12/7/19

சித்த மருந்தியலின் பிரிவுகள்

சித்தமருந்தியலின் பிரிவுகள்
பொருளடக்கம்
  1. குண பாடம்
  2. மருந்தியக்கம்
  3. மருந்தடையும் மாற்றம்
  4. சாரக மருந்தியல்
  5. மருந்துச் சிகிச்சை
  6. நஞ்சியல்
  7. மருந்களவையியல்
  8. அவுடக பாகவியல் மருந்காக்கவியல்
  9. காய கல்பம்
  10. அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு

குண பாடம்


இது மருந்து மூலப் பொருட்களின் இருக்கை மற்றும் விவரணம் தயாரிப்பு என்பவற்றுடன் தொடர்புடையது. ஆரம்பத்தில் குணபாடமே மருந்தியலின் மூலாதரமாக விளங்கியது. இதிலிருந்தே நவீன மருந்தியல் 1950 களில் விருத்தியடைந்தது எனலாம். சித்த மருந்தியல் அதன் தோற்ற நிலையில் தான் தற்போதும் உள்ளது என்று கருத வேண்டியுள்ளது.

மருந்தியக்கம்


அதாவது மருந்து உடலில் என்ன செய்கிறது என்பது பற்றிய விபரங்களை அறிவதாகும். அதாவது, மருந்தானது உடலிலுள்ள வாத, பித்த, கபம் மற்றும் சப்த தாதுக்கள் முதலியவற்றில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்பானது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் உயிரி, ரசாயன, உடற்றொழிலியல் விளைவுகள், மருந்தின் செய்கை என்பவற்றுடன் தொடர்புடையதாகக் கருதலாம்.

மருந்தடையும் மாற்றம்


அதாவது உடலானது மருந்துக்கு என்ன விளைவுகளைக் காட்டும் என்பதுடன் தொடர்பானது. அதாவது, உடலிலுள்ள வாத, பித்த, கபம் முதலியன மருந்தில் என்ன மாற்றத்தை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்புடையது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் மருந்தானது சுவை, குணம், வீரியம், விபாகம், பிரபாவம் என்பவற்றுக்கு அமைய உடலில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதுடன் தொடர்புடையது.

சாரக மருந்தியல்


இது நோயாளிகளிலும், சாதாரண மக்களிலும் மருந்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிவியல் கற்கை முறையாகும்.

மருந்துச் சிகிச்சை


இது மருந்தானது நோய் நீக்குவதிலும், குறி குணங்களை நீக்குவதிலும் எவ்விதம் பயன்படுகிறது என்பதுடன் தொடர்பானது.

நஞ்சியல்


இது மருந்துகளினால் ஏற்படும் நச்சு விளைவுகள், நச்சு விளைவுகளைக் கண்டறிதல், அவற்றிற்கான சிகிச்சை என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.

குறிப்பு
சிலர் சித்த மருந்துகளில் பக்க விளைவுகளோ, நச்சு விளைவுகளோ இல்லை என்று கூறுவர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். சித்த மருந்துகள் சரி வரச் சுத்தம் செய்யப்படாமலோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயன்படுத்தப்படும் போது நச்சு விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். இது பற்றி சித்தமருத்துவ நூல்களில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மருந்களவையியல்


இது மருந்துகளின் பிரமாணம் அல்லது அளவு (dosage)டன் சம்பந்தப்பட்ட பிரிவாகும்.

அவுடக பாகவியல் மருந்காக்கவியல்


இது மருந்துகளின் தயாரிப்பு முறையுடன் சம்பந்தப்பட்ட துறையாகும்.

காய கல்பம்


நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழ்வதற்குரிய மருந்துகள் பற்றிய பிரிவாகும்.

அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு


இது பொதுவாக யாவரும் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு, சுத்தத்தன்மை, செயல் முதலியனவற்றைக் கொண்ட குறிப்பேடு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக