவேண்டும்‌ என்ற ஆர்வத்தில்‌ அதிவேகமாக நடந்தார்‌. அவர்‌ கோவில்‌ வாயிலை அடைந்த போது நள்ளிரவு வழிபாடும்‌ முடிந்து கோவில் கதவுகள்‌ மூடப்பட்டிருந்தன.

மிகுந்த தாபத்துடன்‌ கோயில்‌ வாயிலில்‌ நின்று கொண்டு அரங்கா, அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கூவினார்‌. அவர்‌ அழைத்த மாத்திரத்தில்‌ கோவில்‌ மணிகள்‌ அடித்தன. மேளதாளங்களும்‌ முரசுகளும்‌ முழங்கின. கோவில்‌ கதவுகள்‌ எழுப்பப்பட்டு ஊர்‌ மக்களும்‌ அர்ச்சகர்களும்‌ திரண்டு கோவிலுக்கு வந்தனர்‌. கோவில்‌ கதவுகள்‌ திறந்திருந்தன. அரங்கன்‌ அருகில்‌ சட்டை முனி அமர்ந்திருந்தார்‌. அரங்கனின்‌ ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ சட்டை முனிமேல்‌ இருக்கக் கண்டனர்‌. அர்ச்சகர்கள்‌ சட்டை முனிமேலிருந்த அணிகலன்களையெல்லாம்‌ கழற்றி அரங்கனுக்கு அணிவித்து விட்டு அவரைத்‌ திருடன்‌ என்று அரசன்‌ முன்‌ கொண்டுபோய்‌ நிறுத்தினர்‌. அவரை அரசன்‌ விசாரித்த போது அவர்‌, எனக்கு எதுவும்‌ தெரியாது, அரங்கனுக்குத் தான்‌ தெரியும்‌ என்றார்‌. அரசன்‌ ஆணைப்படி அவரை கோவிலுக்கு இழுத்துச்‌ சென்று அரங்கன்‌ முன்‌ நிறுத்தினர்‌. சட்டை முனி தம்மை மறந்து அரங்கா, அரங்கா என்று மூன்று முறை கத்தினார்‌.

உடனே கோவில்‌ மணிகள்‌ ஒலித்தன. மேளதாங்களும்‌ முழங்கின. அரங்கன்‌ சிலை மேலிருந்த ஆபரணங்களும்‌ சங்கு சக்கரங்களும்‌ தாமாகவே கழன்று வந்து சித்தரை அலங்கரித்தன. அடுத்தநொடியில்‌ சட்டை முனி ஒளி மயமாக மாறி அரங்கனுடன் கலந்தார்.

இந்த அதிசயத்தை கண்ட அனைவரும் அரங்கனும் சட்டை முனியும் வேறு வேறல்லர்‌. தானே சட்டை முனி என்பதை அனைவருக்கும்‌ நிரூபித்துக் காண்பிக்க அரங்கன்‌ நடத்திய திருவிளையாடலே இது' என்று உணர்ந்தனர்‌. இன்றும்‌ திருவரங்கத்தில்‌ சட்டை முனியே அரங்கனாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌ என்று பல வைணவப்‌ பெரியார்கள் கருதுகின்றனர்‌. சைவப்‌ பெரியார்களும்‌ சட்டை முனி சீர்காழியில்‌ சிவப்பரம்பொருளாயிருந்து அருள்புரிந்து வருகிறார்‌ என்று கருகின்றனர்.

சட்டை முனி பற்றிய மாறுபட்ட இரு கதைகள்


முதல் கதை

சித்தர்களின்‌ ரகசியங்களை எல்லோரும்‌ புரிந்து கொள்ளும்‌ படி வெளிப்படையாக சட்டை முனி தீட்சாவிதி என்ற நூலை எழுதினார்‌. அதைப் பற்றி உரோமரிஷி கோபமாக விமர்சனம் செய்ய தலைமை சித்தரான திருமூலர்‌ அந்த நூலையே கிழித்தெறிந்து விட்டார்‌. தம்மைப்‌ பழிவாங்க சட்டைமுனி தம்முடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்று எண்ணிய உரோம ரிஷி தம்‌ நூல்களை எல்லாம்‌ தம்முடைய குருவான காகபுஜண்டரிடம்‌ கொடுத்தார்‌. காகபுஜண்டரும்‌ அவற்றைத்‌ தம்‌ காக்கைச் சிறகுகளில்‌ பத்திரமாக மறைத்து வைத்திருந்து அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. இது ஒரு கதை.

மற்றொரு கதை

கயிலாய கம்பளிச்‌ சட்டை முனியும்‌ உரோம ரிஷியும்‌ ஒருவரே. இவர்‌ உடம்பில்‌ 3.5 கோடி உரோமங்கள்‌ உள்ளன. இவர் பல யுகங்களாக வாழ்ந்து வருகிறார்‌. இவர் உடம்பிலிருந்து ஒரு உரோமம்‌ உதிர்ந்தால்‌ படைப்புத்‌ தொழில்‌ புரியும்‌ ஒரு பிராமன்‌ இறப்பான்‌. இந்த உரோம ரிஷியாகிய கம்பளிச்‌ சட்டை முனி தம்‌ வாழ்நாளில்‌ பல பிரம்மன்களைக்‌ கண்டவர்‌. இன்னும்‌ கோடிக்கணக்கான பிரம்ம தேவர்களை காண இருப்பவர்‌. இப்போதும்‌ வாழ்ந்து கொண்டிருப்பவர்‌. இன்னும்‌ பல யுகங்கள்‌ வாழ இருப்பவர்‌.

இந்த இருவேறு கதைகளும்‌ சித்தர்‌ இலக்கியங்களிலும்‌, சித்த மருத்துவ நூல்களிலும்‌ இடம்‌ பெற்றுள்ள கதைகள்தான்‌. எந்த கதை உண்மைக்கதை என்பது தான்‌ தெரியவில்லை.